'பொருள்' என்ற சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உண்டு.
ஒரு சொல்லின் அர்த்தத்தைப் பொருள் என்பார்கள். பணத்தைப் பொருள் என்பார்கள். மற்ற விஷயங்களையும் பொருள் என்பார்கள்.
இந்த மூன்றும் ஒன்றுதான் என்றும் சிலர் சொல்வார்கள்: வாழ்க்கையின் பொருள், அதாவது அர்த்தமே பொருள் சேர்ப்பது, அதாவது பணத்தைச் சேர்ப்பது, வசதியாக வாழ்வதுதான் என்பது இவர்களுடைய கட்சி.
இன்னும் சிலர், பொருளை, அதாவது பணத்தை ஒரு பெரிய பொருளாக நினைக்கவேண்டியதில்லை என்பார்கள், அப்போதுதான் வாழ்க்கையின் உண்மையான பொருள், அதாவது அர்த்தம் நமக்கு விளங்கும் என்பது இவர்களுடைய கட்சி.
இப்படி இருதரப்பினர் இருந்தாலும், இந்த இருவராலும் பொருளைப் புறக்கணிக்கஇயலாது என்பதுதான் எதார்த்தம். இதைப் பழமொழிநானூறில் முன்றுறையரையனார் அழகாகச் சொல்கிறார், 'அருளைப் பெற்றவர்களும் சரி, மற்ற முட்டாள்களும் சரி, பொருள் உள்ளவர்களைப் புகழ்கிறார்கள்!'
அதாவது, நாம் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்று நினைக்கிற இந்த இருவரும்: அருளாளர்களும் மற்றவர்களும் ஒரு விஷயத்தில் ஒத்துப்போகிறார்கள்: பொருள் வைத்திருப்பவர்களை இந்த இருவருமே புகழ்கிறார்கள், அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம், ஆனால், பொருள் உள்ளவனுக்கு எங்கும் பெருமைதான் என்பது எதார்த்தம்.
இதற்கு என்ன காரணம் என்பதையும் அதே பாடல் சொல்கிறது, 'சந்தையில் ஒரு நல்ல பொருளை யாராவது விற்றால், அதை வாங்குவதற்கு எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு வரமாட்டார்களா! அதுபோலதான் பொருளுள்ளவனும், எல்லாத் தரப்பினரும் அவனை மதிப்பார்கள்.'
'அருள்உடையாரும் மற்று அல்லாதவரும்
பொருள்உடையாரைப் புகழாதார் இல்லை,
பொருபடைக்கண்ணாய், அதுவே திருஉடையார்
பண்டம் இருவர் கொளல்.'
பொருள் உள்ளவரை எல்லாரும் புகழ்வதுபோல, பொருள் இல்லாதவர்களை எல்லாரும் இகழ்வார்கள். இதைத் திருவள்ளுவர் சொல்கிறார்:
'இல்லாரை எல்லாரும் எள்ளுவர், செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.'
எல்லாரும் புகழ்கிறார்கள் என்பதற்காகப் பொருள் சேர்ப்பதே வாழ்க்கையின் லட்சியமாகிவிடுமா?
பாரதிதாசன் ஒரு பாடலில் இதனை நயமாகச் சொல்கிறார்:
'பணத்தாள் பத்துக்கோடி சேர்க்கலாம்,
கருவூலம் தங்கக்கட்டியை இழந்தால்
பணத்தாள் குப்பைமேட்டுக்குப் பயன்படும்,
தேடத்தக்கது செல்வம்அன்று.'
அவ்வளவு ஏன், ஒரு நாட்டின் பணத்துக்கு இன்னொரு நாட்டில் மதிப்பில்லை, அதை மாற்றிதான் பயன்படுத்தவேண்டும், அந்த மாற்றத்துக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு மதிப்பு சொல்வார்கள்.
