உங்களுடைய மிகச் சிறந்த நண்பர் யார்?
பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில், அதற்கு வெளியில், இணையத்தில், உறவுகளிடையே அந்தச் சிறந்த நண்பரைத் தேடாதீர்கள். உங்களுடைய மிகச் சிறந்த நண்பர் நீங்களேதான்.
அது எப்படி?
என்னதான் பெரிய நட்பாக இருந்தாலும், அவர்கள் இரண்டு வெவ்வேறு நபர்கள் என்பது உண்மைதானே? இருவருக்கும் தனித்தனியே சிந்திக்கும் மனம் உண்டு, தனித்தனித் தேவைகள், எதிர்பார்ப்புகள் உண்டு.
ஆகவே, 'ஒன்றுபோல் சிந்தித்தல்' என்பதும், 'எப்போதும் துணையிருத்தல்' என்பதும் சாத்தியமே இல்லை. எத்தனை உதவினாலும், அவர் இன்னொருவர், அதுதான் எதார்த்தம்.
அதற்காக, நட்பே கூடாது என்று சொல்லவில்லை. நட்புகள் அவசியம், அவற்றை அனுபவிக்கலாம், ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு மகிழலாம், ஆனால் அதைமட்டும் நம்பி இருந்துவிடக்கூடாது. நமக்குத் துணை நாம்தான் என்பதை மனத்தில் வைக்கவேண்டும்.
இந்த 'நாம்', வேறுவிதமாகச் சிந்திக்காது, சுயநலம் இருக்காது, அப்படியே இருந்தாலும், அது 'நமக்கு' நன்மையாகவே அமையும்.
ஆகவே, நல்ல நண்பர்களைச் சிரமப்பட்டுத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று பெரிதாக அலட்டிக்கொள்ளாதீர்கள், அது இயல்பாக அமையட்டும், மற்றபடி, உங்களுக்கு நீங்களே மருத்துவம் பார்த்துக்கொள்ளுங்கள், அதாவது, உங்கள் பிரச்னையை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள் என்கிறது பழமொழி நானூறு. முன்றுரையரையனாரின் அந்தப் பாடல்:
'எமக்குத் துணைஆவார் வேண்டும்என்று எண்ணித்
தமக்குத் துணைஆவார் தாம்தெரிதல் வேண்டா,
பிறர்க்குப் பிறர்செய்வது உண்டோ? மற்றுஇல்லை,
தமக்கு மருத்துவர் தாம்.'
பிறர் உதவுவார்கள் என்று காத்திருப்பது புத்திசாலித்தனமில்லை, நமக்குள் துணிவும் பலமும் திறனும் இருக்கவேண்டும், அதன்பிறகு நண்பர்கள் உதவினால் மகிழ்ச்சி.
உண்மையில், நண்பர் என்பவர் இன்னொருவராக இல்லாமல், நாமாகவே இருக்கும் நிலைதான் நட்பின் உச்சம் என்கிறார் திருவள்ளுவர்:
'நட்பிற்கு வீற்றுஇருக்கை யாதுஎனில், கொட்புஇன்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.'
'கொட்பு' என்ற சொல்லுக்கு, மனச்சுழற்சி என்று பொருள். மனத்தடுமாற்றம், வேறுபாடு என்று இங்கே பொருள் எடுத்துக்கொள்ளலாம். நான் வேறு, நீ வேறு என்று பிரித்துப்பார்க்கிற தன்மை இல்லாமல், இருவரும் ஒன்றே என்று நினைத்தால், 'தமக்கு மருத்துவர் தாம்' என்பது, 'தமக்கு மருத்துவர் தம்நண்பர்' என்று மாறும், காரணம், தாமே தம்நண்பராகிவிடுவதால்.
அடுத்த திருக்குறளில் இதையும் சொல்கிறார் திருவள்ளுவர்:
'இனையர் இவர்எமக்கு, இன்னம்யாம் என்று
புனையினும் புல்என்னும் நட்பு.'
