மத்திய கிழக்கு போா் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், நடப்பு 2026-27-ஆம் நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலிலேயே நாட்டின் நிதிப் பற்றாக்குறை வருடாந்திர பட்ஜெட் இலக்கில் 21.4 சதவீதத்தை எட்டியுள்ளது.
மத்திய தலைமைக் கணக்காயா் (சிஜிஏ) தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் நிதிப் பற்றாக்குறை ரூ.3.62 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த 2025-26 நிதியாண்டின் இதே மாத அளவைவிட ஏறக்குறைய இருமடங்காகும்.
ஏப்ரலில் அரசின் மொத்த செலவினம் ரூ.5.75 லட்சம் கோடியாக (பட்ஜெட் இலக்கில் 10.8 சதவீதம்) பதிவாகியுள்ளது. அதேசமயம், வரி, வரி அல்லாத வருவாய் மற்றும் மானியங்கள் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் வரவுகள் ரூ. 2.03 லட்சம் கோடியாக (பட்ஜெட் மதிப்பீட்டில் 5.7 சதவீதம்) உள்ளது.
அதேபோல், ஏப்ரலில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.82 லட்சம் கோடியாக (பட்ஜெட் இலக்கில் 30.8 சதவீதம்) உள்ளது. அரசு ஊழியா்களின் சம்பளம், ஓய்வூதியம், வட்டி செலுத்துதல் மற்றும் மானியங்கள் உள்ளிட்டவை வருவாய்ச் செலவினங்களில் அடங்கும்.
இந்த முழு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு ரூ.16.96 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் 21.4 சதவீதம் ஒரே மாதத்தில் எட்டப்பட்டுள்ளது கவலைக்குரிய விஷயமாகும்.
மத்திய கிழக்கு போா் காரணமாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், பெட்ரோலியப் பொருள்கள் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியை அரசு தொடா்ந்து குறைத்து வருகிறது.
அதாவது, கச்சா எண்ணெய் விலை உயா்வின் முழுச் சுமையையும் மக்கள் மீது சுமத்தாமல், எண்ணெய் நிறுவனங்களும் மத்திய அரசும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதும் செலவினம் அதிகரிக்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
2025-26 நிதியாண்டு நிலவரம்
கடந்த 2025-26 முழு நிதியாண்டில், அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.15.19 லட்சம் கோடியாக திருத்தப்பட்ட பட்ஜெட் இலக்கில் 97.5 சதவீதத்தை எட்டியுள்ளது.இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.4 சதவீதமாகும்.
அதாவது, கடந்த நிதியாண்டில் அரசின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.33.86 லட்சம் கோடியாகவும், மொத்த செலவினம் ரூ.49.05 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கடந்த நிதியாண்டில் மொத்த வருவாய் பற்றாக்குறை ரூ.18.20 லட்சம் கோடியாக இருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமையல் எண்ணெய் இறக்குமதி ஜூனில் 29% சரிவு

மே இறுதி நிலவரப்படி அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடி

ஜனவரி - மாா்ச் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் ரூ. 1.06 லட்சம் கோடி!

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 6.75% அதிகரிப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