ஆக, செல்வம் என்பது சுற்றியிருக்கிறவர்கள் அதற்கு எவ்வளவு மதிப்பு தருகிறார்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும். மிகப்பெரிய தங்கக்கட்டி வைத்திருக்கிற ஒருவன், அதை ஒரு காய்கறிக்கடைக்காரனிடம் தந்தால், அவன் அதன் மகிமை தெரியாமல் எடைக்கல்லாகதான் பயன்படுத்துவான், அவ்வளவுதான் அதற்கு மரியாதை தருவான்.
அதே தங்கக்கட்டியை ஒரு பொற்கொல்லரோ, தங்கத்தின் மதிப்பு தெரிந்த இன்னொருவரோ பார்த்தால், அவர்கள் அதைக் கொண்டாடுவார்கள். செல்வம் சேரும் இடத்தைக்கொண்டு பெருமையடைகிறது, அல்லது சிறுமையடைகிறது.
அடுத்து, அந்தச் செல்வம் தன்னை வைத்திருப்பவரையும் பெருமைப்படுத்துகிறது. திருக்குறளில் சொல்வதுபோல:
'பொருள்அல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்அல்லது இல்லை பொருள்.'
ஒருவருக்கு எந்த மரியாதையும் இருக்காது, ஆனால், அவரிடம் பணம் வந்ததும், அதற்காகவேனும் பிறர் அவரை மதிக்கத் தொடங்குவார்கள்.
அது உண்மையான மரியாதையா என்பது இரண்டாம்பட்சம், பொருள் மரியாதையைக் கொண்டுவருகிறது, அதுவும் உடனடியாக.
அதனால்தான், 'பொருளென்னும் பொய்யா விளக்கம்' என்று அதனைப் புகழ்கிறார் திருவள்ளுவர். அது தன்னை வைத்திருப்பவர்கள்மீது வெளிச்சத்தைப் பாய்ச்சும் ஒரு விளக்கு.
நேற்றுவரை யாரென்றே தெரியாத ஒருவர், இன்றைக்கு லாட்டரியில் லட்சம் ரூபாய் பரிசு பெற்று அந்தத் தெருமுழுவதும் பிரபலமாகிவிடுகிறார். அதைச் செலவழித்தபிறகு, அவர் எல்லாரையும்போல் மாறிவிடுகிறார். காரணம், அவரிடமிருந்த பொருள் என்கிற விளக்கு மங்கிவிட்டது, ஆகவே, அவர் இருளில் தடுமாறுகிறார்.
நிலாவுக்கு இயற்கை வெளிச்சம் கிடையாது. ஆனால் சூரியனுக்கு இயற்கை வெளிச்சம் உண்டு. அதுபோல, பொருளால் வெளிச்சம் பெறுவது செயற்கை வெளிச்சம், தன்னுடைய இயல்பால், நல்ல குணங்களால் வெளிச்சம் பெறுவது இயற்கை வெளிச்சம், அதுவே அதிகப் பெருமையும்கூட.
அதற்காக, பொருளின்றி வாழ இயலாது. திருவள்ளுவர் இதை ஒரு கட்டளையாகவே சொல்கிறார்:
'செய்க பொருளை, செறுநர் செறுக்குஅறுக்கும்
எஃகுஅதனின் கூரியது இல்.'
பணம் சம்பாதியுங்கள், அதுதான் மிகப் பெரிய ஆயுதம்!
யாருக்கு எதிரான ஆயுதம்?
எதிரிகள் யாராக இருந்தாலும் சரி, உங்களிடம் பொருள் இருக்கிறது என்று தெரிந்தவுடன் அவர்கள் தடுமாறிவிடுவார்கள். காரணம், பொருளை வைத்து நீங்கள் எந்த ஆயுதத்தையும், அதாவது எந்த உத்தியையும் வாங்கலாம், போரில் உங்களுக்குதான் வெற்றி என்பது அவர்களுக்குச் சொல்லாமலே புரிந்துவிடுகிறது.
ஆகவே, பொருள் என்கிற கூர்மையான ஆயுதத்தைச் சம்பாதியுங்கள் என்கிறார் வள்ளுவர். ஆனால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு!