ஒரு நண்பரைச் சுட்டிக்காட்டி, 'இவர் எனக்கு இவ்ளோ முக்கியம், நான் இவர்மேல இவ்ளோ அன்பு வெச்சிருக்கேன்' என்றெல்லாம் விளக்கவேண்டியதில்லை, அப்படிச் செய்தால் நட்பின் பெருமை குறைந்துவிடும்.
ஏன் அப்படிச் சொல்கிறார்?
ஒரு நல்ல விருந்தைச் சாப்பிடுகிறீர்கள். 'சோறு பிரமாதம், அதுல ஊத்தின குழம்பு பிரமாதம், குழம்புல போட்ட கத்தரிக்காய் பிரமாதம்' என்றா பாராட்டுவீர்கள்? சாப்பாடு திருப்தியாக இருந்தது என்பதுதானே மிகப்பெரிய பாராட்டு?
அதாவது, சோறு, குழம்பு, காய், பொரியல் என்றெல்லாம் பிரித்துப்பார்க்காமல், அது ஒரு விருந்தாக மனத்தில் பதிகிறது, பாராட்டுப்பெறுகிறது. அதுபோல, நட்பு என்பது இருவரைப் பிணைத்துவிடுகிறது, அதன்பிறகு, அவர்கள் இருவர் அல்ல, ஒருவர்தான், இவர் எனக்கு இப்படி என்றால், இவர் வேறு, அவர் வேறு என்கிற எண்ணம் வந்துவிடுகிறது, அது நட்புக்கு அவமானம்.
எல்லா நட்புகளும் இப்படிதானா?
தங்கத்தில் மட்டரகம், உயர்ந்தரகம் என்று இருப்பதுபோல, நட்பிலும் வகைகள் உண்டு. சில நட்புகளைக் கொண்டாடவேண்டும், சிலவற்றை வெட்டி எறிவதே நல்லது.
இதையும் திருவள்ளுவர்தான் சொல்கிறார்:
'ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.'
ஒருவனுடைய உண்மையான செல்வம், வருவாய் என்ன தெரியுமா? அறிவில்லாதவர்களுடைய நட்பை அகற்றுவதுதான்.
காரணம், இந்த அறிவில்லாதவர்கள் ஏற்கெனவே நமக்கு இருக்கிற நல்ல குணங்களை, நல்ல நட்புகளைக் கெடுத்துவிடுவார்கள், ஆகவே, அவ்வப்போது களையெடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
நட்பு என்பது நீ இதைக் கொடு, நான் அதைத் தருகிறேன் என்கிற பரிமாற்றம் அல்ல. அப்படிக் கணக்குப் பார்த்து நண்பராக இயலாது, அப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுவது நமக்குச் சிரமத்தையே கொண்டுவரும்.
காரணம், என்றைக்காவது நமக்கு உதவி தேவைப்படும்போது, இவர்கள் அதில் தங்களுக்கு என்ன ஆதாயம் உண்டு என்றுதான் பார்ப்பார்கள். அவ்வப்போது தொடர்ந்து இவர்களுக்கு நாம் உதவிக்கொண்டிருந்தால்தான் நம்மை மதிப்பார்கள்.
இதனை விளக்குவதற்கு, நாலடியார் மூன்று மரங்களை எடுத்துக்கொள்கிறது: பாக்குமரம், தென்னைமரம், பனைமரம்.
பாக்குமரத்துக்குத் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும், அப்போதுதான் அது பலன் தரும்.
அதுபோல, சில நண்பர்களுக்குத் தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டே இருக்கவேண்டும், அப்போதுதான் அவர்கள் நம்மிடம் பழகுவார்கள்.
தென்னைமரத்துக்கு அவ்வப்போது தண்ணீர் ஊற்றினால் போதும். அதுபோல, சில நண்பர்களுடன் அவ்வப்போது தொடர்பில் இருந்தால், நட்பு தொடரும்.
