பண்புடை நெஞ்சம்: அத்தியாயம் - 8

அவர் நம்பகமானவர்தான். ஆனால் இப்போது, மது அருந்தியிருக்கிறார். அப்போது, அவர்மீது எவ்வளவுதான் நம்பிக்கை இருந்தாலும்,
Published on
Updated on
5 min read

'நாளைக்குக் கண்டிப்பாச் செஞ்சுடலாம்'

இப்படி ஒருவர் சொல்லும்போது, அதை நீங்கள் நம்புவீர்களா? மாட்டீர்களா?

அது அந்த நபரைப்பொறுத்தது. அவர் ஏற்கெனவே இதுபோல் சொன்ன விஷயங்களையெல்லாம் சரியாகச் செய்திருந்தார் என்றால், இப்போதும் செய்துவிடுவார் என்று நம்புவோம். ஒருவேளை சொதப்பியிருந்தால், நம்பமாட்டோம்.

அவர் நம்பகமானவர்தான். ஆனால் இப்போது, மது அருந்தியிருக்கிறார். அப்போது, அவர்மீது எவ்வளவுதான் நம்பிக்கை இருந்தாலும், இந்த வாசகத்தின் மீது சந்தேகம் இருக்கும். 'குடிகாரன் பேச்சு, விடிஞ்சாக்காப் போச்சு' என்று அழகான பழமொழியே இருக்கிறது.

காரணம், கள் உண்ட ஒருவருடைய மூளை அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அப்போது அவர் பேசுகிறவற்றை அவர் உணர்ந்து பேசுவதாக எண்ண இயலாது.

இதை 'இன்னாநாற்பது' பாடலொன்றில் சொல்கிறார் கபிலர்:

'கள்உண்பான் கூறும் கருமப்பொருள் இன்னா,
முள்உடைக் காட்டில் நடத்தல் நனிஇன்னா,
வெள்ளம்படு மாக் கொலை இன்னா, ஆங்குஇன்னா
கள்ள மனத்தார் தொடர்பு.'

ஒருவன் கள் உண்டுகொண்டிருக்கிறான் என்றால், அவன் செய்வதாகச் சொல்லும் வேலைகள் நடக்காது, அது தீமையாகவே அமையும். முள் உள்ள காட்டில் நடப்பதைப்போல, கள்ளமனம் கொண்டவர்களுடன் நட்பாகப் பழகுவதுபோல, வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு விலங்கு கரையேறாதபடி தடுத்துக் கொல்வதைப்போல, குடிப்பவன் சொல்வதை நம்பினால் நமக்குச் சிரமமே வரும்.

குற்றமில்லாத அறிவைக்கொண்டவர்கள் என்னவெல்லாம் செய்யமாட்டார்கள் என்று பட்டியல் போடும்போது, 'கள்உண்ணார்' என்கிறது நாலடியார்:

'கள்ளார், கள்உண்ணார், கடிவ கடிந்துஒரீஇ,
எள்ளிப் பிறரை இகழ்ந்துஉரையார், தள்ளியும்
வாயில் பொய் கூறார், வடுஅறு காட்சியார்,
சாயில் பரிவது இலர்.'

புத்திசாலிகள் திருடமாட்டார்கள், கள் உண்ணமாட்டார்கள்.

அடுத்து, அவர்கள் ஒருவரைப்பற்றிப்பேசும்போது, அவர்களிடம் குறையே இருந்தாலும்கூட, அதை இகழ்ந்து பேசமாட்டார்கள், தள்ளவேண்டியவற்றைத் தள்ளிவிட்டு, அவர்களிடம் உள்ள நல்லவற்றையே காண்பார்கள்.

அவர்களையே அறியாமல்கூட, அவர்கள் வாயில் பொய் வந்துவிடாது. எத்தனை தளர்ச்சி வந்தாலும் முயற்சியைக் கைவிடமாட்டார்கள்.

