சில ஆண்டுகளுக்கு முன்புவரை "எண்மக் கைது' என்ற சொல் பொதுமக்களுக்கு அறிமுகமே இல்லை. இன்று அது நாட்டில் வேகமாகப் பரவி வரும் இணையவழி மோசடிகளின் புதிய முகமாக மாறியுள்ளது.
இந்திய இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, 2024-இல் 1.23 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த எண்மக் கைது மோசடி புகார்கள், 2025-இல் சுமார் 58 ஆயிரமாகக் குறைந்துள்ளன. 2026 ஜூன் மாத இறுதிவரை சுமார் 16 ஆயிரம் புகார்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. மேலும், 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் ரூ.18.05 கோடி பாதிக்கப்பட்டவர்களிடம் திரும்ப வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கைகள் பிரச்னை முடிந்துவிட்டதைக் காட்டவில்லை; ஆனால், ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் பலன் தரத் தொடங்கியுள்ளதை உணர்த்துகின்றன.
இதன் பின்னணியில் கவலைக்குரிய ஓர் உண்மையும் உள்ளது. அண்மையில் பெரும் கவனம் பெற்ற ஒரு வழக்கில், ஹரியாணாவைச் சேர்ந்த முதிய தம்பதியரிடம் ரூ.1.05 கோடி மோசடி செய்யப்பட்டது. பல்வேறு அரசு அமைப்புகளின் அதிகாரிகளாக நடித்து, போலி ஆவணங்களையும் காணொலி அழைப்புகளையும் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றினர். இது தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் துயரமல்ல; வயது, கல்வி, தொழில் என்ற வேறுபாடின்றி யாரும் இத்தகைய மோசடிகளுக்கு இலக்காகலாம் என்பதற்கான எச்சரிக்கையாகும்.
அறிக்கை சுட்டிக்காட்டும் மற்றொரு முக்கிய அம்சம், பல்வேறு அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் முயற்சியாகும். வங்கிகள், ஒழுங்குமுறை அமைப்புகள், விசாரணை அமைப்புகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பத் தளங்கள் இணைந்து செயல்படும் சூழல் உருவாகி வருகிறது. குறைதீர் அமைப்புகள் தற்போது 69 வங்கிகளின் 1.23 லட்சத்துக்கும் அதிகமான கிளைகளை உள்ளடக்கியுள்ளன. பணத்தை மீட்டளிக்கும் அமைப்பிலும் மேலும் பல வங்கிகள் இணைந்துள்ளன. இவை நிர்வாக மாற்றங்களாகத் தோன்றினாலும், இணையவழி குற்றங்களை எதிர்கொள்வதில் மிக முக்கியமான முன்னேற்றமாகும்.
மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, இணையவழி நிதி மோசடிகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் வெளியேறுவதை உடனடியாகத் தற்காலிகமாகத் தடுக்க ஒரே மாதிரியான நடைமுறையை உருவாக்கும் முயற்சி இடம்பெற்று வருகிறது. இணையவழி மோசடிகளில் ஒவ்வொரு நிமிஷமும் முக்கியமானது. சில நிமிஷங்களிலேயே பணம் பல கணக்குகள் வழியாக மாற்றப்பட்டு விடும். தொடக்கத்திலேயே அந்தப் பரிவர்த்தனைகளை நிறுத்த முடிந்தால், பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
இதேபோல், மாநிலங்களில் இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையங்களை முழுமையாகச் செயல்படுத்துவதும், மின்னணு வழி முதல் தகவல் அறிக்கை நடைமுறையை விரிவுபடுத்துவதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இணையவழி குற்றங்களுக்கு புவியியல் எல்லைகள் கிடையாது. எனவே, புகார் பதிவு மற்றும் விசாரணை முறைகளும் அதே வேகத்தில் செயல்பட வேண்டும். விரைவான தகவல் பரிமாற்றம், விரைவான நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
அதேநேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தைத் திரும்ப வழங்கும் நடைமுறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் வரவேற்கத்தக்கது. மீட்கப்பட்ட தொகை விரைவாக உரியவர்களிடம் சென்றடைவது, நீதியின் மீதான நம்பிக்கையையும் எண்மப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தும்.
உலக நாடுகளின் அனுபவங்களும் சில பயனுள்ள பாடங்களை வழங்குகின்றன. சிங்கப்பூரில் வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் நிகழ்நேர தகவல் பரிமாற்றத்தில் இணைந்து செயல்படுகின்றன.
ஆஸ்திரேலியாவிலும் அரசு, நிதி நிறுவனங்கள் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
எண்மக் கைது மோசடிகளில் பெரும்பாலானவை கணினித் திறமையால் அல்ல, மனிதர்களின் மனநிலையைப் பயன்படுத்தியே வெற்றி அடைகின்றன. அச்சம், அவசரம், அதிகாரத்தின் பெயர் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களை சிந்திக்க விடாமல் செய்கிறார்கள். எனவே, பொதுமக்களின் விழிப்புணர்வே மிக வலுவான பாதுகாப்பு.
எந்த அரசு அமைப்பும் காணொலி அழைப்பில் கைது செய்யாது; சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க பணம் அனுப்புமாறும் கேட்காது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகள், தனியுரிமை, சட்ட நடைமுறை மற்றும் சட்டபூர்வமான தகவல் தொடர்பு ஆகியவற்றையும் மதிக்க வேண்டும்.
எதிர்காலம் எளிதானதாக இருக்காது. தொழில்நுட்பம் மாறும் வேகத்தில் இணையவழி குற்றங்களும் புதிய வடிவங்களை எடுக்கும். அதைவிட வேகமாக நமது அமைப்புகளும் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அண்மைக்கால முன்னேற்றங்கள், தடுப்பு நடவடிக்கைகள், விரைவான பதில், சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நிவாரணம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் திசையில் இந்தியா நகர்ந்து வருவதைக் காட்டுகின்றன.
நம்பிக்கையைப் பாதுகாப்பதே எண்ம உலகைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான வழியாகும். தொழில்நுட்பம் குற்றங்களுக்கு வாய்ப்பளிக்கலாம்; ஆனால், குற்றவாளிகள் பயன்படுத்துவது மனிதர்களின் நம்பிக்கையைத்தான். பொறுப்புள்ள நிறுவனங்கள், விழிப்புணர்வுள்ள குடிமக்கள், தொடர்ச்சியான எச்சரிக்கை ஆகியவை ஒன்றிணைந்தால் மட்டுமே பாதுகாப்பான, நம்பகமான எண்ம இந்தியாவை உருவாக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இணையவழி குற்றப் பணப் பரிவா்த்தனை: ‘வங்கிக் கணக்கை புலனாய்வு அமைப்புகள் முழுமையாக முடக்க முடியாது’

ஆவின் பால் இணையவழி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்: பால் முகவா்கள் சங்கம்

இணையவழி மோசடியில் தொடா்புடைய கும்பலின் 9 போ் கைது
‘இணையவழி குற்ற வழக்குகளில் விரைவான நடவடிக்கை’
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



