

அங்கே இங்கே குளிப்பதெல்லாம் குளியல் அல்ல. குற்றாலத்தில் குளிப்பதுதான் அசல் குளியல்! "சீசன்' நேரத்தில் ஒரே நாளில், எத்தனை முறை, எத்தனை அருவியில், எவ்வளவு நேரம் குளித்தாலும் சளியோ, காய்ச்சலோ எட்டிப் பார்க்காது. அதுதான் பொதிகை மலை மூலிகையின் மவுசு.
தென் மேற்குப் பருவ மழைக் காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ஆரியங்காவுக் கணவாய் வழியாகப் பாய்ந்து வரும் குளிர்ந்த காற்றைச் சிக்கெனப் பிடித்து சாரல் மழையாகப் பிழிந்து தருகிறது குற்றால மலை.
இந்த மழை நீர், மலைகளில் தவழ்ந்து, மூலிகைகளைத் தழுவி, சில்லென்ற குளிர்ச்சியுடன், வெள்ளியை உருக்கிவிட்டது போல அருவியாய்க் கொட்டுவதைப் பார்ப்பதே ஓர் ஆனந்தம். இரண்டு முழத் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, உடல் முழுக்க நல்லெண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு, அருவிக்கு கீழே மணப்பெண் மாதிரி தலையைக் கவிழ்ந்து நின்று குளிக்கும்போது ஏற்படும் சுகமே தனி. தலையில் கல்லைத் தூக்கிப் போடுவது போலத்தான் தெரியும்.
ஆனாலும் அதில் உள்ள சுகம் இருக்கே... அது சொன்னால் தெரியாது; குளித்து அனுபவித்தால்தான் புரியும்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் குற்றாலத்தில், ஓர் அருவி, இரண்டு அருவி இல்லை; மொத்தம் 8 அருவிகள் உள்ளன. பேரருவி, சிற்றருவி, செண்பகதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றால அருவி, புலியருவி என சுற்றிச் சுற்றி அருவிகள்தான்.
பேரருவி
குற்றாலம் சென்றதும் நம்மை பன்னீர் தெளித்து வரவேற்பது பேரருவி. பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த அருவி. சுமார் 1,200 அடி உயரத்திலிருந்து படிப்படியாக பொங்குமா கடலில் விழுந்து, தரைமட்டத்துக்கு வருகிறது. இதிலிருந்து கிளம்பும் நீர்த்துளிகள் காற்றில் கலந்து வந்து அனைவரையும் தொட்டு வரவேற்கும். இங்கு ஆண்களும் பெண்களும் குளிக்க தனித்தனி இடவசதி உண்டு.
சிற்றருவி
பேரருவியில் இருந்து ஐந்தருவிக்குச் செல்லும் வழியில் சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ளது சிற்றருவி. மலை உச்சியிலிருந்து பேரருவிக்கு செல்லும் நீரின் ஒரு பகுதி பிரிந்து சிற்றருவியாக உருமாறுகிறது. இதில் சிறுவர்களும் அச்சமின்றி குளிக்கலாம்.
செண்பகதேவி அருவி
குற்றால மலையில் சுமார் 600 அடி உயரத்தில் காணப்படுவது செண்பகதேவி அருவி. சிற்றருவி செல்லும் பாதை வழியாக மலை மீது ஏறிச் சென்றால்தான் இந்த அருவியில் நீராட முடியும். வழியில் அருள்மிகு செண்பகதேவி அம்மன் கோவிலும் உள்ளது. மலை ஏற விரும்புவோருக்கு இது ஒரு நல்ல பயிற்சிக் களம்.
தேனருவி
அருவியில் இருந்து ஒத்தையடிப் பாதையில் நடந்து சென்றால் தேனருவியை அடையலாம். பொதிகை மலையின் உச்சியில் சுமார் ஆயிரம் அடிகளுக்கு மேல் பாலாறாகத் தோன்றி அருவியாக கொட்டுவதால் இது தேனருவியானது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் உள்ள இந்த அருவியில் குளிப்பது எதற்கும் ஈடாகாது.