இந்த அம்சங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகவும் பார்க்கலாம், இணைத்தும் பார்க்கலாம். தண்ணி போட்டால் திருடத்தோன்றும், பிறர்மீது உள்ள குற்றங்கள் பெரிதாகத் தெரியும், அவர்களை இகழ்ந்து பேசவைக்கும், பொய் பேசவேண்டியிருக்கும், தளர்ச்சி அதிகரிக்கும், முயற்சி குறையும் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

இப்படிக் கள்ளுண்பதால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை 'நீதிநூல்' பாடலொன்றில் விவரிக்கிறார் வேதநாயகம்பிள்ளை:

'வறுமையால் களவுசெய்வர், மையலால் காமத்துஆழ்வர்,
குறுமைசேர் பகையினால் வெங்கொலைசெய்வர், வசையினோடும்
சிறுமைதந்து, உயிர்இருந்தும் செத்தவர்ஆக்கி, இம்மை,
மறுமையை அழிக்கும் கள்ளை மாந்தல் எப்பயன் வேட்டுஅம்மா?'

கள்ளை ஏன் அருந்துகிறீர்கள்? அதனிடம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்?

ஏதோ சந்தோஷம் வரும், கவலையை மறக்கலாம் என்று கள்ளிடம் வருகிறீர்களா? அது உண்மையில் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?

கள்ளால் வறுமை வரும். உங்கள் வருமானமெல்லாம் அங்கே சென்றுவிடும், ஆகவே, அடுத்தவரிடம் திருடத் தோன்றும்.

இதுவரை திருட நினைத்திருக்கமாட்டீர்கள். இப்போது அதற்கான தைரியம் வரும், காரணம், அந்தக் கள்தான்.

கள்ளால் மயக்கம் வரும், அளவில்லாத காமத்தில் கிடப்பீர்கள். அடுத்தவர்கள் செய்கிற சிறிய பிழைகள் கூடப் பெரிதாகத் தோன்றும், அதற்காக அவர்களைக் கொல்லவும் துணிவீர்கள்.

மொத்தத்தில், கள் உங்களுக்குத் தரப்போவதெல்லாம், கெட்டபெயர், சிறுமை, வெறும் உயிர்கொண்ட ஜடம் என்கிற நிலைமை, இந்தப்பிறவி, அடுத்தபிறவி என்று எல்லாவற்றிலும் செய்த நல்ல விஷயங்களெல்லாம் அழிந்துபோதல்... வேறு எதையும் கள்ளிடம் எதிர்பார்க்காதீர்கள்!

அறிவுடையவர்கள் கள்ளுண்ணாமலிருப்பதுகூட அப்புறம்தான், அவர்கள் கள்ளுண்கிற இடத்துக்கே செல்லமாட்டார்கள் என்கிறது பெருவாயின்முள்ளியார் எழுதிய ஆசாரக்கோவை: 

'கள்ளாட்டுக்கண்
நிகர்இல் அறிவினார் வேண்டார் நீடுநிலை.'

அதாவது, அறிவுள்ளவர்கள் பிறர் கள்ளருந்துகிற இடத்தில் அதிக நேரம் நிற்க விரும்பமாட்டார்கள்!

பனைமத்தின் அடியிலிருந்து பாலைக் குடித்தாலும் கள்போலதான் தெரியும் என்பார்கள். அந்தப் பனைமரம் பக்கத்திலேயே செல்லாமலிருப்பது உத்தமம் என்கிறது இந்தப் பாடல்!

'கள்உண்ணும் மாந்தர் கருத்துஅறியாரே' என்கிறார் திருமூலர். 'கள் குடிக்கிறவனுக்கு என்ன தெரியும்? ஒண்ணும் தெரியாது. உண்மையான மகிழ்ச்சின்னா என்னன்னே தெரியாது' என்று சொல்வதன்மூலம், 'என் சந்தோஷத்துக்கு நான் குடிக்கிறேன்' என்கிற வாதத்தைப் போட்டு உடைத்துவிடுகிறார்.

