பயப்படுவது சரியா?
'அச்சம் என்பது மடமையடா’ என்று கண்ணதாசன் எழுதியிருக்கிறார். அச்சத்தைத் தாய்மார்கள் சிறுவயதிலிருந்தே ஊட்டி வளர்க்கவேண்டும் என்கிறார் அவர்:
'கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழ்அன்னை,
களங்கம் பிறந்தால், பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள்பிள்ளை!'
பாரதியாரும் அச்சத்தை வேண்டாம் என்றே மறுக்கிறார், இவ்வுலகில் உள்ள எல்லாரும் வந்து எதிர்த்தாலும், வானம் இடிந்து தலைமீது விழுந்தாலும் அச்சம் வேண்டாம் என்கிறார்:
'அச்சமில்லை, அச்சமில்லை, அச்சம்என்பதுஇல்லையே,
இச்சகத்துளோர் எலாம் எதிர்த்து நின்றபோதினும்,
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்தபோதினும்
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்டபோதிலும்
இச்சை கொண்டே பொருளெலாம் இழந்துவிட்டபோதிலும்,
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசுபோதினும்,
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டுபோதினும்,
பச்சை ஊன் இயைந்த வேற்படைகள் வந்தபோதினும்,
உச்சிமீது வான்இடிந்து வீழுகின்றபோதினும்,
அச்சமில்லை, அச்சமில்லை, அச்சம்என்பதுஇல்லையே!'
நஞ்சை ஊட்டினாலும் அச்சமில்லை, அதை நண்பர்களே ஊட்டினால்கூட அச்சமில்லை என்கிறான் பாரதி. தைரிய குணத்தின் மிகச் சிறந்த வெளிப்பாடு இந்தப் பாடல்.
எதற்கெடுத்தாலும் அஞ்சுகிறவர்களைப்பார்த்து வேதனைப்பட்டு பாரதி பாடிய இன்னொரு பாடல்:
'நெஞ்சுபொறுக்குதில்லையே, இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,
அஞ்சிஅஞ்சிச் சாவார், இவர்
அஞ்சாதபொருள் இல்லை அவனியிலே.'
கிட்டத்தட்ட இதேபோல் பட்டுக்கோட்டையார் ஒரு திரைப்பாடல் எழுதியிருக்கிறார்:
'வேப்பமர உச்சியில் நின்னு, பேய்ஒண்ணு ஆடுதுன்னு,
விளையாடப்போகும்போது, சொல்லிவைப்பாங்க, உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளிவைப்பாங்க!
வேலையற்ற வீணர்களின், மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே, நீ
வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே.'
ஆனால், எல்லா நேரங்களிலும் அச்சம் அநாவசியம் என்று சொல்லிவிட இயலாது. சில நேரங்களில் அச்சம் தேவைப்படுகிறது. இந்த நாலடியார் பாடல் சொல்வதுபோல்:
'கல்லாமை அச்சம், கயவர்தொழில் அச்சம்,
சொல்லாமையுள்ளும்ஓர் சோர்வு அச்சம், எல்லாம்
இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம், மரத்தார்இம்
மாணாக் குடிப் பிறந்தார்.'
முதலில், கற்காத விஷயங்களுக்காக அஞ்சவேண்டும். அல்லது, கற்காத குணத்துக்காக அஞ்சவேண்டும்.
இதனைப் பள்ளிப்படிப்பு என்று எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை, புதியவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இன்றி இருக்கிறோமே என்று அஞ்சவேண்டும்.
