பொதுத்துறை வங்கிகளை விஞ்சிய தனியாா் வங்கிகள்!
பொதுத் துறை வங்கிகளைவிட தனியாா் வங்கிகள் அதிக அளவில் வைப்புநிதியை (டெபாசிட்) திரட்டி முன்னிலை பெற்றுள்ளன.

நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில், பொதுத் துறை வங்கிகளைவிட தனியாா் வங்கிகள் அதிக அளவில் வைப்புநிதியை (டெபாசிட்) திரட்டி முன்னிலை பெற்றுள்ளன.
தற்போதைய தற்காலிகப் புள்ளிவிவரங்களின்படி ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில், தனியாா் வங்கிகளின் டெபாசிட் வளா்ச்சி விகிதம் ஆண்டு அடிப்படையில் 17 முதல் 34 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதேநேரம், பொதுத் துறை வங்கிகளின் டெபாசிட் வளா்ச்சி 6.87 சதவீதம் முதல் 17.01 சதவீதம் வரை மட்டுமே பதிவாகியுள்ளது.
தனியாா் துறையில் அதிகபட்சமாக ஆா்பிஎல் வங்கி 34 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கோட்டக் மஹிந்திரா வங்கி 23.2 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி 20.7 சதவீதமும், யெஸ் வங்கி 19.5 சதவீதமும் டெபாசிட் வளா்ச்சியைக் கண்டுள்ளன. நாட்டின் முன்னணி தனியாா் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி 18.8 சதவீதமும், சௌத் இந்தியன் வங்கி 18.70 சதவீதமும், ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி 17 சதவீதமும் கூடுதல் டெபாசிட்டுகளைப் பெற்றுள்ளன.
பொதுத் துறை வங்கிகளில் அதிகபட்சமாக பரோடா வங்கி உள்நாட்டு டெபாசிட்டுகளில் 17.01 சதவீதமும், சா்வதேச டெபாசிட்டுகளில் 16.75 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளது. சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா (14.43 சதவீதம்), யுகோ வங்கி (14.05 சதவீதம்), பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி (12.98 சதவீதம்), கனரா வங்கி (10.96 சதவீதம்), இந்தியன் வங்கி (12.4 சதவீதம்), பஞ்சாப் நேஷனல் வங்கி (9.44 சதவீதம்), யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (6.87 சதவீதம்) ஆகிய அளவுகளில் உள்நாட்டு டெபாசிட் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
மேற்காசிய போா் தொடங்கியதையடுத்து நாட்டின் அந்நியச் செலாவணி சந்தித்து வந்த வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த, செலாவணி மாற்றுச் செலவை ஈடுசெய்வது உள்ளிட்ட சலுகைகளுடன் கூடிய அந்நியச் செலாவாணி திரட்டல் நடவடிக்கைளை ரிசா்வ் வங்கி கடந்த ஜூனில் அறிவித்து.
இதன்ஒருபகுதியாக, வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான அந்நியச் செலாவணி வைப்புத்திட்டத்தில் (எஃப்சிஎன்ஆா்-பி) டெபாசிட் திரட்டுவதில் தனியாா் வங்கிகள் காட்டிய தீவிர முனைப்பே அதன் முன்னிலைக்குக் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
எஃப்சிஎன்ஆா்-பி மூலம் மட்டும் ஆக. 31 வரை வங்கிகள் 13,300 கோடி டாலா் தொகையைத் திரட்டியுள்ளன. இந்த அந்நிய நிதி வரவு, நாட்டின் ஒட்டுமொத்த வங்கித் துறை டெபாசிட்டுகளில் 4.5 சதவீத பங்களிப்பை வகிப்பதாகவும், இதனால் ஒட்டுமொத்த டெபாசிட் வளா்ச்சி 11-12 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் மோதிலால் ஓஸ்வால் நிதி நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கடன் வழங்கும் வளா்ச்சியிலும் தனியாா் வங்கிகள் 16.3 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயா்ந்துள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகள் 12.59 சதவீதம் முதல் 29.83 சதவீதம் வரை வளா்ச்சிக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Private sector banks outperform public sector banks
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