முதலில், அந்தப் பணம் நல்ல வழியில் வரவேண்டும், இன்னொருவரைக் கெடுத்து அதன்மூலம் பணம் சம்பாதிக்கக்கூடாது.
அடுத்து, பணம் சம்பாதித்தமுறை அருளோடும் அன்போடும் இருக்கவேண்டும், மனிதாபிமானம் இல்லாமல் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு சேர்த்த செல்வத்தைத் தொடாமலிருப்பதே நல்லது என்கிறார் வள்ளுவர்!
'அறன்ஈனும், இன்பமும்ஈனும், திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள்.'
'அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்
புல்லார் புரளவிடல்.'
அன்பில்லாத ஒருவனிடம் இருக்கும் செல்வத்தால் எந்தப் பயனும் கிடையாது என்கிறது நன்னெறி. 'படிக்கத்தெரியாத ஒருவனுக்குப் புத்தகத்தால் என்ன பயன்? விழியில்லாத ஒருவனுக்கு விளக்கால் என்ன பயன்?'
இந்த உவமைகளைக் கொஞ்சம் கவனித்தால் சில நுட்பங்கள் புரிகின்றன. புத்தகம் சிறந்த ஒன்றுதான், சந்தேகமில்லை, ஆனால், படிக்கத்தெரியாதவனால் அதன் பயனைப் பெற இயலாது, அவன் புத்தகத்தை வைத்திருக்கலாம், எல்லாருக்கும் காட்டலாம், பிறர்கூட அதனை எடுத்துப் படிக்கலாம், ஆனால் அவனுக்கு அதனால் எந்தப் பயனும் இல்லை, விழியில்லாதவனுக்கு விளக்கும் அப்படிதான்.
ஆனால், அப்படிப்பட்ட அன்பில்லாத ஒருவனிடம் இருக்கும் செல்வம் ஒருவேளை பிறருக்குப் பயன்பட்டால், அப்போது அந்தச் செல்வம் மதிப்பிற்குரியதாகிவிடுகிறது. படிக்கத்தெரியாத ஒருவர் நூலகம் நடத்தலாம், பார்வையிழந்த ஒருவர், பிறருக்காக விளக்கைக் கையில் ஏந்தி நடக்கலாம்.
ஆக, அன்பில்லாத ஒருவருடைய செல்வம் பிறருக்குப் பயன்பட வாய்ப்புண்டு, அவருக்குப் பயன்பட வாய்ப்பில்லை, அவர் மனத்தில் அன்பை வளர்த்துக்கொண்டால்தான் உண்டு!
சிவப்பிரகாசசுவாமிகளின் அந்தப் பாடல்:
'இல்லானுக்கு அன்பு, இங்கு இடம்,பொருள்,ஏவல் மற்று
எல்லாம்இருந்தும் அவற்குஎன்செய்யும்? நல்லாய்,
மொழிஇலார்க்கு ஏது முதுநூல்? தெரியும்
விழிஇலார்க்கு ஏது விளக்கு?'
அன்பில்லாதவனிடம் சேரும் பணம் இரட்டைப் பிரச்னைகளைக் கொண்டுவருகிறது. ஒன்று, தேவை உள்ளவர்களுக்குப் பணம் கிடைப்பதில்லை, அதற்கு அந்த அன்பில்லாதவன் விடுவதில்லை. அடுத்து, அவனிடம் சேர்ந்துள்ள பணத்தை அவனால் அனுபவிக்கவும் இயலப்போவதில்லை, 'நாய்க்குத் தேங்காய் கிடைத்தாற்போல்'தான்.
பட்டுக்கோட்டையார் ஒரு பாடலில் இதை விவரிக்கிறார்:
'சொட்டுச்சொட்டா வேர்வை விட்டா,
பட்டினியால் பாடுபட்டா,
கட்டுக்கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே, அது
குட்டியும் போடுது வட்டியிலே!'
கஷ்டப்பட்டு உழைப்பவனிடம் சேரும் செல்வம் என்ன ஆகிறது?
