அன்புடை நெஞ்சம்: அத்தியாயம்- 16
ஒரு கெண்டைமீன். வயலில் துள்ளிக்கொண்டிருந்தது. திடீரென்று, அதை ஒரு நாரை கவ்வியது.


.firstcharacter { float: left; color: #000; font-size: 50px; line-height: 60px; padding-top: 4px; padding-right: 8px; padding-left: 3px; }ஒ
ரு கெண்டைமீன். வயலில் துள்ளிக்கொண்டிருந்தது. திடீரென்று, அதை ஒரு நாரை கவ்வியது.
ஒரு விநாடி தாமதித்திருந்தாலும், நாரைக்கு கெண்டை இரையாகியிருக்கும். எப்படியோ தப்பித்துத் தண்ணீரில் விழுந்தது.
அதன்பிறகு, நெடுநேரத்துக்கு அந்தக் கெண்டை மீன் நீரின் மேற்பரப்புக்கு வரவில்லை. நாரையை நினைத்து பயம்.
பின்னர் கொஞ்சம் தைரியம் சேர்த்துக்கொண்டு, நீருக்கு மேலே வந்து எட்டிப்பார்த்தது.
மறுகணம், அதிர்ச்சி. அங்கே நாரை நின்றிருந்தது.
பயந்துபோன கெண்டை மீன் சட்டென்று நீரினுள் சென்றது. ‘அப்பாடா, உயிர் பிழைச்சேன்!’ என்று மகிழ்ந்தது.
உண்மையில், அந்தக் கெண்டை மீன் பார்த்தது நாரையை அல்ல. ஒரு தாமரை அரும்பைதான். அதன் தோற்றம் நாரையைப்போலவே இருந்ததால், பயந்துவிட்டது.
அப்படிப்பட்ட வயல்களைக் கொண்ட ஊரின் தலைவன் ஒருவன். அவனுக்கு ஒரு காதலி.
இந்தக் காதலன் தன்னுடைய காதலியை விட்டுவிட்டுப் பிற பெண்களுடன் திரிந்தான். அதனால் காதலிக்குக் கோபம்.
பின்னர், அவன் திருந்திவிட்டான். மீண்டும் தன் காதலியிடம் செல்ல நினைத்து ஒரு பாணனை அனுப்பினான்.
அந்தப் பாணன் காதலியிடம் வந்து, ‘உன் காதலன் உன்னையே நினைத்துக்கொண்டிருக்கிறான். அவனைப் பற்றி மற்றவர்கள் சொல்வது எல்லாம் பொய்’ என்றான்.
காதலி சிரித்தாள், ‘பாணனே, இப்படிப் பொய் பேசாதே’ என்கிறாள். ‘உன்னை மாதிரி ஒரு பாணன் பொய் சொன்னால், ஊரில் இருக்கும் எல்லாப் பாணர்களுக்கும் கெட்ட பெயர்!’
மறுநாள், காதலனே வந்தான். தோழி அவனை வீட்டினுள் அனுமதிக்க மறுத்தாள். ‘உங்க ஊர் வயல்ல தாமரை அரும்பைப் பார்த்து நாரைன்னு கெண்டை மீன் பயந்த மாதிரி, உனக்காகப் பொய் சொன்ன பாணனால எங்க ஊர்ல எந்தப் பொண்ணும் எந்தப் பாணனையும் நம்பறதில்லை’ என்றாள். ‘இனிமே இந்தமாதிரி பொய் பேசிகிட்டுத் திரியாதே. உன் மனசுக்குப் பிடிச்ச பொண்ணுங்ககிட்டேயே போ!’
குறுந்தொகையில் ஓரம்போகியார் எழுதிய பாடல் இது -
குருகுகொளக் குளித்த கெண்டை அயல
துருகெழு தாமரை வான்முகை வெரூஉம்
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர,
ஒருநின் பாணன் பொய்யன்ஆக
உள்ள பானரெல்லாம்
கள்வர்போல்வர் நீ அகன்றிசினோர்க்கே!
இங்கே வில்லனாக வரும் தாமரைப்பூ இன்னொரு குறுந்தொகைப் பாடலில் நாயகியின் வர்ணனையாகிறது. முற்றிலும் மாறுபட்டதோர் இன்ப உணர்வைத் தருகிறது.

காதலனும் காதலியும் சந்திக்கிறார்கள். அவன் அவளுடைய அழகை வியந்து பாராட்டுகிறான். தன்னுடைய காதலைச் சொல்கிறான். ‘உன்னை எப்போதும் பிரியமாட்டேன், நீ பயப்படாதே’ என்கிறான்.