பனைமரத்துக்கு நாம் தண்ணீர் ஊற்றவேண்டியதே இல்லை. நட்டுவைத்தால் போதும், தனக்கு வேண்டிய தண்ணீரைத் தானே பெற்றுக்கொண்டு வளரும், நமக்குப் பலன் தரும்.
அதுபோல, சிறந்த நண்பர்களுடன் ஒருமுறை பழகினால் போதும், தினமும் அதை நிரூபித்துக்கொண்டிருக்கவேண்டியதில்லை, அவர்கள் என்றைக்கும் நம்முடைய தோழர்களாக இருப்பார்கள்.
ஆகவே, உங்கள் தோழர்களைப் பனைமரம், தென்னைமரம், பாக்குமரம் என்று பிரிக்கவேண்டும்:
'கடைஆயார் நட்பில் கமுகுஅனையர், ஏனை
இடைஆயார் தெங்கின்அனையர், தலைஆயார்
எண்அரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே
தொன்மைஉடையார் தொடர்பு.'
அது சரி, இதுபோன்ற நட்புகள் நமக்கு எப்படி அமையும்?
இது ஒரு கண்ணாடி மாதிரிதானே? வெளியே உள்ளது அங்கே பிரதிபலிக்கப்படும். நட்பும் அப்படிதான்.
அதாவது, நாம் ஒருவரிடம் பனைபோன்று நட்பை வெளிப்படுத்தினால், அவரும் நம்மிடம் பனைபோன்ற நட்பைக் காட்டுவார். பாக்குமரம்போன்று சுயநலமாக இருந்தால், அதுவே நமக்கும் கிடைக்கும்.
ஆனால், சிலரிடம் நாம் பனைபோல நட்பாக இருந்தாலும், அவர்கள் பதிலுக்கு நம்மிடம் அப்படி நடந்துகொள்வதில்லையே, பாக்குமரம்போல் சுயநலமாக இருக்கிறார்களே, நம் தலையில் மிளகாய் அரைக்கிறார்களே!
உண்மைதான். சில கண்ணாடிகள் கோணலாக இருக்கின்றன, அவற்றில் அழகிய காட்சிகூட அசிங்கமாகத் தெரிகிறது.
ஆனால், அது காட்சியின் குறை அல்ல, கண்ணாடியின் குறை.
அதாவது, அவர்கள் எல்லா நண்பர்களிடமும் அப்படிதான் நடந்துகொள்வார்கள். இயன்றால் அவர்களைத் திருத்தலாம், இல்லாவிட்டால், வள்ளுவர் சொன்னதுபோல் வெட்டிக்கொண்டு வந்துவிடலாம். அதுபோன்ற நட்பு நமக்கு அவசியமில்லை.
ஒருவருடைய நட்பு நல்லதா, கெட்டதா என்பதை யார் தீர்மானிக்கவேண்டும்?
வேறு யார்? அந்த நட்பை ஏற்றுக்கொண்ட நாம்தான்!
வீட்டில் ஆங்காங்கே பொருள்கள் கிடக்கின்றன என்றால், அதில் வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, வேண்டாதவற்றை வீசி எறிகிறோம். இந்த விஷயத்தில் நாம் இன்னொருவருடைய உதவியை எதிர்பார்ப்பதில்லை, அப்படி எதிர்பார்த்தால், நல்ல பொருள்களைக் கூட வீசி எறிந்துவிடுவோம்.
உதாரணமாக, அங்கே கிடக்கும் கயிறு எதற்கோ பயன்படும் என்பது நமக்குத் தெரியும், ஆகவே, அதை எடுத்துப் பத்திரப்படுத்துகிறோம். இன்னொருவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தால், 'இந்தக் கயிறு வீண்' என்று அவர் தீர்மானித்து விடக்கூடும்.
