ஒரு பொருளைக் காணவில்லை, யார் எடுத்திருப்பார்கள்?
பொருளைத் தொலைத்தவனுக்கு எல்லார் மீதும் சந்தேகம் வரும். ஒருவர் எடுத்திருக்க வாய்ப்பே இல்லை என்றாலும்கூட, ‘யார்கண்டது? அவன்தான் எடுத்தானோ என்னவோ!’ என்றுதான் நினைக்கத்தோன்றும்.
இந்த இயல்பான உணர்வை, எதிரிலுள்ளவர்கள் சரியாகப் புரிந்துகொண்டால் பரவாயில்லை, ‘ஏதோ பதற்றத்தில் அப்படி நினைக்கிறான்’ என்று எண்ணாமல், ‘என்மேலயே சந்தேகப்படறியா?’ என்று பாய்ந்தால்?
பதிலுக்கு அவனும் பாய்வான், ‘நீ கோவப்படறதைப் பார்த்தா, நீதான் எடுத்திருக்கே போலிருக்கு!'
‘முட்டாளே, உன் பொருள் தொலைஞ்சபோது நான் ஊர்லயே இல்லை!'
‘அதனால என்ன? ஆள்வெச்சுத் திருடியிருப்பே!'
அவ்வளவுதான். இந்தச் சண்டை நட்பையும் உறவையும் கெடுக்கும். தக்கனூண்டு பொருளுக்காக, இனிமையான பழக்கத்தை இழந்துவிடுவோம்.
ஆகவே, சந்தேகத்தின் இயல்பைப் புரிந்துகொள்வது அவசியம். முன்றுறையரையனார் எழுதிய ‘பழமொழிநானூறு’ பாடலொன்று இதனை அழகாகச் சொல்கிறது:
‘யாவரேயானும் இழந்த பொருள்உடையார்
தேவரேஆயினும் தீங்குஓர்ப்பர், பாவை
படத்தோன்று நல்லாய்! நெடுவேல் கெடுத்தான்
குடத்துஉளும் நாடிவிடும்.'
சிற்பம் போல் அழகாகத் தோன்றும் பெண்ணே, யாராவது ஒரு பொருளைத் தொலைத்துவிட்டால், அவர்கள் எல்லாரையும் திருடர்களாகதான் பார்ப்பார்கள், தேவர்களே வந்தால்கூட, இவர்கள் கெட்டது செய்திருப்பார்களோ என்றுதான் நினைப்பார்கள். அதைப் புரிந்துகொள்.
ஒருவனுடைய நீண்ட வேலைக் காணவில்லை, ஆனால், அவன் அதைத் தேடும்போது, குடத்துக்குள்ளும் எட்டிப்பார்ப்பான். இந்தச் சிறிய குடத்துக்குள் பெரிய வேல் இருக்காதே, அப்படியே இருந்தாலும் வெளியே தெரிந்துவிடுமே என்று யோசிக்கமாட்டான்.
அதுபோல, பொருளைத் தொலைத்தவர்கள் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று யாரையும் எடைபோடமாட்டார்கள், சட்டென்று சந்தேகப்பட்டுவிடுவார்கள், அதைப் புரிந்துகொண்டு கருணையோடு அணுகவேண்டும்.
இன்னொருமுறை, நாம் அந்தச் சூழ்நிலையில் இருந்தால், அதாவது, எதையேனும் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தால், இதே பிழையை நாமும் செய்யக்கூடாது, பிறர்மீது நம்பிக்கையோடு இருக்கவேண்டும், சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து, அதன் அடிப்படையில் ஒருவர் மீது சந்தேகப்படலாம், எல்லார் மீதும் சந்தேகப்படுவது பிரச்னையைப் பெரிதாக்கும்.
பொதுவாக ஒருவருடன் பழகுவதற்குமுன்னாலேயே அவர்களை எடைபோட்டுவிடுவது நல்லது. தெளிவில்லாமல் ஒருவருக்கு எந்தப் பொறுப்பையும் தரக்கூடாது என்கிறது திருக்குறள், நண்பர், நெருக்கமானவர் என்கிற பொறுப்புகளைக்கூட!
