ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அன்புடை நெஞ்சம்: அத்தியாயம்-15

ஒரு நாரை. அதற்கு மிகவும் வயதாகிவிட்டது, சிறகுகளெல்லாம் விழுந்துவிட்டன.இனிமேல் அது பறப்பதே கடினம். இரை பிடிப்பது இன்னும் கடினம்.

News image
Updated On :17 ஜூலை 2015, 10:59 am

என்.சொக்கன்

.firstcharacter { float: left; color: #000; font-size: 50px; line-height: 60px; padding-top: 4px; padding-right: 8px; padding-left: 3px; }
ரு நாரை. அதற்கு மிகவும் வயதாகிவிட்டது, சிறகுகளெல்லாம் விழுந்துவிட்டன.

இனிமேல் அது பறப்பதே கடினம். இரை பிடிப்பது இன்னும் கடினம்.

அந்த நாரைக்குப் பசிக்கிறது. ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று யோசிக்கிறது.

அப்போது, அந்த நாரை சேரனின் தொண்டிப்பட்டணத்தை நினைக்கிறது. ‘அங்கே கிடைக்கிற அயிரைமீன் ரொம்ப ருசியா இருக்குமே’ என்று எண்ணும்போது, அதன் நாவில் எச்சில் ஊறுகிறது.

முன்பு எப்போதோ அந்த நாரை தொண்டிப்பட்டணத்துக்குச் சென்றுள்ளது. அப்போது சாப்பிட்ட அயிரைமீனின் சுவை அதற்கு நினைவில் வருகிறது. ‘இப்போ அது கிடைச்சா நல்லா இருக்குமே’ என்று நினைக்கிறது.

இந்த நாரை இருப்பது வேறொரு கடற்கரையில். இங்கே இருக்கும் மீன்களைச் சாப்பிடவே அதற்கு உடம்பில் தெம்பு இல்லை. ஆனால் ஆசைமட்டும் தொண்டிப்பட்டிணத்து அயிரைமீன்மீது!

இதைப் பார்த்த ஒரு காதலன் தன்னுடைய நெஞ்சை நோக்கி, ‘நீயும் அந்த நாரையைப் போலத்தான்’ என்கிறான்.

காரணம், அவன் தன்னுடைய காதலியைக் காண ஓர் இடத்துக்குச் சென்றிருந்தான். ஆனால், அவள் அங்கே இல்லை.

உடனே, இவன் மனம் தவிக்கிறது. ஏதேதோ கற்பனைகளில் மூழ்குகிறது. ‘இனிமேல் அவளைக் காண இயலாது, எனக்குத் துன்பம்தான்’ என்றெல்லாம் எண்ணுகிறான்.

‘என் நெஞ்சே, வயதாகி, சிறகு இல்லாமல், இங்கே உட்கார்ந்துகொண்டு தொண்டிப்பட்டணத்து அயிரைமீனுக்கு ஆசைப்படும் நாரையைப்போல, நீ அவளை நினைக்கிறாய். அதனால் பயன் இல்லை. நீ பட்டினி கிடக்கவேண்டியதுதான்’ என்கிறான் அவன்.

குறுந்தொகையில் பரணர் எழுதிய பாடல் இது:

குணகடல் திரையது பறைதபு நாரை,

திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை

அயிரை ஆர் இரைக்கு அணவந்தாங்கு

சேயள், அரியோள் படர்தி,

நோயை நெஞ்சே! நோய்ப்பாலோயே!

கிட்டத்தட்ட இதேபோன்றதொரு சூழல் ஒரு திரைப்படத்தில் அமைந்தபோது, அதற்குக் கிட்டத்தட்ட இதேமாதிரி ஓர் உவமையைப் பயன்படுத்துகிறார் நா.முத்துக்குமார்.

காதலன் தன்னை ஒருகரையாகவும், காதலியை மறுகரையாகவும் எண்ணிக்கொள்கிறான். இருவரும் சேர இயலாதபடி நடுவில் தனிமை நதியாக ஓடுகிறது. அதனால் வருந்திய அவன், ‘இந்தக் கானல் நீரில் நான் மீன் பிடிப்பது எப்போது?’ என்று ஏங்குகிறான்:

ஒருகரையாக அவளிருக்க,

மறுகரையாக நானிருக்க,

இடையில் தனிமை தளும்புதே நதியாய்!

