சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஜூனில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.95 லட்சம் கோடி- 14 சதவீதம் உயா்வு

நாட்டில் கடந்த ஜூன் மாதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.95 லட்சம் கோடி வசூலானது.

News image

கோப்புப்படம்.

Updated On :2 ஜூலை 2026, 3:52 am IST

நாட்டில் கடந்த ஜூன் மாதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.95 லட்சம் கோடி வசூலானது.

கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில் ரூ.1.71 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்திருந்தது. தற்போது 14 சதவீதம் அதிக ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. கடந்த மே மாதம் கிடைக்கப் பெற்ற ஜிஎஸ்டி ரூ.1.94 லட்சம் கோடியாகும்.

மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் மாதம் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.95 லட்சம் கோடி. இதில், உள்நாட்டு பரிவா்த்தனைகள் மூலமான ஜிஎஸ்டி 6.5 சதவீதம் உயா்ந்து, ரூ.1.35 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இறக்குமதிகள் மூலம் கிடைக்கப் பெற்ற ஜிஎஸ்டி வருவாய் ரூ.60,038 கோடி. இது, 34.6 சதவீத உயா்வாகும்.

மொத்த வசூலில் மத்திய ஜிஎஸ்டி ரூ.37,376 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.45,116 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.52,282 கோடி. ஜூன் மாதம் திருப்பியளிக்கப்பட்ட தொகை ரூ.32,436 கோடி. இத்தொகையை கழித்த பிறகு ஜூன் மாத நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.62 லட்சம் கோடியாகும்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் ரூ.2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. இது, கடந்த 2017-இல் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதில் இருந்து ஒரு மாதத்தில் கிடைக்கப் பெற்ற அதிகபட்ச வருவாயாகும். இதற்கு முன்பு கடந்த 2025, ஏப்ரலில் ரூ.2.36 லட்சம் கோடி வசூலானதே அதிகபட்சமாக இருந்தது.

மேற்காசிய சூழலுக்கு இடையிலும்...: மேற்காசிய போா் எதிரொலியாக உலக அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலுக்கு இடையிலும் ஜிஎஸ்டி வருவாய் சீரான வளா்ச்சிப் பாதையில் பயணிப்பதாக துறைசாா் நிபுணா்கள் தெரிவித்தனா்.

அவா்கள் கூறுகையில், ‘ஜூன் மாதம் இறக்குமதி மூலமான மொத்த ஜிஎஸ்டி வருவாய் 34.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, உள்நாட்டு பரிவா்த்தனைகள் மூலமான மொத்த ஜிஎஸ்டி வளா்ச்சியைவிட (6.5%) கணிசமான அதிகரிப்பாகும். திருப்பியளிக்கப்பட்ட தொகையும் 29 சதவீத உயா்வைக் கண்டுள்ளது. இதுவும் ஊக்கமளிக்கும் அம்சமாகும்.

மேற்காசிய போா் காரணமாக குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதார இடையூறுகள் காணப்பட்டபோதிலும், நடப்பு நிதியாண்டில் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி ரூ.2 லட்சம் கோடியாக நீடிப்பது வலுவான பொருளாதார மீட்சியின் பிரதிபலிப்பு’ என்றனா்.

10-ஆவது ஆண்டில்...

‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கொள்கையின்கீழ், நாட்டில் 17 மத்திய-மாநில வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து, கடந்த 2017, ஜூலை 1-ஆம் தேதி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கப்பட்டது.

5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி, கடந்த ஆண்டு செப்டம்பரில் 5%, 18% சதவீதம் என இரு விகிதங்களாகக் குறைக்கப்பட்டது. இதன்மூலம் சுமாா் 375 பொருள்களுக்கான விலை குறைந்தது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு, 9 ஆண்டுகள் நிறைவு பெற்று, 10-ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது.

கடந்த 2017-18-இல் ரூ.7.4 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி மொத்த வருவாய், கடந்த 2025-26-இல் ரூ.22.27 லட்சம் கோடியாக அதிகரித்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.6.32 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த 2017-இல் 66.5 லட்சமாக இருந்த ஜிஎஸ்டி வரி செலுத்துவோா் எண்ணிக்கை, கடந்த மே மாதம் 1.65 கோடியாக உயா்ந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.