இப்போது, அவள் பயப்பட்டு நடுங்குகிறாள்.
‘என்ன ஆச்சு?’ என்கிறான் அவன்.
‘பிரியமாட்டேன்னு சொன்னீங்களே. அப்படீன்னா, பிரிவுன்னு ஒண்ணு உங்க மனசுல இருக்குன்னுதானே அர்த்தம்? அதை நினைச்சு நான் நடுங்கறேன்!’ என்கிறாள் அவள்.
மிகவும் நுணுக்கமான உணர்வு இது. அவனைச் சந்தித்தது முதல், அவள் மனத்தில் பிரிவு என்ற எண்ணமே இல்லை. என்றென்றும் அவனோடு இருக்கப்போவதாகத்தான் அவள் எண்ணிக்கொண்டிருக்கிறாள்.
ஆனால் அவனோ, ‘பிரியமாட்டேன்’ என்று வெளிப்படையாகச் சொல்கிறான். அப்படியானால், பிரிவை எண்ணியிருக்கிறான். அதன்பிறகு, அதை மறுக்கிறான் என்றுதானே அர்த்தம்? அது அவளுக்குப் பயம் தருகிறது. பிரிவு என்ற சிந்தனையே இல்லாத எண்ணம் கேட்கிறாள் அவள்.
காதலன் சிரிக்கிறான். ‘நான் அஞ்சாதே என்று சொன்னால், அதை நினைத்து அஞ்சுகிறாயே’ என்று அவளைக் கேலி செய்கிறான். ‘உன்னோட கூந்தல், குவளை மலர்போல மணக்குது. உன்னோட சிவந்த வாய், ஆம்பல் மலர்போல மணக்குது. உன்னோட உடம்புல இருக்கற சின்னச் சின்னப் புள்ளிகளெல்லாம், தாமரை மலரோட மகரந்தம்போல என்னை மயக்குது. இப்படிப்பட்ட உன்னைப் பிரிஞ்சு நான் போவேனா?’ என்கிறான். ‘கடல் சூழ்ந்த இந்த உலகமே எனக்குக் கிடைச்சாலும், உன்னை விட்டுப் போகமாட்டேன். அதைப்பத்தி யோசிக்காதே!’
சிறைக்குடி ஆந்தையாரின் பாடல் இது -
குவளை நாறும் குவைஇரும் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம்பொதி துவர்வாய்க்
குண்டுநீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண்பல் தித்தி மாஅயோயே,
நீயே ‘அஞ்சல்’ என்றஎன் சொல் அஞ்சலையே,
யானே, குறுங்கால் அன்னம் குவவுமணல் சேக்கும்
கடல்சூழ் மண்டிலம் பெறினும்
விடல்சூழலன் நான் நின்னுடை நட்பே!
இதேபோல் இன்னொரு காதலன், தன் காதலியிடம் சும்மா வேடிக்கைக்காக, ‘நான் உன்னை மறந்துட்டா என்ன செய்வே?’ என்று கேட்கிறான்.
அவள் பேசாமல் இருக்கிறாள்.
‘இன்னொருத்தரைக் காதலிப்பியா?’ என்று சீண்டுகிறான் அவன்.
அவள் அமைதியாக, ‘நான் தாமரையைப்போல’ என்கிறாள்.
‘அது தெரியுமே’ என்கிறான் காதலன். ‘உன் முகத்தைப் பார்த்தா எல்லாரும் சொல்லிடுவாங்க!’
‘முகம் மட்டுமில்லை, நான் முழுக்கத் தாமரைதான்’ என்கிறாள் அவள். ‘நீதான் என்னோட சூரியன். நீ வந்தா நான் மலர்வேன். இல்லாட்டி சோர்ந்து கிடப்பேன். நான் சூரியனை மட்டும் பார்க்கற தாமரை. நிலாவையோ விண்மீனையோ பார்க்கமாட்டேன். நீ என்னைக் காதலிச்சாலும் சரி, மறந்துட்டாலும் சரி. நான் உன் மேல வெச்சிருக்கிற காதல் மாறாது. இன்னொருத்தர் மேல அது ஏற்படாது!’
இந்த வரிகள் பழநிபாரதியுடையவை -
‘உன்னை நான் மறந்தவேளையில்,
உன் காதல் மாறுமா?
விடிகாலைத் தாமரைப் பூவிது,
விண்மீனைப் பார்க்குமா?’