மாறிவரும் இன்றைய உலகில், ஞானத்தைவிடக் கற்கும் ஆர்வம் முக்கியம் என்கிறார்கள். காரணம், இன்றைய அறிவு நாளைக்குப் பழையதாகிவிடலாம், கற்கும் ஆர்வம் இருக்கிறவர்கள் நாளைக்கு எது புதிதோ அதைக் கற்றுக்கொண்டு அறிவைப் பெருக்கிக்கொள்வார்கள். அதாவது, பாத்திரத்தில் என்ன இருக்கிறது என்பதைவிட, அதைச் சுலபமாகவும் விரைவாகவும் நிரப்ப இயலுகிறதா என்பதுதான் அந்தப் பாத்திரம் நீடித்துநிலைப்பதைத் தீர்மானிப்பதுபோல.
ஆக, கல்லாமைக்கு அஞ்சவேண்டும். அடுத்து, நம்மைச் சுற்றியுள்ள கயவர்களுடைய தொழிலை நினைத்து அஞ்சவேண்டும்.
இதன் பொருள், கயவர்களுக்குப் பயப்படவேண்டும் என்பது அல்ல. கயமைக்குப் பயப்படவேண்டும், அந்த குணம் நமக்குள் ஊறிவிடாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும்.
அப்படியானால், கயமைத் தொழில் செய்யும் கயவர்களை என்ன செய்வது?
'பாதகம் செய்பவரைக் கண்டால், நீ
பயங்கொள்ளல்ஆகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா, அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!'
ஒருவேளை அந்தப் பாதகர்கள் திருப்பி அடித்தால்? நமக்குத் துன்பம் வந்தால்? அதற்கும் பாரதி பதில் சொல்கிறார்:
'துன்பம் நெருங்கிவந்தபோதும், நாம்
சோர்ந்துவிடல்ஆகாது பாப்பா,
அன்புமிகுந்த தெய்வம்உண்டு, துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.'
ஆக, கயமைக்கு அஞ்சக் காரணம், அந்த குணம் நமக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக. கயவருக்கு அஞ்சவேண்டியதில்லை, எதிர்க்கவேண்டும்.
மூன்றாவது, 'சொல்லாமையுள்ளும் ஓர் சோர்வு அச்சம்' என்கிறார். அப்படியென்றால், பொய் போன்றவற்றைச் சொல்லாமலிருந்தாலும், எங்கே சொல்லிவிடுவோமோ என்கிற பதற்றம் உள்ளுக்குள் இருக்கவேண்டும். அலட்சியம் கூடாது.
இது ஒரு முக்கியமான அச்சம். 'நான் தீயதைச் செய்யமாட்டேன்' என்கிற உறுதி மனத்தில் இருந்தாலும், செய்கிற எதிலேனும் தீமை இருந்துவிடுமோ என்கிற கவலையும் இருந்தால்தான் அந்த உறுதியைச் சரியாகவும் முழுமையாகவும் செயல்படுத்த இயலும், என்னதான் நன்கு படிக்கிற மாணவனாக இருந்தாலும், தேர்வு எழுதியபின் விடைத்தாளை ஒருமுறைக்கு இருமுறை திரும்பப் படித்துப்பார்ப்பதுபோல.
நான்காவதாக, ஒருவர் நம்மிடம் எதையேனும் கேட்கும்போது, அவர்களுக்கு அதைத் தர இயலாத நிலை தனக்கு வந்துவிடுமோ, அல்லது, இருந்தும் அதைத் தராமல் மறுத்துவிடுவோமோ, அப்படி ஒரு குணம் தனக்கு வந்துவிடுமோ என்று அஞ்சுவது.
இதுபோன்ற அச்சங்கள் எல்லாருக்கும் வேண்டும் என்கிறது நாலடியார். இவை இல்லாதவர்கள், 'மரத்தார்', அதாவது, மரத்தால் செய்யப்பட்ட பொம்மையைப்போன்றவர்கள் என்று இடித்துரைக்கிறது.
திருவள்ளுவரும் இதையே சொல்கிறார்:
'அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.'
