அன்புடை நெஞ்சம்: அத்தியாயம் -20
காதலன் வெளியூர் சென்றிருக்கிறான். அவன் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்துக்கொண்டு காதலி காத்திருக்கிறாள்.


காதலன் வெளியூர் சென்றிருக்கிறான். அவன் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்துக்கொண்டு காதலி காத்திருக்கிறாள்.
ஒருநாள் இரவு, வழக்கம்போல் ஏக்கத்துடன் அவள் தூங்கச் செல்கிறாள். மறுநாள் காலை அவள் முகத்தில் எல்லையற்ற வருத்தம்.
இதைப் பார்த்த தோழிக்குக் குழப்பம், ‘நீ அவனைப்பிரிஞ்சு வருத்தப்படறது எனக்குத் தெரியும். ஆனா, நேத்து ராத்திரி ஓரளவு இயல்பா இருந்தியே, அவன் திரும்ப வந்துடுவான்னு ஒரு நம்பிக்கை தெரிஞ்சதே, இப்ப திடீர்ன்னு ரொம்ப வாட்டத்துல இருக்கியே, என்ன விஷயம்?’ என்று விசாரிக்கிறாள்.
தலைவி பெருமூச்சுடன் சொல்கிறாள், ‘அவன் வருவான்னு எதிர்பார்த்துக் காத்திருந்தவரைக்கும் ஓரளவு மனசைத் தேத்திகிட்டிருந்தேன். நேத்து ராத்திரி, அவன் வந்துட்டான்னு ஒரு கனவு’ என்கிறாள், ‘அவன் வந்து என்னைத் தழுவறமாதிரி கனவு கண்டு எழுந்தேன், படுக்கையைத் தடவிப் பார்த்தேன், அவன் இல்லை, வெறும் கனவுதான்னு தெரிஞ்சுகிட்டேன்.'
‘அதனால, ஓரளவு சமாதானமாகியிருந்த என் நெஞ்சு, இப்ப மறுபடி துடிக்க ஆரம்பிச்சுடுச்சு. குவளை மலர்மேல வண்டு உட்கார்ந்து அதைத் துன்பப்படுத்தினமாதிரி, இந்தக் கனவு என்னைத் துன்பப்படுத்திடுச்சு’ என்கிறாள் அவள்.
மனத்தைக் குழப்பும் கனவுக்கு மலரைக் குழப்பும் வண்டை உவமையாகச் சொல்லும் இந்தப்பாடல் குறுந்தொகையில் வருகிறது. எழுதியவர் கச்சிப்பேடு நன்னாகையார்:
‘கேட்டிசின், வாழி, தோழி, அல்கல்
பொய்வலாளன் மெய்உறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட, வேற்றுஎழுந்து
அமளி தைவந்தனனே, குவளை
வண்டுபடு மலரில் சாஅய்த்
தமியேன், மன்ற அளியேன் யானே.'
கிட்டத்தட்ட இதே நிலைமையில் ஒரு காதலி. தன்னுடைய காதலனைக் காணாமல் அழுதுகொண்டிருக்கிறாள். அவனுடைய மலையை எண்ணி ஏங்குகிறாள்.
அப்போது, அங்கே அவளுடைய தாய் வருகிறார். மகள் அழுவதைப் பார்த்து விசாரிக்கிறார், ‘என்னாச்சு? இங்கே வா, நான் உனக்கு முத்தம் கொடுக்கறேன்’ என்கிறார், ‘ஏன் அழறே? என்ன பிரச்னை?'
