அத்தியாயம் - 22
பிரிந்திருக்கும் தம்பதியரின் மனத்தின் அடி ஆழத்தில் நம்பிக்கையின் சிறிய ரேகை மறைந்திருக்கும்.

பிரிந்திருக்கும் தம்பதியரின் மனத்தின் அடி ஆழத்தில் நம்பிக்கையின் சிறிய ரேகை மறைந்திருக்கும். எதாவது அதிசயம் நடந்து ஒன்று சேர்ந்துவிட மாட்டோமா என்று நினைப்பார்கள். இந்த நம்பிக்கை எப்போது சுக்குநூறாக உடையும் என்றால் இருவரில் ஒருவருக்கு முதலில் வேறு ஒரு திருமணம் நிச்சயம் ஆகும் போதுதான். இந்த உறவு இனி ஒரு போதும் திரும்பாது என்று. முடிவாக அப்போது தெரிந்துவிடும்.
மனக் கொந்தளிப்புடனும் கோபமும் இயலாமையும் சுய பச்சாதபமும் இந்த நேரத்தில் அவர்களை வாட்டி எடுத்துவிடும். பல வகையான கலவை உணர்வுகளுடன் போராடுவார்கள். இத்தனை நாட்கள் ஏதோ ஒரு நம்பிக்கையின் பேரில் நாட்களைக் கடத்தியவர்கள், விவாகரத்து கையில் கிடைக்கும் போது கூட இந்த அளவிற்கு வலியை உணராதவர்கள், இப்போது துணை இன்னொரு வாழ்க்கையை இத்தனை விரைவில் தேடிக் கொள்வது ஆற்ற முடியாத ரணமாக மனத்தை கீறும். எப்பேர்ப்பட்ட துணிச்சல்காரர்களையும் வீழ்த்தும் நிலை இது. கடந்த காலம் வீணாகிவிட்ட நிலையில், இனி அடுத்து என்ன என்ற கேள்வி. எதிர்காலம் இருட்டாகவும், தென்படும். ஆனால் இப்போது தான் உடன் இருப்பவர்கள் அவர்களை ஆறுதல் படுத்தியும் அன்பாக அரவணைத்தும் தேற்றி மீண்டும் சுய உணர்வுக்குக் கொண்டு வர வேண்டும். முக்கியமாக பெற்றோர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது நல்லது. அவசரப்பட்டுட்டே என்று யாரும் அவர்களைக் குறை சொல்லக் கூடாது காரணம் ஏற்கனவே அவர்கள் தாங்கள் எடுத்த முடிவு சரிதானா என்று தன் மீதே குற்றவுணர்வுடன் இருப்பார்கள். உணர்ச்சிகளின் பிடியில் இருக்கும் அவர்களால் சரியாக யோசிக்க முடியாது. விதியின் மீதும், கடவுளின் மீதும் சுற்றி இருக்கும் அத்தனை விஷயங்கள் மீதும் தன் மீதும் குழந்தைகள் இருந்தால் அவர்கள் மீதும் அவர்கள் எரிச்சல் அடைவார்கள். தங்கள் வாழ்க்கை நிர்மூலமாகிவிட்டது என்று உள்ளுக்குள் குமைந்து வெளியே வெறுப்பை உமிழ்வார்கள். ஆனால் அதற்காக அவர்களை மேலும் புண் படுத்தி கஷ்டப்படுத்தக் கூடாது. அவர்களின் கையறு நிலையை புரிந்து அதற்கேற்றபடி நடந்து கொள்ள வேண்டும்.
எப்பேர்ப்பட்ட தைரியசாலியாக இருந்தாலும் இந்த மனக் காயத்திலிருந்து இதிலிருந்து மீள 15 நாட்களாவது ஆகும். வெளியில் இருப்பவர்களுக்கு இது புரியாது. இந்த வேதனையை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் இதன் தீவிரம் புரியும். எனவே அவர்களை விட்டுவிடுங்கள். அவர்களுக்கு நீங்கள் எதுவும் அட்வைஸ் செய்ய வேண்டாம், ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என்று பழைய விஷயங்களை கிளறி இப்படி செய்திருக்கலாம், அப்படி சொல்லியிருக்கலாம், இதை தவிர்த்திருக்கலாம் அல்லது இன்னும் கொஞ்சம் காலம் கழித்து இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தேவையில்லாத விஷயங்களைப் பேசி அவர்களை மேலும் காயப்படுத்திவிட வேண்டாம். பின் என்ன தான் செய்வது? அவர்களை எப்படி தேற்றுவது என்று குழப்பமாக உள்ளதா? உண்மையில் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். அவர்களாகவே குழம்பி, அவர்களாகவே தெளிந்தும் விடுவார்கள். அதுவரை அவர்கள் எந்த தவறான முடிவுக்கும் சென்றுவிடாமல் அருகில் இருந்து பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது தான் உங்கள் பொறுப்பு. தவிர அவர்கள் சொல்வதையும், புலம்புவதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். அதில் வாதங்கள் செய்வதோ, உங்களுடைய கருத்துக்களை சொல்வதோ கூட வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் தான். அவர்களுக்குத் தெரியும் எங்கே தவறு செய்தோம், எங்கே சரிக்கினோம், ஏனிப்படி நிகழ்ந்தது என்று எல்லாமே தெரிந்த விஷயம் தான். காலம் தான் காயங்களை ஆற்றும் அருமருந்து என்பதை சொல்லி அவர்களுக்கான அவகாசத்தைக் கொடுங்கள்.