பயப்படுவது கோழைகளின் செயல் அல்ல, அறிவுடையவர்களும் பயப்படுவார்கள், ஆனால் எல்லாவற்றுக்கும் பயப்படமாட்டார்கள், பயப்படவேண்டியவற்றுக்குப் பயப்படுவார்கள், நான் எதற்கும் பயப்படமாட்டேன் என்று வீம்பாக இருப்பது முட்டாள்தனம்.
சில நேரங்களில், நம்முடைய செயலைப்பார்த்து நாமே அச்சம் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். அது ஒருவிதத்தில் நமக்குக் காப்பு. 'இதனால் நமக்குக் கெடுதல் வருமோ, ஊரார் பார்த்து நம்மைக் கேலி செய்வார்களோ' என்ற அந்த அச்சம் இல்லாவிட்டால், யாரும் பிழை செய்யத் தயங்கமாட்டார்கள்.
நாலடியாரில் ஒரு பாடல், இன்னொருவன் மனைவிமீது காமவயப்பட்ட ஒருவனுடைய அச்சத்தை விவரிக்கிறது:
'புக்கஇடத்து அச்சம், போதரும்போது அச்சம்,
துய்க்கும்இடத்து அச்சம், தோன்றாமல்காப்பு அச்சம்,
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்?'
இன்னொருவன் மனைவியை விரும்பி அவன் வீட்டினுள் நுழையும்போது பயம், அங்கிருந்து வெளியே வரும்போது பயம், உள்ளே அந்தப் பெண்ணை அணைத்து இன்பம் அனுபவிக்கும்போதும் உள்ளே அஞ்சம், யாருக்கும் தெரியாமல் இருக்கவேண்டுமே என்று ஒவ்வொரு கணமும் அச்சம்... இவ்வளவு பயத்துக்கு நடுவே அந்த இழிசெயலைச் செய்யவேண்டுமா?
வேதநாயகம்பிள்ளை இயற்றிய 'நீதி நூல் உரை'யில் ஒரு பாடல், கிட்டத்தட்ட இதேமாதிரி சூழ்நிலையை விவரிக்கிறது, ஆனால் வேறொரு காரணத்துக்காக:
'அரிமுழை நுழைதல்போல அயல்அகம் புகும்போது அச்சம்,
பொருள் திருடும்போது அச்சம், புறப்பட்டுஏகுங்கால் அச்சம்,
தெருவினில் எவர்க்கும் அச்சம், கவர்ந்தன திளைக்க அச்சம்,
உரும்உருக்கொண்டு கள்வர் உளம்குடிகொண்டபோலும்.'
ஒரு திருடன், எங்கேயோ ஒரு வீட்டில் நுழைந்து பொருள்களைத் திருடிக்கொண்டு வருகிறான்.
அவனைப் பார்க்கிறவர்களெல்லாம் நடுங்குகிறார்கள், ஆனால் உண்மையில் அவன் பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறான்.
தனக்கு உரிமையில்லாத வீட்டினுள் நுழையும்போது, அவன் சிங்கத்தின் குகைக்குள் நுழைவதுபோல் பயப்படுகிறான். காரணம், அவன் செய்யப்போவது திருட்டு, ஆகவே, தைரியமாக அவனால் அந்த வீட்டுக்குள் நுழைய இயலுவதில்லை.
இத்தனைக்கும் அவன் பெரிய பலசாலி. ஆனால், தவறு செய்யும்போது பலவீனமாகிவிடுகிறான். அஞ்சி நடுங்கியபடி உள்ளே நுழைகிறான். சத்தம் போடுவது, துப்பாக்கியைக் காட்டுவதெல்லாம் சும்மா வெளிவேஷம்தான்.
வீட்டினுள் நுழைந்தவன் அங்கிருக்கிறவர்களைக் கட்டிப்போட்டுவிட்டுப் பொருள்களைத் திருடுகிறான். அப்போதும் அவனுக்குள் அச்சம்தான், எந்த விநாடியில் காவல்துறை வந்துவிடுமோ, பக்கத்துவீட்டார் எழுந்துவிடுவார்களோ என்று பலவிதமான பயங்கள் அவனைச் சூழகின்றன. காரணம், தான் செய்வது தவறு என்று அவனுக்கே புரிந்திருப்பதுதான்.