காதலி அப்போது தன்னை மறந்து அழுதுகொண்டிருந்ததால், தான் பேசுவது தாயிடம் என்பதுகூட அவளுக்கு நினைவில் இல்லை. அவரிடமே தன்னுடைய காதலைப் பற்றிச் சொல்லத் தொடங்கிவிடுகிறாள், ‘மலைச்சாரல்ல, காந்தள் மலரோட தேனைக் குடிச்ச வண்டு நீலமணிபோலச் சுத்தி ரீங்காரம் எழுப்புது, அந்த ஓசை, யாழிசைமாதிரி இனிமையா இருக்கு. அப்படிப்பட்ட உயர்ந்த மலைநாட்டோட தலைவன்தான் என் காதலன், அவனைப் பார்க்காம நான் துடிக்கறேன்.'
இப்படிச் சொல்ல வந்தவள், சுதாரித்துக்கொண்டு பேச்சை நிறுத்திவிடுகிறாள். ஏதோ சொல்லித் தாயைச் சமாளித்துவிட்டுத் தோழியிடம் வருகிறாள், ‘அடியே, இன்னிக்கு நானே என்னோட காதலை வெட்டவெளிச்சமாக்கியிருப்பேன்’ என்று நடந்ததைச் சொல்கிறாள், ‘நல்லவேளை, நான் அதைத் தாய்கிட்ட சொல்லலை’ என்று மகிழ்ந்தவள், மறுநிமிடம் வருந்துகிறாள், ‘ஆனா, இப்படி மறைச்சு மறைச்சுக் காதலிக்கிறது எத்தனை நாள்? அவன் எப்போ என்னைத் திருமணம் செஞ்சுக்க வருவான்?’ என்று ஏங்குகிறாள்.
நற்றிணைப் பாடல் இது. நொச்சி நியமங்கிழார் எழுதியது.
‘நாள்மழை தலைஇய நல்நெடும் குன்றத்து
மால்கடல் திரையின்இழிதரும் அருவி
அகல்இரும் கானத்து அல்குஅணி நோக்கித்
தாங்கவும் தகைவரை நில்லா நீர்சுழல்
ஏந்துஎழில் மழைக்கண் கலுழ்தலின் அன்னை
‘எவன்செய்தனையோ, நின் இலங்குஎயிறு உண்கு’என
மெல்லிய இனிய கூறலின் வல்விரைந்து
உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து
உரைக்கல் உய்ந்தனனே தோழி, ’சாரல்
காந்தள்ஊதிய மணிநிறத் தும்பி
தீம்தொடை நரம்பின் முரலும்
வான்தோய் வெற்பன் மார்பு அணங்கு’எனவே.’
இன்னொரு காதலி, இவளுடைய காதலனும் வெளியூர் சென்றுள்ளான். அவனுக்காகக் காத்திருக்கிறாள்.
குறிப்பாக, மாலை நேரங்களை அவளால் தாங்க இயலுவதில்லை. அப்போதுதான் பிரிவுத்துயரம் மிகுதியாகிறது.
ஒருநாள், அவளுடைய தோழியிடம் அவள் சொல்கிறாள், ‘எப்பவோ பெஞ்ச மழையில வரகு நல்லா வளர்ந்திருக்கு, அதை மான்கள் மேய்ஞ்சுட்டுப்போகுது, பக்கத்துல முல்லைப்பூ, அதை மொய்க்கற வண்டு... இதையெல்லாம் பார்க்கும்போது, எனக்கு அவன் ஞாபகம் வருது, அவன் வர்றதாச்சொன்ன பருவம் வந்துடுச்சு, ஆனா அவன் வரலை, நான் என்ன செய்யறது?’
இது ஒக்கூர் மாசாத்தியின் குறுந்தொகைப் பாடல்:
‘பழமழை கலித்த புதுப்புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவிசேர் மருங்கில் பூத்த முல்லை
வெருகுசிரித்தன்ன பசுவீ மென்பிணிக்
குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
வண்டுசூழ் மாலையும் வாரார்,
கண்டிசின் தோழி, பொருட்பிரிந்தோரே.’
