அன்புடை நெஞ்சம்: அத்தியாயம்-11
தமிழில் பெரும்பாலும் காரணப் பெயர்கள்தான்.‘கால்’ என்றால், நான்கில் ஒரு பங்கு என்பது ஒரு


.firstcharacter { float: left; color: #000; font-size: 50px; line-height: 60px; padding-top: 4px; padding-right: 8px; padding-left: 3px; }த
மிழில் பெரும்பாலும் காரணப் பெயர்கள்தான்.
‘கால்’ என்றால், நான்கில் ஒரு பங்கு என்பது ஒரு பொருள், உடலில் அது நான்கில் ஒரு பங்கு இருப்பதால், நம்முடைய கால்களுக்கும் அதே பெயர் அமைந்ததாகச் சொல்வார்கள்.
அதேபோல், ‘அரை’ என்றால் இடுப்பு. அது உடலை சரிபாதியாகப் பிரிக்கிறதல்லவா?
இடுப்புக்கு இன்னொரு பெயர் ‘இடை’. உடலின் இடையில் உள்ளதால் அந்தப் பெயர்.
இந்த இடை, காதலர்களுக்குப் பிடித்தமான விஷயம். ஆகவே, கவிஞர்களுக்கும் பிடித்தமானதாகிவிட்டது.
ஒரு காதலன், தன் காதலியை ரசித்துக்கொண்டிருந்தான். அவளுடைய கூந்தலில் மலர் சூடியிருந்ததைக் கண்டான். மகிழ்ந்தான்.
மறுகணம், அந்தப் பூவின் காம்பைக் கண்டான், அதிர்ந்தான். ‘பெண்ணே, நீ என்ன முட்டாளா?’ என்றான்.
‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’
‘பூவோட காம்பைக் கிள்ளாம சூடிகிட்டிருக்கியே!’
‘அதனால என்ன?’
‘பெண்ணே, இந்த மென்மையான பூவோட பாரத்தை உன்னோட மெல்லிய இடை தாங்கும். அந்தக் காம்போட பாரத்தைத் தாங்காது. இனிமே இப்படிச் செய்யாதே!’ என்கிறான்.
திருக்குறளில் வரும் காட்சி இது:
‘அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசிப்பிற்கு
நல்ல படாஅ பறை!’
பெண்ணின் இடையை அத்தனை மெலிதாக எழுதுவது மரபு. நிஜத்திலும் Hour Glass Figure என்ற பெயரில் மெல்லிய இடை கொண்டிருப்பதைதானே பெண்கள் பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்!
இடைக்கு எவையெல்லாம் உவமையாகும்?
மெலிதாக உள்ள எல்லாமே உவமையாகும். கொடியிடை, மின்னலிடை, துடியிடை (உடுக்கை போன்ற இடை). ஒருபடி மேலே சென்று, இடையே இல்லை என்று சொல்வதும் உண்டு.
உடலமைப்பின்படி பார்த்தால், இடைதான் உடலின் மேல்பகுதியைத் தாங்குகிறது. ஆகவே, அது அந்த அளவு மெலிதாக இருக்க இயலாது. பார்க்க மெலிதாக இருந்தாலும், அங்குள்ள எலும்புகள் வலுவாக இருக்கவேண்டும்.
ஆனால் கவிஞர்கள் அதையெல்லாம் கணக்கில் வைப்பதில்லை. மெலிந்த இடைக்கு மேலே இருக்கிற எல்லாவற்றையும் அதற்குப் பகையாக்கிவிடுகிறார்கள். அவற்றைத் தாங்காமல் இடை வளைகிறது என்று வர்ணிக்கிறார்கள்.
ஒரு காதலன் தன் காதலியைப்பார்த்து, ‘உன் இடுப்பு ஒடிஞ்சுடறமாதிரி இருக்கே!’ என்கிறான்.
‘பரவாயில்லை’ என்கிறாள் அவள்.
‘ஆனா, அதுவும் நல்லதுதான், இடுப்பு வளைஞ்சு நீ நடக்கற ஒய்யார நடை எவ்ளோ அழகு!’
அதற்கும் அவள் ‘பரவாயில்லை’ என்றுதான் பதில் சொல்கிறாள்.
