அத்தியாயம் - 17
சங்கர் தன் மனைவி சத்யாவை கவுன்சிலிங் அழைத்து வந்தார். கல்யாணம் முடிந்து ஆறு மாதம்தான் ஆகியிருந்தது. ஆனால் மனைவி சத்யா தன்னைப்

சங்கர் தன் மனைவி சத்யாவை கவுன்சிலிங் அழைத்து வந்தார். கல்யாணம் முடிந்து ஆறு மாதம்தான் ஆகியிருந்தது. ஆனால் மனைவி சத்யா தன்னைப் பிரிந்துவிட முடிவு செய்துவிட்டாள் என்ற சங்கர் எப்படியாவது அவள் மனத்தை மாற்றி தன்னுடன் சேர்த்து வைத்துவிடுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்.
சத்யாவிடம் பேசப்பேச தான் பல உண்மைகள் தெரிய வந்தது. உண்மையில் சங்கர் சத்யாவிடம் தனக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்று சொல்லி நெருங்கிப் பழகி வந்துள்ளார். நல்லவர், பார்க்கவும் நன்றாக இருக்கிறார், ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறோம் தவிர தனக்கும் திருமண வயது தாண்டிவிட்டது, விவாகரத்து ஆனவர் தானே என்று அவரும் அவருடன் பழகிவந்தாள். ஒரு கட்டத்தில் இருவரின் நெருக்கமும் அதிகமாகி அதனால் சத்யாவுக்கு இரண்டு முறை அபார்ஷன் செய்யும்படி நேர்ந்துவிட்டது. ஏன் இப்படி அபார்ஷனுக்கு கட்டாயப்படுத்துகிறாய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சத்யா வலியுறுத்தவே அவளைப் பிரிய மனமில்லாமல் கோவிலில் தாலி கட்டியுள்ளான்.
ஆனால் வெகு விரைவில் சத்யாவுக்கு சங்கர் விவாகரத்து வாங்கியவரில்லை. மனைவியுடன் ஒரு பிடிக்காத வாழ்க்கை வாழ்பவர். இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் என்ற உண்மை தெரிய பெரும் அதிர்ச்சிக்குள்ளானார். ஆனால் அதற்குள் சத்யாவின் வாழ்க்கை கேள்விகுறியாகிவிட்டது. ஏற்கனவே மணமான ஒருவரைத் திருமணம் செய்தது தவிர மீண்டும் இவரை விட்டுவிட்டு வேறொருவரையும் திருமணம் செய்ய வழியில்லாத நிலை. என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்திலும் சிக்கலும் அவள் தவித்துக் கொண்டிருந்தாள். இந்த நிலையில் முதல் மனைவியிடம் விஷயத்தைத் தெரிவித்து வரவழைத்தோம்.
கணவரின் நடவடிக்கையில் ஏற்கனவே சந்தேகம் இருந்த ஜானகிக்கு இது பெரும் அதிர்ச்சி. ஹோம் மேக்கராக இருக்கும் அவருக்கு சங்கர் இல்லாமல் வாழ்க்கை இல்லை எனும் நிலை. எப்படிப் பார்த்தாலும் இதில் சங்கரின் தவறு தான் அதிகம். மனைவி பற்றியும் குழந்தைகள் பற்றியும் சொல்லாமல் சத்யாவுக்கு நம்பிக்கைக் கொடுத்து ஏமாற்றிவிட்டது. இரண்டாவது திருமணம் என்ற பட்சத்தில் சட்டரீதியாக அது செல்லாது. தவிர முதல் மனைவியையும் அவர் நினைப்பது போல அத்தனை சுலபமாக விலக்கி வைக்க முடியாது.
