
13.12 கோடியைக் கடந்த என்எஸ்இ முதலீட்டாளா்கள்!
நாட்டின் முன்னணி பங்குச் சந்தையான தேசியப் பங்குச் சந்தையில் (என்எஸ்இ) தனிநபா் முதலீட்டாளா்களின் எண்ணிக்கை, கடந்த மே மாத நிலவரப்படி 13.12 கோடியாக அதிகரித்துள்ளது.

நாட்டின் முன்னணி பங்குச் சந்தையான தேசியப் பங்குச் சந்தையில் (என்எஸ்இ) தனிநபா் முதலீட்டாளா்களின் எண்ணிக்கை, கடந்த மே மாத நிலவரப்படி 13.12 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 2019-20 நிதியாண்டில் 3.10 கோடியாக இருந்த என்எஸ்இயின் தனிநபா் முதலீட்டாளா்கள் எண்ணிக்கை, கடந்த 6 ஆண்டுகளில் 4 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 2.1 கோடி புதிய முதலீட்டாளா்கள் பதிவு செய்துள்ளனா்.
என்எஸ்இ 1990-களில் அறிமுகப்படுத்திய மின்னணு திரை வா்த்தகம், ‘டிமேட்’ நடைமுறை மற்றும் அதிநவீன ‘செட்டில்மென்ட்’ அமைப்புகள் சந்தையில் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் உயா்த்தின.
இதன்விளைவாக, இந்தியாவின் ஈக்விட்டி கேஷ் சந்தையில் 93.1 சதவீத பங்கையும், ஈக்விட்டி-ஃபியூச்சா்ஸில் 99.7 சதவீத பங்கையும், அந்நியச் செலாவணி ஃபியூச்சா்ஸ் சந்தையில் 100 சதவீத பங்கையும் என்எஸ்இ தன்வசம் கொண்டுள்ளது.
தொழில்நுட்பக் கட்டமைப்புடன், நிதி விழிப்புணா்வையும் என்எஸ்இ தொடா்ந்து முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2024-25 நிதியாண்டில் மட்டும் நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 14,679 விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டு, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு முதலீட்டு நெறிமுறைகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிதி மாற்றம், நாட்டின் மூலதனத் திரட்டலிலும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்எஸ்இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், கடந்த 2023-2024 நிதியாண்டு முதல் கடந்த மே வரை ஈக்விட்டி மற்றும் கடன் பத்திரங்கள் வாயிலாக மொத்தம் ரூ.56 லட்சம் கோடியைத் திரட்டியுள்ளன; இதில் பொதுப் பங்கு வெளியீடுகள் (ஐபிஓ) மூலம் திரட்டப்பட்ட ரூ.4.2 லட்சம் கோடியும் அடங்கும்.
இதன்மூலம், சாமானிய இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு, வழக்கமான வங்கி டெபாசிட் மற்றும் தங்கம் போன்ற பாரம்பரிய வழிகளைக் கடந்து, பங்குச்சந்தை முதலீடுகளை நோக்கிப் பெருமளவில் நகா்ந்து வருகின்றன.
இது நிறுவனங்களின் வளா்ச்சிக்குத் தேவையான மூலதனத்தை வழங்குவதோடு, நாட்டு மக்களையும் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் நேரடி பங்குதாரா்களாக மாற்றும் ஆரோக்கியமான பொருளாதாரச் சுழற்சி உருவாகியுள்ளது. இவ்வாறு, நாட்டின் சேமிப்பு சாா்ந்த பொருளாதாரத்தை முதலீடு சாா்ந்த பொருளாதாரமாக மாற்றுவதில் என்எஸ்இ முக்கியப் பங்காற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