சிலர் ரொம்ப நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால், அவ்வப்போது மது அருந்துவார்கள். மற்றபடி அவர்களிடம் எந்தத் தீய பழக்கமும் இருக்காது. பெருமளவு நல்லவர்கள் என்பதால், இந்த ஒரு பழக்கத்தைமட்டும் அனுமதிக்கலாமா?

'கூடவே கூடாது' என்கிறார் கம்பர்:

'தாய்இவள், மனைவி என்னும் தெளிவு
இன்றேல், தருமம் என்ஆம்?'

ஒருவன் என்னதான் பெரிய தருமவானாக இருந்தாலும், மது அருந்திவிட்டான் என்றால், தாய் யார், மனைவி யார் என்கிற வித்தியாசம்கூடத் தெரியாதவனாகிவிடுகிறான். அப்புறம் அவனிடம் எத்தனை நன்மைகள் இருந்து என்ன பிரயோஜனம்?

திருவள்ளுவர் கள்ளுண்ணாமைக்குத் தனி அதிகாரமே தந்திருக்கிறார்:

'உண்ணற்க கள்ளை, உணில் உண்க சான்றோரால்
எண்ணப்பட வேண்டாதார்.'

கள்ளை உண்ணக்கூடாது. அப்படி உண்ணவேண்டும் என்கிற ஆசை இருந்தால், சான்றோர் உங்களை நல்லவிதமாக எண்ணுவார்கள் என்கிற எண்ணத்தை விட்டுவிடுங்கள்.

இந்தவிஷயத்தில் திருவள்ளுவர் விதிவிலக்குகளே தருவதில்லை. எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும், கள் குடித்தால் கெட்ட பெயர்தான், சான்றோர் அவர்களை மதிக்கமாட்டார்கள் என்று சொல்லிவிடுகிறார்.

சான்றோர் என்ன, பெற்ற தாயே முகம் சுளிப்பார் என்கிறார் அடுத்த பாடலில்:

'ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால், என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி?'

நீ கள் குடித்தால் சான்றோர் மகிழ்வார்களா? அட, உன் சொந்தத் தாயே மதிக்கமாட்டாள். 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என்ற பழமொழியோடு இதனை இணைத்து வாசித்தால் இன்னும் அழுத்தம் அதிகரிக்கும்.

நமக்குத் தெரிந்தவர்கள் கள் குடித்தால் என்ன செய்யலாம்? அறிவுரை சொல்லலாமா?

'ம்ஹூம், பயன் இருக்காது' என்கிறார் திருவள்ளுவர். கள்ளுண்பவனுக்கு அறிவுரை சொல்வதும், நீரில் மூழ்கிக்கிடப்பவனை நெருப்பால் சுடுவதும் ஒன்றுதான் என்கிறார். அவனுக்கு அது புரியாது, திருந்தமாட்டான்:

'களித்தானைக் காரணம்காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீ துரீஇ அற்று.'

நாமக்கல் கவிஞர் கொஞ்சம் இரக்கப்பட்டு, 'ஒருவன் குடிப்பதைத் தடுப்போம், அவன் அடித்தாலும் தாங்கிக்கொண்டு அன்பாலே வெல்வோம்' என்கிறார்:

'குடிப்பதைத் தடுப்பதே கோடிகோடி புண்ணியம்,
அடிப்பினும் பொறுத்துநாம் அன்புகொண்டு வெல்லுவோம்.
மக்களை வதைத்திடும், மனைவியை உதைத்திடும்
துக்கமான கள்ளினைத் தொலைப்பதே துரைத்தனம்.'