அடுத்து, அவள் கேட்கிறாள். ‘ஊர் முழுக்க அழகழகா எத்தனையோ பெண்கள் இருக்காங்களே, உனக்கு என் மேல ஏன் காதல் வந்தது?’
‘எத்தனை பேர் இருந்தா என்ன? நான் தேடற மாதிரி நீதானே இருக்கே?’
’கொஞ்சநாள் கழிச்சு எனக்குத் தலையெல்லாம் நரைச்சுடுமே. அப்பவும் இதேமாதிரி என்னை ரசிப்பியா?’
அவன் சிரிக்கிறான். ‘காதலிக்கு நரைக்கலாம், காதலுக்கு ஏது நரை?’
‘பலகோடி பெண்களிலே
எதற்குஎன்னைத் தேடினாய்?
நான் தேடும் பெண்ணாக,
நீதானே தோன்றினாய்!
நரைகூடும் நாட்களிலே,
என்னைக் கொஞ்சத்தோன்றுமா?
அடி போடி, காதலிலே
நரைகூடத் தோன்றுமா?’
ஒரு காதலன், தன் காதலியைப் பார்க்க வருகிறான். அவனை வீட்டினுள் அனுமதிக்க மறுக்கிறாள் தோழி. ‘ஏனய்யா, உனக்கு வெக்கமே கிடையாதா?’
‘உங்க ஊர்ல நெருப்புப் பத்தி எரியற மாதிரி சிவந்த தாமரைப்பூ வயல்ல விளைஞ்சிருக்கும்’ என்கிறாள் தோழி. ‘அந்தத் தாமரைங்களுக்கு நடுவுல இருக்கற நெல்லை அறுவடை செஞ்சு வண்டியில போட்டுச் சந்தைக்குக் கொண்டுபோவாங்க. வழியில அந்த வண்டி சேத்துல மாட்டிக்கிட்டா, அதை மேல கொண்டுவர்றதுக்குக் கரும்புகளைப் போடுவாங்க.’
ஆனை கட்டிப் போரடித்த கற்பனை கேள்விப்பட்டிருக்கிறோம், அதே மாதிரிதான் இதுவும். சேற்றில் சிக்கிய வண்டியை மேலே கொண்டுவருவதற்குக் கரும்பைப் பயன்படுத்துகிறார்கள்.
அது சரி, இத்தனை வளமான ஊரிலிருந்து வந்த காதலனைத் தோழி ஏன் திட்டுகிறாள்? அவன் தன் காதலியைச் சந்திக்கக்கூடாது என்று ஏன் சொல்கிறாள்?
அவன் இன்னொரு பெண்ணோடு ஊர் சுற்றியிருக்கிறான். அவர்கள் இருவரும் தண்ணீரில் நீந்தி விளையாடியதை ஊரே பார்த்திருக்கிறது.
இதைக் கேள்விப்பட்டுக் காதலிக்கு வருத்தம். ஆனால், காதலனை விட்டுக்கொடுக்க இயலுமா? ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை’ என்று பூசி மெழுகுகிறாள்.
ஊர் அதை நம்பவில்லை. அவனைப்பற்றிப் பலவிதமாகப் பேசுகிறது. ‘சேர, சோழ அரசர்களோட கடல் போன்ற படைகளைப் பாண்டியன் ஜெயிச்சபோது அங்கே எழுந்த வெற்றிச் சத்தத்தைவிட, இந்த வதந்திச் சத்தம் அதிகமா இருக்கு’ என்கிறாள் தோழி.
அதனால்தான் தோழி அவனை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறாள். ‘வண்டியைச் சேத்துக்குள்ளேயிருந்து எடுக்கறதுக்காக நல்ல கரும்பை வீணாக்கின மாதிரி, யாருக்காகவோ நீ உன் காதலி மனசை வருந்தச் செய்யலாமா?’
பரணர் எழுதிய அகநானூற்றுப் பாடல் இது -
‘எரி அகைந்தன்ன தாமரை இடைஇடை
அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர்
கள்கொண்டு மறுகும் சாகாடு அளற்றுஉறின்
ஆய்கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர,
பெரிய நாண்இலை மன்ற! பொரிஎனப்
புன்கு அவிழ் அகல் துறை பொலிய, ஒள்நுதல்
நறுமலர் காண்வரும் குறும்பல் கூந்தல்
மாழை நோக்கின் காழ்இயல் வனமுலை
எஃகுஉடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை
வைகுபுனல் அயர்ந்தனை என்ப, அதுவே
பொய்புறம் பொதிந்தி யாம் கரப்பவும், கையிகந்து
அலர்ஆகின்றால்தானே, மலர்தார்
மைஅணி யானை மறப்போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடல் பறந்தலை
உடன் இயைந்துஎழுந்த இருபெருவேந்தர்
கடல்மருள் பெரும்படை கலக்கத் தாக்கி
இரங்குஇசை முரசம்ஒழியப் பரந்துஅவர்
ஓடுபுறம் கண்ட ஞான்றை
ஆடுகொள் வியன்களத்து ஆர்ப்பினும் பெரிதே!
