ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

அத்தியாயம் - 13

விவாகரத்துக்குக் காத்திருக்கும் காலகட்டம் மிகவும் வலி மிகுந்தது. ஒருபோதும் நம்பிக்கை இழக்கவே கூடாது.

Published On :

விவாகரத்துக்குக் காத்திருக்கும் காலகட்டம் மிகவும் வலி மிகுந்தது. ஒருபோதும் நம்பிக்கை இழக்கவே கூடாது. அதற்காக கவலைப்பட்டோ, ஆவேசப்பட்டோ ஆகப்போவது ஒன்றுமில்லை. எதிர்வினை ஆற்ற நினைத்தால், அதற்கு முடிவே இருக்காது. மாறாக, அதற்கான தீர்வைத்தான் தேட வேண்டும். எதிர்வினை ஆற்றுதல் என்பது உணர்ச்சிப்பூர்வமானது. தீர்வு காணுதல் மட்டுமே அறிவுப்பூர்வமானது.

ஒரு பெண் தனியாக இருக்கிறாள் என்று தெரிந்தால், அலுவலகத்தில், அக்கம் பக்கத்தில் அல்லது உறவினர், நண்பர்களில் சிலர் தேவையின்றி அன்பு காட்டுவதுபோல் பாசாங்கு செய்வார்கள். அவர்களிடம், மடை திறந்த வெள்ளம்போல் தங்கள் பிரச்னைகளைப் பெண்கள் சொல்லிவிடக்கூடாது. ஆதரவு தருவதுபோலப் பேசி வலையில் வீழ்த்தும் ஆண்கள் பலர் உள்ளனர். எதிர்பாலினத்தின் மீது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். நயமாகப் பேசி மனத்தை மாற்றுவார்கள். எனவே, அவர்களிடம் தொடர்ந்து இது குறித்துப் பேசுவதையோ, உங்கள் முடிவுகளில் அவர்களை இணைத்துக்கொள்வதோ கூடாது. ஒரு பிரச்னையில் இருக்கும்போது இன்னொரு பிரச்னைக்குள் சிக்கிவிட்டால், எதிலிருந்தும் மீள வழியிருக்காது. இரண்டாவது வாழ்க்கை தேவையா, அதுவும் முறைப்படி அமைத்துக் கொள்வது எப்படி என்று நன்றாகச் சிந்தித்து, அதன்பிறகே முடிவெடுக்க வேண்டும்.

மணமுறிவுக்குப் பின் மற்றொரு திருமண வாழ்க்கை, ஆண் - பெண் என இருவருக்கும் சாத்தியம்தான். அதில் தவறு இல்லை. முதல் கோணல் முற்றும் கோணல் என்று தயங்கவும் வேண்டாம், அதேசமயம் அவசரப்பட்டு எண்ணெய்ச் சட்டியிலிருந்து எரியும் நெருப்புக்குள் விழுந்துவிடவும் வேண்டாம். நிதானம் மிகவும் தேவை. சில ஆண்கள், தாற்காலிக உறவு வேண்டி ‘உனக்கு ஒரு பாதுகாப்பு வேணும்; இப்படியே இருந்துட முடியுமா’ என்று பேச்சை ஆரம்பிப்பார்கள். ஏற்கெனவே தோல்விவின் விரக்தியில் இருக்கும் பெண்கள், அதற்கு எளிதில் இளகிவிடுவார்கள்.

எனக்கு என்ன குறைச்சல்? அழகு, படிப்பு, அறிவு, வேலை, திறமை எல்லாம் இருக்கு. நான் ஏன் அழுது புலம்பி, மிச்ச வாழ்க்கையை நரகமாக்கிக்கணும். கிடைக்கற சந்தர்ப்பங்களை இப்படி சந்தோஷமா இருந்துட்டு போகிறேன் என்று அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டால், ஆபத்தான படுகுழிக்குள் கண்ணைத் திறந்துகொண்டே விழுகிறார்கள் என்றுதான் அர்த்தம். அதிலும், அவள் நம்பிச் செல்லும் ஆண் திருமணமானவராக இருக்கும் பட்சத்தில், இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைச் சிக்கலாக்கும் செயலாக அது ஆகிவிடுகிறது. ஆனால், அவர்கள் அதை ஒப்புக்கொள்ள மறுப்பார்கள்.

நான் ஒழுங்காதான் கல்யாணம் செய்து நல்லா இருந்தேன். ஆனா, எல்லாரையும்போல ஒரு சீரான மண வாழ்க்கை எனக்குக் கிடைக்கலை. இவர் தன் மனைவியோட வாழற வாழ்க்கைக்கு நடுவுல நான் குறுக்க வரலை. அவர்கிட்ட காசு, பணம், சொத்து அல்லது குழந்தைன்னு எதையும் எதிர்ப்பார்க்கலை. நாங்க ஒரு ரிலேஷன்ஷிப்ல இருக்கோம் அவ்வளவுதான் என்று இதைச் சாதாரணமாகச் சொல்லும் பெண்களும் உண்டு.