அவன் அடுத்து, ‘உன்னோட கண் என்னைச் சுடறமாதிரி சிவந்திருக்கு’ என்கிறான்.
‘பரவாயில்லை! இருக்கட்டும்!’
‘உன் கண் என்னைச் சுட்டா என்ன ஆகும் தெரியுமா? நான் கவிஞனாகிடுவேன்!’
‘அதனால் என்ன? நல்ல விஷயம்தானே!’
‘கவிஞனுடைய கை உன்னைத் தொடத் துடிக்குதே!’
‘துடிக்கட்டும்’ என்று தள்ளி நின்றுகொள்கிறாள் அவள்.
‘கைமட்டுமா? காலும் உன்னைத் தொடர்ந்து வரும்’ என்று பின்னாலேயே வருகிறான் அவன்.
‘வரட்டும், கொம்பு என்றால் கொடி படரத்தானே செய்யும்!’ என்று சிரிக்கிறாள் காதலி.
வாலி எழுதிய திரைப்பாடல் இது:
‘ஒடிவதுபோல் இடையிருக்கும்!
இருக்கட்டுமே!
அது ஒய்யார நடை நடக்கும்!
நடக்கட்டுமே!
சுடுவதுபோல் கண் சிவக்கும்!
சிவக்கட்டுமே!
கண் சுட்டுவிட்டால் கவி பிறக்கும்!
பிறக்கட்டுமே!
தொடுவதுபோல் கை துடிக்கும்!
துடிக்கட்டுமே!
தொடர்வதுபோல் கால் தொடரும்!
தொடரட்டுமே!
கொஞ்சம் தொடர்ந்துவந்தால் கொடி படரும்!
படரட்டுமே!’
வாலி எழுதிய இன்னொரு பாடலில், இடை ‘பின்னுகிறது’ என்கிறார். அதாவது, வெறுமனே வளையவில்லையாம், மிகவும் வளைந்து பின்னிக்கொண்டுவிடுகிறதாம்!
அதெப்படி இடை பின்னிக்கொள்ளும் என்று கேட்கக்கூடாது. அது நூலிடை, ஆகவே, பின்னிக்கொள்வது சாத்தியம்தான்!
‘மெல்லிய நூலிடை
பின்னிடப் பின்னிட...’
இன்னொரு திரைக்காதலன், தன் காதலியைப் பார்த்து, ‘எனக்கு மழையில் நனைய ஆசை’ என்கிறான்.
‘மழை வரட்டும், நனையலாம்!’
‘வான மழை இல்லை, உன் முத்த மழை!’
அவள் நாணம் கொண்டு, ‘வேண்டாம், மழையில் நனைஞ்சா ஜலதோஷம் பிடிக்கும்’ என்கிறாள்.
‘பரவாயில்லை, உன் கூந்தல் போர்வை இருக்கே, அதால துவட்டிக்குவேன்!’ என்று குறும்பாகப் பதில் சொல்கிறான் அவன். பிறகு, ‘முத்தம்மட்டும்தானா? உன் இடையைத் தொடும் வரம் என் விரல்களுக்குக் கிடைக்காதா?’ என்கிறான்.
வைரமுத்து எழுதிய வரிகள் இவை:
’முத்தமழையில் நனைஞ்சுக்கலாமா,
கூந்தல்கொண்டு துவட்டிக்கலாமா,
விரல் இடை தொட வரம் கொடம்மா!’
இந்த வரிகளைச் சிலாகித்து எழுதியிருந்த நண்பர் கிரி, இதுபற்றி ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.
‘விரல் இடை தொட வரம் கொடம்மா’ என்றால் என்ன அர்த்தம்?
‘என்னுடைய விரல், உன்னுடைய இடையைத் தொட வரம் கொடு’ என்று அர்த்தமா? அல்லது, ‘விரல்களும் என்னுடைய விரல்களும் கோத்துக்கொள்ள’ அதாவது ‘உன் விரலிடைப்பகுதியும் என் விரலிடைப்பகுதியும் தொட்டுக்கொள்ளும் வரம் கொடு’ என்று அர்த்தமா?
இவைதவிர மூன்றாவதாக ஒரு பொருளும் உண்டு.
‘விரலிடை’ என்றால் ‘விரல் போன்ற இடை’, மெலிதான இடை என்றும் அர்த்தம். கொடியிடை என்றால் கொடி போன்ற இடை, அதுபோல, விரலிடை என்றால் விரல் தடிமனே கொண்ட இடை.