எப்படியோ, திருடிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறான். அந்தப் பொருளைப் பத்திரமாக எங்கேயோ வைத்துவிடுகிறான்.
மறுநாள் காலை, எதுவும் நடக்காததுபோல் வெளியே செல்கிறான். இப்போது, தெருவில் யாரைப் பார்த்தாலும் அவனுக்குப் பயமாக இருக்கிறது. 'ஒருவேளை இவர்களுக்கு நான் திருடியது தெரிந்திருக்குமோ' என்ற அச்சம் உள்ளே இருப்பதால், யாராவது சாதாரணமாக, 'என்னய்யா, ராத்திரிமுழுக்கத் தூங்கலைபோல' என்று விசாரித்தால்கூட இவன் நடுங்க ஆரம்பித்துவிடுகிறான்.
சரி, இத்தனை கஷ்டப்பட்டுத் திருடிய அந்தப் பொருளை அனுபவிக்கவாவது இயலுகிறதா? அதற்கும் அச்சம், ஒருவேளை ரூபாய் நோட்டு சீரியல் நம்பரை வெச்சு நம்மைப் பிடிச்சுடுவாங்களோ? திருட்டு நகையை விற்க முயற்சி செஞ்சா போலீஸ்கிட்ட மாட்டிக்குவோமோ என்று விதவிதமாக யோசித்து பயப்படுகிறான் அவன்.
ஆக, இப்போது அங்கே இருப்பது திருடனே அல்ல, பயம்தான் திருடனாக உருவெடுத்துள்ளது, எதற்கெடுத்தாலும் அவனைப் பயப்படவைக்கிறது.
அதனால்தான், திருக்குறள் 'தீயவை தீயைவிட மோசம்' என்கிறது:
'தீயவை தீய பயத்தலால், தீயவை
தீயினும் அஞ்சப்படும்.'
தீயவற்றைச் செய்யும்போது, தனக்குள்ளிருந்து அச்சம் வரும். மற்ற அச்சங்கள் எல்லாம் வெளியிலிருந்து வருபவை. இவற்றைச் சேக்கிழார் ஐந்து வகைகளாகத் தொகுத்துச் சொல்கிறார், பெரியபுராணத்தில்:
'மாநிலம்காவலன்ஆவான், மன்னுயிர் காக்கும்காலைத்
தான்அதனுக்கு இடையூறு தன்னால், தன் பரிசனத்தால்,
ஊனமிகு பகைத்திறத்தால், கள்வரால், உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்தும் தீர்த்து அறம்காப்பான் அல்லனோ!'
மாநிலத்தைக் காக்கும் அரசன், மக்களை ஐந்து பயங்களில் இருந்து காப்பாற்றவேண்டும். முதலில், அரசன் தன்னை ஏதும் செய்துவிடுவானோ என்கிற அச்சம் (நேர்மையாக வாழும் மக்களுக்கு இருக்கக்கூடாது).
அரசன் செய்யாவிட்டால் என்ன? அவன்மேல் அன்புகொண்ட யாராவது மக்களைத் துன்புறுத்தினால்? அரசனின் ஆட்கள் தன்னை ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சமும் மக்களுக்கு வராதபடி காக்கவேண்டியது அந்த அரசனின் கடமை.
அதன்பிறகு, பகைவர்களால் வரும் ஆபத்து, கள்வர்களால் வரும் ஆபத்து, நிறைவாக, சக உயிர்களால் வரும் ஆபத்து, அதாவது, மக்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளாதபடி காப்பதும் அரசனின் கடமைதான்!