‘தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐஉறவும்
தீரா இடும்பை தரும்.'
ஆராயாமல் ஒருவரைத் தேர்ந்தெடுக்கக்கூடாது, அப்படி ஆராய்ந்து தேர்ந்தெடுத்தபிறகு, அவர்கள்மீது சந்தேகப்படக்கூடாது. அப்படிச்செய்தால் தீராத துன்பம் வரும்.
பல நேரங்களில், சந்தேகம் ஏற்படக் காரணம், சந்தர்ப்பம்தான். ‘பனைமரத்தின் கீழிருந்து பாலைக் குடித்தாலும் கள்ளென்றே நினைப்பார்கள்’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.
காரணம், பனைமரத்திலிருந்து கள் எடுக்கப்படுகிறது, அங்கே அமர்ந்து ஒருவர் வெள்ளையான எதையோ குடிக்கிறார் என்றால், அது கள்ளாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
வெள்ளை நிறத்தில் பாலும் இருக்கும் என்பது தெரிந்தாலும், அந்தச் சந்தர்ப்பத்தோடு இணைத்துப் பார்க்கும்போது, அதனைக் கள் என்றே முதலில் கருதுவோம். அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளாவிட்டால், அதுவே உண்மை என்று நினைத்துவிடுவோம்.
தஞ்சை ராமையாதாஸின் திரைப்பாடலொன்று:
‘தன்னைத்தானே நம்பாதது சந்தேகம், அதற்குச்
சந்தர்ப்பம், சூழ்நிலை தாய், தந்தை ஆகும்.'
சந்தேகப்படுகிறவனுக்கு இவன், அவன் என்கிற கணக்கெல்லாம் கிடையாது, அவன் தன்னையே நம்பமாட்டான். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவனுடைய குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தும்!
இதனால், அவனுடைய நல்ல சிந்தனை கெட்டுப்போகும், இவர் நம்மீது அன்பு வைத்திருக்கிறவர், இவர் நமக்குக் கெடுதல் நினைக்கமாட்டார், இவர் இப்படியெல்லாம் செய்கிறவர் இல்லை என்கிற எண்ணம் மாறிவிடும், பொதுவாக மரியாதையுடன் நடந்துகொள்கிறவர்கள்கூட, இந்த நேரத்தில் மடையர்களாகி விடுகிறார்கள், எதையோ சிந்தித்து எதையோ செய்துவிடுகிறார்கள்:
‘மானஅபிமானம்தன்னை மறைவாக்கும், நல்ல
மாண்புஉடைய மக்களை மடையராக்கும்,
வீணான யோசனைக்கே இடமாக்கும், பல
விபரீதச் செயல்களை விளைவாக்கும்.'
சந்தேகம் என்பது ஒரு ரதத்தைப்போல, அது ஓரிடத்தில் நிற்காது, அங்குமிங்கும் ஓடும், இவனாக இருக்குமோ, அவனாக இருக்குமோ, இப்படி நடந்திருக்குமோ, அப்படி நடந்திருக்குமோ என்று விதவிதமாகச் சிந்திக்கும்.
ஆனால், இந்த ரதம் புறப்பட்ட இடத்துக்கு மட்டும் வராது, சென்று சேரவேண்டிய இடத்துக்கும் செல்லாது, தொலைத்த பொருளைத் தொலைத்த இடத்தில், அல்லது அது இருக்கவேண்டிய இடத்தில்தானே தேடவேண்டும்? அதை விட்டுவிட்டுக் கண்ட இடத்தில் தேடிக்கொண்டிருந்தால் எப்படிக் கிடைக்கும்? சந்தேகம் நம்மைப் பிரச்னையின் ஆழத்துக்குச் சென்று தீர்வு காண விடுவதில்லை, எதிரில் வருகிறவர் மீது பழியைப் போட்டு நடவடிக்கை எடுக்கத் தூண்டுகிறது:
‘ஓரிடம் நிலையாக நில்லாத ரதம்போலே
உள்ளத்தை ஓடவிடும், பின்னும்
சேரும் இடம்வந்து சேராத ஓடமாய்
திசைமாறச் செய்துவிடும்.'