ஆக, ‘விரலளவே உள்ள உன் இடையைத் தொட எனக்கு வரம் கொடு’ என்று காதலன் கேட்பதாகவும் எண்ணலாம்.
ஒரு காதலன், தன் காதலியைப் பிரிந்து வெளியூர் சென்று பணம் சம்பாதித்துத் திரும்ப எண்ணுகிறான். அதேசமயம் அவளை நினைக்கும்போது, அவனுக்குக் கிளம்ப மனம் வரவில்லை.
ஆகவே, அவன் தன் மனத்துடன் பேசுகிறான், ‘நாம அவசியம் வெளியூர் போகணுமா?’
‘ஆமா, பணம் வேணுமே!’
‘என்கிட்டதான் ஏற்கெனவே பணம் இருக்கே!’
‘எங்கே இருக்கு? உன் பேங்க் பேலன்ஸ் கிட்டத்தட்ட பூஜ்ஜியம்ன்னு இப்பதானே எஸ்.எம்.எஸ். வந்தது?’
‘பேங்க்ல இருக்கறதுதான் பணமா? இதோ, என் காதலி, இவளைவிடப் பெரிய செல்வம் உண்டா?’ என்கிறான் அவன், ‘என் சொத்தும் இவதான், நோய் தீர்க்கிற மருந்தும் இவதான், அந்த மெல்லிய இடை, பெரிய தோள், அழகான மார்பு, நல்ல குணம்... இதையெல்லாம்விடப் பெரிய செல்வம் ஏது?’
கருவூர் ஓதஞானி எழுதிய குறுந்தொகைப் பாடல் இது:
‘மருந்துஎனின் மருந்தே, வைப்புஎனின் வைப்பே,
அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலைப்
பெருந்தோள் நுணுகிய நுசுப்பின்
கல்கெழு கானவர் நல்குறு மகளே!’

நளன் தன் காதலி தமயந்தியைப் பார்த்து, ‘உன் இடை ரொம்பச் சின்னது’ என்கிறான்.
அவள் வெட்கப்பட்டு, ‘வேற எதாவது பேசலாமே!’ என்கிறாள்.
‘ம்ஹூம், இதைப்பத்திப் பேசித்தான் ஆகணும்’ என்கிறான் நளன். ‘உன் இடை ஏற்கெனவே ரொம்பச் சின்னது, இப்போ அது இன்னும் தேய்ஞ்சுபோகுது!’
‘ஏன் அப்படி? நான் ஜிம்முக்கெல்லாம் போகறதில்லையே!’
‘ஆனா, தலையில பூ வைக்கறியே!’
‘பூவுக்கும் இடை மெலியறதுக்கும் என்ன சம்பந்தம்?’
‘நீ தலையில வெச்சிருக்கிற பூவுல தேன் குடிக்கறதுக்காக வண்டுகள் வருது, அந்த வண்டுகளோட சிறகு அசையும்போது காத்து வருது, அந்தக் காத்து உன் உடைமேல மோதுது, அதைத் தாங்கமுடியாம உன் மெல்லிய இடை அங்கும் இங்கும் அசையுது, இப்படி அசைஞ்சு அசைஞ்சு அது ஒவ்வொரு நாளும் தேய்ஞ்சுகிட்டிருக்கு!’
புகழேந்திப் புலவரின் அபார கற்பனை இது:
‘என்றும் நுடங்கும் இடைஎன்ப, ஏழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே, ஒன்றி
அறுகால் சிறுபறவை அம்சிறகால் வீசும்
சிறுகாற்றுக்கு ஆற்றாது தேய்ந்து.’
நளனாவது தமயந்தியின் இடை தேயக் காற்றைக் காரணமாகச் சொன்னான். கண்ணதாசன் இடை மெலிய வெறும் பார்வையே போதும் என்கிறார். காதலனின் பார்வையாலேயே அவளுடைய இடை மெலிந்துவிடுகிறதாம்.
‘என்ன பார்வை, உந்தன் பார்வை,
இடை மெலிந்தாள், இந்தப் பாவை!’
இந்தப் பாடலில் இன்னொரு நயம், தமிழில் ‘மெலிதல்’ என்றால் இன்னொரு பொருளும் உண்டு, தன்மை குன்றுதல்.
