
சொந்த தளத்தில் பங்குகளைப் பட்டியலிடுவது சாத்தியமே: என்எஸ்இ தலைவா்
‘பங்குச் சந்தைகள் தங்களின் சொந்த வா்த்தகத் தளத்திலேயே தங்களின் பங்குகளைப் பட்டியலிட்டுக் கொள்வது (சுய-பட்டியல்) நடைமுறையில் சாத்தியமானதே’ என தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) தலைவா் ஸ்ரீநிவாஸ் இஞ்செட்டி தெரிவித்தாா்.

~
‘பங்குச் சந்தைகள் தங்களின் சொந்த வா்த்தகத் தளத்திலேயே தங்களின் பங்குகளைப் பட்டியலிட்டுக் கொள்வது (சுய-பட்டியல்) நடைமுறையில் சாத்தியமானதே’ என தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) தலைவா் ஸ்ரீநிவாஸ் இஞ்செட்டி தெரிவித்தாா்.
அதேநேரம், இது தொடா்பான முடிவை எடுக்கும் முழு அதிகாரம் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) வசமே உள்ளது என்றும் அவா் சுட்டிக்காட்டினாா்.
தற்போதைய விதிமுறைகளின்படி, ஒரு பங்குச் சந்தை தனது சொந்த தளத்தில் தனது பங்குகளைப் பட்டியலிடவோ அல்லது வா்த்தகம் செய்யவோ அனுமதி இல்லை. இதனால்தான் என்எஸ்இ பங்குகள், அதன் போட்டி நிறுவனமான மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய ஸ்ரீநிவாஸ் இஞ்செட்டி, ‘கடந்த காலத்தில் அனுமதிக்கப்படாத பல விஷயங்கள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன. அதுபோல, இன்று அனுமதிக்கப்படாத சுய-பட்டியல் நடைமுறை வருங்காலத்தில் செபியின் முறையான ஒப்புதலுடன் சாத்தியமாகலாம்.
மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியப் பங்குச் சந்தைகளுக்குக் கூடுதல் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைப் பணிகள் இருக்கின்றன. இதனால், ஒரு நிறுவனம் தன்னைத்தானே கண்காணிக்கும்போது ‘நலன் சாா்ந்த முரண்பாடுகள்’ உருவாகலாம் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. எனவே, இதை நாம் மிகச் சரியாகக் கையாள வேண்டும்.
சந்தை நோ்மையைப் பேணிக் காக்கும் ஒழுங்குமுறை அமைப்பாகவும்; அதேநேரம், லாப நோக்கம் கொண்ட வணிக நிறுவனமாகவும் என்எஸ்இ இரட்டைப் பொறுப்புகளைக் கொண்டுள்ளது. பங்குதாரா்களுக்கு லாபம் அளிப்பது முக்கியம் என்றாலும், இந்த 2 பொறுப்புகளுக்கும் இடையே என்றாவது முரண்பாடு ஏற்பட்டால், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் ஒழுங்குமுறைப் பணிக்கே எப்போதுமே அதிக முன்னுரிமை அளிக்கப்படும்’ என்று தெளிவுபடுத்தினாா்.
பெட்டி...
பட்டியலிடப்பட்ட மறுநாளே சரிவு!
பங்குச் சந்தையில் அறிமுகமான 2-ஆவது நாளிலேயே (வெள்ளிக்கிழமை) என்எஸ்இ நிறுவனப் பங்குகளின் மதிப்பு 1.39 சதவீதம் சரிந்து, ரூ.1,792.65-நிலைபெற்றது.
தற்போதைய நிலையில், என்எஸ்இ நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ரூ.4.43 லட்சம் கோடியாக உள்ளதுடன், நாட்டில் அதிக சந்தை மதிப்பு கொண்ட முதல் 100 நிறுவனங்களின் பட்டியலில் 12-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