நண்பர்களும் அதுபோல்தான். 'இவருடைய நட்பு உனக்கு வேண்டாம்' என்று இன்னொருவர் வந்து சொன்னால், அதை அப்படியே ஏற்றுக் கொண்டுவிடக்கூடாது, அந்த நட்பு வேண்டுமா வேண்டாமா என்பதை நாம்தான் ஆராய்ந்து தீர்மானிக்கவேண்டும்.
அதேசமயம், அப்படிச் சொல்கிறவர்களைப் புறக்கணிக்க வேண்டியதில்லை. 'இவர் கோள் சொல்கிறார்' என்று அலட்சியப்படுத்த வேண்டியதில்லை, ஒருவேளை அவர் சொல்வதில் உண்மை இருக்கலாம்.
ஆகவே, 'உன் ஃப்ரெண்ட் இப்படியாமே' என்று யாராவது சொன்னால், 'அப்படியா?' என்று அவரைக் கேட்கக்கூடாது, நாமே பார்க்கவேண்டும், அல்லது நாலு பேரைக் கேட்கவேண்டும், இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில்தான் அந்த நட்பை ஏற்றுக்கொள்ளவேண்டும், அல்லது ஒதுக்கவேண்டும்.
ஒரு நட்பை ஆராய்ந்தேன். ஆங்காங்கே குறைகளும் ஆங்காங்கே நிறைகளும் தெரிகின்றன. என்ன செய்வது?
அற்ப குணம் கொண்டவர்களுக்குக் குறைகள் மட்டும்தான் தெரியும், உயர்ந்த குணம் கொண்டவர்களுக்கு நிறைகள் மட்டும்தான் தெரியும் என்கிறது பழமொழி நானூறு.
'இடையீடுஉடையார் இவர்அவரோடு என்று
தலைஆயார் ஆராய்ந்தும் காணார், கடைஆயார்
முன்நின்று கூறும் குறளை தெரிதலால்
பின்இன்னா பேதையார் நட்பு.'
நாம் இந்த இரு வகைகளுக்கும் நடுவில் இருப்பதால், நமக்கு ஒருவரிடம் உள்ள குறைகளும் தெரியும், நிறைகளும் தெரியும். இரண்டையும் எடைபோட்டு ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்கிறது திருக்குறள்:
'குணம்நாடி, குற்றமும்நாடி, அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல்.'
குணத்தையும் குற்றத்தையும் ஆராய்ந்து, அவற்றில் எது அதிகம் என்பதைப் பார்த்து அதன் அடிப்படையில் தீர்மானிக்கவேண்டும். சில குற்றங்களுக்காக ஒரு நல்லவரைப் புறக்கணித்துவிடுவதும் இழப்புதான், சில நல்ல குணங்களுக்காகத் தீயவர்களிடம் தொடர்ந்து பழகுவதும் ஆபத்துதான்.
ஒரு நல்ல நண்பர், என்றைக்கோ கோபத்தில் நம்மிடம் சில சுடுசொற்களை வீசிவிடுகிறார். அதைக் காரணமாகச் சொல்லி அவரைப் பிரிந்து சென்றுவிடலாமா?
நான்மணிக்கடிகையில் விளம்பிநாகனாரின் பாடலொன்று இதற்குப் பதில் சொல்கிறது:
'மலைப்பினும் வாரணம் தாங்கும், அலைப்பினும்
அன்னேஎன்று ஓடும் குழவி, சிலைப்பினும்
நட்டார் நடுங்கும் வினைசெய்யார், ஒட்டார்
உடன்உறையும் காலமும் இல்.'
யானையை அதன் பாகன் என்னதான் கோபித்தாலும், அது அவனைத் தாங்கிச் செல்லும், அவன்மீது கோபப்படாது. தாய் எவ்வளவுதான் கோபித்தாலும், 'அம்மா' என்று அவளிடம் குழந்தை ஓடும்.