இந்த வண்டியை திசைமாறச் செய்கிறவர்கள் யார் தெரியுமா?
ஊர் மக்கள்தான், அதாவது, சந்தேகப்படுகிறவரைச் சுற்றியிருக்கிறவர்கள்தான். அவருக்கே சந்தேகம் வராவிட்டால்கூட, ‘இப்படிதான் நடந்திருக்கும்’ என்று சொல்கிறவர்கள் இவர்கள்.
பொதுவாக அவர்களுடைய பேச்சை அவர் நம்பமாட்டார், மதிக்கமாட்டார், ஆனால் இப்போது, சந்தேகம் அதையெல்லாம் கேட்கச்சொல்லும், அதில் உண்மை இருக்குமோ என்று யோசிக்கச்சொல்லும்.
இன்னொரு பக்கம், அதே ஊரில் சிலர் உண்மையைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள், ‘அவசரப்படாதே, நிதானமா யோசிச்சுப்பாரு’ எனச் சரியான வழிகாட்டுவார்கள்.
தூண்டுகிறவர்களை நம்பச் சொல்லும் அதே சந்தேகம், இவர்களை நம்பாதே என்று சொல்லும், ஒழுங்காகச் சிந்திக்கவிடாது, மனம் ஒத்த காதலர்களையும் பிரித்துவிடும், மனிதனை விலங்காக்கிவிடும்:
‘ஊரார்சொல் பொய்அதனை ஊட்டிவிடும், உண்மை
உரைப்பார்சொல் தப்புஎனவே விலக்கிவிடும்,
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டிவிடும்,
மனிதனை விலங்குஆக்கிவிடும்.'
இந்த நோய்க்கு என்ன மருந்து?
புத்திதான். அதன் துணையோடுதான் சந்தேகத்தை வெல்லவேண்டும்:
'அதற்கு
ஔஷதம் ஒன்றேதான்,
நல்விவேகம்.'
ஔவையார் ‘ஆத்திசூடி’யில் இதையே சொல்கிறார்:
‘பேதைமை அகற்று,
மொழிவது அற மொழி.'
ஒரு பிரச்னை வரும்போது, அதுபற்றிச் சிந்தித்துத் தெளிவான தீர்மானத்துக்கு வரவேண்டும், அறிவை மயக்கும் சொற்களையோ சிந்தனைகளையோ ஏற்றுக்கொள்ளக்கூடாது.
அடுத்து, எதுபற்றிப் பேசும்போதும் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று பூசிமெழுகக்கூடாது, தெளிவாக ஆராய்ந்து அறிந்தபிறகுதான் பேசவேண்டும்.
இதற்கான அடிப்படை மிக இளம் வயதிலேயே போடப்பட்டு விடவேண்டும். எதையும் அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறவர்கள் பின்னர் தங்களிடம் யார் எதைச் சொன்னாலும் நம்புவார்கள், இன்னொருவர் வேறு ஏதாவது சொன்னால் அதையும் நம்புவார்கள், பிறகு இவற்றில் எது உண்மையாக இருக்கும் என்று குழம்புவார்கள்.
அதற்குப்பதிலாக, ஆராய்ச்சி மனோபாவம் வரவேண்டும், எதையும் கேள்வி கேட்கிற குணம் இருந்தால்தான், அநாவசியச் சந்தேகங்கள் குறையும்.
ஆனால், எதையும் கேள்வி கேட்கிறவன் எல்லாவற்றின் மீது சந்தேகப்படுவான், இல்லையா?
அதுதான் இல்லை. எதையும் கேள்வி கேட்பதன் நோக்கம், எது சரி, எது தவறு என்று ஆராய்ந்து புரிந்து கொள்வதுதான், அந்த மனோபாவம் இருக்கும்போது, எல்லாவற்றின்மீதும் சந்தேகம் வராது, எதன்மீது சந்தேகம் வரவேண்டுமோ அதன்மீதுதான் சந்தேகம் வரும்.
நாலடியார் பாடலொன்று:
‘கல்வி கரைஇல, கற்பவர் நாள்சில,
மெல்ல நினைக்கின் பிணிபல, தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுஉடைய கற்பவே, நீர்ஒழியப்
பால்உண் குருகின் தெரிந்து.'