ஐந்தருவி
குற்றாலம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது ஐந்தருவி. மலையில் இருந்து விழும் நீர், ஐந்து கிளைகளாக பிரிந்து கொட்டுவதால் இதற்கு இந்தப் பெயர். இதில் குளித்தால் ஐம்புலன்களுக்கும் உற்சாகம் ஏற்படும். இரவு, பகல் எந்நேரமும் இதில் குளித்துக் குதூகலிக்கலாம். இங்கும் இடஒதுக்கீடு முறை உண்டு. மூன்று கிளைகளில் ஆண்களும், இரண்டு கிளைகளில் பெண்களும் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
பழத்தோட்ட அருவி
ஐந்தருவியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் மலை உச்சியில் அமைந்துள்ளது பழத்தோட்ட அருவி. இயற்கை எழில் சூழ்ந்த பகுதிக்குள் உள்ள இந்த அருவியில் குளிப்பது பேரானந்த அனுபவம். குற்றாலம் சென்றவர்கள் பழத்தோட்ட அருவியில் குளித்தேன் என்று சொல்வதையே பெருமையாக நினைப்பதுண்டு. காரணம் இந்த அருவியில் எல்லோரும் குளித்துவிட முடியாது. எனவேதான் இதற்கு "வி.ஐ.பி. அருவி' என்ற செல்லப் பெயரும் உண்டு. குற்றாலத்தில் உள்ள வனத் துறையினரின் அனுமதி பெற்று இந்த அருவிக்குச் செல்லலாம்.
பழைய குற்றால அருவி
குற்றாலம் - கடையம் செல்லும் பாதையில் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது பழைய குற்றால அருவி. சுமார் 600 அடி உயரத்திலிருந்து இந்த அருவி விழுகிறது. இங்கும் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியே குளிக்க வசதி உள்ளது. பெண்கள் காசு கொடுத்து, துணி மாற்றும் அறைகளைப் பயன்படுத்துவது நல்லது. "ஜொள்ளு பார்ட்டி'களின் பார்வைகளைத் தவிர்க்கலாம். அருவியில் குளித்து முடித்த உடன் குளிர்ந்த உடம்புக்கு இதமான சூடேற்ற மிளகாய் பஜ்ஜி, வடை, டீ, காபி என ஏகப்பட்ட "ஐயிட்டங்கள்' உண்டு. மலைப் பழ வகைள் என குவியல், குவியலாக வைத்து விற்பார்கள். விவரத்துடன் கேட்டு வாங்க வேண்டும்.
இவையும் உண்டு...
குற்றாலத்தில் அருவி மட்டும்தான் என எண்ணிவிடாதீர்கள். குற்றாலநாதர் திருக்கோவில், சித்திரசபை, படகு குழாம், பாம்புப் பண்ணை, சிறுவர் பூங்கா ஆகியவையும் உண்டு. குற்றாலத்தில் உள்ள குரங்குகள் வினோதமானவை. கையில் வைத்திருக்கும் பொருளை தைரியமாக வந்து பறித்துச் செல்லும்.
உச்சந்தலை உச்சியிலே...
குற்றாலச் சிறப்புகளில் ஒன்று மூலிகை எண்ணெய் மசாஜ். சந்தனாதி தைலம், அரைக்கீரை தைலம், பொன்னாங்கன்னி தைலம் ஆகியவற்றில் விரும்பும் ஒன்றால் மசாஜ் செய்து குளிக்கலாம். இந்த மூலிகை எண்ணெய்களில் "போலி'களும் ஏராளம். எனவே, ஒரிஜினல் எண்ணெய்களை தெரிந்து வாங்க வேண்டும்.
குற்றாலநாதர் கோயிலில் தயாரிக்கும் மூலிகை எண்ணெய் சிறப்பானது. பால், பன்னீர், இளநீர், சந்தனம் மற்றும் மூலிகைகளை சேர்த்து ஆகம முறைப்படி இந்த தைலம் தயாரிக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு தலைவலி என்ற ஐதீகத்தின் அடிப்படையில் தினந்தோறும் காலை அபிஷேகத்தின்போது இந்த மூலிகை எண்ணெய்யை சிரசில் வைத்து அபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்த எண்ணெய் 100 மி.லி. ரூ. 8 தான். ஆண்களுக்கு மசாஜ் செய்ய சுமார் 50 பேர் உள்ளனர். மூலிகை எண்ணெய்யை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து, உடலின் பாகங்களை அழுத்திப்பிடித்து மசாஜ் செய்யும்போது நரம்புகளும், ரத்த ஓட்டமும் சீரடைகிறது. கொட்டும் அருவியில் குளிக்கும்போது உடலின் உஷ்ணம் தணிகிறது. உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது. சுளுக்கு இருந்தாலும் பறந்துவிடும். கட்டணம் ரூ. 20 முதல் 30 வரை.
