அன்புடை நெஞ்சம்: அத்தியாயம் -17
ஒரு காதலன், காதலியைப் பிரிந்து வேறு சில பெண்களுடன் வாழ்கிறான்.பின்னர், அவன் மனம் தெளிந்து திரும்பி வருகிறான். காதலியும்


ஒரு காதலன், காதலியைப் பிரிந்து வேறு சில பெண்களுடன் வாழ்கிறான்.
பின்னர், அவன் மனம் தெளிந்து திரும்பி வருகிறான். காதலியும் அவனுடைய பிழைகளை மன்னித்து ஏற்றுக்கொள்கிறாள்.
ஆனால், அந்தத் தோழிக்கு மட்டும் மனம் இன்னும் ஆறவில்லை. காரணம், அவன் அவளைப் பிரிந்திருந்தபோது, அவள் சந்தித்த துயரங்களையெல்லாம் தோழிதானே நேரில் பார்த்திருக்கிறாள்! இந்த அளவுக்கு அவளைத் தவிக்கவிட்ட அவள் காதலன்மீது அவளுக்கு வருத்தம் இருக்கிறது.
ஒருவேளை, நாளைக்கு இவன் இதே தவறை மீண்டும் செய்யமாட்டான் என்று என்ன நிச்சயம்? இன்னொருமுறை மற்ற பெண்ணின் மீது இவன் நினைப்பு போகக்கூடாது என்றால், இவளுடைய பெருமையை அவன் உணரவேண்டும். இவளை அவன் பிரிந்தபோது இங்கே நடந்தவற்றை அவனுக்குச் சொல்லவேண்டும் என்று எண்ணுகிறாள்.
அதற்கு அந்தக் காதலனே வழி செய்கிறான். ஒருநாள் பேச்சுவாக்கில், ‘முன்பு நான் இங்கே இல்லாதபோது நீங்க என்ன செஞ்சீங்க?’ என்பதுபோல் கேட்கிறான். தோழி பதில் சொல்கிறாள், ‘வேற ஒண்ணுமில்லை, வேண்டிகிட்டிருந்தோம்!’
‘என்ன வேண்டினீங்க?’
‘நான் ஏதேதோ வேண்டினேன், உன் காதலி ஒரே ஒரு விஷயம்தான் வேண்டினா!’
‘அப்படியா? அது என்ன விஷயம்?’
‘இந்த நாடு நல்லா இருக்கட்டும், அதற்கு இந்த நாட்டோட அரசன் நல்லா இருக்கட்டும், பசி, நோய் எல்லாம் நம்ம பக்கத்துலயே வராம ஓடிடட்டும்ன்னு வேண்டினா!’
தோழி இப்படிச் சொன்னதும், தன் காதலியின் நல்ல மனத்தைப் புரிந்துகொள்கிறான் காதலன். என்னதான் அவளுக்குத் தனிப்பட்ட துயரம் இருந்தாலும், நாடு நன்றாக இருக்கவேண்டும் என்று பொதுநலத்துடன் சிந்திப்பது, வேண்டிக்கொள்வது பெரிய விஷயமல்லவா!
அதேசமயம், அவள் தன்னைபற்றி வேண்டிக்கொள்ளவில்லையா என்று அவனுக்கு ஓர் ஆதங்கம் ஏற்பட்டிருக்கும். அதைப் புரிந்துகொண்டாற்போல் தோழி தொடர்ந்து சொல்கிறாள், ‘நான் என்ன வேண்டுகிட்டேன் தெரியுமா?’ என்று பல விஷயங்களைப் பட்டியல் போடுகிறாள். அவற்றில் ஒன்று:

‘ஆண்முதலை பெரிய மீன்களைச் சாப்பிடற குளிர்ந்த நீர்த்துறையோட தலைவன் தேர் எங்க வீட்டு வாசல்ல நிக்கணும்ன்னு நான் வேண்டிகிட்டேன்!’
மிக எளிய வேண்டுதல்தான். ஆனால் அது எத்தனை விஷயங்களைச் சொல்லிவிடுகிறது!
அப்போது அந்தக் காதலனின் தேர் பல வீட்டு வாசல்களில் நின்றுகொண்டிருந்தது. அது பெருமைக்குரிய விஷயம் அல்ல.
