பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

அத்தியாயம் - 25

சங்கீதா என்னிடம் வரும் போது கடுமையான மன அழுத்தத்தில் இருந்தாள். அவள் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் தான்.

Updated On :

சங்கீதா என்னிடம் வரும் போது கடுமையான மன அழுத்தத்தில் இருந்தாள். அவள் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் தான். அவள் கணவன் துரை கிட்டத்தட்ட ஒரு சைக்கோ. எதற்கெடுத்தாலும் சந்தேகம், அடி உதை என்று திருமணமாகி மூன்று மாதத்திலேயே அதிலிருந்து வெளியேறிவிட்டாள். அவள் எப்போதும் துயரத்தில் இருப்பதைப் பார்த்து சகிக்க முடியாமல் விவாகரத்து முடிந்த கையோடு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து எளிமையாக அவளுக்கு மறுமணம் செய்து வைத்தார்கள் பெற்றோர்கள். மாப்பிள்ளை நவீன் சாது. மிகவும் நல்லவன். ஆனால் அவனுக்கு ஆண்மை குறைபாடு பிரச்னைகள் இருந்தன என்பதை சங்கீதா தெரிந்து கொண்ட போது வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. முதல் திருமணம் தோற்றுப் போய் இரண்டாவது திருமணம் செய்தால் அந்த வாழ்க்கையும் வீணாகிவிட்டதே என்று மனம் ஒடிந்து போனாள். ஆனால் நவீன் அவளிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டான். இந்த வாழ்க்கையிலிருந்தும் வெளிவந்துவிட்டால் உலகம் தன்னைத் தான் பழி சொல்லும் என்று பயந்து, இந்தப் பிரச்னையை எப்படி கையாள்வது எனத் தெரியாமல் உள்ளுக்குள் புழுங்கிப் போனாள்.

ஒரு கட்டத்தில் பெற்றோர்களிடம் சொல்லிவிட அவர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த உண்மையை மாப்பிள்ளை வீட்டினர் மறைத்திருந்தனர். இரண்டாவது திருமணம் செய்யும் பெண் தானே இதை பெரிது படுத்தமாட்டார்கள் என்று அவர்கள் வீட்டினர் நினைத்து திருமணத்தை நடத்தியிருந்தனர். ஆனால் தன் வாழ்க்கை ஏனிப்படி ஆனது என்று சங்கீதா கடுமையாக மன பாதிப்பு அடைந்துவிட்டார். அவளுடைய பெற்றோர்கள் என்னிடம் அழைத்து வந்த போது அவளிடம் நான் சொன்ன விஷயத்தின் சாரம் இது தான். இரண்டாவது தடவையும் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் என்ன? வலியும் வேதனையும் அதிகம் தான் அதற்காக என்ன செய்ய முடியும். உனக்குப் பிடிக்காத வாழ்க்கையில் நீ உன்னை கஷ்டப்படுத்திக் கொண்டு வாழாதே. மனத்தை முதலில் சரியாக்கிக் கொள் அதன்பிறகு மற்ற விஷயங்களைப் பார்த்துக் கொள்ளலாம் என்றேன். ஒரு தப்பும் செய்யாத அவளுக்கு எத்தனை பெரிய இடி அது. மீண்டும் மீண்டும் மண முறிவு என்ற போது எந்தப் பெண்ணால் தான் தாங்கிக் கொள்ள முடியும். வாரம் ஒரு முறை என்னிடம் வந்து நிறைய சந்தேகங்களை, வாழ்வியல் அனுபவங்களைப் பேசிப் பேசி ஓரளவு தெளிவடைந்தாள். அதன் பின் வெளிநாட்டில் வேலை கிடைக்க, இப்போது மூன்றாம் திருமணம் செய்து கொண்டாள். நல்லது தான். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

சமூகத்திற்கும் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கும், இது கேலிக்குரிய விஷயமாகத் தெரியலாம். ஆனால் அவள் அனுபவித்த வேதனை, மனக் கசப்பு கூட இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அதில் தொடர்ந்து துன்பங்களே சூழ்ந்திருந்தால் யாருக்குத் தான் வாழப் பிடிக்கும். அதுவும் திருமண உறவை மட்டுமே அங்கீகரிக்கும் ஒரு சமூகத்தில் அது தோற்றுப்போகும் போது என்னவாகும் அந்தப் பெண்ணின் வாழ்க்கை என்ற தீர்வை தர மறுக்கிறது. ஆண்களுக்கு ஒரு பக்கம் இதனால் பிரச்னைகள் இருந்தாலும், பெண்களின் நிலை எப்போதும் அவர்களை விட மோசமாகத் தான் இருக்கிறது.