அதுபோல, என்னதான் ஒருவர் கோபப்பட்டாலும், உண்மையான நட்புள்ளவர்கள் அவர்களுக்குத் தீமை செய்ய எண்ணமாட்டார்கள். 'ஏதோ சூழ்நிலையில் அவன் அப்படி நடந்துவிட்டான்' என்று புரிந்துகொள்வார்கள்.
தீயவர்கள் அப்படியில்லை. இதுதான் சாக்கு என்று வெட்டிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.
காரணம், அவர்கள் எப்போதும் உண்மையான நட்புடன் பழகவில்லை. ஆகவே, ஒரு சிறிய பிரச்னை கூட அவர்களைப் பிரித்துவிடுகிறது.
சில நேரங்களில், கோபத்தால் அன்றி, உண்மையான அக்கறையால் சில நண்பர்கள் நம் மீது கோபப்படுவார்கள், 'நீ செய்வது சரியல்ல' என்பார்கள்.
உடனே, 'இப்படிப் பேசறியே, நீயெல்லாம் ஒரு நண்பனா?' என்று கேட்கக் கூடாது. பிழையைச் சுட்டிக்காட்டுபவன்தான் உண்மையான நண்பன் என்கிறார் பாரதியார்:
'நெஞ்சில்
கள்ளத்தைக்கொண்டு ஒரு வார்த்தைசொன்னால் அங்கு
காறி உமிழ்ந்திடுவான்.'
செயல்கூட அப்புறம்தான், வார்த்தையில் கள்ளம் தெரிந்தாலே நண்பன் சுட்டிக்காட்டவேண்டும், 'நீ செல்லும் திசை சரியல்ல, இப்படிச் சிந்திக்காதே' என்று சொல்லவேண்டும். அதையும் மீறிச் செய்தால், கண்டிக்கவேண்டும், அவன் என்ன நினைப்பானோ என்று தயங்கக்கூடாது, நண்பன் என்பதற்காக எல்லாவற்றையும் ஆதரிக்கவேண்டியதில்லை. இதைத் திருக்குறளும் வலியுறுத்துகிறது:
'நகுதற்பொருட்டுஅன்று நட்டல், மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற்பொருட்டு.'
நட்பின் நோக்கம், சேர்ந்து அரட்டையடித்துச் சிரிப்பது அல்ல. ஏதாவது பிழை செய்தால் சுட்டிக்காட்டித் திருத்துவதுதான்.
இது பரஸ்பரம் நடக்கிற ஒன்றாக இருக்கவேண்டும், அதாவது, நமக்குப் பிழையைச் சுட்டிக்காட்டுகிற நண்பன் நாளைக்கு ஒரு பிழை செய்யலாம், அப்போது நாமும் சுட்டிக்காட்டவேண்டும். அதற்காகக் கோபித்துக்கொள்வானோ என்று நினைத்தால் அது நம் தவறு, அதைச் சொல்லி, உண்மையிலேயே கோபித்துக்கொண்டால் அது அவனுடைய தவறு!
அந்த நட்பு உயர்வானதாக இருந்தால், இப்போது கோபப்பட்டாலும், பிறகு அந்த நண்பன் உண்மையை உணர்வான், 'என் நல்லதுக்காகதான் நீ சொல்லியிருக்கே, நான்தான் அவசரப்பட்டுட்டேன்' என்று திரும்ப ஒட்டிக்கொள்வான்.
ஆனால், முந்தைய நட்போடு ஒப்பிடும்போது, அது ஒருமாற்றுக் குறைவுதான் என்கிறார் சிவப்பிரகாசசுவாமிகள். அவருடைய 'நன்னெறி'ப் பாடல்:
'நீக்கம்அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும், பூக்குழலாய்!
நெல்லின் உமிசிறீது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம்.'