கானல் நீரில் மீன்பிடிக்கக்

கைகள் நினைத்தால் முடிந்திடுமா?

பொதுவாக, மீன் என்பது காதலியின் கண்ணுக்கு உவமையாகச் சொல்லப்படுவது. அதையே ஒரு பெண்ணுக்கும் உவமையாகச் சொல்வதுண்டு, திரைப்பாடல்களில் இந்த உவமை ஏராளமாகப் பயன்பட்டிருக்கிறது. உதாரணமாக:

தாமரைப்பூமேலே

தாவிடும் மீன்போலே

காமினி நீஎன்

கருத்தினில் பாய்ந்தாயே! (பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்)

மீனும் மீனும் மேயுதே,

வேடிக்கையாய்ப் பாயுதே,

ஆனந்தமாய்க் கண்களும்,

அவரை நாடிப்போகுதே! (பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்)

மீனே, மீனே, மீனம்மா,

விழியைத் தொட்டது யாரம்மா? (கண்ணதாசன்)

மானழகும், கெண்டை

மீனழகும்

கண்கள் காட்டாதா,

இசை கூட்டாதா! (வாலி)

நதிக்குள் குதிக்கும் மீன்கள்

உன் நீள்விழி கண்டு,

நிலத்தில் வாழும் மீனோ

என வியப்பது உண்டு! (வாலி)

விழிகள் மீனோ,

மொழிகள் தேனோ (வைரமுத்து)

அயிரமீனு கண்ணுக்காரி (வைரமுத்து)

மீனம்மா, மீனம்மா,

கண்கள் மீனம்மா! (பிறைசூடன்)

இவை வர்ணனைகள். இதே மீனைச் சற்றே வேறுவிதமாகக் காட்சிப்படுத்திய பாடல்களும் உண்டு. உதாரணமாக, வைரமுத்துவின் இந்த வரிகள்:

மீன்களைச் சுமப்பதொன்றும்

நீருக்குப் பாரமில்லை,

காதலைச் சுமக்கையிலே,

காதலனும் பாரமில்லை!

தொடர்ந்து நீந்திக்கொண்டே இருக்கும் மீனை நினைவுகளுக்கு உவமையாக்குகின்றன யுகபாரதியின் இந்த வரிகள்:

அயிரை, கெண்டை மீனா

அடங்காம நீந்தும் உன் நெனப்பு!

கெண்டைகள் மனத்தில் துடிக்கின்றன என்று கண்ணதாசனும் எழுதியிருக்கிறார்:

ஆத்துல காத்தடிச்சா அலையோடும்,

கெண்டை விளையாடும்,

இப்போ மனசுல துடிக்குதம்மா!

ஒரு பாடலில், வைரமுத்து இப்படி எழுதினார்:

பெண்ணே, நான் தூண்டில் போட்டால்,

விண்மீனும் தப்பாது!

இதற்கு இன்னொரு பாடலில் வாலி பதில் சொன்னார்:

செம்மீன்கள் மாட்டுகின்ற

வலைகொண்டு வீசினால்

விண்மீன்கள் கையில் வருமா?

அடுத்து, விண்மீனை விட்டுவிட்டுத் தண்ணீரை எடுத்துக்கொண்டார் வைரமுத்து:

வலைகளிலே, மீன்சிக்கலாம்,

தண்ணீர் என்றும் சிக்காது!

பிறகு, அதற்கு அவரே மறுப்பும் சொன்னார்:

தண்ணீரைக்கூடச் சல்லடையில் அள்ளலாம்,

அது பனிக்கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்!

மீன் என்பது பாண்டியர்களின் சின்னம். இதேபோல் சேரனுக்கு வில், சோழனுக்குப் புலி ஆகியவை சின்னங்கள். இவற்றைக் காதல் பாடல் ஒன்றில் அழகாகப் பயன்படுத்தினார் வாலி:

மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே, போரில்

புதுமைகள் புரிந்த சேரன் வில்லைப் புருவத்தில் கண்டேனே,

தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே, இவை

மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னைத் தமிழகம் என்றேனே!

Story image

மீன்கொடி பாண்டியனுக்குமட்டுமா? மன்மதனுக்கும் அதுதான் கொடி. எம்.ஜி.வல்லபன் ஒரு பாடலில் எழுதுவது:

மீன்கொடித் தேரில் மன்மத ராஜன்

ஊர்வலம் போகின்றான்!