பெண்களுக்கும் மசாஜ்
பெண்களுக்கு, "சீசன்' நேரத்தில் மட்டும் அங்குள்ள தமிழ்நாடு ஹோட்டலில் மசாஜ் செய்யப்படும். கேரளத்தைச் சேர்ந்த பெண்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் "சீசன்' காலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க அரசு சார்பில் ஒரு வார காலம் பல்சுவை விழாவாக "சாரல் திருவிழா' கொண்டாடப்படும்.
சீசன் எப்போ?
தென் மேற்குப் பருவமழைக் காலமான ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மூன்று மாதங்கள்தான் குற்றால சீசன். அப்போதுதான் அருவிகளில் தண்ணீர் கொட்டும். மற்ற காலங்களில் மழை பெய்யும் வேளைகளில் அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும், அதற்கு சீசன் மகத்துவம் கிடையாது.
போக்குவரத்து வசதி:
திருநெல்வேலியில் இருந்து 59 கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்திலும் செல்லலாம். கட்டணம் ரூ. 19. ரயிலில் தென்காசி வரை சென்று (கட்டணம் ரூ. 16) அங்கிருந்து நகர்ப் பேருந்து மூலம் குற்றாலம் செல்லலாம். பிரதான அருவியில் இருந்து ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றுக்கு நகர்ப் பேருந்து வசதி உண்டு.
தங்குமிட வசதி: குற்றாலத்தில் தங்கும் வசதிகள் உள்ளன. சீசன் காலத்தில் சாதாரணமாக ரூ. 200-க்கு இரண்டு படுக்கைகள் கொண்ட அறை கிடைக்கும். தனியான குடில்களும் உண்டு. வசதிக்கு ஏற்பக் கட்டணம். உணவு விடுதிகளும் உள்ளன.
குற்றாலத்துக்கு அருகே...:
குற்றாலத்துக்கு அருகில் 52 கி.மீ., தொலைவுக்குள் பாபநாசம் அணை, முண்டந்துறை புலிகள் சரணாலயம், பாணர்தீர்த்த அருவி, அகஸ்தியர் அருவியும், 50 கி.மீ., தொலைவில் மணிமுத்தாறு அணை, பூங்கா; 65 கி.மீ. தொலைவில் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டம், குதிரைகட்டித் தேரியும் உள்ளன.
நெல்லையில்...
குற்றாலம் செல்ல திருநெல்வேலிக்கு வருவோர் இம்மாவட்டத்தில் உள்ள பிற முக்கியமான சுற்றுலா மையங்களையும் கண்டுகளிக்கலாம்.
காந்திமதி-நெல்லையப்பர் கோவில்:
நகரின் மையப் பகுதியில் உள்ளது இந்தக் கோயில். இசை எழுப்பும் கல் தூண்கள், ஆயிரங்கால் மண்டபம், பொற்றாமரைக் குளம், அபூர்வ நகை வகைகள் ஆகியவை இதன் சிறப்பு.
கதீட்ரல் ஆலயம்: 1826 - ம் ஆண்டு அருள்திரு ரேனியஸôல் கட்டப்பட்ட தேவாலயம். நகரின் அடையாளச் சின்னம்.
கிருஷ்ணாபுரம் (11.கி.மீ): கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்ட விஷ்ணு கோயில் உள்ளது. கலை நுணுக்கத்துடன் செதுக்கப்பட்டுள்ள ஆள் உயர கற்சிற்பங்கள் சிறப்பு.
சங்கரன்கோவில் (56.கி.மீ.): இங்குள்ள சங்கரநாராயணர் கோவிலில் சிவனும், விஷ்ணுவும் இணைந்திருப்பர். ஆண்டுதோறும் மார்ச் 21 முதல் 7 நாள்களும், செப்டம்பர் 21 முதல் 7 நாள்களும் கர்ப்பக்கிரகத்தில் சூரிய ஒளி விழுவது ஓர் ஆச்சர்யம்.
பத்தமடை (30கி.மீ.): கோரம்பாய்க்குப் பெயர் பெற்றது. விதவிதமான பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. சுவாமி சிவானந்தர் பிறந்த ஊர் இது.
களக்காடு (47கி.மீ.): சிங்கவால் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இயற்கைக் காட்சிகள் நிறைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.