சத்யாவிடம் பேசி புரிய வைத்தேன். எப்படி பார்த்தாலும் பாதிப்பு அவளுக்குத் தான் அதிகம். அவள் ஜானகி சத்யாவை கவுன்சிலிங் கொடுத்து தன்னுடன் வாழ வைக்க அவளை அழைத்து வந்த சங்கருக்கு அதிர்ச்சி. இப்போது சத்யாவுக்கு தான் அதிக பிரச்னை மனச் சிக்கல். கடுமையான மன அழுத்தத்தில் இருந்த அவளுக்கு தொடர் கவுன்சிலிங் மூலம் சிக்கலைத் தீர்த்து வைத்தேன். சத்யாவும் தன்னுடைய அவசர முடிவுகளைப் புரிந்து அதன் காரணமாக வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புக்களை உணர்ந்து சிறுக சிறுக அதிலிருந்து மீண்டாள். ஆனால் மனத்தில் ஆறாத ரணம் மட்டும் மறையவில்லை. வேறொரு நல்ல வாழ்க்கை நிச்சயம் அமையும் என்று சமாதானப்படுத்தினேன். அவள் அதற்குத் தயாராக இல்லை என்றாலும் காலம் எல்லாக் காயங்களையும் மாற்றவல்லது.
மேரேஜ் கவுன்சிலிங் மூலம் தான் இதற்குத் தீர்வு கிடைத்தது. போலீஸ் கோர்ட் என்று இந்த விஷயத்தை இழுத்துக் கொண்டிருந்தால், சங்கர் கைது செய்யப்பட்டிருப்பார். செய்திகளில் அடிபட்டு குடும்ப மானம் போய் விட்டது என்று ஜானகி துடித்திருப்பாள். ஏற்கனவே சங்கரால் பாதிக்கட்ட சத்யாவின் எதிர்காலம் மேலும் பாதிப்புக்குள்ளாகும். இந்த க்ளினிக்கல் செட்டப் கவுன்சிலிங்கில் இவற்றை எல்லாம் தவிர்த்து பிரச்னையின் தீவிரத்தையும் விளைவுகளையும் எடுத்துச் சொல்லி புரியவைத்து, சத்யாவை சரியான வழிகாட்டுதல் மூலம் திடப்படுத்தியதால் பிரச்னை அத்துடன் முடிந்தது. சங்கருக்கு ஆரம்பத்தில் வருத்தமும் கோபமும் இருந்தாலும் தான் செய்த மிகப் பெரிய தவறை புரிந்து கொண்டு இப்போது ஜானகியுடன் வாழத் தொடங்கிவிட்டான்.
இது போன்று எத்தனையோ கதைகள், கண்ணீர் நிகழ்வுகள் தினம் தினம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. முன்பு எப்போதையும் விட திருமண வாழ்வில் அதிக பிளவுகள் பிரிவுகள் ஏற்படும் காரணம் அவசர வாழ்க்கை. எல்லாம் கிடைத்துவிட்டது துணையின் தேவை அதிகம் இல்லை என்ற அலட்சிய மனப்பான்மை. ஒரு குழந்தை இருக்கிறது அது போதும் காலம் முழுக்க இவனிடம் மல்லு கட்ட முடியாது என்ற பொறுமை அற்ற நிலை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆண்களைப் பொறுத்தவரை பொருந்தாத துணை என்று அவர்களே முடிவு செய்து கொள்வது, அதிக எதிர்ப்பார்ப்பு, மனைவி பணம் சம்பாதிக்க வேண்டும் அல்லது பெற்றோர்களிடமிருந்து கொண்டு வர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு, தனக்குப் பிடித்தபடி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்ற அதீத எதிர்ப்பார்ப்பு, இப்படி நிறைய கண்டிஷன்களுடன் இருப்பார்கள்.
ஆணும் பெண்ணும் ஒன்றாக ஒரே கூரையின் கீழ் வாழ முற்படும்போது அவர்களுக்குள் முதலில் ஆழமாக இருக்க வேண்டியது நம்பிக்கையும் அன்பும் தான். மற்றவை எல்லாம் தானே வந்துவிடும்.
தொடர்புக்கு - டாக்டர் அபிலாஷா - 9962044569.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