அது எங்கே சேர்கிறது? வருவதும் தெரிவதில்லை, போவதும் தெரிவதில்லை என்கிறார் பட்டுக்கோட்டையார்:
'கையிலே வாங்கினேன், பையிலே போடல்லே,
காசு போன இடம் தெரியல்லே.'
இந்த அனுபவத்தை இன்றைக்கும் பலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சம்பளம் வருகிற எஸ்.எம்.எஸ். ஒருபக்கம், கடன் தொகைகள் கழிக்கப்பட்ட எஸ்.எம்.எஸ்.கள் இன்னொருபக்கம், நிறைவாக, காசு எங்கே போகிறது என்றே புரிவதில்லை!
அப்படியானால், அன்பும் செல்வமும் எதிரெதிரா? அன்பில்லாமல் முரட்டுத்தனமாக நடந்துகொண்டால், அடுத்தவர்களை ஏமாற்றினால்மட்டுமே செல்வத்தைச் சேர்க்க இயலுமா? அவர்களால் ஏமாற்றப்படுகிறவர்களின் நிலைமை என்ன ஆகும்? பாவலர் வரதராஜனின் பாடலொன்று இதை ஆதங்கத்துடன் கேட்கிறது:
'வாடி வதங்குகின்ற ஏழை எளியரிடம்
வட்டி போட்டுத் துட்டுஅடிச்சு, பொட்டியில வச்சவங்க,
மாடி,மனையின்உள்ளே கோடிப்பணம் குவிச்சு
மக்களிடம் ஓட்டுக்குஇன்று துட்டுத் தரப் பார்ப்பவங்க,
நிரந்தரமா நம்மை மறந்தவங்க,
தினம்தினமாய் அன்பைத் துறந்தவங்க,
கண்இழந்த கூட்டத்திற்கும்
கருணையற்ற வர்க்கத்திற்கும்
அறிவைப் புகட்டணும் வேகமா, அதற்கான
தருணம் இனி வேறேதுமா?'
அன்பை இழந்தவர்கள் கண்ணை இழந்தவர்களுக்குச் சமம் என்று சொல்லிவிடுகிறார் பாவலர். சொல்லப்போனால், அவர்கள் அதைவிட ஒருபடி மோசமானவர்கள், கண்ணை இழந்தவர்களுக்காவது இன்னொருவர் காட்சிகளை விவரிக்கலாம், அவர்கள் அதை ஓரளவு புரிந்துகொள்ளலாம், அன்பை இழந்தவர்களுக்கு மற்றவர்கள் என்னதான் சொன்னாலும் புரியாது, அன்பைத் தருவதில் இருக்கும் சுகம் விளங்காது.
அப்படியானால், அவர்கள் எப்படிதான் திருந்துவது?
எளியவழியொன்றைச் சொல்கிறார் கண்ணதாசன்:
'பணம்இல்லாதவன் கையைப்பார்த்து
எடுத்துப்போடுங்க,
இன்பம்என்றால் என்னவென்று
கொடுத்துப்பாருங்க.'
ஆக, இன்பம் என்பது பெறுவதில் இல்லை, கொடுப்பதில் உள்ளது, அதைப் பெறுபவர்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சியில் உள்ளது. செல்வம் உள்ளவர்கள் அதோடு சேர்க்கவேண்டிய அவசியமான குணம் இது!
நல்லது, உடனே 'கொடுக்க ஆரம்பித்துவிடுகிறேன்' என்று சிலர் தொடங்குவார்கள். மளமளவென்று பலருக்குப் பலவற்றைக் கொடுப்பார்கள்.
ஆனால், கவனித்துப்பார்த்தால், அவர்கள் கொடுக்கிற எவையும் பயனுள்ளதாக இருக்காது, தங்களுக்குப் பயன்படாத, அல்லது தங்களிடம் அதிகமாக இருக்கிற ஒன்றை அடுத்தவர்களுக்குக் கொடுப்பார்கள், அது அவர்களுக்குத் தேவையா இல்லையா என்பதைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்.