ஊருக்கெல்லாம் பசி, பிணி செல்லவேண்டும் என்று இவள் வேண்டுகிறாள், ஆனால் இவளுடைய காதலன் வேறெங்கோ சென்று இவளுக்கு வருத்தம் உண்டாக்கிக்கொண்டிருக்கிறான்.
இவள் ஊருக்காக வேண்டட்டும், எனக்கு இவள்தான் ஊர், இவளுடைய நலன்தான் எனக்கு முக்கியம். ஆகவே, அவனுடைய தேர் இவள் வீட்டுக்கு வரவேண்டும், வேறு எங்கும் செல்லாமல் இங்கேயே தங்கவேண்டும், இதைதான் நான் வேண்டுவேன் என்று எண்ணுகிறாள் தோழி.
அதை இப்போது சொல்வதன்மூலம், அவன் செய்த தவறையும் சுட்டிக்காட்டிவிடுகிறாள், ‘ஒவ்வொரு பெண்ணுடைய வீடாகச் சென்று வாசலில் தேரை நிறுத்திவைத்தாயே, அதைப் பார்க்கிறவர்கள் என்ன நினைத்திருப்பார்கள், உன்னுடைய பெருமைக்கு அது இழுக்கல்லவா? உன் தனிப்பட்ட சுகத்தைப் பார்த்த நீ இதை யோசித்தாயா?’ என்பதையும் மறைமுகமாகக் கேட்டுவிடுகிறாள்.
இங்கே பயன்படுத்தப்படும் முதலை உவமையும் ரசமானது. முதலை தன்னோடு அதே நீர்நிலையில் வாழும் பெரிய மீன்களைத் தின்று தன் பசியை ஆற்றிக்கொள்வதுபோல, காதலியை வருத்தப்படுத்தி அவன் மகிழ்ச்சி கண்டிருக்கிறான். அதையும் சுட்டிக்காட்டி விடுகிறாள் தோழி.
ஐங்குறுநூறில் ஓரம்போகியார் எழுதிய பாடல் இது:
‘வாழி ஆதன், வாழி அவினி,
பசி இல்லாகுக, பிணிசேண் நீங்குக’
என வேட்டோளே யாயே, யாமே,
‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்
தண் துறைஊரன் தேர் எம்
முன்கடை நிற்க’ என வேட்டோமே!
இன்னொரு காதலன், இவனுக்குக் காதலிமீது நேசம் அதிகம். அவளை ஒவ்வொரு நாளும் பார்க்கவேண்டும் என்று துடிக்கிறான். அதற்காக இரவு நேரத்தில் கிளம்பி வருகிறான்.
அவளுடைய வீட்டுக்கும் அவனுடைய வீட்டுக்கும் இடையே ஒரு நீர்நிலை. அதைக் கடக்கப் படகுகள்கூட இல்லை.
அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. நீந்திக் கடந்து வருகிறான்.
காதலிக்கு அவனைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. அதேசமயம், அவன் கடந்து வரும் நீர்நிலையை நினைத்துப் பயம். ‘அதில் முதலையெல்லாம் இருக்குமாமே’ என்கிறாள்.
‘உண்மைதான், அந்த வழியில யாருமே நீந்தி வராதபடி நடுவுல படுத்துகிட்டிருக்கும்!’
‘ஆனா, அவன் வரானே! அது எப்படி?’
‘உன்மேல இருக்கிற ஆசையினால, முதலையைக் கவனிக்காம நீந்திவர்றானோ? ஒருவேளை, முதலைக்குத் தெரியாம ஒளிஞ்சு வர்றானோ? முதலைமேல ஏறித் தாவி வர்றானோ?’
இதை நினைக்க நினைக்கக் காதலிக்குத் திகைப்பாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவன் நலத்துடன் வந்து செல்லவேண்டுமே என்று எண்ணி வருந்துகிறாள்.
தோழிக்கு இரட்டைக் கவலை, ஒருபக்கம் தன்னுடைய சிநேகிதியின் மன வருத்தம், இன்னொருபக்கம் அவளுடைய காதலன் வரும் வழியில் உள்ள முதலைகளை எண்ணி வருத்தம், ‘இரட்டைப்பிள்ளைகள் பெற்ற ஒரு தாய், இருவருக்கும் ஒரே நேரத்தில் துயரம் வந்தால் யாருக்காக வருந்துவாள்?’ என்கிறாள்.