கல்விக்குக் கரை கிடையாது, எதை வேண்டுமானாலும் படிக்கலாம், எவ்வளவும் படிக்கலாம், இதோடு கல்வி முடிந்தது என்று சொல்லஇயலாது.
ஆனால், படிப்பவர்களின் நிலைமை அப்படியல்ல, அவர்களுக்கு வாழ்நாள் என்று ஒரு வரையறை உண்டு, அதுவரைதான் படிக்கஇயலும்.
ஆகவே, ஒருவர் எல்லாவற்றையும் படிக்கஇயலாது, குறிப்பிட்ட விஷயங்களைமட்டும்தான் தேர்ந்தெடுத்துப் படிக்கவேண்டும். எவற்றைத் தேர்ந்தெடுப்பது?
அன்னப்பறவை பாலில் உள்ள தண்ணீரை நீக்கிவிட்டு, பாலைமட்டும் குடிக்கும் என்பார்கள், அதுபோல, நம்முன் உள்ளவற்றை ஆராய்ந்து, நல்ல நூல்களைமட்டும் தேர்ந்தெடுத்துப் படிக்கவேண்டும். அதுவே விவேகத்தைத்தரும், எல்லாவற்றின்மீதும் சந்தேகம் கொள்ளாமல், தெளிவான பார்வையைத்தரும்.
அறிவைப்பெறுவதற்கு அன்னத்தைப்போலவும் இருக்கலாம், பசுவைப்போலவும் இருக்கலாம் என்கிறார் பவணந்திமுனிவர். அவரது நன்னூல் பாடல்:
‘அன்னம்,மாவே தலைமாணாக்கர்.'
அதாவது, மாணவர்களில் சிறந்தவர்கள், அன்னத்தைப்போல் தண்ணீரை விட்டுவிட்டுப் பாலைக் குடிப்பார்கள், அல்லது, பசுவைப்போலப் புல்லை வாயில் அதக்கிக்கொண்டு, பிறகு நிதானமாக அசைபோடுவார்கள். அதாவது, புத்தகங்களை விறுவிறுவென்று வாசித்துவிட்டு, அவற்றைப்பற்றிச் சிந்தித்து அறிவை வளர்த்துக்கொள்வார்கள்.
ஆனால், இந்த விஷயத்தில் திருவள்ளுவருக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை, ‘ஒருவர் என்னதான் படித்திருந்தாலும், அறியாமையில்லாமல் இருப்பது அபூர்வம்தான்’ என்கிறார்:
‘அரியகற்று ஆசுஅற்றார்கண்ணும் தெரியும்கால்
இன்மை அரிதே வெளிறு.'
படிக்கிறவனிடம் அறியாமை எப்படி வருகிறது? அவன் எப்படி அர்த்தமில்லாமல் இன்னொருவர் மேல் சந்தேகப்படுகிறான்?
பாரதியார் சொல்கிறார்:
‘நெஞ்சில் கவலை நிதமும் பயிர்ஆக்கி
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை.'
கவலையிருக்கும் மனத்தில் அச்சம் வரும், அதோடு வாழவேண்டியிருக்கும், அதுவே அறியாமை.
அந்தக் கவலையைத் தெளிவினால் போக்கலாம், அப்போது, அறியாமையும் வராது, சந்தேகமும் வராது.
காந்தியடிகளைப்பற்றி நாமக்கல்கவிஞர் எழுதுவது:
‘தெளிவாம் அறிவின் பெருவெள்ளம்.'
அறிவு வெள்ளமாகப் பெருகிவந்தால் போதாது, அது தெளிவான அறிவாக இருக்கவேண்டும், தெளிந்த நீரைதான் அள்ளிப் பருக இயலும், அதுதான் தாகத்தைத் தீர்க்கும், அசுத்தமான நீர் எவ்வளவு வந்தாலும் அதனால் பயன் இருக்காது.
அதுபோல, அறிவைச் சேகரித்துக்கொண்டே செல்வதைவிட, அது தெளிவைத் தருகிறதா என்று கவனிப்பது முக்கியம். குழப்பத்தைப் பெருக்கும் அறிவு அவசியமில்லாதது.