உங்களால் கவனிக்க முடியாத அல்லது தேற்ற முடியாத பட்சத்தில் கவுன்சிலிங் செய்ய அழைத்து வாருங்கள். உண்மையான நிலையை அவர்களுக்குப் புரியும் விதத்தில் எடுத்துச் சொல்லத் தான் நாங்கள் இருக்கிறோம்.
ஆர்த்தி சண்முகம் இருவரும் திருமணமாகி இரண்டு வருடங்களில் பிரிந்துவிட்டார்கள். ஆர்த்தி மேல் படிப்பை பாதியில் விட்டுவிட்டு எம் என் சியில் வேலை செய்யும் சண்முகத்தை திருமணம் செய்திருந்தாள். விவாகரத்திற்குப் பிறகு சண்முகம் உடன் பணி புரியும் ரமாவை திருமணம் செய்து கொள்ள, தனியாக தவித்த ஆர்த்திக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
சண்முகத்துக்கு போன் செய்து கெஞ்ச ஆரம்பித்தாள். அவளை விட்டு விட்டு தன்னை மறுபடி திருமணம் செய்ய வற்புறுத்தினாள். சண்முகம் அவளுடைய நம்பரை ப்ளாக் செய்துவிட்டான். ரமாவின் நம்பரைக் கண்டுபிடித்து அவளுக்கு தினமும் சாபம் கொடுக்கும்படியான மெசேஜ்களை அனுப்ப ரமா வேறு ஒரு நம்பரை மாற்றிவிட்டாள். இருவருக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தாள். சண்முகம் ஒரு கட்டத்தில் ஆத்திரத்துடன் அவள் பெற்றோரிடமும் கண்டிப்பாக இனி அவள் போன் செய்தாலோ தன் வாழ்க்கையில் குறுக்கே வந்தாலோ சும்மா இருக்க மாட்டேன் என்று கடுமையாகச் சொல்லிவிட்டான்.
என்னிடம் ஆர்த்தி வந்த போது கிட்டத்தட்ட மனநிலை பிறழ்ந்து சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருந்தாள். அவசரப்பட்டு டைவர்ஸ் செய்துட்டேன். இன்னொரு வருஷம் பொருத்திருந்தா ஒரு குழந்தை பிறந்திருக்கும். எல்லாம் சரியாகி இருக்கும். நான் தான் தப்பு பண்ணி நல்ல வாழ்க்கையை இழந்துட்டேன். இப்ப அவ கர்ப்பமா இருக்கா எனக்கு வயிறு எரியுது என்று சதா அழுத வண்ணம் உடலை மிகவும் பலகீனமாக்கிக் கொண்டு விட்டாள்.
படிப்படியாக அவளுக்கு கவுன்சிலிங் கொடுத்தேன். உறவுச் சிக்கல்களாலும், திருமணப் பிரிவுகளாலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அதிலிருந்து மீள்வதற்குள் அவர்கள் மறுபிறவி எடுத்தாக வேண்டியுள்ளது.
ஆர்த்தியிடம் பழைய விஷயங்களை சிறிது சிறிதாக மறக்கச் சொன்னேன். சில தெரபிகள் மூலமும், தொடர் கவுன்சிலிங் மூலமும் விரைவில் ஆர்த்தி மன மாற்றம் அடைந்தாள். இவை வாழ்க்கையில் நடக்கக் கூடும். இது எனக்கும் நடந்துவிட்டது என்பதை முதலில் ஏற்றுக் கொள்ள வைத்தேன். அதன் பின் சண்முகம் என்ற மனிதன் இனி அவள் வாழ்க்கையில் ஒரு போதும் இல்லை எனவே அவனிடம் சண்டை போடுவதோ கெஞ்சுவதோ அல்லது சாபம் கொடுப்பதோ ஒன்றும் இனி ஆர்த்தியின் வாழ்க்கையில் எதுவும் செய்யப்போவதில்லை. அவளுடைய மறு வாழ்விற்கு அவள் வேறு வழியைத் தான் தேட வேண்டுமே தவிர, முடிந்துவிட்ட உறவில் எதுவும் திரும்ப நடக்காது என்பதை வலியுறுத்தி சொன்னேன்.
ஒருவழியாக எதார்த்தத்தை உணர்ந்த பின் மேல் படிப்பைத் தொடர ஒப்புக் கொண்டாள்.
இப்போது அவளுக்கு வேறு எதிலும் கவனம் இல்லை. படிப்பும் அதன் பின்னான ஒரு நல்ல வேலையும் மட்டுமே அவளுடைய குறிக்கோளாக இருக்கிறது. இது போதுமே அவள் மனம் மீண்டும் புத்துணர்வு பெற.
இந்த வாழ்க்கையில் எதுவும் சாத்தியம் தான். உடைந்து போனவை முடிந்து போனவை அல்ல. எல்லாமும் மாறும். இன்று இருக்கும் பிரச்னை நாளை இருக்காது. அதே போலத்தான் எல்லாம் ஒரு சக்கரத்தின் சுழற்சி. நாம் இப்போது எந்தப் பக்கத்தில் இருக்கிறோம் என்பது தான் கேள்வி. அதற்கேற்றபடி மனத்தை திடப்படுத்தி அடுத்தடுத்து என்னவென்று யோசித்து வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருந்தால் விவாகரத்துக்குப் பின்னான நாட்களில் ஏற்படும் வலியிலிருந்து எளிதில் மீளலாம்.
பேசலாம்…
தொடர்புக்கு - டாக்டர் அபிலாஷா - 9962044569.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