ஏழைகள் கஷ்டப்பட்டு வேலை செய்து சம்பாதிக்கிறார்கள். பிறகு அந்தப் பணத்தை மதுக்கடைக்குக் கொடுத்துவிட்டு நடுத்தெருவில் விழுந்து கிடக்கிறார்கள். அதனால் அவர்களுடைய குடும்பத்தினர் அவதிப்படுகிறார்கள் என்பதைச் சொல்லி, இந்த மதுவை ஊரை விட்டே விரட்டவேண்டும் என்கிறார்:

'பாடுபட்ட கூலியைப் பறிக்கும் இந்தக்கள்ளினை
வீடுவிட்டு, நாடுவிட்டு வெளியிலே விரட்டுவோம்,
கஞ்சியின்றி மனைவி,மக்கள் காத்திருக்க வீட்டிலே,
வஞ்சமாகக் கூலிமுற்றும் வழிபறிக்கும்...'

கள்ளை அருந்துபவருக்குமட்டும் அதனால் சிரமம் இல்லை, ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் சிரமம் என்கிறார் நாமக்கல் கவிஞர். காரணம், கள் அருந்துபவர்களால் குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன, கண்மண் தெரியாமல் எதையாவது செய்துவிடுகிறார்கள்:

'தேசமெங்கும் தீமைகள் மலிந்தது இந்தக்கள்ளினால்,
குற்றம்ற்ற பேர்களும் கொலைஞர்ஆவர் கள்ளினால்.'

அதெல்லாம் சரி, இத்தனை தீமை தரும் கள்ளைக் கடைகளில் வைத்து விற்கலாமா? அதுவல்லவா முதல் பிழை:

'குற்றம்என்று யாருமே கூறும் இந்தக் கள்ளினை
விற்கவிட்டுத் தீமையை விதைப்பதுஎன்ன விந்தையே!'

இவ்வளவு அவஸ்தைக்குப்பதிலாக, கொஞ்சம்போல் வீட்டுக்குள் மறைவாகக் கள்ளை அருந்தினால் யாருக்கும் தெரியாது அல்லவா?

'களித்துஅறியேன் என்பது கைவிடுக; நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்'

என்கிறார் திருவள்ளுவர். குடித்ததை மறைக்கலாம் என்று நினைக்காதீர்கள், மது உள்ளே சென்றவுடன், நீங்கள் நெஞ்சத்தில் ஒளித்துவைத்த விஷயங்களெல்லாம் கொட்டிவிடும், அப்போது நீங்கள் மது அருந்தியிருப்பதை எல்லாரும் தெரிந்துகொண்டுவிடுவார்கள்.

அப்படியானால், இந்த மதுவின் தாக்கத்திலிருந்து எப்படிதான் வெளியே வருவது?

மது அருந்தியிருக்கும்போது நாம் என்ன செய்கிறோம் என்பது நமக்கே தெரியாது. ஆகவே, அதை உணர்ந்து திருந்த வாய்ப்பு இல்லை.

அதற்குப்பதிலாக, மது அருந்தாத நேரத்தில், மது அருந்திய ஒருவரை வேடிக்கை பாருங்கள் என்கிறார் திருவள்ளுவர். அவன் செய்கிற கூத்துகளைப் பார்க்கும்போது, நாமும் இப்படிதானே செய்வோம், பிறர் நம்மைப்பார்த்துச் சிரிப்பார்களே என்பது புரியும்.

'கள்உண்ணாப்போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.'

நாட்டுப்புறப்பாடல்களில் மதுவின் தீமைகளை நேரடியாகவே சொல்லும் பல வரிகள் உண்டு. உதாரணமாக:

'கள்ளெல்லாம் குடிக்காதேடா,
கரும்புத்திக்காரப் பாவி,
நித்தம் கள்ளக் குடிக்காதேடா,
பித்தம்போய்ச் சிரசில்ஏறும்,
பெண்டாட்டிய அடிக்காதேடா,
புள்ளக்கொரு மாத்தம்வரும்!'