அவளுக்கு இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றதான் ஆசை. ஆகவே, காதலனிடம் இதுபற்றிப் பேசத் தீர்மானிக்கிறாள்.
ஒருநாள் இரவு நேரம், அவன் அவளைப் பார்க்க வருகிறான். வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் நிற்கிறான்.
தோழி அவனைச் சந்திக்க வருகிறாள். ‘உன் காதலிக்கு வீட்டுல காவல் வெச்சுட்டாங்க. அவளால இப்படி உன்னைச் சந்திக்க இரவு நேரத்துல வர இயலாது!’ என்கிறாள். ‘நீயும் இப்படி இரவு நேரத்துல வர்றது பாதுகாப்பில்லை.’
இப்படிச் சொல்வதன்மூலம், கல்யாணப் பேச்சை எடுப்பதுதான் ஒரே வழி என்று அவனுக்கு உணர்த்துகிறாள் தோழி. ‘அதுக்கப்புறம் ராத்திரி நேரத்துல முதலைங்களோட சண்டை போட்டு யாருக்கும் தெரியாம இவளைப் பார்க்க வேண்டியதில்லை. ஊர்முன்னாலே கம்பீரமா வாழலாம்’ என்கிறாள்.
இந்தக் குறுந்தொகைப் பாடலை எழுதியவர் கவைமகன்:
கொடும்கால் முதலைக் கொள்வல் ஏற்றை
வழிவழக்கு அறுக்கும் கானல்அம் பெரும்துறை
இனமீன் இரும்கழி நீந்தி நீ நின்
நயன்உடைமையின் வருதி, இவள்தன்
மடன்உடைமையின் உயங்கும், யான் அது
கவைமக நஞ்சுஉண்டாஅங்(கு)
அஞ்சுவல் பெரும! என் நெஞ்சத்தானே!
அதேநேரம், அங்கே வீட்டில் இருக்கிற காதலியின் மனோநிலை எப்படி இருக்கும்? அதனை நற்றிணையில் உலோச்சனார் எழுதிய ஒரு பாடலில் காணலாம்.
காதலன் ஒவ்வொரு நாளும் வருகிறான், அவள்மீது இருக்கும் ஆசையில் முதலையைக்கூடப் பொருட்படுத்தாமல் வந்து அவளுடன் இருக்கிறான். அப்போதெல்லாம் அவள் நெஞ்சில் காதலுடன் பெருமிதமும் பொங்கும். எதுவும் தங்களைத் தொட்டுவிட இயலாது என்று தைரியம் வரும். இதைச் சொல்ல ஓர் அருமையான உவமையைக் குறிப்பிடுகிறாள் அவள்.
ஒரு நாடு. அதைச் சுற்றிப் பெரிய மதில்சுவர்.
அந்த நாட்டின்மீது வேறொருவன் படையெடுத்துவருகிறான். இதை எப்படிச் சமாளிப்பது என்று அரசன் சிந்திக்கிறான்.
என்னதான் பெரிய மதில்சுவர் இருந்தாலும், எதிரி இடித்தால் உடைந்துவிடுமே. அந்த மதில்சுவரின் மீது வீரர்கள் இருக்கவேண்டும். அவர்கள் எதிரிகளை அருகே நெருங்கவிடாமல் போரிடவேண்டும். அப்போதுதான் மதில்சுவர் பாதுகாக்கப்படும், அந்தத் தேசமும் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த நாட்டின் மதில்சுவரும் சரி, அதில் உள்ள வீரர்களும் சரி, மிகவும் சிறந்தவர்கள். ஆகவே, எதிரியால் தங்களை நெருங்கவே இயலாது என்று அந்தப் படையில் உள்ள ஒவ்வொரு வீரனும் நினைக்கிறான். அதன்மூலம் அந்த ராணுவம் மேலும் பலப்படுகிறது.
‘அவனோடு இருக்கும்போது, நானும் அப்படிதான் உணர்கிறேன்’ என்கிறாள் காதலி. ‘மிகவும் மகிழ்ச்சியாக, மிகவும் பாதுகாப்பாக, மிகவும் திருப்தியாக!’
ஆனால் இப்போது, அவன் அவளோடு இல்லை. வீட்டில் அவளைத் தனியாகப் பூட்டிவைத்துவிட்டார்கள்.