உதாரணமாக, வாரி வழங்கும் ஒரு வள்ளல், திடீரென்று கஞ்சனாகிவிட்டால், அவருடைய வள்ளல்தன்மை மெலிந்துவிட்டது என்று பொருள்.
அதுபோல, ‘பார்வை’ என்ற சொல்லின் ‘இடை’யில் இருக்கும் ‘ர்’ என்ற எழுத்து மெலிந்துபோனால், அது ‘பாவை’ என்று மாறும். பார்வையின் இடை மெலிந்தால், பாவை!
இன்னொரு பாடலில், ‘இடை ஒரு கொடி’ என்று எழுதுகிறார் கண்ணதாசன்.
இது எல்லாரும் சொல்வதுதானே, என்ன விசேஷம்?
அடுத்த இரண்டு வரிகளைக் கவனியுங்கள், இடைதான் கொடி, அதில் பூத்திருக்கும் கனிதான் இதழ், அதற்குமேலே இருக்கும் கண்கள்தான் இன்ப உலகம். இயற்கைக் காட்சியைக் காதல் காட்சியாக்கிவிடுகிறார்:
‘இடையொரு கொடி,
இதழொரு கனி,
இன்பலோகமே, உன் கண்கள்தானடி!’
திரைப்பாடல்களைப் பொறுத்தவரை, இடையை வர்ணிப்பதில் வாலிக்குத் தனி இஷ்டம். அவருடைய பாடல்களில் விதவிதமான உவமைகளோடு இடுப்புகள் வந்துசெல்கின்றன.
உதாரணமாக, ஒரு பாடலில் இப்படி எழுதுகிறார்:
‘சிறு நூலிடைதான், ஒரு
இன்பக் கடைதான், உந்தன்
தேவையை வாங்கிடு!’
நூல்போன்ற இடை. அதை இன்பக் கடை என்கிறார். அதாவது, சூப்பர் மார்க்கெட். அங்கே தனக்கு வேண்டியதைக் காதலன் வாங்கிக்கொள்ளலாமாம். Self Service!
இங்கே இடையைக் கடை என்ற வாலி, இன்னொரு பாடலில் அதை நூலகம் என்கிறார். ராப்பகலாகப் படிக்கலாமாம்!
’இளையவளின், இடை ஒரு நூலகம்,
படித்திடவா? பனிவிழும் இரவுகள் ஆயிரம்!
இன்னொரு பாடலில், ‘இஞ்சி இடுப்பழகி’ என்று ஒரு வரி எழுதுகிறார் வாலி. அதற்கு என்ன அர்த்தம்?
இஞ்சி ஆங்காங்கே மெலிந்திருக்கும், அதுபோல இடை என்று பொருளா? அல்லது சில ‘இஞ்ச்’மட்டுமே சுற்றளவு கொண்ட இடை என்று எடுத்துக்கொள்வதா?
ஆண் கவிஞர்கள் இடுப்பைக் கொடி, நூலகம், இஞ்சி, மஞ்சள் கிழங்கு என்றெல்லாம் வர்ணித்தாலும், எதார்த்தத்தில் பெண்கள் அதை நகைக்கடையாகப் பயன்படுத்திவந்திருக்கிறார்கள்.
‘நுசுப்பில் பல்காசு நிரைத்த’ என்று அகநானூறு பாடலொன்றில் எழுதுகிறார் மதுரைப் போத்தனார். அதாவது, பல காசுகளை வரிசையாகக் கோத்து ஒருத்தி தன் இடுப்பில் அணிந்திருந்தாளாம்.
மேகலை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், இடையும் இடைசார்ந்த பகுதிகளிலும் அணிவிக்கப்படுகிற ஆபரணம்.
இதுபற்றித் தமிழில் பல நல்ல பாடல்கள் உண்டு. தோலாமொழித்தேவரின் சூளாமணிப் பாடலொன்று இதை மிக நுணுக்கமாக வர்ணிக்கிறது:
வாமமேகலை முதல்நின்று வயிற்றிடை வளர்ந்த
சாமலேகைகள் மயிர்நிரையல, தலமீது
காமநீர் எரி அகத்தது கனன்று எழ நிமிர்ந்த
தூம லேகைகள் பொடித்தன துணைமுலையுறவே!