நற்றிணையில் ஒரு காதலன். அவன் எங்கேயோ வெளியூர் செல்லப்போவதாக ஊரில் பேசிக்கொள்கிறார்கள்.
இதைக் கேட்டு அவனுடைய காதலியின் தோழி பதறுகிறாள். அவளிடம் சென்று விஷயத்தைச் சொல்கிறாள். ‘உன் காதலன் உன்னைப் பிரிஞ்சுபோய்டுவான்னு சொல்றாங்களே.’
காதலி சிரித்து, ‘சான்ஸே இல்லை!’ என்கிறாள்.
‘எப்படிச் சொல்றே?’
‘உனக்கு என் காதலனைப் பத்தித் தெரியலை. அதனாலதான் இப்படிப் பேசறே!’ என்கிறாள் காதலி. ‘அவன் சொன்ன சொல் மாறமாட்டான். என்னைப் பிரியமாட்டேன்னு வாக்கு கொடுத்திருக்கான். கண்டிப்பா பிரியமாட்டான்!’
இப்படிச் சொன்ன அவள், தொடர்ந்து அவனைப் புகழ்ந்து பேசுகிறாள். ‘அவன் இனிமையா பழகறவன். என்னைப் பிரியறதைப் பத்திக் கற்பனைகூடச் செய்யமாட்டான்!’
‘தாமரைப்பூவோட மகரந்தத்தைக் குடிச்ச வண்டு, அதைச் சந்தன மரத்தோட உச்சியில கொண்டுபோய்ச் சேர்க்குது ஒரு வண்டு. அது பின்னாலே இனிமையான தேனா மாறுது. அதுபோல, எங்கயோ இருந்த அவனோட மனசும் அவனோட மனசும் காதல்ங்கற வண்டால இணைஞ்சாச்சு, தேனான வாழ்க்கை அமைஞ்சாச்சு.’
‘அதெல்லாம் சரி, ஆனா, அவன் கிளம்பப்போறான்னு எல்லாரும் சொல்றாங்களே.’
‘சொல்லட்டும், அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லை!’ என்கிறாள் காதலி. ‘தண்ணீர் இல்லாம இந்த உலகம் இல்லை. அதுபோல, அவன் இல்லாம எனக்கு வாழ்க்கை இல்லை. இது அவனுக்கும் தெரியும்! அவன் என்னைப் பிரிஞ்சு எங்கேயும் போகமாட்டான்!’
கபிலரின் பாடல் இது -
நின்ற சொல்லர், நீடு தோன்று இனியர்,
என்றும் என் தோள் பிரிபு அறியலரே,
தாமரைத் தண்தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம்தேன்போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை,
நீர்இன்று அமையா உலகம்போலத்
தம்இன்று அமையா நம் நயந்துஅருளி
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ, செய்பு அறியலரே!
இந்தப் பாடலில் தாமரை காதல் நெருக்கத்தைக் காட்டியது. அதற்கு எதிராக, வாலியின் திரைப்பாடலொன்றில் அதைப் பிரிவைச் சொல்ல உவமையாகப் பயன்படுத்துகிறார்.
ஓர் ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுக்குள் நேசம் இல்லை. அதைச் சொல்லத் தாமரையும் நீர்த்துளியும் பயன்படுகின்றன -
‘தாமரைமேலே, நீர்த்துளிபோல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன!
நண்பர்கள்போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன!’
இதே உவமையை வைரமுத்துவும் பயன்படுத்துகிறார். ஆனால் அதனைக் காதல் பாட்டாக்கிவிடுகிறார்:
‘தாமரைப்பூவுக்கும்
தண்ணிக்கும்
என்னிக்கும்
சண்டையே வந்ததில்ல!’
ஒரு தாமரை மட்டும் இருந்தால் பிரச்னையில்லை. ஆம்பலும் இருந்துவிட்டால்?
அதுதான் இந்த ஐங்குறுநூற்றுப் பாடலில் பிரச்னை. ஒரு காதலன், அவனுக்கு ஒரு காதலி, இவர்களோடு மூன்றாவதாக ஒருத்தியும். போதாதா? சண்டை வந்துவிட்டது.
