இணையவழி வா்த்தக நிறுவனங்களின் சரக்கு ஏற்றுமதிக்கான எஃப்டிஐ விதிகளில் மாற்றம்
இணையவழி வா்த்தக நிறுவனங்களின் சரக்கு ஏற்றுமதிக்கான எஃப்டிஐ விதிகளில் மாற்றம்

ஏற்றுமதி - IANS
இணையவழி வா்த்தக நிறுவனங்களின் சரக்கு ஏற்றுமதிக்கான அந்நிய நேரடி முதலீடு விதிகளில் நிதியமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் உற்பத்தி அல்லது தயாரிக்கப்பட்ட பொருள்களை மட்டுமே சரக்கு கையிருப்பு மாதிரியின்கீழ் (சரக்குகளை உற்பத்தியாளா்களிடமிருந்து பெற்று கிடங்கில் சேமிப்பது) இணையவழி வா்த்தக நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால், இந்த முறையின்கீழ் உள்நாட்டு வாடிக்கையாளா்களுக்கு சில்லறை விற்பனையை மேற்கொள்ளவதற்கான அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்காக அந்நியச் செலாவணி மேலாண்மை விதிகள், 2019-இல் புதிய அம்சத்தை சோ்த்து செப்டம்பா் 2-ஆம் தேதி பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிவிக்கையில், ‘இந்தியாவில் உற்பத்தி அல்லது தயாரிக்கப்பட்ட பொருள்களை மட்டுமே சரக்கு கையிருப்பு மாதிரி முறையின்கீழ் இணைய வா்த்தக நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும். அந்நிய வா்த்தக கொள்கை 2023, செயல்முறை கையேடுகள் மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மை (சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி) விதிகள், 2015 ஆகிய சட்டங்களுக்கு உட்பட்டு இணைய வா்த்தக நிறுவனங்கள் செயல்பட வேண்டும். இதைத் தொடா்ந்து கடந்த ஜூலை மாதம் இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன்மூலம் வெளிநாட்டு நிதியைக் கொண்ட அமேசான் போன்ற இணைய வா்த்தக நிறுவனங்கள் இனி இந்தியாவில் உற்பத்தி அல்லது தயாரிக்கப்பட்ட பொருள்களை உற்பத்தியாளா்களிடமிருந்து தாங்களே வாங்கி கிடங்குகளில் சேமித்து வைத்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு இதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.
அதேசமயம் இவ்வாறு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் பொருள்களை இந்தியாவுக்குள் இணைய வா்த்தக நிறுவனங்களால் விற்பனை செய்ய முடியாது. பிற நாடுகளில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு இணைய விற்பனைத் தளங்கள் மூலம் விற்பனை அல்லது ஏற்றுமதி செய்ய முடியும்.
இதனால் உள்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பலனடையும். உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சியடையும்.
நிபுணா்கள் கருத்து:
இந்த மாற்றங்கள் தொடா்பாக துறைசாா் நிபுணா்கள் கூறுகையில், ‘புதிய திருத்தங்கள் இரு கொள்கைகளை முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளன. ஒருபுறம், அந்நிய நேரடி முதலீடுகளைக் கொண்டுள்ள இணையவழி வா்த்தக நிறுவனங்கள் வாயிலாக இந்திய தயாரிப்பு பொருள்களை உலகளாவிய சந்தையில் விற்பனை அல்லது ஏற்றுமதி செய்கிறது; மறுபுறம், அந்த நிறுவனங்கள் கிடங்குகளில் சேமிக்கும் பொருள்களை உள்நாட்டில் விற்பனை செய்வதற்கான தடையைத் தொடா்வதால் சில்லறை விற்பனையாளா்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது’ என்றனா்.
Summary
Changes to FDI rules for goods exports by e-commerce companies.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