ஒரு பெண் மேகலை அணிந்திருக்கிறாள், அந்தப் பகுதியில், அதாவது மேகலைக்குக் கீழாக ஒரு சிறிய, கருமை நிறக் கோடு தெரிகிறது.
உடலியல்ரீதியில் பார்த்தால், அங்கே முடி இருப்பது இயல்புதான். ஆனால், இந்தப் பாடல் அதற்கு வேறொரு காரணத்தைச் சொல்கிறது.
அந்தப் பெண் கொண்ட காதல் பற்றி எரிகிறதாம், அதனால் எழுந்த புகையானது, மேலே உள்ள மார்பகங்களை எட்டுவதற்காகச் செல்கிறதாம், அந்தக் கோடுதானாம் அது!
இவ்வளவு ‘அடல்ட்ஸ் ஒன்லி’ வர்ணனையா என்று வியப்பதற்குமுன்னால், இன்னொரு விஷயமும் பார்த்துவிடலாம், இடைக்கு மார்பகங்களின்மீது என்ன பகை?
கல்லாடர் எழுதிய கல்லாடத்தில் ஒரு வரி: ‘மலைமுலைப்பகையட மாழ்குறு நுசுப்பு.’
அந்தப் பெண்ணின் மலைபோன்ற மார்பகங்கள் தங்களுடைய கனத்தால் அவளுடைய சிற்றிடையை எப்போதும் வருத்திக்கொண்டே இருக்கின்றனவாம். அப்புறம் பகை வராதா என்ன?
எல்லாம் பெண் இடுப்பு வர்ணனையாகவே இருக்கிறதே. ஆணின் இடுப்பைக் கவிஞர்கள் கண்டுகொள்வதில்லையா?
கம்பர் குகனை வர்ணிக்கும்போது, ‘இந்திரனுடைய வஜ்ராயுதம்போல் இடுப்பு கொண்டவன்’ என்கிறார்.
இங்கே வஜ்ராயுதம் என்பது தொப்பை இல்லாத இடைமட்டுமல்ல, வலிமையின் அடையாளம். பெண்ணின் இடையை வர்ணிக்கும்போது வடிவத்தைப் புகழ்ந்தவர்கள், ஆணின் இடையைச் சொல்லும்போது அது வலுவாக இருக்கிறது என்கிறார்கள். வீரத்தின் அடையாளமாக!
பிச்சராம் அன்ன பேச்சினன், இந்திரன்
வச்சிராயுதம்போலும் மருங்கினான்!
அன்றைய நோக்கில் பெண்ணிடையை நுண்ணிடையாக வர்ணிப்பது போதுமானதாக இருந்தது. ஆனால் இன்றைக்குப் பெண்கள் வீட்டில் காதலர்களுக்கு இனியவர்களாக இருந்துவிடாமல், வெளியே வந்து எல்லாவிதமான பணிகளிலும் ஈடுபடும் சூழ்நிலையில், அவர்களுடைய இடையையும் வெறுமனே அழகு வர்ணனையாகவும் இன்பப் புதையல் என்றும் நிறுத்திவிடாமல், உடலுக்கேற்ற வலுவோடு இருக்கிறது என்று சொல்கிற காதலர்கள், கவிஞர்கள் தேவை. காற்று வீசினால் ஒசியும் இடையெல்லாம் கேட்க அழகு, எதார்த்தத்தில் சரிப்படாது!
இன்னொரு விஷயம், இடை மெலிந்தவர்கள்தான் காதலிக்க ஏற்றவர்களா? தடியிடைப் பெண்களும் ஆண்களும் காதலிப்பதை ஏன் இந்தக் கவிஞர்கள் வர்ணிப்பதில்லை! அது பாரபட்சமல்லவா?
இப்படி எல்லாவற்றிலும் Political Correctness பார்த்தால் கவிதையை ரசிக்க இயலாது. வாலியின் இந்த அழகிய வரிகளோடு இந்த இடைப்பேச்சைப் பூர்த்திசெய்வோம்:
கலையன்னம்போல் அவள் தோற்றம்,
இடையில் இடையோ கிடையாது,
சிலைவண்ணம்போல் அவள் தேகம்,
இதழில் மதுவோ குறையாது!
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...