உதாரணமாக, தன்னிடம் இருக்கிற பழைய மழைக்கோட்டை ஒரு பிச்சைக்காரருக்குத் தருகிறார் ஒருவர். கோடைக்காலத்தில் அவருக்கு எதற்கு மழைக்கோட்டு? அதற்குப் பதில் கொஞ்சம் பணமோ சாப்பாடோ கொடுத்தால் அவர் மகிழ்ச்சியடைவார்.
அதை விட்டுவிட்டு, பொருந்தாத ஒன்றைக் கொடுத்துவிட்டு, ஊர்முழுக்க 'நான் கருணைகொண்டவன்' என்று சொல்லிக்கொள்வதைக் கிண்டலடிக்கும் பாடலொன்று சிறுபஞ்சமூலத்தில் இருக்கிறது. காரியாசானின் அந்தப் பாடல்:
'கல்லாதான் தான்காணும் நுட்பமும், காதுஇரண்டும்
இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும், இல்லாதான்
ஒல்லாப் பொருள் இல்லார்க்குஈத்து அளியான் என்றலும்
நல்லவர்கள் கேட்பின் நகை.'
முறைப்படி கற்காத ஒருவன், ஒரு நூலை எடுத்துவைத்துக்கொண்டு தானே வாசித்து, அதில் இந்த நுட்பத்தைக் கண்டேன், அந்த நுட்பத்தைக் கண்டேன் என்று மகிழ்ந்துகொண்டால், பார்க்கிறவர்கள் சிரிக்கமாட்டார்களா? காது இல்லாத ஒரு பெண் தன்னை அழகி என்று சொல்லிக்கொண்டால் யார் நம்புவார்கள்?
அதுபோல, மனமில்லாத ஒருவன் பொருந்தாத ஒரு பொருளைப் பிறருக்குக் கொடுத்துவிட்டு அதைப்பற்றிப் பெருமையாகச் சொல்லிக்கொண்டால், அவனைப் பார்த்து நல்லவர்கள் சிரிப்பார்கள்!
அதற்குப்பதிலாக, வருபவரின் தேவையை உணர்ந்து, அதற்கேற்ப உதவிசெய்யச் செல்வத்தைப் பயன்படுத்துவதே சிறந்தது. பாரதிதாசன் சொல்வது:
'பசிஎன்று வந்தால், ஒருபிடி சோறு
புசிஎன்று தந்துபார் அப்பா!
பசைஅற்ற உன் நெஞ்சில் இன்பம் உண்டாகும்,
பாருக்குஉழைப்பதே மேலான போகம்!'
ஆனால், இப்படிக் கொடுத்துக்கொண்டே இருந்தால் நம்முடைய நிலைமை என்னவாகும்? 'ஆற்றில்போட்டாலும் அளந்துபோடவேண்டும்' என்பார்களே.
அங்கேதான் வித்தியாசமே, கொடுக்கும்போது செல்வம் குறையப்போவதில்லை, பெருகும் என்கின்றன நீதிநூல்கள். பழமொழிநானூறில் ஓர் அழகிய பாடல்:
'இரப்பவர்க்குஈயக் குறைபடும்என்றுஎண்ணிக்
கரப்பவர் கண்டுஅறியார்கொல்லோ? பரப்பின்
துறைத்தோணி நின்றுஉலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!
இறைத்தோறும் ஊறும் கிணறு.'
ஒருவர் நம்மிடம் வந்து கேட்கும்போது, அவருக்குக் கொடுத்தால் நம் செல்வம் குறைந்துவிடுமோ என்று எண்ணி அதை ஒளித்துவைத்துக்கொள்கிறவர்கள் கிணறைப் பார்த்ததில்லையோ? தண்ணீர் இறைத்தால்தானே அதில் நீர் ஊறும்? அதுபோல, செல்வத்தைக் கொடுத்தால்தானே மேலும் கிடைக்கும்!
இன்னும் கிடைக்கும் என்று பலனை எதிர்பார்த்துக் கொடுத்தாலும் சரி, மனமாரக் கொடுத்தாலும் சரி, பிறர் பாராட்டுவார்கள் என்பதற்காகக் கொடுத்தாலும் சரி, எப்படியாவது கொடுத்தால் போதும், செல்வத்தின் பயன் அதுதான்!