ஆகவே, சும்மா எங்கேயோ கேட்கிற பறவையின் குரல்கூட அவளை நடுங்கவைக்கிறது. பயப்படுகிறாள், ‘அது என் காதலனுடைய தேராக இருக்குமோ?’ என்று அஞ்சுகிறாள், ‘என்னைப் பார்க்காமல் அவன் எப்படியெல்லாம் தவிக்கிறானோ!’ என்று எண்ணி வருந்துகிறாள்:
‘விசும்புஉறழ் புரிசை வெம்பமுற்றிப்
பைங்கண் யானை வேந்து புறத்துஇறுத்த
நல்எயில் உடையோர் உடையம் என்னும்
பெரும்தகை மறவன்போலக் கொடும்கழிப்
பாசுஅடை நெய்தல் பனிநீர்ச் சேர்ப்பன்
நாம முதலை நடுங்குபகை அஞ்சான்
காமம் பெருமையன் வந்தஞான்றை
அருகாது ஆகிய வன்கண் நெஞ்சம்,
நள்என் கங்குல் புள்ஒலி கேள்தொறும்
‘தேர்மணித் தெள்இசைகொல்’ என
ஊர்மடி கங்குலும் துயில் மறந்ததுவே!’
அகநானூற்றில் ஒரு காதலி, அவளுடைய காதலனும் இதேபோல் இரவு நேரத்தில் நெடுந்தூரம் கடந்து வந்து அவளைச் சந்திக்கிறான். அது அவளுக்குப் பயம் தருகிறது.
இதைப் புரிந்துகொண்ட தோழி, காதலனைச் சென்று சந்திக்கிறாள், ‘இனிமேல் இரவில் வராதே’ என்கிறாள்.
‘ஏன் அப்படிச் சொல்றே?’
‘நீ வர்ற வழி என்ன சாதாரணமானதா? காட்டாத்துல வெள்ளம் பெருகி வருது, அதுல தண்ணி இருக்கறதே தெரியாத அளவுக்கு மேலே மலர்கள் விழுந்து போர்த்தியிருக்கு!’
‘அந்த ஆத்துல அங்கங்கே முதலைங்க திரியுது. அதுகூட, வெள்ளத்தைப் பார்த்துப் பயந்து கல்மேல ஏறிக்குது, அந்தக் கல்லுல மோதித் தண்ணி பாயுது!’
‘ஆத்துல குளிக்க வந்த யானைங்களையெல்லாம் வெள்ளம் இழுக்குது. அதனால மதயானைகூட பயந்து நடுங்குது.’
‘அப்படிப்பட்ட வெள்ளத்துல, பயமே இல்லாத ஓர் ஆண் பன்றியைப்போல நீ நீந்தி வர்றே. அதுவும் ராத்திரி நேரத்துல.’
‘யாராவது இந்தமாதிரி ஒரு வெள்ளத்துல ராத்திரியில கால் வைப்பாங்களா? உனக்கு அவமேல இருக்கிற அன்பு புரியுது. ஆனா, அதுக்கு இவ்ளோ ஆபத்தைச் சந்திக்கணுமா? உனக்கு ஏதாவது ஆகிட்டா அவ நிலைமை என்ன?’
‘சாதாரணமான வழியிலயே பல ஆபத்துகள் இருக்கு. நீ வர்றது ஏற்கெனவே ஆபத்தான வழி. இனிமே இது வேண்டாம். ஒவ்வொரு நாளும் உன்னை நினைச்சு நாங்க கவலைப்படறது வேண்டாம்.’
‘அப்ப நான் என்ன செய்யறது? என் காதலியை நான் எப்படிச் சந்திக்கறது?’

‘எங்க தோட்டத்துக்குப் பக்கத்துல ஒரு காந்தள் புதர் இருக்கு, தெரியுமா? அங்கே யாரும் வரமாட்டாங்க, நீ அவளைப் பகல் நேரத்துல அங்கயே சந்திக்கலாம்’ என்கிறாள் தோழி, ‘மலை மூங்கில்மாதிரி எங்கம்மா காப்பாத்தி வளர்த்த தோள் உன் காதலியோடது, அதை வருத்தப்படுத்தாதே, இதுமாதிரி ராத்திரி நேரத்துல முதலைங்க திரியற காட்டு வெள்ளத்துல நீந்தி வராதே!’