கள்ளில்லாத நாள்தான் நம்முடைய நாட்டுக்கு விடிவு என்று எழுதுகிறார் நாமக்கல் கவிஞர்:

'அழுதிடும் மக்களும் தொழுதிடும் மனைவியும்
ஐயோ! பசியுடன் காத்திருக்க
பொழுதுக்கும் உழைத்ததுமுழுவதும் கூலியைப்
போதையில் இழப்பதும் இனியில்லை!
பெற்ற தன்குழந்தைகள் சுற்றி நடுங்கிப்
பேய்எனும் உருவொடு வாய்குளற
உற்றவர், உறவினர் காறி உமிழ்ந்திட
ஊரார் நகைப்பதும் ஒழிந்ததுஇனி!
விடிகிறவரையிலும் அடிதடி ரகளை
வீதியில் மாதர்கள் ரோதனமும்
குடிவெறியால்வரும் கொடுமைகள் யாவையும்
கூண்டோடுஒழிந்தன இனிமேலே!'

அவர் காட்டும் அந்தப் பிம்பம் மிகவும் உருக்கமானது. 'அப்பா, குடிக்காதே' என்று குழந்தைகள் அழுகிறார்கள், மனைவி கை கூப்பிக் கெஞ்சுகிறாள், அன்றைய உழைப்பின் கூலியை அவர் கொண்டுவரமாட்டாரா என்று அவர்கள் பசியோடு காத்திருக்க, அதைப் போதையில் இழக்கிறான் அவன்.

இதை எடுத்துச்சொன்னால் அவன் கோபப்படுவானோ என்ற பயத்தில் எல்லாரும் நடுங்குகிறார்கள், அவன் வாய் குளறித் தடுமாறிக்கொண்டு ராத்திரிமுழுக்கத் தெருவில் சண்டை போடுவதைப்பார்த்துச் சுற்றத்தார் சிரிக்கிறார்கள், காறி உமிழ்கிறார்கள்.

குடித்தபோது, கொஞ்சம் வீட்டுக்குக் கொண்டுசெல்லலாம் என்ற எண்ணம் அவனுக்கு இருந்திருக்கும். ஆனால், குடிக்கக்குடிக்க, மேலும் குடிக்கும் ஆசை வரும், பணமெல்லாம் போய்விடும். அல்லது, அவன் பாக்கெட்டில் இருப்பதை யாராவது எடுத்துக்கொண்டுவிடுவார்கள்.

அந்த நிலை இனி வேண்டாம், மது இல்லாத உலகத்தை உருவாக்குவோம் என்பதே கவிஞரின் கனவு.

மதுவால் அரசாங்கத்துக்குப் பணம்வருவது உண்மைதான். ஆனால், அந்தப் பணம் நமக்குத் தேவையா? நல்லவர்கள் ஏற்காதவழியில் வரும் இந்தப் பணம் வேண்டாம் என்று தூக்கி எறிந்தால், அரசுக்கு ஏற்பட்ட பழி நீங்குமே!

'எல்லாவிதத்திலும் கள்ளால் வரும்பணம்

ஏளனத்துக்கே இடமாகும்,

நல்லார் சரிஎனக் கொள்ளா வரி,இதில்

நம்அரசு அடைந்திட்ட பழிநீங்கும்!'

அரசாங்கத்தின் கடமை என்ன என்பதையும் நினைவுபடுத்துகிறார் கவிஞர். குடிமக்களைப் போதையில் கிடக்கவிட்டு, அதன்பிறகு அவர்களுக்கு நீதியைச் சொல்லித்தந்து என்ன பயன்? அவர்களுக்கு ஊற்றிக்கொடுத்துப் பேதைகளாக ஆக்கிவிட்டு, அப்புறம் அதைச்செய்தான், இதைச்செய்தான் என்று சொல்வதில் நியாயம் உண்டா?

'போதையைத் தந்தபின் நீதியை ஓதுதல்

புத்திஉடை ஓர் அரசாமோ?

பேதைகள்ஆக்கிப்பின் பிழைபுரிந்தாய் எனல்

பேச்சுக்குஆகிலும் ஏச்சுஅன்றோ!'

