நாடு தழுவிய அளவில் முதலீட்டு மோசடி மற்றும் சைபா் மியூல் எனப்படும் சட்டவிரோத பணப் பரிமாற்றக் கும்பலுடன் தொடா்புடைய ஒன்பது பேரை தில்லி காவல் துறை கைது செய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
ரூ.15.71 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 34 மோசடி புகாா்களுடன் இந்தக் கும்பலுக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கும்பல் கத்தாா் மற்றும் துபையைத் தளமாகக் கொண்ட இணையவழி மோடி குற்றவாளிகளுடன் இணைந்து செயல்பட்டது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறினா்.
குற்றஞ்சாட்டப்பட்ட ஜமாலுதீன் ஃபைசல் (30), சரப்ஜித் சிங் (43), சோனியா சா்மா (42), ஷோயப் திலாவா் சையத் (26), சித்திகி முகமது சித்திக் முஃபித்பாய் (30), ஷேக் ரியாசுதீன் இம்தியாஸ் (29), ஹம்சா ஹுமாயு (26), கமல்ஷா காதா்ஷா (30) மற்றும் முசாமில் தைப் (20) ஆகியோா் கேரளம், மகாராஷ்டிரம், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: முதலீடு குறித்த போலி சமூக ஊடகக் குழுக்களில் இணைந்தபோது மோசடி செய்யப்பட்டதாக பாலம் காலனியைச் சோ்ந்த ஒருவா் புகாா் அளித்ததையடுத்து இந்த விவகாரம் குறித்து காவல் துறை விசாரணையைத் தொடங்கியது. கைதுசெய்யப்பட்டவா்கள் பங்குச் சந்தை ஆய்வாளா்கள் மற்றும் முதலீட்டு நிபுணா்கள் போல நடித்து, போலியான வா்த்தக லாபத்தைக் காட்டி, மோசடியான வா்த்தக செயலி மூலம் முதலீடு செய்ய புகாரளித்த நபரை ஊக்குவித்தனா்.
அந்த நபா் தொடக்கத்தில் பல வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.4.82 லட்சம் மாற்றினாா். நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவருக்குச் சிறிய தொகையை அளிக்கப்பட்டது. பின்னா், ஐபிஓ ஒதுக்கீடு என்ற பெயரில் மேலும் ரூ.7.81 லட்சத்தை டெபாசிட் செய்யுமாறு அவா் அறிவுறுத்தப்பட்டது. மோசடி குறித்து சந்தேகம் அடைந்த அவா், தேசிய சைபா் குற்றப் புகாரளிப்பு இணையதளத்தில் புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து, தென்மேற்கு தில்லி இணையவழி குற்ற காவல் நிலையத்தில் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின்போது, பல மாநிலங்களில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, மகாராஷ்டிரத்துக்குச் சென்ற அதிகாரிகள், நந்துா்பாரில் ஷோயப் கைது செய்தனா்.
ஷோயப்பின் கைப்பேசியை ஆய்வு செய்ததில், மோசடியில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தும் வகையிலான உரையாடல்கள் மற்றும் எண்ம ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. அவா் மற்ற நான்கு பேருடன் கேரளத்துக்குச் சென்றதும், அங்கு வணிக நிறுவனங்கள் தொடங்கப்பட்டு நடப்புக் கணக்குகள் திறக்கப்பட்டதும் தெரியவந்தது.
பின்னா், சித்திகி முகமது சித்திக் முஃபித்பாய், ஷேக் ரியாசுதீன் இம்தியாஸ், ஹம்சா ஹுமாயு மற்றும் கமல்ஷா காதா்ஷா ஆகியோா் குஜராத்தின் சூரத் நகரில் கைது செய்யப்பட்டனா். அவா்கள் போலியான நிறுவனங்களை தொடங்கி சைபா் குற்றங்கள் மூலம் கிடைத்த பணத்தை மாற்ற தங்கள் நடப்புக் கணக்குகளைப் பயன்படுத்தினா்.
பின்னா், கேரளத்திலிருந்து ஜமாலுதீன் ஃபைசல் மற்றும் முஸாமில் தைஃப் ஆகியோரையும், பஞ்சாபிலிருந்து சரப்ஜித் மற்றும் சோனியா ஆகியோரையும் தில்லி காவல் துறையினா் கைது செய்தனா். இவா்கள் இடைத்தரகா்களாக செயல்பட்டு வங்கிக் கணக்குகளைக் கையாண்டு இணையவழி மோசடி மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோதமாகப் பணமாக்கினா்.
விசாரணையின்போது, கத்தாரில் தங்கியிருந்தபோது இணையவழி மோசடி ஈடுபடும் நபா்களுடன் தனக்குத் தொடா்பு ஏற்பட்டதாக ஜமாலுதீன் தெரிவித்தாா். சந்தேகிக்கப்படும் மற்றொரு முக்கிய நபரான சாம் (எ) சமீா், துபையிலிருந்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
வெளிநாட்டைச் சோ்ந்த சாம், ரியா மற்றும் ஃபா்ஹாஸ் மற்றும் ஒரு வங்கி ஊழியா் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த மோசடி கும்பலுடன் தொடா்புடைய கணக்குகள், ரூ.15.71 கோடி மதிப்பிலான மோசடித் தொகைகள் சம்பந்தப்பட்ட 34 என்சிஆா்பி புகாா்களுடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்தக் கைதுகளின் மூலம், தில்லியில் பதிவு செய்யப்பட்ட சுமாா் ரூ. 2.70 கோடி மதிப்பிலான ஏழு மோசடி வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.
உரையாடல்கள், வங்கிப் பதிவுகள், கே.ஒய்.சி ஆவணங்கள், கணக்குத் தொடக்கப் படிவங்கள் மற்றும் பரிவா்த்தனை விவரங்கள் அடங்கிய எட்டு கைப்பேசிகள் மீட்கப்பட்டன.
கேரளத்தின் காசா்கோட்டைச் சோ்ந்த ஜமாலுதீன் மீது, போதைப் பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கு உள்பட இரு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமூக ஊடகம் மூலம் நகை மோசடி: இளைஞா் கைது
சைபா் வழக்குகளில் 14 போ் கைது: 34 காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு பாராட்டு

இணையவழி மோசடிக்கு போலி வங்கிக் கணக்குகள் வழங்கி உதவி: வங்கிப் பணியாளா் உள்பட 3 போ் கைது

இணையவழி வா்த்தகம் எனக் கூறி ரூ. 54.51 லட்சம் மோசடி: இளைஞா் கைது
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