இந்தக் காதலிக்குப் பூவில் மொய்க்கும் வண்டு சோகத்தைத் தருகிறது, வைரமுத்துவின் திரைப்பாடலொன்றில் அதே வண்டு காதலுணர்வைத் தூண்டுகிறது. காரணம், அது ஒற்றை வண்டு அல்ல, ஜோடி வண்டுகள். அவை நடத்தும் காதல் நாடகத்தைக் கண்டு, பூகூட வெட்கப்படுகிறதாம்!
‘பூவில் வண்டு கூடும், கண்டு
பூவும் கண்கள் மூடும்!’
வைரமுத்துவுக்கு வண்டுகள் மிகவும் பிடித்த உவமை, பல பாடல்களில் பலவிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
ஒரு வண்டு, பூவில் தேன் குடிக்க வருகிறது. மகிழ்ச்சியாகக் குடிக்கிறது, குடித்துக்கொண்டேயிருக்கிறது, ஒருகட்டத்தில் அந்த வண்டு மூழ்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அப்போதும் அது நிறுத்தாமல் குடிக்கிறது.
நிஜப்பூவில் கொஞ்சம்தான் தேனிருக்கும், காதல் பூவில் தேனுக்கு எல்லையே கிடையாதே, மூழ்கும் நிலையில், அந்தக் காதலி வந்து அவனை மீட்கிறாள்.
‘தேனில் வண்டு மூழ்கும்போது,
பாவம்என்று வந்தாள் மாது!’

இன்னொரு காதலன் காதலியைப் ‘பூஞ்சோலை’ என்று வர்ணிக்கிறான். எப்படிப்பட்ட பூஞ்சோலை என்றால், வண்டுகள் பூக்களுக்குக் காதல் கடிதம் எழுதுகிற பூஞ்சோலை.
கடிதம் எழுத வண்டிடம் ஏது காகிதம்? இலைகளில் எழுதித் தருகிறது!
‘இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை!’
இன்னொரு சோலையில், பூ இருக்கிறது, ஆனால், இலை அதை மூடியிருக்கிறது. ஆகவே, வண்டால் பூவை நெருங்க இயலவில்லை.
வண்டு பக்கத்திலேயே காத்திருக்கிறது. எப்போதாவது அந்த இலை நகராதா, தான் பூவைத் தழுவிவிட இயலாதா என்று ஏங்குகிறது. இந்தக் காட்சியைக் குறும்பாக வர்ணித்துக் காதலியைப் பார்க்கிறான். ‘நானும் அப்படிதான் உன்னருகே தவம்செய்கிறேன்’ என்கிறான்.
‘மலர்மூடும் இலைகொஞ்சம் விலகாதோ,
அடி, நாளெல்லாம் தவம்செய்தேன்,
நழுவாதோ,
வண்டு தழுவாதோ!’
மற்ற திரைக்கவிஞர்களும் வண்டைத் தாராளமாக வர்ணித்தவர்கள்தான். வாலி ‘ஊதா’ என்ற சொல்லை வைத்துக்கொண்டு வார்த்தை விளையாட்டு நடத்திய ஒரு பாடல்:
‘ஊதா, ஊதா, ஊதாப்பூ,
ஊதும் வண்டு மோதாப்பூ!’
அதாவது, ஊதுகிற வண்டு ஊதாத பூ, இந்த ஊதாப்பூ, அவன் காதலி.
‘நான் பார்த்த ஊதாப்பூவே,
நலம்தானா ஊதாப்பூவே?
தேன்வார்த்த ஊதாப்பூவே,
சுகம்தானா ஊதாப்பூவே?
ஊதாப்பூ,
இன்றும் என்றும் உதிராப்பூ!’
அதற்கு அவள் சொல்லும் பதில், ‘இதென்ன கேள்வி? நீ பார்த்தால் நான் நலம், தோள் சேர்ந்தால் அதுவே எனக்குச் சுகம், உன்னை நீங்கி இந்தப் பூ வாழுமா?’
‘நீ பார்த்தால் ஊதாப்பூவே,
நலமாகும் ஊதாப்பூவே!