காந்தியைப் பற்றிய இன்னொரு பாடலிலும் நாமக்கல் கவிஞர் இதையே குறிப்பிடுகிறார்:
‘கடல்கலங்கப் புயல்அடித்துத்
தத்தளிக்கும் கப்பலின்
திடம்மிகுந்த, தெளிவுகொண்ட
திசைஅறிந்த மாலுமி.'
கடலில் செல்லுகிற ஒரு கப்பலின் தலைவன், மாலுமி. அவனுக்கு அந்தப் பொறுப்பு வயதாலோ கல்வியாலோ அனுபவத்தாலோ வலிமையாலோ வந்துவிடுவதில்லை, திசைகளை அறிந்தவன், தெளிவு கொண்டவன் என்ற தகுதியால்தான் வருகிறது.
அப்படிப்பட்ட ஒரு மாலுமி கப்பலைச் செலுத்தும்போது, என்ன தடைகள் வந்தாலும் அவன் திறமையாக அதனை வழி நடத்துவான். கப்பலில் இருக்கும் மக்கள், சரக்குகள் அனைத்தையும் காப்பான், அவனுடைய தெளிவு எல்லாவற்றையும் உறுதியாக்கும்.
மாறாக, அந்த மாலுமி வெறுமனே புத்தகக்கல்வி பெற்றவனாக இருந்தால், சின்னக் காற்றுக்கும் பதறிப்போவான். காரணம், அவனிடம் தெளிவு இல்லை, எதன் மீதாவது பழியைப்போட்டுவிட்டு ஓடிவிட நினைப்பான், இந்தத் திசையில் கப்பலை இப்படிச் செலுத்தினால் இந்தச் சூழ்நிலையைச் சரிசெய்யஇயலும் என்கிற சிந்தனை அவனிடம் இருக்காது.
அறிவு என்பது, எல்லாவற்றையும் தெரிந்துவைத்திருப்பதல்ல, தனக்குத் தெரியாதவையும் உள்ளன என்று அறிந்திருப்பதும் அறிவுதான். திருமந்திரத்தில் திருமூலர் சொல்வது:
‘அறிவு,அறிவுஎன்று அங்கு அரற்றும் உலகம்,
அறிவு,அறியாமை யாரும் அறியார்,
அறிவு,அறியாமை கடந்து அறிவுஆனால்
அறிவு,அறியாமை அழகியவாறே.'
இந்த உலகத்தில் பலர், அறிவுதான் முக்கியம் என்று புலம்புகிறார்கள். உண்மையில் அறிவு என்பது அறியாமையோடு இருப்பதை யாரும் அறிந்திருப்பதில்லை.
அவர்களுடைய அறிவு, அறியாமையைக் கடந்த அறிவாக இருந்தால், அறிவும் அறியாமையும் கலந்திருப்பதன் அழகு அவர்களுக்கு விளங்கும்.
இந்த வார்த்தை விளையாட்டினுள் ஆழமான தத்துவங்கள் உண்டு. இப்போது நாம் அங்கே செல்லவேண்டியதில்லை, இதன் எளிமையான உட்கருத்து, அறிவும் அறியாமையும் கலந்துதான் இருக்கும். ஆகவே, 'முழுமையாகக் கற்க’ ஆசைப்படுவதைவிட, ‘தெளிவாகக் கற்பது’ சிறந்தது.
‘சிறுபஞ்சமூலம்’ பாடலொன்றில் காரியாசான் சொல்கிறார்:
‘ஒருவன் அறிவானும் எல்லாம், யாதுஒன்றும்
ஒருவன் அறியாதவனும், ஒருவன்
குணன்அடங்கக் குற்றம்இல்லானாம் ஒருவன்,
கணன்அடங்கக் கற்றானும் இல்.'
எல்லாம் அறிந்தவன் என்று யாரும் கிடையாது, எதுவுமே அறியாதவன் என்றும் யாரும் கிடையாது, எல்லாருமே இந்த இரு நிலைகளுக்கும் நடுவில்தான் இருக்கிறோம்.
