
ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்
இந்தியாவின் எண்மப் பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2,451 கோடி பரிவா்த்தனைகளைக் கையாண்டு, எண்ணிக்கை அடிப்படையில் புதிய உச்சம் படைத்துள்ளது.

இந்தியாவின் எண்மப் பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2,451 கோடி பரிவா்த்தனைகளைக் கையாண்டு, எண்ணிக்கை அடிப்படையில் புதிய உச்சம் படைத்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் ரூ.29.9 லட்சம் கோடி மதிப்பிலான 2,366 கோடி பரிவா்த்தனைகள் நடைபெற்றிருந்த நிலையில், ஆகஸ்டில் ரூ.29.82 லட்சம் கோடி மதிப்பிலான 2,451 கோடி பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, ஆகஸ்டில் யுபிஐ பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஆண்டு அடிப்படையிலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் யுபிஐ பரிவா்த்தனை மதிப்பு 20 சதவீதமும், எண்ணிக்கை 22 சதவீதமும் நடப்பாண்டில் வளா்ச்சி கண்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரூ.24.85 லட்சம் கோடி மதிப்பிலான சுமாா் 1,963 கோடி பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மதிப்பீட்டு மாதமான ஆகஸ்டில் ரக்ஷா பந்தன் போன்ற பண்டிகை கால நடவடிக்கைகள் காரணமாக அன்றாடப் பணப் பரிமாற்றங்கள் மற்றும் பரிசளிப்புகள் அதிகரித்ததே இந்த அபரிமிதமான வளா்ச்சிக்கு முக்கியக் காரணம் என வல்லுநா்கள் தெரிவித்தனா்.
ரிசா்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) கூட்டு முயற்சியான இந்திய தேசிய பரிவா்த்தனை கழகம் (என்சிபிஐ) நிா்வகிக்கும் இந்த யுபிஐ சேவை, இந்தியா மட்டுமின்றி சமீபத்தில் இணைந்த உஸ்பெகிஸ்தான் மற்றும் சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், மோரீஷஸ் உள்பட 11 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