நம் நாட்டில் தான் இத்தகைய கலாச்சார மதரீதியான பிரச்னைகள் உள்ளன. மலைப்பிரதேசங்கள் பலவற்றில் திருமணம் அல்லாது பிடித்த துணையுடன் சேர்ந்து வாழும் முறை பரவலாக உள்ளது. ஒரு பெண் நான்கு முறை கூட துணையை மாற்றி வாழும் நிலை இருக்கிறது. அது ஒரு தவறோ அல்லது கற்பு வழுவிய விஷயமோ இல்லை. கற்பு என்றொரு வார்த்தை கூட அவர்களுக்குத் தெரியாது. நம்முடைய கலாச்சாரத்தில் பெண்களின் ஒழுக்கமும் கற்பும் உயிரை விட மேலானது என்று போதிக்கப்பட்டதால் ஒருவனை நினைத்துவிட்டால் வாழ்க்கையே அவனுடன் தான் என்ற சிந்தனை பல பெண்கள் இடையே மரபுரீதியாகவே உள்ளது. இந்த கலாச்சாரம் சரி தப்பு என்பதல்ல நம்முடைய வாதம். ஒரு முறை அல்லது இரண்டு முறை மண வாழ்க்கை தோல்வி அடைந்தால் அதற்காக ஏன் உயிரை விட வேண்டும். அடிப்படையில் ஒவ்வொரு உயிரும் சந்தோஷமாக வாழத்தான் இறைவன் அவர்களைப் படைத்துள்ளான். ஆனால் சொர்க்கமாக இருக்க வேண்டிய வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்வதை தான் பலரும் செய்கிறார்கள். அதிலும் திருமண உறவில் பல சிக்கல்கள் வலிகள் காயங்கள் என்று வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளும் தம்பதிகள் அனேகம் பேர் உள்ளனர். இப்படி அன்பற்ற மகிழ்வற்ற ஒரு வாழ்க்கை வாழ்வதற்குப் பதில் பிரிந்து அவரவருக்குப் பிடித்த வகையில் மற்றொரு திருமணமோ அல்லது தனியாக வாழ்தலோ எது அவர்களின் தேர்வோ அதைப் பின்பற்றி வாழ்வதில் என்ன தவறு? சுற்றத்தினரும் நண்பர்களும் அவர்களை நிம்மதியாக இருக்க விட்டால் போதும் அவர்கள் தாங்களாகவே அதிலிருந்து மீண்டு வருவார்கள். அதை விட்டுவிட்டு அடுத்தவர் விஷயத்தைப் பேசி அவர்கள் மன வருத்தத்தை அதிகரிக்கச் செய்வதில் என்ன கிடைத்துவிடப் போகிறது? அது மனிதாபிமானம் அற்ற செயல் என்பதை அவர்கள் உணர்ந்து புறங்கூறுதலை விட்டொழிக்க வேண்டும். நாம் மேலும் ஒரு முன்னேறிய சமூகமாக மாற வேண்டிய அவசியச் சூழலில் இருக்கிறோம். படித்து, பண்பட்டு இருந்தாலும் மற்றவரின் அந்தரங்கமான விஷயங்களில் ஆர்வம் காட்டுவதிலும், மற்றவர் தோல்வியில் சீண்டிப்பார்ப்பதையும் விட்டு அவர்களை அரவணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அன்பாக இல்லையென்றாலும் கூட பரவாயில்லை, சொற்களால் அனல் அடிக்காமல் இருந்தால் போதும்.