'வளையாபதி'யில் வரும் பாடலொன்று செல்வம் சாதாரண விஷயமில்லை, மனிதப் பிறவியைப் போலவே அதுவும் அரிதான ஒன்றுதான் என்கிறது:
'வினைபல வலியினாலே வேறுவேறு யாக்கைஆகி
நனிபல பிறவிதன்னுள் துன்புறூஉம் நல்உயிர்க்கு
மனிதரின் அரியதாகும் தோன்றுதல், தோன்றினாலும்
இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்னதேயாம்.'
பல பிறவிகளில் தீவினைகளைச் செய்து, அதனால் வெவ்வேறு பிறவிகளை எடுத்துத் துன்பப்படுகின்ற ஒரு நல்ல உயிர், நிறைவாக மனிதனாகத் தோன்றுவது அரியது. அப்படியே தோன்றினாலும், அந்த மனிதன் இனியவற்றை அனுபவிப்பதற்காகச் செல்வத்தைத் திரட்டுவது இன்னும் அரியது.
அதேசமயம், மனிதப்பிறவி அரியது என்பதையே ஏற்காத சிந்தனையும் உண்டு. பிறவியில்லாத நிலைதான் உயர்ந்தது என்று எண்ணுகிற இவர்கள், பணத்தைப் பெரிய விஷயமாக மதிப்பார்களா?
கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் எழுதுகிறார்:
'பணம் என்னடா பணம்?
குணம்தானடா நிரந்தரம்.
காசு என்ற சொல்லின் பொருள்,
குற்றம் என்பது,
நாணயம் என்றால் அதன்பேர்
நேர்மை என்பது,
நல்லவர்க்குக் காசு,பணம் தேவையற்றது,
பகவானின் மணியோசை கேட்கின்றது,
பணம்என்னும் பேராசை மறைகின்றது.'
இதே கண்ணதாசன், 'என்னடா' என்ற இதே சொல்லைக்கொண்டு இன்னோர் அருமையான பாடலைத் தந்திருக்கிறார், அதுவும் பணம் சம்பந்தமானதுதான்:
'அண்ணன் என்னடா, தம்பி என்னடா,
அவசரமான உலகத்திலே,
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா,
காசுஇல்லாதவன் குடும்பத்திலே?
பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏனடா?
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன்,தம்பிகள்தானடா.'
காசு இல்லாதவன் ஆசைப்பட்டுப் பிரயோஜனம் இல்லை என்றாகிவிட்ட உலகத்தை எண்ணி வருந்தும் கவிஞர், பணத்தின்மீது பக்திவைத்து, அதற்காக அன்பை மறக்கிறவர்களை உலுக்குகிறார், எல்லாம் பணத்தை மையமாகக்கொண்டு இயங்குவதை மறுபரிசீலனை செய்யச்சொல்கிறார்.
இதே கருத்தை வலியுறுத்தும் கா.மு.ஷெரீஃபின் திரைப்பாடலொன்று:
'பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே,
ஒண்ணும்தெரியா ஆள்ஆனாலும் பணம்இருந்தாலே, அவனை
உயர்த்திப்பேச மனிதகூட்டம் நாளும்தப்பாதே,
என்னஅறிவு இருந்திட்டாலும் பணம்இல்லாத ஆளை, உலகம்
எந்தநாளும் மனிதனாக மதிக்கமாட்டாதே!'
சமூகம் இந்தச் சிந்தனையை மாற்றிக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஆனால், பணத்துக்கு மரியாதையைத் தந்து குணத்தை இரண்டாம் நிலையில் உட்காரவைப்பது நிச்சயம் சரியான அளவுகோலல்ல என்பது புரிந்தவர்களேனும் மாறலாம், அதன்பிறகு, கண்ணதாசன் பாடிய சூழல் வரலாம்:
'எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு
இல்லாமை இல்லாத நிலைவேண்டும்!'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.