இந்தப் பகைவர்களால் வரும் ஆபத்தைத் திருவள்ளுவர் இரண்டாகப் பிரிக்கிறார்: வாள் ஏந்திப் போர் செய்ய வருகிற பகைவர்கள், நட்போடு கை குலுக்க வரும் பகைவர்கள்.
இதில் முதல்வகையைப் பார்த்து அஞ்சவேண்டியதில்லை, வீரம் இருந்தால் அவர்களை எதிர்கொண்டுவிடலாம்.
இரண்டாவதுவகை கொஞ்சம் சிக்கலானது, வருகிறவன் உண்மையான நண்பனா அல்லது நண்பனைப்போல் நடித்து நம்மைக் கவிழ்க்கப்போகிறானா என்று எப்படிக் கண்டறிவது? ஆகவே, இவர்களைப்பார்த்துதான் அஞ்சவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்:
'வாள்போல் பகைவரை அஞ்சற்க, அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.'
பகைவர்கள்கூட வேண்டியதில்லை, நம் அருகிலேயே இருந்து தப்புத்தப்பாக யோசனை சொல்லும் நண்பர்களைப்பார்த்துக்கூட அஞ்சவேண்டும். இதற்கும் ஒரு திருக்குறள் உண்டு:
'பழுதுஎண்ணு மந்திரியின், பக்கத்துள் தெவ்வோர்
எழுபதுகோடி உறும்.'
ஓர் அரசனுக்குத் தவறான யோசனைகளைச் சொல்லித்தரும் ஒரு மந்திரி இருப்பதைவிட, எழுபது கோடி பகைவர்கள் இருக்கலாம். பகைவர்களைச் சமாளிப்பது சுலபம், இதுபோன்ற 'நண்பர்'களைச் சமாளிப்பது சிரமம்!
இதே கோணத்தில் இன்னொரு குறள்:
'கனவிலும் இன்னாதுமன்னோ, வினைவேறு,
சொல்வேறுபட்டார் தொடர்பு.'
சிலர் இரவில் கெட்ட கனவு கண்டு விழித்துக்கொள்வார்கள். அதன்பிறகு, அதையே எண்ணிப் பயந்து நடுங்குவார்கள்.
அதுபோன்ற கனவுகளைவிட மோசமானது, சொல்வேறு, செயல்வேறு என்று இருக்கும் வஞ்சகர்களுடைய நட்பு.
அப்படியானால் இந்தமாதிரி ஆள்களைப் பகைத்துக்கொண்டுவிடலாமா?
இந்தக் கேள்விக்கு விளம்பிநாகனாரின் நான்மணிக்கடிகைப் பாடல் ஒன்று பதில் சொல்கிறது:
'கள்ளாமை வேண்டும் கடியவருதலால்,
தள்ளாமை வேண்டும் தகுதிஉடையன,
நள்ளாமை வேண்டும் சிறியரோடு, யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும் பகை.'
முதலில், எதையும் திருடக்கூடாது. காரணம், அது அஞ்சக்கூடிய துன்பங்களைத் தரும்.
அடுத்து, தகுதிஉடையவை நம்மைத் தேடி வரும்போது, அவற்றைத் தள்ளக்கூடாது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அவற்றைத் தேடிச் சென்று நமக்கு உரிமையாக்கிக்கொள்ளவேண்டும்.
மூன்றாவது, சிறியவர்களோடு நட்பு கூடாது. அடுத்து, யாருடனும் பகை கூடாது.
இந்த இரண்டையும் தொகுத்துப் பார்க்கும்போது, அற்பப்பயல்களுடன் பழகாமலே இருந்துவிடுவது நல்லது என்று புரிகிறது. பழகுவானேன், அப்புறம் அவர்களோடு பகையை உண்டாக்கிக்கொள்வானேன்?
சரி, சிறியவர்கள், பெரியவர்கள் என்று எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது?