சங்கப்பாடல்களைப் பொறுத்தவரை, மீன் என்பது வெறும் வர்ணனையாக அன்றி, பாடல் சூழலைக் குறிப்பிடும் கருவியாகவும், அதன்மூலம் பல உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் வருகிறது. ‘நெய்தல்’ திணையில் அமைந்த பாடல்களில் கடற்கரையோர வாழ்க்கை காட்சிப்படுத்தப்படுவதால், மீனுக்கு அங்கே முக்கியத்துவம் அதிகம்.

ஒரு காதலன், தன்னுடைய காதலியைக் காண இரவு நேரத்தில் வருகிறான். அவளும் அவனோடு மகிழ்ச்சியாகவே இருக்கிறாள். ஆனால், தங்கள் திருமணம் விரைவில் நிகழவேண்டும் என்று எண்ணுகிறாள்.

அவனோ அதைப் புரிந்துகொள்ளவில்லை. தொடர்ந்து காதலித்துக்கொண்டே இருக்கலாம் என்று எண்ணுகிறான்.

இந்த விஷயம் ஊருக்குத் தெரிந்துவிடுகிறது. அவர்கள் அந்தப் பெண்ணைப் பற்றிப் பலவிதமாகப் பேசத் தொடங்குகிறார்கள். அவள் மிகவும் வருந்துகிறாள்.

அவளுடைய தோழி, இந்த விஷயத்தைக் காதலனுக்குப் புரியவைக்கவேண்டும் என்று எண்ணுகிறாள். ஒருநாள், காதலனை நிறுத்திப் பேசத் தொடங்குகிறாள்.

‘நெஞ்சுல நல்லா மணம் வீசற சந்தனத்தைப் பூசியிருக்கே, அருமையான மாலை சூடியிருக்கே, தினமும் ராத்திரி நேரத்துல வந்து என் தோழியைச் சந்திக்கறே, உன் நெஞ்சுல தழும்பு வர்ற அளவுக்கு அழுத்தமாக் கட்டித் தழுவறே, அதெல்லாம் நல்லதுதான், என் தோழிக்கும் அதுல சந்தோஷம்தான்!’

‘ஆனா, இந்த ஊர் சும்மா இருக்குமா? அது கண்டபடி பேசுதே!’

‘அங்கே பாரு, கடல்ல அலைகூடத் தூங்கிடுச்சு. ஆனா, மீனவர்கள் இன்னும் மீன் பிடிச்சுகிட்டிருக்காங்க. அவங்களுக்கு வெளிச்சம் தெரியறதுக்காக, ஒரு விளக்கை ஏத்தி வெச்சிருக்காங்க. அந்த விளக்கு, ராஜாவோட ராணுவத்துல இருக்கிற யானையோட முகத்துல கட்டின அலங்காரம் மாதிரி ஜொலிக்குது.’

‘அந்தமாதிரி, உங்க காதலும் ஊருக்குத் தெரிஞ்சுபோச்சு. கடற்கரைச் சோலையில இருக்கற நாரைங்க சத்தம் போடறமாதிரி, எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க.’

ராத்திரியில் மீன் பிடிக்கிறவர்களைக் காண்பித்து, அதன்மூலம் காதலன் விரைவில் திருமணப்பேச்சைத் தொடங்கவேண்டும் என்று தோழி வலியுறுத்தும் இந்தப் பாடல் அகநானூறில் உள்ளது. எழுதியவர் உலோச்சனார்:

அரைஉற்று அமைந்த ஆரம் நீவிப்

புரையப் பூண்ட கோதை மார்பினை,

நல்அகம் வடுக்கொள முயங்கி நீ வந்(து)

எல்லினில் பெயர்தல் எனக்கும் ஆர்இனிதே,

பெரும்திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த

கொண்டல் இரவின் இரும்கடல் மடுத்த

கொழுமீன் கொள்பவர் இருள்நீங்கு ஒண்சுடர்

ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை

ஆடுஇயல் யானை அணிமுகத்து அசைந்த

ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும்

பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்

பரிஉடை நல்தேர்ப் பெரியன் விரிஇணர்ப்

புன்னை அம்கானல் புறந்தை முன்துறை

வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன

அம்பல் வாய்த்த, தெய்ய தண்புலர்

வைகுறு விடியல் போகிய எருமை

நெய்தல்அம் புதுமலர் மாந்தும்

கைதைஅம் படப்பை எம்அழுங்கல் ஊரே!

