உலகளாவிய போர்கள் காரணமாக அமைதியின்மை; அதன் நீட்சியாக உருவாகி இருக்கும் பொருளாதாரப் பிரச்னைகள்; பரவலாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு; கடல்சார் போக்குவரத்தில் ஏற்பட்டிருக்கும் தடங்கல்கள்; உற்பத்திக்கான கச்சாப் பொருள்களின் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள்- இவற்றால் வல்லரசு நாடுகளேகூட நிலைகுலைந்து போயிருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலிலும் இந்தியப் பொருளாதாரம் தேக்க நிலையை அடையாமல் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
தெற்காசிய நாடுகளை ஒப்பிடும்போது, எந்தவிதத்திலும் அசைக்க முடியாத வலுவான பொருளாதாரமாக இந்தியா தொடர்கிறது என்பதைக் கடந்த 3 மாத வரி வருவாய் தெரிவிக்கிறது. கடந்த ஜூலை மாத சரக்கு-சேவை வரி வசூல் ரூ 2.11 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. முந்தைய நிதியாண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது (ரூ. 1.83 லட்சம் கோடி) இது 15.4% அதிகம். கடந்த ஜூன் மாதம் ரூ. 1.95 லட்சம் கோடிதான் வசூலானது என்பதையும் இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 8.43 லட்சம் கோடி. முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 10.1% அதிகம். மேற்காசியப் போர் காரணமாகக் குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதார இடையூறுகள் காணப்பட்ட போதிலும், நடப்பு நிதியாண்டில் சராசரியாக மாதாந்திர ஜிஎஸ்டி ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேல் நீடித்தது, நமது பொருளாதாரம் எந்த அளவுக்கு வலுவானதாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜிஎஸ்டி வரி வருவாய் மட்டுமல்லாமல், நேரடி வரி வசூலும் அதேபோல அதிகரித்து வருவதையும் குறிப்பிட வேண்டும். நேரடி வரி வருவாயில் மொத்த வரி வசூலும், நிகர வரி வசூலும் அதிகரித்திருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மேற்காசியப் போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் பல பிரச்னைகளுக்கும், தட்டுப்பாடுகளுக்கும் இடையில் நேரடி வரி வசூலும் அதிகரித்திருப்பது, மத்திய அரசின் நிதி நிர்வாகத்துக்கு மிகப் பெரிய ஆறுதலாக அமைகிறது.
தனிநபர் வரியும், கார்ப்பரேட் வரியும் தளர்ச்சி இல்லாமல் வசூலாகிறது என்பது அரசின் வர்த்தகக் கொள்கை மாற்றங்கள், விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடங்கல்கள் ஆகியவற்றை நமது பொருளாதாரத்தால் தாங்கிக் கொள்ள முடிகிறது என்பதைக் காட்டுகிறது. நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டில் நேரடி வரிவசூல் 15% அதிகரிக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது 16%-ஆக முதல் காலாண்டில் வளர்ந்திருப்பது ஆரோக்கியமான போக்கு.
கடந்த 2025-2026 நிதியாண்டில், வருமான வரியில் பல சலுகைகள் வழங்கப்பட்டதால், நேரடி வரிவசூலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பட்ஜெட் எதிர்பார்ப்பைவிட 8% குறைவாகவே வரி வசூல் இருந்தது. ஆனால், நிதியமைச்சர் எதிர்பார்த்தது போலவே, வரிச் சலுகைகளும், குறைவான நேரடி வரி விதிப்பும் பலரைத் தாமாக முன்வந்து நடப்பு நிதியாண்டில் வரி விதிப்பில் இணைத்துக்கொள்ள தூண்டியிருக்கின்றன என்பதை கூடுதல் வரி வசூல் வெளிப்படுத்துகிறது.
வருமான வரி வசூல் 12%, சரக்கு சேவை வரி வசூல் 22%, நிறுவனங்களின் முன்கூட்டியே வரி செலுத்துதல் (அட்வான்ஸ் டாக்ஸ்) 16% அதிகரித்திருக்கின்றன. இவையெல்லாம் பொருளாதார வளர்ச்சியையும், வரி செலுத்துவோருக்கு இருக்கும் நம்பிக்கையையும் எதிரொலிக்கின்றன.
ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத அறிக்கை பல்வேறு துறைகளில் காணப்படும் உற்சாகத்தைக் காட்டுகிறது. டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களின் ஊரகப்புற விற்பனை 20%, 15% என்று அதிகரித்திருக்கிறது. ஊரகப் புறங்களில் வாங்கும் சக்தி அதிகமாக இருந்தால், பொருளாதாரம் வலுவாக இருக்கும் என்பது அனுபவ நம்பிக்கை. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்புக்குப் பிறகும்கூட அவற்றின் விற்பனை அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உள்பட உணவுப் பொருள்கள் சாராத ஏனைய நுகர்வுப் பொருள்களுக்கான வங்கிக் கடன்17.8% ஜூன் மாதத்தில் அதிகரித்திருக்கிறது. எண்மப் பணப் பரிவர்த்தனையின் அளவு 20%, மதிப்பு 15% இந்த முதல் காலாண்டில் அதிகரித்திருக்கிறது. மோட்டார் வாகன விற்பனையும் கணிசமாக அதிகரித்திருப்பதை கடந்த ஜூன் மாதம் பதிவு செய்யப்பட்டிருக்கும் வாகனங்கள் தெரிவிக்கின்றன.
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு என்பதும், ஆங்காங்கே ஏற்படும் தட்டுப்பாடும் தவிர்க்க முடியாதவை; எதிர்பார்க்க வேண்டியவை. கரியடுப்பு, விறகு அடுப்பு பயன்பாட்டில் இருந்த பல லட்சம் குடும்பங்கள் இலவச சமையல் எரிவாயு இணைப்பு காரணமாக எரிவாயு உருளைக்கு மாறியிருக்கின்றன. சமையல் எரிவாயு இணைப்புகள் 3 மடங்கு அதிகரித்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் இடைக்காலத் தட்டுப்பாட்டுக்குப் பின்னால் வளர்ச்சி இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
நமது வளர்ச்சியை நடப்புக் காலாண்டின் வரி வசூலும், தளர்ச்சி அடையாத வர்த்தகமும் உறுதிப்படுத்துகின்றன. அரசியல் ரீதியாகவும், சட்ட- ஒழுங்கு ரீதியாகவும் இந்தியாவை பலவீனப்படுத்தும் முயற்சியில் அந்நிய சக்திகள் களமிறங்கி இருப்பதற்கு இதுதான் காரணம்.
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.
திருக்குறள் (எண் 756) அதிகாரம்: பொருள் செயல்வகை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமையல் எண்ணெய் இறக்குமதி ஜூனில் 29% சரிவு

நேரடி வரி வசூல் 16.40% உயா்வு

ஜூனில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.95 லட்சம் கோடி- 14 சதவீதம் உயா்வு

நடப்பு 2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல்: ரூ.5.21 லட்சம் கோடியைக் கடந்தது!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