தவிர ஆண் பெண் ஒன்றாக திருமண பந்தத்தில் வாழ சம்மதிப்பது ஒரு பாதுகாப்பு உணர்வுக்காகவும் தான். ஆனால் திருமண வாழ்க்கையில் கணவனால் பாதுகாப்பு இல்லை என்று உணரும் தருவாயில் அதிலிருந்து வெளியே வருவது தான் புத்திசாலித்தனம். இன்று திருந்துவான் நாளை சரியாகிவிடுவான் என்று காத்திருப்பதும் கூட காலம் வீண் தான். சரியில்லை, ஒத்துவராது என்று மனத்துக்குள் முடிவு எடுத்துவிட்டால், சீக்கிரம் விவாகரத்து செய்வது நல்லதுதான். காலம் எல்லா காயங்களையும் ஆற்றாது. பெண்கள் தங்களை சக்தியற்றவர்களாக ஒரு போதும் நினைத்து சோர்வடையக் கூடாது. தங்களுடைய வாழ்க்கை பெரியது. அதில் திருமண வாழ்க்கை ஒரு பகுதி. ஏதோ அது சரியாக அமையவில்லை என்ற காரணத்தால் மொத்த வாழ்க்கையும் முடிந்துபோய் விட்டது என்று சோர்வடையக் கூடாது. வானமே இடிந்து வீழ்ந்தாலும் அச்சமில்லை என்று சொன்னவனின் குரலை பின்பற்றி வாழ்க்கையைத் தொடரவேண்டும்.

அடுத்தடுத்த திருமணம் அப்படி ஒன்றும் பெரிய தவறோ பாவமோ இல்லை. செய்தித் தாளை திறந்து பார்த்தால் பக்கத்துக்கு பக்கம் திருமணம் தாண்டிய உறவுகளால் கொலை அல்லது தற்கொலைச் செய்திகள். கணவன் வெளியூர் சென்றிருக்கும் நேரத்தில் காதலிக்கும் நடிகரை வீட்டுக்கு வரச் செய்த ஒரு பெண், நடிகர் வீட்டில் இருக்கும் நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவே, பயத்தில் அவர் நான்காம் மாடியிலிருந்து பைப்பில் கீழிருங்கும் சமயத்தில் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரை விட்டார் என்ற செய்தி சமீபத்தில் ஊடகங்களில் வெளியானது. இதில் எல்லோரும் அந்தப் பெண்ணை உடனடியாக குற்றவாளியாக்கிவிடுவார்கள். அந்தப் பெண் மட்டுமா தவறு செய்தது, அந்த நடிகரும் தானே? தவிர அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் என்ன பிரச்னை என்று யாருக்குமே தெரியாது. இந்த பிரச்னை சமூகத்தினர் முன்னால் தலை குனிந்து நிற்கும் நிலை இதெல்லாம் எதற்கு? பிடிக்காத வாழ்க்கை, கொடுமைப் படுத்தும் உறவுகள் திருமண வாழ்க்கையில் இருந்தால் அதிலிருந்து வெளியேறிய பின் உங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வதில் தவறில்லையே? அதை விட்டுவிட்டு கணவனையும் ஏமாற்றி, காதலிப்பவனுடனும் முழுமையாக வாழாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக இருப்பது தவறு. இது சட்டப்படி மட்டுமல்ல அறமற்ற துரோகச் செயல்.

வாழ்க்கையை அதிகம் குழப்பிக் கொள்ளாமல் தெளிவாக யோசித்து எது சரி எது தவறு எது நியாயம் என்பதையும் எண்ணி அதற்கேற்ற வகையில் திருமண வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடனுக்கு உடன் யோசிக்காமல் முடிவெடுத்துக் கொண்டிருந்தால் மீண்டும் மீண்டும் பிரச்னையில் விழ நேரிடும். எனவே சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ நினைத்தால் நம்முடைய மனசு சொல்வதை எல்லாம் கேட்பதை விட்டுவிட்டு புத்தி சொல்வதையும் கேட்கவேண்டும். சுய முடிவு எடுக்க முடியவில்லை என்றால் நமக்கு நெருங்கியவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். அதுவும் இல்லை என்றால், எங்களைப் போன்ற மனநல மருத்துவர்களை அணுகலாம்.

தனிமை, பிரிவு, துயர் இவை எல்லாம் நிரந்தரமன்று. எல்லாம் மாறும். மாற்றக் கூடிய முடிவுகள் நம் கையில் தான் உள்ளது. எனவே எதற்கும் சோர்ந்து மனத்தை தளர விடாமல் தைரியமாக இருந்து வாழ்க்கை எதிர்கொள்ளுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்!

முற்றும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.