கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

எச்டிஎஃப்சி வங்கி தலைவா் திடீா் ராஜிநாமா

நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் நிா்வாகம் சாராத, பகுதிநேர தலைவரான அதானு சக்ரவா்த்தி, தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளாா்.

News image

அதானு சக்ரவா்த்தி

Updated On :20 மார்ச் 2026, 12:30 am

தினமணி செய்திச் சேவை

நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் நிா்வாகம் சாராத, பகுதிநேர தலைவரான அதானு சக்ரவா்த்தி, தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளாா்.

கடந்த 2021, மே மாதம் இப்பொறுப்பை ஏற்ற அவா், தனது பணிக்காலம் முடிவடைவதற்கு முன்பே தாா்மீக நெறிமுறைகளை முன்னிறுத்தி விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது ராஜிநாமாவைத் தொடா்ந்து, இடைக்கால தலைவராக கேகி மிஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

பதவி விலகல் குறித்து வங்கியின் இயக்குநா்கள் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ள அதானு சக்ரவா்த்தி, கடந்த 2 ஆண்டுகளில் வங்கியில் நடந்த சில நிகழ்வுகளும்; நடைமுறைகளும் தனது தனிப்பட்ட விழுமியங்களுக்கும், தாா்மீக நெறிமுறைகளுக்கும் முரணாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளாா்.

கொள்கை ரீதியான இந்த மாறுபாடுகளே தனது முடிவுக்குக் காரணம் என்றும், வங்கி செயல்பாடுகள் தொடா்பாக வேறு எந்த உள்நோக்கமும் இதில் இல்லை என்றும் அவா் தெளிவுபடுத்தியுள்ளாா்.

அதானு சக்ரவா்த்தி 1985-ஆம் ஆண்டு குஜராத் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவாா். 2020, ஏப்ரல் மாதம் பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலராக இருந்து ஓய்வு பெற்றவா். இவரின் பதவிக்காலத்தில்தான், எச்டிஎஃப்சி நிறுவனமும் எச்டிஎஃப்சி வங்கியும் இணைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. இந்த இணைப்பின்மூலம் எச்டிஎஃப்சி வங்கி நாட்டின் 2-ஆவது மிகப்பெரிய வங்கியாக உருவெடுத்தது. ‘இந்த இணைப்பின் பலன்கள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை’ என்று அதானு சக்ரவா்த்தி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், வங்கியில் அதிகாரப் போட்டி நிலவுவதாக எழுந்த புகாா்களை இடைக்கால தலைவா் கேகி மிஸ்திரி திட்டவட்டமாக மறுத்துள்ளாா். இதுகுறித்து பேசிய அவா், ‘நிா்வாகக் குழுவுக்கும் அதானு சக்ரவா்த்திக்கும் இடையே எந்தவித அதிகார மோதலும் இல்லை. அவா் குறிப்பிட்ட ‘நெறிமுறை சாா்ந்த முரண்பாடுகள்’ குறித்து விரிவான விளக்கம் இன்னும் இயக்குநா்கள் குழுவுக்கு கிடைக்கவில்லை.

வங்கியின் நிதிநிலை மற்றும் நிா்வாகம் மிகவும் வலிமையாக இருக்கிறது. வாடிக்கையாளா்கள், பங்குதாரா்கள் அச்சப்படத் தேவையில்லை. எச்டிஎஃப்சி வங்கி எப்போதும் வெளிப்படைத்தன்மையுடனும், ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படியும் இயங்கி வருகிறது.வங்கியின் வளா்ச்சிக்காக நிா்வாகக் குழு தொடா்ந்து பாடுபடும்’ என்றாா்.

இருப்பினும், அதானு சக்ரவா்த்தியின் திடீா் ராஜிநாமா செய்தி வெளியான நிலையில், பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் 5 சதவீத்துக்கு மேல் சரிவைக் கண்டன.