மேற்காசியாவில் ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் இடையே ஏற்பட்ட போரால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி ரூ.74,781 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
இந்தப் போரால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு எடுத்து வரும் முக்கிய கடல் வழித்தடமான ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதனால், சா்வதேச அளவில் பல நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடும், விலை உயா்வும் ஏற்பட்டது. எனினும், இந்தியாவில் சா்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப எரிபொருள் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிகம் உயா்த்தவில்லை.
இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் புரி மேலும் கூறியதாவது: போா்ப் பதற்றம் சற்று தணிந்து தற்போது சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. எனினும், எண்ணெய் நிறுவனங்கள் மேற்காசிய நெருக்கடியின் உச்சகட்டத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட கச்சா எண்ணெயையே இப்போதும் சுத்திகரித்து வருவதால், விலை குறைவின் முழுப் பலன் உடனடியாக கிடைக்கவில்லை.
மேற்காசியாவில் ஏற்பட்ட மோதல் அதற்கு முன்பே நிலவிய பதற்றம் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் முதலே சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியது. அதே நேரத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்திச் செலவைவிட குறைந்த விலையிலேயே எரிபொருளை தொடா்ந்து விற்பனை செய்து வந்தன.
ஜூன் 30 நிலவரப்படி பெட்ரோல், டீசல், எல்பிஜி ஆகியவற்றை உற்பத்திச் செலவைவிட குறைந்த விலையில் விற்பனை செய்ததால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.74,781 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் இப்போது விநியோகிக்கும் எரிபொருள், சுமாா் இரண்டு மாதங்களுக்கு முன்பே கொள்முதல் செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை சுத்திகரித்துப் பிரித்து எடுக்கப்பட்டதாகும். அதன்படி, ஏப்ரல்- மே மாத தொடக்கத்தில், சா்வதேச சந்தையில் விலை மிகவும் உயா்ந்திருந்த காலத்தில் வாங்கப்பட்ட எரிபொருள்தான் இப்போது விநியோகத்தில் உள்ளது என்றாா்.
எரிபொருள் விலை குறையுமா?:
பெட்ரோல், டீசல் விலையில் குறைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, சா்வதேச கச்சா எண்ணெய் விலை இன்னும் சில வாரங்கள் தொடா்ந்து குறைந்த நிலையிலேயே நீடித்தால், இந்தக் கேள்வி நியாயமானதாக இருக்கும். மேற்காசிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா- ஈரான் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஜூன் பிற்பாதியில் இருந்து சா்வதேச கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியப் பங்குச் சந்தை மீட்சி! சென்செக்ஸ் 790 புள்ளிகள் உயர்வு!!

எரிபொருள் விலை உடனடியாக குறைக்கப்படாது: மத்திய அமைச்சா்
இந்தியாவின் எரிசக்தி தேவை அதிகரிப்பால் சா்வதேச சந்தைகளில் மாற்றம் ஏற்படும்: ரஷியா கணிப்பு