தோள்சேர்ந்தால் ஊதாப்பூவே,
சுகம்காணும் ஊதாப்பூவே!
உன்னை நீங்கி வாழாப்பூ!’
அவன் நெகிழ்ந்துபோகிறான், ‘உன்னுடைய கூந்தலில் என் மனப்பூவைச் சூடிவிடட்டுமா? என் உயிரை நூலாக்கி நம் இரு உடல்களையும் தைத்துவிடட்டுமா?’ என்கிறான்.
‘இந்தப் புன்னகை என்ன விலை’ என்று எழுதிய வாலி, அதையே கொஞ்சம் மாற்றி அடுத்த வரிகளை அமைக்கிறார், காதலி காதலனைப்பார்த்து, ‘அன்றைக்கு ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துப் புன்னகையை விலை கேட்டாயல்லவா?’ என்கிறாள், ‘நீ என்ன என்னை வாங்குவது? அதற்குமுன்னால் நான் உன்னை வாங்கிவிட்டேன்! உன் பெயரைத்தவிர வேறெதையும் ஓதாத ஊதாப்பூ நான், அதனால்தான் வண்டுகளும் என்னை நெருங்கவில்லை!’
‘உன் மழைக் கூந்தல்மீது
என் மனப்பூவை வைத்தேன்,
ஓர் உயிர் நூலைக்கொண்டு
இரு உடல்சேரத் தைத்தேன்!
உன் விழிப்பார்வை அன்று
எனை விலைபேசக் கண்டேன்,
நீ எனை வாங்குமுன்பு,
நான் உனை வாங்கிக்கொண்டேன்!
உன்பேர் தவிர ஓதாப்பூ!’
வண்டு ஊதாத பூ என்ற அதே வர்ணனையைக் கண்ணதாசனும் பயன்படுத்தியிருக்கிறார். தோகை விரிக்காத மயில், வண்டு தொடாத மலர், நிலவு காணாத அல்லி, யாரும் ரசிக்காத பருவம் என்று கன்னிப்பெண்ணை வர்ணிக்கிறார்:
‘விரிக்காத தோகை மயில், வண்டு வந்து
மடக்காத வெள்ளைமலர், நிலவு கண்டு
சிரிக்காத அல்லிமுகம், பாரில் யாரும்
ரசிக்காத இளமைநயம், பருவஞானம்!’
இன்னொரு பாடலில் வண்டை வைத்துக் கண்ணதாசன் ஒரு சிறு நாடகமே நடத்துவார். ஒரு காதலன் தன் காதலிக்காகக் காத்திருக்கிறான். ஆனால் அவள் உடனே வரவில்லை.
ஆகவே, அவள் வந்தவுடன் அவன் கேட்கிறான், ‘சீக்கிரம் வர்றதுக்கு என்னவாம்?’
அவள் சொல்கிறாள், ‘வர்ற வழியில ஒரு வண்டு என்மேல மோதிடுச்சு!’
‘அப்படியா? வண்டு ஏன் உன்மேல மோதணும்?’
‘என் முகத்தைப்பார்த்துப் பூவோன்னு மயங்கிடுச்சுபோல’ என்கிறாள் அவள்!
‘பொன்வண்டொன்று மலரென்று
முகத்தோடு மோத...’
பூ, வண்டு இரண்டையும் பெண், ஆணுக்கு ஒப்பிட்டுப் பல பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, வாலியின் ரசமான நாடகமொன்று.
காதலன் காதலியை நெருங்குகிறான். அவள் தயங்கி விலகி, ‘அதெல்லாம் கல்யாணத்துக்கப்புறம்தான்!’ என்கிறாள்.
‘இருக்கட்டும், ஒரு சின்ன ரிஹர்சல் பார்க்கலாமே!’
அவளுக்கும் ஆசைதான். ஆனால் வெட்கம் காதருகே வந்து மறுக்கிறது.
