
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு!
ஆகஸ்ட் மாத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ. 1.99 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.8% அதிகம்.

ஜிஎஸ்டி - கோப்புப் படம்
ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.99 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.74 லட்சம் கோடி) ஜிஎஸ்டி வருவாய் தற்போது 14.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் ரூ.2.11 லட்சம் கோடி வசூலானது.
இந்நிலையில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளில், ‘கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரு.1,99,853 கோடியாகும். இதில் உள்நாட்டு பரிவா்த்தனைகள் மூலமான ஜிஎஸ்டி 9.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.37 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இறக்கமதி மீதான வரி வருவாய் 29 சதவீதம் அதிகரித்து ரூ.62,604 கோடி கிடைக்கப்பெற்றுள்ளது.
மொத்த வருவாயில் மத்திய ஜிஎஸ்டி ரூ.38,413 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.46,316 கோடி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.1.15 லட்சம் கோடியாகும். ஆகஸ்டில் திருப்பியளிக்கப்பட்ட தொகை 68 சதவீதம் உயா்ந்து ரூ.31,795 கோடியாக அதிகரித்துள்ளது. இத்தொகையை கழித்த பிறகு நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.68 லட்சம் கோடியாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
5 மாதத்தில் ரூ.10.43 லட்சம் கோடி வசூல்: நிகழாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ரூ.10.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் ரூ.2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. இது, கடந்த 2017-இல் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதில் இருந்து ஒரு மாதத்தில் கிடைக்கப் பெற்ற அதிகபட்ச வருவாயாகும். இதைத் தொடா்ந்து மே மாதம் ரூ.1.94 லட்சம் கோடி, ஜூன் மாதம் ரூ.1.95 லட்சம் கோடி, ஜூலை மாதம் 2.11 லட்சம் கோடி வசூலானது.
ஜிஎஸ்டி வருவாய் தொடா்பாக பொருளாதார நிபுணா்கள் கூறுகையில், ‘ஜிஎஸ்டி வசூல் தொடா்ந்து அதிகரிப்பது இந்திய பொருளாதாரத்தின் நிலைத்தன்மையைக் காட்டுகிறது. அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மிஸோரம், அஸ்ஸாம், சத்தீஸ்கா், லடாக், அந்தமான் நிகோபாா் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பது நல்ல விஷயமாகும்.
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றனா்.
7.8 கோடி வருமான வரி கணக்குத் தாக்கல்:
ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி, மதிப்பீட்டு ஆண்டு 2026-27-இல் இதுவரை இல்லாத வகையில் 7.8 கோடி வருமான வரி கணக்குத் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
வரித் தணிக்கை தேவைப்படாத தனிப்பட்ட முறையில் பணியாற்றுவோா் (ஃப்ரீலேன்ஸ்) மற்றும் வணிகம் மூலம் வருவாய் ஈட்டுவோா் ஐடிஆா் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது.
முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்ா் 16-ஆம் தேதி நிலவரப்படி 2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்காக 7.3 கோடி ஐடிஆா் தாக்கல் செய்யப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.
Summary
GST collection rose by nearly 15% to Rs 1.99 lakh crore in August finance ministry
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