திருவள்ளுவர் ஒரு வழி சொல்கிறார்:
'சொல்ல, பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்ல, பயன்படும் கீழ்.'
சான்றோரிடம் நாம் ஒரு பிரச்னையைச் சென்று சொன்னாலே போதும், உடனடியாக அதை விசாரித்துச் செய்யவேண்டியதைச் செய்துவிடுவார்கள், நம் பிரச்னை தீர்ந்துவிடும்.
ஆனால், கயவர்கள் அப்படியில்லை, அவர்கள் கரும்புபோல, பிழிந்தால்தான் சாறு கிடைக்கும். திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி அவர்களிடம் நமக்கு வேண்டியதைப் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
திருவள்ளுவர் பயன்படுத்தும் கரும்பு உவமையில் இன்னொரு சிறப்பு, அப்படிப் பிழிந்தபிறகு, கரும்பு எதற்கும் பயன்படாது, வெறும் சக்கைதான்.
ஆக, வேறு வழியே இல்லை என்ற நிலையில்தான் அவர்கள் மற்றவர்களுக்கு உதவுவார்கள். அப்படிப்பட்டவர்கள் கீழ்மையானவர்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும்.
ஒருவன் கயவனாக இருந்தான், ஆனால் இப்போது, நல்லவர்களுடன் பழகி நல்லவனாக மாறிவிட்டான். அவனை நம்பலாமா?
மனிதர்கள்மீது நம்பிக்கை அவசியம். ஆனால் அதேசமயம், ஓர் எச்சரிக்கை உணர்வும் இருக்கவேண்டும். இதனைப் 'பழமொழி நானூறு' பாடலொன்றில் முன்றுறையரையனார் சொல்கிறார்:
'மிக்குப் பெருகி, மிகுபுனல் பாய்ந்தாலும்
உப்புஒழிதல் செல்லா ஒலிகடல்போல், மிக்க
இனநலம் நன்குஉடைய ஆயினும் என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்.'
பெரிய கடல், அதில் மழை பெய்கிறது, நல்ல நீர் ஏராளமாகச் சேர்கிறது. அதனால், அந்தக் கடலின் உப்புத்தன்மை மாறிவிடுமா? கடல் நீர் இனிக்க ஆரம்பித்துவிடுமா?
எத்தனை நல்ல நீர் சேர்ந்தாலும், கடல் உப்பாகதான் இருக்கும். அதுபோல, கீழ்மக்கள் என்னதான் உயர்ந்தவர்களோடு சேர்ந்து பழகினாலும், அவர்களுடைய மனம் மாறாது. கடல்நீரைக் குடிநீராக்குகிற இயந்திரம்போல், அவர்களே மெனக்கெட்டுத் தங்களை மாற்றிக்கொண்டால்தான் உண்டு.
ஆனால், 'பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்' என்பார்களே.
அதுவும் உண்மைதான். ஆனால், நார் பூவாகிவிடாதல்லவா? அந்த வித்தியாசம் நம் மனத்தில் தெளிவாக இருக்கவேண்டும், வெறும் புறத்தோற்றத்துக்கு மயங்கிவிடக்கூடாது.
இதே பாடலுக்கு இன்னொரு விளக்கமும் சொல்லலாம், கடல்நீரில் நுழைந்த நல்ல நீரும் கெட்டுப்போய்விடும், அதுபோல, தீயவர்களோடு பழகுகிறவர்களுக்கும் தீய செயல்கள் பழகிவிடும்.
நிஜமான அறிவு என்பது, தனக்குத் துன்பம் செய்தவர்களுக்கும் துன்பம் செய்யாமல் பொறுமையுடன் இருத்தல்தான். கண்ட கடலோடு சேர்ந்து உப்பாகிவிடாமலிருப்போம்:
'அறிவினுள்எல்லாம் தலைஎன்ப, தீய
செறுவார்க்கும் செய்யாவிடல்.’
(தொடரும்)
***
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.