‘எல்லாத்துக்கும் நீதான் காரணம்’ என்று கோபிக்கிறான் அவன்.
‘நானா? எப்படி?’
‘உன் அழகைவெச்சு என்னை உன்கிட்ட இழுக்கறியே, அதுக்கப்புறம் என்ன நடந்தாலும் நான் அதுக்குப் பொறுப்பில்லை’ என்று விளக்குகிறான் அவன், ‘பூ அழகா இருந்தா வண்டுக்குத் தாகம் வரும், அதானே இயற்கை?’
‘கல்யாணம் ஆகாமலே,
ஆசை வெள்ளோட்டம் பார்க்கின்றது,
கூடாது, கூடாதென,
நாணம் காதோடு சொல்கின்றது,
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ,
தண்டோடு பூஆடுது,
வண்டு தாகங்கள் கொண்டாடுது!’
இதையே மருதகாசியும் எழுதியிருக்கிறார், ஆனால் அவர் இதனை அன்புப்பரிமாற்றத்துக்கு உவமையாக்குகிறார்:
‘முல்லைமலர்மேலே,
மொய்க்கும் வண்டுபோலே,
உள்ளம் உறவாடுது உந்தன் அன்பாலே!’
காதல் என்பது இயல்பாக நிகழவேண்டியது என்ற கருத்தைச் சொல்லும் பாடலொன்றிலும் வாலி வண்டை உவமையாகப் பயன்படுத்தியிருப்பார். மலரில் வண்டு மொய்ப்பதும், கனியைக் கிளி கொத்துவதும்போல, காதலும் இயற்கை என்பார்.
‘கூப்பிட்டா மலர் தேடி வண்டு வரும்? தேதி
குறிப்பிட்டா கொய்யாவைக் கிளிகள் கொத்தும்?
சிந்தித்தால் வருகின்ற கவிதைபோலே, கண்கள்
சந்தித்தால் வரவேண்டும் உண்மைக்காதல்!’
மலரை வண்டு மொய்க்கிற காட்சியைப் பார்ப்பது காதலர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், ஒருவேளை அவன் அருகே இல்லாவிட்டால், அவள் அந்த சோலையை ரசிப்பாளா, மலரை, வண்டை ரசிப்பாளா?
நற்றிணையில் ஔவையார் எழுதிய ஒரு பாடல். காதலனும் காதலியும் சந்திக்கிறார்கள், மாலை நேரமானதால் அவன் பிரிந்து செல்கிறான். அதுவரை அவளுக்கு மகிழ்ச்சி தந்த அதே சோலை, இப்போது வருத்தத்தைத் தருகிறது.
‘இரவு வரப்போகிறது, நெய்தல் மலர்களெல்லாம் குவிந்துவிட்டன. பல மலர்களைக்கொண்ட இந்தச் சோலையும் அழகு குறைந்துவிட்டது’ என்கிறாள் அவள்.
இவ்வளவு நேரம் அழகாக இருந்த சோலை திடீரென அழகு குறைந்துவிடுமா? என்ன காரணம்? அதையும் அவளே சொல்கிறாள், ‘மணி ஒலிக்க அவனுடைய தேர் கிளம்பிவிட்டது. இதுவரை வண்டுகள் மொய்க்கிற பூமாலை அணிந்த அவனுடைய மார்பில் நான் விளையாடிய இந்தச் சோலை, இனிமேல் எப்படி இருக்குமோ, எனக்குத் தெரியவில்லை!’
‘நெய்தல் கூம்ப, நிழல்குணக்கு ஒழுகக்
கல்சேர் மண்டிலம் சிவந்து நிலம்தணியப்
பல் பூங்கானலும் அல்கின்றுஅன்றே,
இனமணி ஒலிப்ப, பொழுதுபட பூட்டி
மெய்ம்மலி காமத்து யாம்தொழுது ஒழியத்
தேரும் செல்புறம் மறையும் ஊரொடு
யாங்குஆவதுகொல் தானே, தேம்பட
ஊதுவண்டு இமிரும் கோதை மார்பின்
மின்இவர் கொடும்பூண் கொண்கனொடு
இன்நகை மேவ நாம் ஆடியபொழிலே!’