இன்னும் சிலர், என்னை நம்பவெச்சி ஏமாத்தின கணவனுக்கு முன்னாடி நான் சந்தோஷமா இருக்கேன்னு காட்டணும் என்று, இப்படி திருமணம் தாண்டிய உறவில் சிக்கிக்கொள்வதுண்டு. அதை நியாயப்படுத்தவும் அவர்கள் தயங்குவதில்லை. தாங்கள் நம்பிய ஒரு விஷயத்தை இறுக்கமாகப் பற்றுகோலாகப் பிடித்து தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள். அது அவர்களை மேலும் தப்பான முடிவுகளையே தொடர்ந்து எடுக்கவைக்கும். இது வேண்டாம், அப்படி இருக்காதே என்று நெருங்கிய உறவுகள் அறிவுரை சொன்னால், நான் அப்படித்தான்; உங்க வேலையைப் பார்த்துட்டுப் போங்க. எனக்கு முப்பது வயசாச்சு. என்னால சொந்தமா யோசிச்சு முடிவு எடுக்க முடியும் என்று எடுத்தெறிந்தும் பேசத் துணிவார்கள்.

இந்த விஷயத்தை ஆண்கள் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், பெண்களைப் பொருத்தவரையில் இதுபோன்ற உறவுகளில் மாட்டினால் மாட்டியதுதான். அவர்களால் எளிதில் வெளியே வரவும் முடியாது. மற்றவர்கள் தன் முதுக்குப் பின்னாலும், முகத்துக்கு முன்னாலும் பேசும் பேச்சுகளை சகித்துக்கொள்ளவும் முடியாது. இது நாளாவட்டத்தில் அவர்களது சுயமரியாதையை இழக்கச் செய்வதுடன், குணத்தையே மாற்றிவிடும் அளவுக்குக் கொண்டுபோய் விட்டுவிடும். அமெரிக்காவில் இருந்தாலும் சரி, அமிஞ்சிக்கரையில் இருந்தாலும் சரி. நம் மகிழ்வான வாழ்க்கைக்கு எது சரி எது தவறு என்பதைத் தீர்மானிக்கக்கூடிய திறன் இருக்க வேண்டும். ஆத்திரம், அவசரம், ஆவேசம் இவை விஷம்போல பரவி, ஒட்டுமொத்த மனஅமைதியை சீர்குலைத்துவிடும்.

மீரா நன்றாகப் படித்த பெண். பெரிய கம்பெனி, பெரிய பொறுப்பு மாப்பிள்ளை குணா. பெரியவர்கள் நிச்சயித்த திருமணம். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே பிரச்னை ஆரம்பித்துவிட்டது. எதிலும் குற்றம் குறை சொல்வதும், திருப்தியடையாத ஒரு குணமும் குணாவுக்கு இருந்தது. மீரா ஒரே பெண் என்பதால் அதிக செல்லம். வான் உயர பாராட்டியே வளர்த்துவிட்டார்கள். சின்னதாக எதாவது சொன்னாலும் உடனே அப்செட் ஆகிவிடுவாள். இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக, தினமும் ஒரு சண்டை. சின்ன விஷயத்தில் ஆரம்பித்து பெரிய விஷயமாக அதை மாற்றிவிடுவார்கள்.

இரு வீட்டாரும், இவர்களின் பிரச்னைக்கு ஈகோ தான் காரணம் என்று ஒவ்வொரு சண்டையின்போதும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்கள். இதற்கிடையில், குணா தன் அலுவலகத்தில் பணிபுரியும் ராதா என்பவருடன் நெருங்கிப் பழக, அதை மீராவிடமும் மறைக்காமல் சொல்லிவிட, பிரச்னை தீவிரமாகியது. மீரா அழுது, கெஞ்சி, சண்டை போட்டுப் பார்த்துவிட்டாள், குணாவோ, உன்னை எனக்குப் பிடிக்கவில்லை. இஷ்டம் இருந்தால் இரு, இல்லாவிட்டால் விவகாரத்து வாங்கி கிளம்பிச் செல் என்று முகத்துக்கு நேராகச் சொல்லிவிட்டான். மீராவுக்கு அப்போது ஏழு மாதம். பிறக்கப்போகும் குழந்தைக்காகக்கூட, தன் மீது பரிவாக குணா நடந்துகொள்ளவில்லையே என்று மீராவுக்கு ஆத்திரம்.

மீராவின் குடும்பத்தையும் குணா குறை சொல்ல ஆரம்பித்து, கடைசியில் இருவரும் ஒரே வீட்டில் பேசாமல் இருக்கும் அளவுக்கு மனம் கசந்துவிட்டார்கள். இவர்களுடைய பிரச்னை ஆரம்பத்தில் சிறியதாக இருந்தது. ஆனால் அவர்களே, அதை ஊதி ஊதிப் பெரிதாக்கிவிட்டார்கள். என்னிடம் கவுன்சிலிங் வந்தார்கள்.

தொடர்ந்து பேசலாம்…

தொடர்புக்கு - டாக்டர் அபிலாஷா - 9962044569.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.