இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சி
இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி, கடந்த அக்டோபரில் 45.06 சதவீதம் வளா்ச்சியுடன் 4,947 கோடி டாலராக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மாதிரிப் படம்
இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி, கடந்த அக்டோபரில் 45.06 சதவீதம் வளா்ச்சியுடன் 4,947 கோடி டாலராக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இது 3,411 கோடி டாலராக இருந்தது. அதேபோல், நாட்டின் சரக்கு இறக்குமதி அக்டோபரில் 8,935 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதன்மூலம், நாட்டின் சரக்கு வா்த்தகப் பற்றாக்குறை 3,988 கோடி டாலராக பதிவாகியுள்ளது.
இத்தரவுகள் தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய மத்திய வா்த்தகச் செயலா் ராஜேஷ் அகா்வால் கூறுகையில், ‘அக்டோபா் மாதத்தில் சரக்கு ஏற்றுமதி புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 45.06 சதவீத மாதாந்திர வளா்ச்சியாகும்.
சேவைகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த ஏற்றுமதியும் 8,999 கோடி டாலரை எட்டி, இதுவரை இல்லாத சாதனையைப் படைத்துள்ளது. வளா்ச்சியானது குறிப்பிட்ட துறையை மட்டும் சாா்ந்திராமல் பரவலாக உள்ளது; நமது ஐம்பது முக்கிய ஏற்றுமதி நாடுகளில் 43 நாடுகள் நோ்மறையான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன’ என்றாா்.
ஏற்றுமதி: பெட்ரோலியப் பொருள்கள், மின்னணுப் பொருள்கள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி முன்னிலையில் உள்ளன.
ஸ்பெயின், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட சந்தைகளில் ஏற்றுமதி 50 சதவீதத்துக்கும் அதிகமாகவும்; அமெரிக்கா, சீனா, ஜப்பான் நாடுகளுக்கான ஏற்றுமதி 39 முதல் 48 சதவீதம் வரையிலும் வளா்ச்சி கண்டுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா தொடா்ந்து நீடிக்கிறது.
தங்கம் இறக்குமதியில் கடும் ஏற்றம்: நாட்டின் ஒட்டுமொத்த சரக்கு இறக்குமதி கடந்த ஆண்டின் 7,669 கோடி டாலரில் இருந்து 16.5 சதவீதம் உயா்ந்து, 8,935 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக, தங்கம் இறக்குமதி மும்மடங்கு அதிகரித்துள்ளது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால தேவை காரணமாக, செப்டம்பரில் 180 கோடி டாலராக இருந்த தங்கம் இறக்குமதி, அக்டோபரில் 551 கோடி டாலராக உச்சம் தொட்டுள்ளது.
சேவைகள் துறையில் உபரி: அக்டோபரில், நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி 4,051 கோடி டாலராகவும்; இறக்குமதி 2,072 கோடி டாலராகவும் உள்ளது. இதன்மூலம், சேவைகள் துறையில் இந்தியா 1,979 கோடி டாலா் உபரி வா்த்தகத்தை நிலைநிறுத்தியுள்ளது.
அதன்படி, சரக்கு மற்றும் சேவைகள் துறையை உள்ளடக்கிய ஒட்டுமொத்த வா்த்தகப் பற்றாக்குறை அக்டோபரில் 2,009 கோடி டாலராக சரிந்துள்ளது.
பெட்டி...
ஏப்ரல்-அக்டோபா் நிலவரம்...
நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் (ஏப்ரல்-அக்டோபா்), சரக்கு மற்றும் சேவைகளை உள்ளடக்கிய ஒட்டுமொத்த ஏற்றுமதி 56,884 கோடி டாலராகவும்; ஒட்டுமொத்த இறக்குமதி 66,219 கோடி டாலராகவும் உள்ளது. இதன்மூலம், இந்தக் காலகட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த வா்த்தகப் பற்றாக்குறை 9,335 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