இந்தப் பாடலில் தேர் கிளம்புகிறது. இன்னொரு பாடலில், தேர் திரும்பி வருகிறது, அதில் தலைவன் இருக்கிறான். அவன் என்ன செய்கிறான் தெரியுமா?
அந்தத் தேரில் உள்ள மணிகள் ஒலிக்காதபடி அவற்றின் நாக்குகளைக் கட்டுகிறான். அதாவது, தேர் ஓடும்போது மணிச்சத்தம் கேட்காதபடி செய்கிறான். ஏன்?
அவன் வரும் வழியில் பல சோலைகள் உள்ளன. அங்கெல்லாம் வண்டுகள் தங்கள் துணையோடு காதல் மயக்கத்தில் இருக்கும்.
அந்த வண்டுகள் இந்தத் தேரின் மணியோசையைக் கேட்டால், பயந்துவிடும். ஆகவே, அவை தங்கள் காதல் இன்பத்தை அனுபவிப்பதற்காக, இவன் தன்னுடைய தேரைச் சத்தமில்லாமல் ஓட்டுகிறான்.
இதைத் தோழி காதலிக்குச் சொல்கிறாள், ‘ஒரு வண்டுக்குக்கூட இரக்கம் காட்டுகிற காதலன், உன்னை மறந்துவிடுவானா?’ என்கிறாள், ‘விரைவில் வருவான், உன் நோயைத் தீர்ப்பான். கவலைப்படாதே!’
அகநானூறில் குறுங்குடி மருதனார் எழுதிய பாடல் இது:
‘முல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு
பைங்கால் கொன்றை மென்பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மாஇரு மருப்பில்
பரல்அவல் அடைய இரலை தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,
கருவி வானம் கதழ்உறை சிதறிக்
கார்செய்துஅன்றே கவின்பெறு கானம்,
குரங்கு உளைப்பொலிந்த கொய்சுவல் புரவி
நரம்புஆர்த்தன்ன வாங்கு வள்பரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
கறங்குஇசை விழவின் உறந்தைக் குணாது
நெடும்பெரும்குன்றத்து அமன்ற காந்தள்
போதுஅவிழ் அலரின் நாறும்
ஆய்தொடி அரிவைநின் மாண்நலம் படர்ந்தே.’
இந்தப் பாடலில் எதை வியப்பீர்கள்? அவள்மீது அவன் வைத்துள்ள அன்பையா, அவன்மீது அவள் வைத்துள்ள அன்பையா, வண்டுகள்மீது நேசம் வைக்கும் அவனுடைய குணத்தையா, இதையெல்லாம் உணர்ந்து, சுட்டிக்காட்டிக் காதலியைத் தேற்றும் தோழியின் அன்பையா?
அன்புடை நெஞ்சங்களைக் காண்பது பேரின்பம், அவையே இவ்வுலகை இயக்கும் நற்சக்கரங்கள்!
(நிறைவடைந்தது)
***
இத்துடன் ‘அன்புடை நெஞ்சம்’ தொடர் நிறைவடைகிறது. இருபது வாரங்களாக இதனை வாசித்து, கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கு நன்றி.
இதுவரை அகத்தை ருசித்தோம், அடுத்த வாரம் தொடங்கிக் கொஞ்சம் புறத்தையும் ரசிப்போம். ‘பண்புடை நெஞ்சம்’ என்ற தலைப்பில், அன்றுமுதல் இன்றுவரை தமிழ்க் கவிதைகள் சொல்லும் பண்புகளையும் வாழ்க்கை நெறிகளையும் விரிவாகப் பேசுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...