நல்ல குணங்களே இல்லாதவன் என்று யாரும் கிடையாது, குற்றமே இல்லாதவன் என்றும் யாரும் கிடையாது, எல்லாருமே இந்த இரு நிலைகளுக்கும் நடுவில்தான் இருக்கிறோம்.
நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவன் என்றும் யாரும் கிடையாது. ஆகவே, முழுமைக்கு முயற்சி செய்யாமல், தெளிவைக் கவனியுங்கள்.
தெளிவு கூட, வேறெங்கும் இல்லை, உங்களிடமே இருக்கிறது, கற்பதால் அது வெளிப்படும். நான்மணிக்கடிகையில் விளம்பிநாகனார் சொல்வது:
‘கற்பக் கழிமடம் அஃகும்.'
ஒருவர் கற்பதால், அவரிடமிருக்கும் அறியாமை விலகும். குளத்தில் பாசியை விலக்கியதும், தெளிந்த நீர் வெளிப்படுவதுபோல், அவருக்குள்ளிருக்கும் தெளிவினை இது எடுத்துக்காட்டும்.
இந்தத் தெளிவு இல்லாதவர்கள், அது இருப்பதுபோல் நடிப்பது ஆபத்து. கடலில் சரியான வழியறிந்து கப்பலைச் செலுத்தும் திறனும் அனுபவமும் பெறாத ஒரு மாலுமி, ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்று சொல்லிக்கொண்டு கப்பலைக் கிளப்பினால் அது பெரிய பிரச்னைக்கு வழிவகுக்கும்.
இதனைப் பிறர் சரி பார்ப்பதைவிட, நாமே உறுதி செய்து கொள்வது நல்லது. நமக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்பது நமக்குத் தெரிந்திருப்பதே பெரிய அறிவுதான்.
‘இன்னாநாற்பது’ பாடலொன்றில் கபிலர் சொல்கிறார்:
‘குறிஅறியான் மாநாகம் ஆட்டுவித்தல் இன்னா,
தறிஅறியான் கீழ்நீர்ப் பாய்ந்துஆடுதல் இன்னா.'
பாம்பாட்டிக்குப் பாம்பைக் கட்டுப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும், அந்த அறிவு இல்லாமல் அவன் அந்த வேலைக்கு வரக்கூடாது.
நீரில் பாய்கிறவனுக்கு ஆழம் தெரிந்திருக்கவேண்டும், இல்லாவிட்டால் அவன் உயிருக்குத்தான் பிரச்னை.
‘இன்னா’ சரி, ‘இனியவை’?
பூதஞ்சேந்தனார் எழுதிய ‘இனியவைநாற்பது’ பாடலொன்று, அறிவுள்ளவர்கள் எப்படிப் பேசவேண்டும் என்று சொல்கிறது:
‘சிறந்துஅமைந்த கேள்வியர்ஆயினும், ஆராய்ந்து
அறிந்துஉரைத்தல் ஆற்ற இனிது.'
என்னதான் ஒருவர் நன்கு படித்திருந்தாலும், பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தாலும், அதனை ஆராய்ந்து, உண்மைத்தன்மையை அறிந்துகொண்டு, அதன்பிறகு பேசுவது இனிமையானது.
இந்த ஆராய்ச்சி மனோபாவம் அறிவுக்கு மிகவும் முக்கியமானது. இல்லாவிட்டால் யாரோ எழுதியவற்றைப் படித்து அப்படியே திரும்பச் சொல்லிக்கொண்டிருப்போம், ஒருவேளை அதில் பிழைகள் இருந்தால், அவற்றைச் சரி செய்யமாட்டோம், காரணம், நாம் அதை ஆராய்ந்து உறுதி செய்து கொள்வதில்லை, ஆசிரியர் சொன்னார், அந்தத் துறை சார்ந்த ஒரு நிபுணர் சொன்னார் என்பதற்காக அப்படியே ஏற்றுக்கொண்டுவிடுகிறோம்.
மாறாக, அதையே நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ளும்போது, அதன் உண்மைத்தன்மையை நாம் உறுதி செய்துகொள்கிறோம். அதன்பிறகு, அதில் சந்தேகம் எழ வாய்ப்பில்லை.
வள்ளுவர் சொல்வதுபோல்:
‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.’
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.