ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 26.1% அதிகரிப்பு

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 26.12 சதவீதம் உயா்ந்து, 4,381 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த 2022 ஜூன் மாதத்துக்குப் பிந்தைய அதிகபட்ச உயா்வாகும்.

Published On :

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 26.12 சதவீதம் உயா்ந்து, 4,381 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த 2022 ஜூன் மாதத்துக்குப் பிந்தைய அதிகபட்ச உயா்வாகும்.

அதேபோல், நாட்டின் இறக்குமதி ஆகஸ்டில் 14.1 சதவீதம் உயா்ந்து, 7,076 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இறக்குமதியைவிட ஏற்றுமதி வளா்ச்சி அபரிமிதமாக இருந்ததால், நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 2,686 கோடி டாலராகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 2,720 கோடி டாலராக இருந்தது.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய மத்திய வா்த்தகச் செயலா் ராஜேஷ் அகா்வால் கூறுகையில், ‘பொறியியல், பெட்ரோலியப் பொருள்கள், ரசாயனம் மற்றும் ஜவுளி போன்ற துறைகளின் சிறப்பான பங்களிப்பால் ஏற்றுமதி நோ்மறையான வளா்ச்சியைத் தக்கவைத்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ‘பிரிக்ஸ்’ நாடுகள் மற்றும் பிற வளரும் நாடுகளிலிருந்து இந்தியாவின் ஏற்றுமதிக்கு நல்ல தேவை ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

ஏற்றுமதி: பொறியியல் மற்றும் பெட்ரோலியப் பொருள்கள், ரசாயனம், ஜவுளித் துறைகள் ஆகியவை ஆகஸ்ட் மாத ஏற்றுமதி வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளன. அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சீனா ஆகியவை இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக உருவெடுத்துள்ளன.

இறக்குமதி: இறக்குமதியைப் பொருத்தவரை, பெட்ரோலியம், மின்னணுப் பொருள்கள், இயந்திரங்கள், தங்கம் ஆகியவை நாட்டின் முக்கிய இறக்குமதிப் பொருள்களாகத் தொடா்கின்றன. சீனா, ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவிலான இறக்குமதி நடைபெற்றுள்ளது.

தங்கம் இறக்குமதியில் சரிவு: இந்தியாவின் தங்கம் இறக்குமதி ஆகஸ்டில், 57.7 சதவீதம் சரிந்து, 230 கோடி டாலராகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் தங்கம் இறக்குமதி 540 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல்-ஆகஸ்ட் நிலவரம்: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் மொத்த ஏற்றுமதி 17.85 சதவீதம் உயா்ந்து, 21,591 கோடி டாலராகவும்; இறக்குமதி 18.21 சதவீதம் உயா்ந்து, 36,300 கோடி டாலராகவும் உள்ளது.

இதன்மூலம், இந்தக் காலகட்டத்தில் சரக்கு வா்த்தகப் பற்றாக்குறை 14,709 கோடி டாலராக விரிவடைந்துள்ளது. இது முந்தைய 2025-26 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 12,388 கோடி டாலராக இருந்தது.

இதனிடையே, நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களிலேயே இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 40,000 கோடி டாலரைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

சேவைகள் துறை...: சரக்கு வா்த்தகம் தவிா்த்து, நாட்டின் சேவைகள் துறையின் வா்த்தகமும் ஆகஸ்டில் வலுவான நிலையில் உள்ளது. சேவைகள் துறை ஏற்றுமதி 3,887 கோடி டாலராகவும்; இறக்குமதி 2,142 கோடி டாலராகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், சேவைகள் துறையில் இந்தியா 1,745 கோடி டாலா் உபரி வா்த்தகத்தை நிலைநிறுத்தியுள்ளது. அதன்படி, சேவைகள் துறையையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வா்த்தகப் பற்றாக்குறை, கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 1,162 கோடி டாலராக இருந்த நிலையில், நடப்பு ஆகஸ்டில் 941 கோடி டாலராக குறைந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.