இவள் அவளைப் பற்றி ஏதேதோ பேச, பதிலுக்கு அவள் இவளைப் பற்றிப் பேச, பிரச்னை பெரிதாகிறது. காதலி வந்து காதலனிடம், ‘நான் எதுவும் பேசலை. அவதான் வேணும்ன்னே வம்பிழுக்கறா’ என்கிறாள்.
காதலன் திருதிருவென்று விழிக்கிறான். காதலி தொடர்ந்து சொல்கிறாள். ‘அதிகாலை நேரத்துல, ஆம்பல் பூக்கும். அதைப் பார்க்கறவங்க அது தாமரையோன்னு நினைச்சுடுவாங்க. அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்த தலைவனே! அவளைச் சும்மா இருக்கச் சொல்லு.’
இந்த இடத்தில் இந்த வர்ணனை எதற்கு?
ஆம்பல் அழகான மலர்தான். ஆனால், தாமரையோடு ஒப்பிட்டால், அது அத்தனை சிறப்பானது அல்ல. ‘இருட்டுல ஆம்பலைத் தாமரைன்னு நினைக்கற மாதிரி நீ அவளை எனக்கு இணையா பார்க்கறே’ என்று மறைமுகமாகப் புரியவைக்கிறாள் அவள்.
ஓரம்போகியாரின் அந்தப் பாடல் -
‘கன்னி விடியல் கணைக்கால் ஆம்பல்
தாமரைபோல மலரும் ஊர,
பேணாளோ நின் பெண்டே,
யான் தன் அடக்கவும் தான் அடங்கலளே!’
தாமரை பகலில் மலரும். இரவில் கூம்பியிருக்கும் என்பதை வைத்துப் பல கவிதைகள், திரைப்பாடல்கள் உண்டு. அதைத் திருப்பிப்போட்டுத் திகைப்பளித்தவை புலமைப்பித்தனின் இந்த வரிகள் -
‘ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ!’
இதனை பெண்ணியரீதியில் பார்த்து உணர்ச்சிவயப்படுவதைவிட, ‘தாமரை ஒரு நாளில் பாதிதான் பூத்திருக்கும். ஆனால் நீயோ நாள் முழுவதும் பூத்திருக்கிறாய்’ என்று காதலன் சொல்வதாக நினைத்துக்கொள்ளவேண்டியதுதான். அதாவது, ‘‘ராத்திரியிலும்” பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ!
பாரதியும் பெண்ணைத் தாமரை என்கிறான். அதுவும், புதுமைப்பெண்ணை!
போற்றி, போற்றி, ஓர்ஆயிரம் போற்றி! நின்
பொன்அடிக்குப் பல்லாயிரம் போற்றி காண்,
சேற்றிலே புதிதாக முளைத்ததோர்
செய்ய தாமரைத் தேமலர்போல் ஒளி
தோற்றி நின்றனை, பாரத நாட்டிலே
துன்பம் நீக்கும் சுதந்தர பேரிகை
சாற்றிவந்தனை, மாதரசே! எங்கள்
சாதி செய்த தவப்பயன், வாழி நீ!
ஆணுக்கும் தாமரை உவமை ஆகும். கண்ணதாசன் அதனை ஒரு காதல் பாட்டில் சொல்கிறார்.
காதலன், காதலியைப் பார்த்து அவளுடைய கூந்தல் வண்ணத்தையும் குங்கும வண்ணத்தையும் பாராட்டி, ‘குங்குமம் அணிந்த உன் முகம் ரோஜாப்பூ’ என்கிறான். பதிலுக்கு அவள், ‘குங்குமம் வைத்த உன் கை தாமரைப்பூ’ என்கிறாள் -
‘கூந்தல் கருப்பு,
குங்குமம் சிவப்பு,
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ!
கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ!
இத்தனை கவிஞர்கள் தாமரையைப் பாட, கவிஞர் தாமரை மலர் தாமரையைப் பற்றிப் பாடியிருக்கிறாரா?
‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை,
நீருக்குள் மூழ்கிடும் தாமரை.’
‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்’ என்பார் வள்ளுவர். நீரின் மட்டம் அதிகரிக்கும்போது, தாமரைத்தண்டின் நீளமும் அதிகரித்துவிடும். ஆகவே, அது நீரில் மூழ்காது. ஆனால், அவளைக் காதலித்தவுடன், நெஞ்சுக்குள் மாமழை பெய்ய, அதில் தாமரையே மூழ்கிப்போனதாம்!
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...