இரவில் கடலில் மீன் பிடிக்கிறவர்களைக் காட்சிப்படுத்தும் ஒரு திரைப்பாடலில், ‘மீனவர்களுக்கு நிலாவே விளக்கு’ என்கிறார் வாலி. அதே நிலாவைப் பார்த்தபடி நம்பிக்கையோடு கரையில் காத்திருக்கும் அவர்களுடைய மனைவி, பிள்ளைகளையும் காட்சிப்படுத்துகிறார்:

கட்டிய மனைவி, தொட்டில் பிள்ளை,

உறவைக் கொடுத்தவர் அங்கே!

அலைகடல் மேலே அலையாய் அலைந்து

உயிரைக் கொடுப்பவர் இங்கே!

வெள்ளிநிலாவே விளக்காய் எரியும்

கடல்தான் எங்கள் வீடு!

இரவு நேரத்தில் வந்த காதலனிடம் தோழி இப்படிப் பேசினால், அவன் என்ன செய்வான்?

திருமணத்துக்கான பேச்சுகளைத் தொடங்குவான். அதற்கு அவனுக்குப் பணம் தேவை, அதைச் சேகரிக்கத் தொடங்குவான்.

அதனால், அவனால் காதலியை அடிக்கடி வந்து பார்க்க இயலாது. அவன் வராமலிருப்பது அவர்களுடைய திருமணத்தை விரைவு படுத்துவதற்காகதான். ஆனால், அது காதலிக்குப் புரியுமா? அவனைக் காணாமல் அவள் வருந்துகிறாள். தன் தோழியிடம் பேசுகிறாள்.

‘நம்ம மீனவங்க கடலுக்கு மீன் பிடிக்கப் போகும்போது, காய்ஞ்ச மூங்கிலோட நுனியில கூரான உளியைப் பொருத்தி எடுத்துகிட்டுப் போறாங்க, அதை வேகமா எறிஞ்சு சுறா மீனைப் பிடிக்கறாங்க. அதைப் பார்த்துக் கரையில இருந்த அன்னங்கள் பயந்து ஓடுது!’

‘அப்படிப்பட்ட கடற்கரையில, நான் என் காதலனைப் பலமுறை சந்திச்சுப் பேசியிருக்கேன். ஆனா, இப்போ அவன் வர்றதே இல்லை. என்னாச்சு? நம்ம நட்பு பகையா மாறிடுச்சா?’

இந்தக் குறுந்தொகைப் பாடலை எழுதியவர் கணக்காயன் தத்தன்:

கொல்வினைப் பொலிந்த கூர்வாய் எறிஉளி

முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ்

தாங்கு அருநீர்ச்சுரத்து எறிந்து வாங்குவிசைக்

கொடும்திமில் பரதவர் கோட்டுமீன் எறிய

நெடும்கரை இருந்த குறும்கால் அன்னத்து

வெள்தோடு இரியும் வீததை கானல்

கைதைஅம் தண்புனல் சேர்ப்பனொடு

செய்தனெம் மன்ற ஓர் பகைதரு நட்பே!

இப்போது, தோழி அவளிடம் உண்மையைச் சொல்கிறாள், ‘சுறாக்கள் நிறைந்த வழியில், தினமும் உன்னைச் சந்திக்க வருவான் உன் காதலன், அவன் இப்போது வருவதில்லை, அதற்குக் காரணம் அவன் அல்ல, என்னுடைய முட்டாள்தனம்தான்’ என்கிறாள், ‘அவனிடம் நான் இப்படிச் சொன்னேன், அதனால், அவன் இரவில் வருவதில்லை, பகலில் வருவான், உன்னைத் திருமணம் செய்துகொள்வான்’ என்று உணர்த்துகிறாள்.

குறுந்தொகைப் பாடல் இது. எழுதியவர் அறிவுடைநம்பி:

அம்ம, வாழி, தோழி! கொண்கன்

தான்அது துணிகுவன் அல்லன், யான்என்

பேதைமையால் பெருந்தகை கெழுமி

நோதகச் செய்தது ஒன்றுஉடையேன்கொல்லோ!

வயச்சுறா வழங்குநீர் அத்தம்

சின்னாள்அன்ன வரவு அறியானே!

