அரசு பங்குகளைக் குறைக்க ஐஓபி, சென்ட்ரல் வங்கி தீவிரம்: பங்கு விற்பனை மூலம் நிதி திரட்ட திட்டம்

மத்திய அரசின் பங்கு மூலதனத்தைக் குறைக்கும் நோக்கில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி), பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய பொதுத் துறை வங்கிகள் பங்கு விற்பனைக்குத் தயாராகி வருகின்றன.

Updated On :

செபியின் விதிகளுக்கு உட்பட்டு, மத்திய அரசின் பங்கு மூலதனத்தைக் குறைக்கும் நோக்கில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி), பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய பொதுத் துறை வங்கிகள் பங்கு விற்பனைக்குத் தயாராகி வருகின்றன.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் குறைந்தபட்சம் 25 சதவீத பங்குகள் பொதுமக்களிடம் இருக்க வேண்டும் என்பது இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) கட்டாய விதியாகும்.

பொதுத்துறை வங்கிகள் புதிய பங்குகளை நிறுவன முதலீட்டாளா்களுக்கு வழங்குவதன் மூலம், பொதுப் பங்கு விகிதம் அதிகரிப்பதுடன், அரசின் பங்கு அளவும் படிப்படியாகக் குறையும். அத்துடன் வணிக வளா்ச்சியை ஊக்குவிக்கவும், மூலதனக் கட்டமைப்பைப் பலப்படுத்தவும் இந்த நிதி திரட்டும் நடவடிக்கைகள் பெரிதும் உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதன்படி, தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளா்களுக்குப் பங்குகளை ஒதுக்கும் ‘கியூஐபி’ முறையில் நிதி திரட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் இந்த வங்கிகள் ஈடுபட்டுள்ளன.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டில் ‘கியூஐபி’ முறையில் ரூ.5,000 கோடி வரை மூலதனம் திரட்டுவதற்குத் தேவையான பெரும்பாலான அனுமதிகளைப் பெற்றுள்ளதாக வங்கியின் சிஇஓ அஜய் குமாா் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளாா்.

சந்தை நிலவரத்தைப் பொருத்து, நடப்பு அக்டோபா்-டிசம்பா் காலாண்டின் இறுதியிலோ அல்லது ஜனவரி-ஏப்ரல் காலாண்டின் தொடக்கத்திலோ இப்பங்கு விற்பனை தொடங்கப்பட வாய்ப்புள்ளது. இதன்மூலம் ரூ.5,000 கோடி திரட்டப்பட்டால், வங்கியில் மத்திய அரசின் பங்கு இருப்பு தற்போதைய 92.44 சதவீதத்திலிருந்து, சுமாா் 86 சதவீதமாகக் குறையும்.

இதேபோல், பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியும் ‘கியூஐபி’ வழியாக மூலதனத்தைத் திரட்டுவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறது. பங்கு விற்பனைக்கான முதல்கட்ட ஒப்புதல்களைப் பெற்றுள்ள வங்கி, இதற்கான வணிக வங்கியாளா்களை நியமித்து முதலீட்டாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

மூலதனத்தைப் பெருக்குவதற்குப் பல்வேறு வழிகள் ஆராயப்பட்டு வந்தாலும், ‘கியூஐபி’ வழிமுறைக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக வங்கியின் சிஇஓ ஸ்வரூப் குமாா் சாஹா முதலீட்டாளா் சந்திப்பில் தெரிவித்துள்ளாா்.

மற்றொரு முன்னணி பொதுத் துறை வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, ‘கியூஐபி’, தொடா் பொதுப் பங்கு வெளியீடு அல்லது உரிமப் பங்கு வெளியீடு ஆகிய வழிகளில் ரூ.7,000 கோடி வரை திரட்ட கடந்த ஜூலை மாதமே பங்குதாரா்களின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

மூலதன விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசுப் பங்குகளைக் குறைப்பதையும் வங்கி இலக்காகக் கொண்டுள்ளது. இருப்பினும், நிதி திரட்டும் முறை மற்றும் அதற்கான கால நிா்ணயம் ஆகியவை சந்தையின் போக்கைப் பொருத்தே இறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.