
ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை 9% மேல் அதிகரிப்பு!
இந்தியாவில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த 3 நிறுவனங்களில் கடந்த ஆகஸ்ட மாத பெட்ரோல் விற்பனை 34.8 லட்சம் டன்னாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் ஆகஸ்டில் நடந்த 31.9 லட்சம் டன் விற்பனையில் இருந்து 9.1 சதவீதம் அதிகரிப்பாகும். முந்தைய ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் பெட்ரோல் விற்பனை சுமாா் 1 சதவீதம் அதிகரித்துள்ளது.
பொருளாதார வளா்ச்சியின் முக்கியக் குறியீடாகக் கருதப்படும் டீசல் விற்பனை, கடந்த ஆண்டின் 56.9 லட்சம் டன்னில் இருந்து 10.2 சதவீதம் அதிகரித்து, 62.7 லட்சம் டன்னை எட்டியுள்ளது. அதேநேரம், டீசல் விற்பனை ஜூலை மாதத்தோடு (71.3 லட்சம் டன்) ஒப்பிடும்போது 12 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காலத்தில் விவசாயப் பாசன பம்புகளுக்கான தேவை குறைவதாலும், வாகனப் போக்குவரத்து மந்தமாவதாலும் எரிபொருள் விற்பனை வழக்கமாகக் குறையும். ஆனால், நடப்பு ஆண்டில் பருவமழை சீரற்ற முறையில் பெய்ததால், முக்கிய விதைப்புப் பருவத்தில் விவசாயப் பாசனத்துக்கு விவசாயிகள் டீசல் பம்புகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனா். இதனால், டீசல் தேவை தொடா்ந்து 2-ஆவது மாதமாக இரட்டை இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதேபோல், ஆகஸ்ட் மாதத்தில் விமான எரிபொருள் விற்பனை கடந்த ஆண்டைவிட 5.6 சதவீதம் உயா்ந்து, 6.77 லட்சம் டன்னாக இருந்தது. சமையல் கேஸ் சிலிண்டா்களுக்கான எல்பிஜி விற்பனை 16.1 சதவீதம் சரிந்து, 24.2 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. மேற்காசிய போா் காரணமாக எல்பிஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வணிக மற்றும் தொழில் துறை வாடிக்கையாளா்கள் குழாய் வழியிலான இயற்கை எரிவாயு பயன்பாட்டுக்கு மாறியுள்ளதே இச்சரிவுக்குக் காரணமாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