இன்னொரு காதலன், தன் காதலியைச் சந்திக்கவேண்டும் என்று விரும்புகிறான். ஆனால், அவனுடைய காதல் உண்மையானதா என்று காண விரும்பிய தோழி அவனிடம் சில கேள்விகள் கேட்கிறாள்.

‘ஐயா, நாங்க மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க, எங்க வீட்ல உள்ளவங்க கடலுக்கு மீன்பிடிக்கப் போவாங்க, தண்ணியைக் கலக்கி மீன்களைக் கொண்டு வருவாங்க, நாங்க அந்த மீன்களை அறுத்துக் காயவைப்போம், அப்போ அதைத் தின்ன வர்ற பறவைங்களை விரட்டுவோம்.’

‘இதுதான் எங்க வாழ்க்கை, எங்கமேல எப்பவும் மீனோட வாசனை அடிச்சுகிட்டேதான் இருக்கும்!’

‘நீங்க அப்படியில்லை, பெரிய தேர்ல வர்றவங்க, பணக்காரக்குடும்பம். உங்களுக்கும் எங்களுக்கும் சரிப்படுமா?’

‘கொஞ்சம் தள்ளியே நில்லுங்க, எங்க குடும்பத்துல உள்ள நல்ல ஆணாப் பார்த்து நாங்க எங்க தோழிக்குக் கல்யாணம் செஞ்சுவைக்கறோம்!’

தோழி இப்படிப் பேசக் காரணம், வெறுப்பு அல்ல, அவன் மனத்தில் நிஜமாகவே அவள் இருக்கிறாளா, அல்லது வெறும் கவர்ச்சியா என்று அவள் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறாள்.

நற்றிணைப் பாடல் இது. எழுதியவர் பெயர் தெரியவில்லை:

இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி

நீல்நிறப் பெரும்கடல் கலங்க உள்புக்கு

மீன்எறி பரதவர் மகளே, நீயே

நெடும்கொடி நுடங்கும் நியம மூதூர்க்

கடும்தேர்ச் செல்வன் காதல் மகனே,

நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி

இனப்புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ!

புலவு நாறுதும், செல நின்றீமோ!

பெருநீர் விளையுள் எம் சிறு நல்வாழ்க்கை

நும்மொடு புரைவதோ அன்றே,

எம்மனோரில் செம்மலும் உடைத்தே!

இதற்கு மாறுபட்டு அமைந்த ஒரு திரைப்பாடலில், மருதகாசி மீனை மையமாக வைத்து ஒரு கேள்வி கேட்கிறது: காதலன் காத்திருக்க, அவன் காதலியை வசதியுள்ள இன்னொருவன் திருமணம் செய்துகொள்வது நியாயமா?

ஆத்திலே தண்ணிவர,

அதிலொருவன் மீன்பிடிக்க,

காத்திருந்த கொக்கு அதைக்

கவ்விக்கொண்டு போவதும் ஏன்? அதைப்

பாத்து அவன் ஏங்குவது ஏன்?

இதற்கான காரணத்தையும் அவரே சொல்கிறார்:

ஏற்றத்தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்

இத்தனைக்கும் காரணமாம்!

இப்படி எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல், மீன்கள் திருமணத்தில் எல்லாவகை மீன்களும் கலந்துகொள்வதாக ஒரு கலகலப்பான பாடலை எழுதிப் பிரபலமானார் கானா உலகநாதன்:

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம், அந்த

சென்னாக்குனிக் கூட்டமெல்லாம் ஊர்கோலம்!

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம், அய்யா

மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்,

பஞ்சாயத்துத் தலைவருன்னா சுறாமீனுதானுங்கோ, அவர்

சொன்னபடி இருவருக்கும் நிச்சயதார்த்தம்தானுங்கோ,

கல்யாணம் நடந்துவருது பாருங்கோ!

மாப்பிள்ள சொந்தபந்தம் மீசக்கார எறாங்கோ,

பொண்ணுக்குச் சொந்தபந்தம் மீசக்காரக் கடுவான்,

இந்த மணமக்களை வாழ்த்துகிற பெரியமனுஷன் யாருங்கோ?

தலைவரு திமிங்கிலம்தானுங்கோ!

அது சரி, திருமணத்துக்குப் பிறகு மாப்பிள்ளை மீன் பெண் மீனின் கண்களை வர்ணிக்கவேண்டுமென்றால் எதை உவமையாகச் சொல்லும்?

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.