கபிலரின் பாடல் இது:
நீர்நிறம் கரப்ப ஊழ்உறுபு உதிர்ந்து
பூமலர் கஞலிய கடுவரல் கான்யாற்றுக்
கரா அம்துஞ்சும் கல்உயர் மறிசுழி
மராஅ யானை மதம்தப ஒற்றி
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்
கடும்கண் பன்றியின் நடுங்காது துறந்து
நாம அரும்துறைப் பேர்தந்து யாமத்(து)
ஈங்கும் வருபவோ, ஓங்கல் வெற்ப,
ஒருநாள் விழுமம் உறினும் வழிநாள்
வாழ்குவள் அல்லள் என் தோழி, யாவதும்
ஊறுஇல் வழிகளும் பயில வழங்குநர்
நீடு இன்றுஆக இழுக்குவர், அதனால்
உலமரல் வருத்தம் உறுதும், எம் படப்பைக்
கொடும்தேன் இழைத்த கோடுஉயர் நெடுவரைப்
பழம்தூங்கு நளிப்பில் காந்தள் அம்பொதுப்பில்
பகல்நீ வரினும் புணர்குவை, அகல்மலை
வாங்குஅமைக் கண்இடைக் கடுப்ப யாய்
ஓம்பினள் எடுத்த தடமென் தோளே!
இவையெல்லாம் நிஜ முதலைகள். எயினந்தை மகனார் இளங்கீரனார் எழுதிய அகநானூற்றுப் பாடலொன்றில், உவமை முதலையொன்று அழகாகத் தோன்றுகிறது.
ஒரு காதலன். அவனுடைய நெஞ்சம் அவனை வெளியூர் சென்று பணம் சம்பாதித்துத் திரும்பி வருமாறு சொல்கிறது. அதனை ஏற்காமல் அவன் தன் மனத்துடன் பேசுகிறான்:
‘காட்டுப்பாதையைக் கடந்துபோகலாம்ன்னு நீ சொல்றே. அங்கே இருக்கிற ஆபத்துகளை நினைச்சு நான் பயப்படலை, அதையெல்லாம் சமாளிக்கிற தைரியம் எனக்கு இருக்கு. ஆனா, என் காதலியைப் பிரிஞ்சுபோகணும்ன்னு நினைக்கும்போதுதான் தயங்கறேன்.’
‘அங்கே முதலையோட தோல்மாதிரி கருத்த அடிபாகம் கொண்ட ஓமை மரம். அதோட பெரிய கிளையில ஒரு பெண் பறவை முட்டையிட்டு அடைகாத்துகிட்டிருக்கு.’
‘அப்போ, அதோட ஆண் பறவை தன் ஜோடிக்கு உணவு தேடுது. புலி சாப்பிட்டுட்டு மிச்சம் வெச்ச இறைச்சியைக் கவ்விகிட்டுப் போய்த் தன் காதலிக்குக் கொடுக்குது.’
‘இப்படிப் பறவைங்ககூட அன்பாக் காதல் வாழ்க்கை வாழற காட்டுப்பாதையில நடந்துபோய் நிறைய சம்பாதிச்சுகிட்டு வரலாம்ன்னு எனக்கு ஆசை காட்டறியே, அது அவசியம்தானா? அங்கே நடக்கும்போது, இதுமாதிரி பறவைங்களோட காதலைப் பார்க்கும்போது என் காதலியோட ஏக்கமான முகம் முன்னே வந்து என்னைத் தடுக்காதா!’
‘இருங்கழி முதலை மேஎம்தோல் அன்ன
கரும்கால் ஓமைக் காண்புஇன் பெரும்சினைக்
கடியுடை நனந்தலை ஈன்று இளைப்பட்ட
கொடுவாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய
மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை
வான்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
துளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி
ஒள்செங்குருதி உவறி உண்டு அருந்துபு
புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
புல்இலை மராஅத்த அகல்சேண் அத்தம்
கலம்தரல் உள்ளமொடு கழியக் காட்டி
பின்நின்று துரக்கும் நெஞ்சம் நின்வாய்
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
கவிர்இதழ்அன்ன காண்புஇன் செவ்வாய்
அம்தீம்கிளவி ஆய்இழை மடந்தை
கொடும்குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடும்சேண் ஆர்இடை விலங்கும் ஞான்றே!’
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...