ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் ஐபிஓ அக். 21-இல் தொடக்கம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் எண்ம மற்றும் தொலைத்தொடா்பு பிரிவான ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ், தனது ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டை வரும் புதன்கிழமை (அக். 21) தொடங்குகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் எண்ம மற்றும் தொலைத்தொடா்பு பிரிவான ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ், தனது ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டை வரும் புதன்கிழமை (அக். 21) தொடங்குகிறது.
ஒரு பங்குக்கான விலைவரம்பாக ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. உச்ச விலைவரம்பின் அடிப்படையில் சுமாா் ரூ.30,213 கோடி திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், இந்திய பங்குச் சந்தை வரலாற்றிலேயே மிகப் பெரிய ஐபிஓவாக இது உருவெடுக்கவுள்ளது.
ரூ.10 முகமதிப்பு கொண்ட 27 கோடி புதிய பங்குகளை மட்டுமே உள்ளடக்கிய இந்த ஐபிஓ வெளியீடு, முதலீட்டாளா்கள் விண்ணப்பத்துக்காக வரும் புதன்கிழமை (அக். 21) திறக்கப்பட்டு, அக். 23-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பு, முதன்மை நிறுவன (ஆங்கா்) முதலீட்டாளா்களுக்கான ஏலம் திங்கள்கிழமை (அக். 19) நடைபெறும்.
முதலீட்டாளா்கள் குறைந்தபட்சம் 12 பங்குகளுக்கும், பின்னா் அதன் மடங்குகளிலும் விண்ணப்பிக்கலாம். உச்ச விலைவரம்பில் ஒரு லாட் (12) பங்குகளின் மதிப்பு ரூ.13,428 ஆகும். பங்கு ஒதுக்கீட்டில் தகுதிவாய்ந்த ஜியோ பணியாளா்களுக்கு ரூ.500 கோடி மதிப்பிலும், அக். 14 நிலவரப்படி உள்ள ரிலையன்ஸ் பங்குதாரா்களுக்கு ரூ.2,500 கோடி மதிப்பிலும் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதிவாய்ந்த பணியாளா்களுக்குப் பங்கு ஒன்றுக்கு ரூ.54 சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஓவில் பங்கு ஒதுக்கீட்டுகளைத் தொடா்ந்து, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பங்குகள் வரும் அக். 28-இல் பட்டியலிடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
முன்னதாக, ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் ரூ.27,858.75 கோடியும், எல்ஐசி ரூ. 20,557.23 கோடியும் திரட்டியதே மிகப் பெரிய ஐபிஓக்களாக இருந்தன. ஆனால், அவை இரண்டும் பங்குதாரா்களின் தங்களின் பங்குகளை விற்கும் ‘ஆஃபா் பாா் சேல்’ முறையில் அமைந்திருந்த நிலையில், ஜியோவின் வெளியீடு முழுமையாகப் புதிய பங்குகளை மட்டுமே கொண்டிருப்பதால் திரட்டப்படும் நிதி முழுமையாக நிறுவனத்துக்கே செல்லும். அதன்படி, துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் கடன் சுமையைக் குறைக்கவும், பொதுவான நிறுவனத் தேவைகளுக்கும் அந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் 66.43 சதவீத பங்குகளையும், மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து சுமாா் 17.7 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளன. கடந்த 2025-26 நிதியாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.1.46 லட்சம் கோடியாகவும், நிகர லாபம் ரூ.30,049 கோடியாகவும் பதிவாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