ஒருவரை ஒருவர் பிரியாத நட்போடு இருக்கும் இரண்டு பேர், ஏதோ காரணத்தால் பிரிந்து, மீண்டும் சேர்கிறார்கள். ஆனால், அந்த நட்பு அத்தனை உயர்வாக இருக்காது.
நெல்லில் இருக்கும் உமியைக் கொஞ்சம் நீக்கிவிட்டுப் பழையபடி சேர்த்தால், அது முளைக்குமா? அதுபோலதான் நட்பும்!
குறைகளைச் சுட்டிக்காட்டுவது மட்டும் நட்பல்ல, நண்பனின் உயர்வுக்காகப் பாடுபடுவதும் அவசியம் என்கிறது சிறுபஞ்சமூலம். மனிதப் பிறவியின் பலன் என்று ஐந்து விஷயங்களைச் சொல்லும் காரியாசான் முதலாவதாக, 'நட்டாரை ஆக்கி' என்கிறார். அதாவது, நண்பர்களைச் சிறப்பாக்குவது, பணக்காரர்களாக்குவது, நல்ல குணமுள்ளோராக ஆக்குவது.
இவற்றோடு, பகைவர்களையும் நண்பர்களாக ஆக்கலாம் என்கிறார் பூதஞ்சேந்தனார். அவரது 'இனியவை நாற்பது' பாடல்:
'நட்டார்க்கு நல்ல செயல் இனிது, எத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக்கொளல் அதன்முன் இனிதே.'
நண்பர்களுக்கு நல்லவற்றைச் செய்வது இனிது. அதைவிட இனிது, சிறிதும் நம்மோடு சேராமல் ஒதுங்கியிருப்பவர்களைத் தேடிச் சென்று நண்பர்களாக்கிக்கொள்ளூதல்.
அதற்காக, எல்லாப் பகைவர்களுடனும் நட்பாகிவிடக்கூடாது. தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகவேண்டும். நான்மணிக்கடிகையில் விளம்பிநாகனார் சொல்வது:
'பெய்த
கலம்சிதைக்கும் பாலின் சுவையை, குலம்சிதைக்கும்
கூடார்கண் கூடிவிடின்.'
பாலை ஒரு மோசமான பாத்திரத்தில் ஊற்றிவைத்தால், அது கெட்டுப்போகும். அதுபோல, நாம் எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும், நண்பர்களாகப் பழகத் தகுதியில்லாதவர்களோடு சேர்ந்தால், தீமை வரும். ஆகவே, நண்பர்களைக் கவனித்துத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
சிலரோடு நட்புக்கொள்ளத் தொடங்கியபிறகும், அது சரிப்படவில்லை என்று உணர்ந்து விலகலாம். அதைக் கண்டறிய 'நன்னெறி'யில் சிவப்பிரகாசசுவாமிகள் ஒரு வழி சொல்கிறார்:
'நல்லார் செயும்கேண்மை நாள்தோறும் நன்றுஆகும்,
அல்லார் செயும்கேண்மை ஆகாதே, நல்லாய்கேள்,
காய்முற்றின் தின்தீங்கனிஆம், இளந்தளிர்நாள்
போய்முற்றின் என்னாகிப்போம்?'
நல்லவர்களோடு கொள்ளும் நட்பு, நாளுக்கு நாள் வளரும், ஆனால், தீயவர்களோடு கொண்ட நட்பு அப்படியல்ல, அது தேயும்.
ஒரு காயைச் செடியில் வளரவிட்டால், அது கனியாகும், அதைச் சாப்பிடலாம். அதே செடியில் உள்ள ஓர் இலையை வளரவிட்டால், அது சருகாகி, வீணாகும். அதுபோல, நல்ல நட்பு மேம்படும், தீய நட்பு குறுகிப்போகும்.
நல்ல நட்பு, இரண்டறக் கலந்துவிடும், உயர்வு, தாழ்வு பார்க்காது. வாலி ஒரு திரைப்பாடலில் எழுதியதுபோல்:
'உயர்ந்தவன், தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்!’
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.