இப்போதெல்லாம் குடிப்பது 'ஃபேஷன்' ஆகிவிட்டது. 'சும்மா ஜாலிக்குக் குடிக்கிறோம், இது ஒரு பெரிய விஷயமா?' என்கிறார்கள், 'கவலையை மறக்கக் குடிக்கிறோம்' என்கிறார்கள், இதனால் எந்தப் பிழையும் இல்லை என்கிற மனோநிலை வந்துவிட்டது.

உண்மையில், கள்ளருந்துவது மோசமான விஷயம் இல்லைதான். நம்முடைய பழம்பாடல்களிலேயே அரசர் தொடங்கிப் பொதுமக்கள்வரை ஆண்கள், பெண்கள் எல்லாரும் குடித்தார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

அதேசமயம், அது அளவுமீறும்போது, உடலை, மனத்தை, சமூகத்தைப் பாதிக்கும்போது அதற்கு அணைபோடவேண்டும். கட்டுப்பாடில்லாத பழக்கம் வேதனையைக் கொண்டுவரும் என்பதால்தான் இத்தனை பாடல்களில் அதன் தீமை விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, ஒரு பிரச்னை வரும்போது அதைச் சந்திக்காமல் போதையில் அதனை மறக்க நினைப்பது ஆபத்தான பழக்கம். அது இளம்வயதிலேயே பழகிவிட்டால், பின்னர் எதையும் சந்திக்கப் பயப்படுவோம்.

வைரமுத்து எழுதிய ஒரு திரைப்பாடலில், 'கவலையை மறக்கக் குடிக்கிறோம்' என்று சிலர் சொல்கிறார்கள். அவர்களுக்குக் கவிஞர் சொல்லும் பதில்:

'வளர்ந்துவராத பிறையில்லை,
வடிந்துவிடாத நுரையில்லை,
திரும்பிவராத பகலில்லை,
திருந்திவிடாத மனமில்லை!'

எல்லாம் மாறும், அதுதான் உண்மை. இதை உணர்ந்தால், மதுபோன்ற குறுக்குவழிகளில் தீர்வுகளைத் தேடமாட்டோம்.

என்றைக்காவது ஒருநாள் குடிக்கிறோம், அது தவறா?

அதே பாடலில் இதற்கும் பதில் தருகிறார் வைரமுத்து:

'ஒருநாள் சுவைப்போம் என்று நினைத்தால்,
உயிரைச் சுவைக்கும்!'

இந்த விஷயத்தில் தனிநபர்களைவிட அரசாங்கத்துக்குதான் பொறுப்பு அதிகம் என்கிறார் புலமைப்பித்தன்:

'ஆகாயகங்கை காய்ந்தாலும் காயும்,
சாராயகங்கை காயாதடா,
ஆள்வோர்கள்போடும் சட்டங்கள் யாவும்,
காசுள்ளபக்கம் பாயாதடா!'

எத்தனை சட்டங்கள் போட்டாலும், சாராய முதலாளிகளிடம் உள்ள பணம் அதை மாற்றிவிடும். அதனால் பாதிக்கப்படப்போவது ஏழைகள்தான். அவர்கள் போதையில் நிற்க, அவர்களுடைய குடும்பங்கள் வீதியில் நிற்க, இதைத் தடுக்கப்போவது யார்? கள்ளுக்கடைக் காசில்தான் அரசியலும் அரசாங்கமும் நடக்கிறது எனும்போது, இதை மாற்ற இயலுமா?


'குடிச்சவன் போதையில்நிற்பான்,
குடும்பத்தை வீதியில்வைப்பான்,
தடுப்பது யார்என்று கொஞ்சம் நீ கேளடா,
கள்ளுக்கடைக் காசிலேதான்டா,
கட்சிக்கொடி ஏறுது!'

இதை மாற்ற ஒரே வழி, நாட்டைத் திருத்த நம்மால் முடியும் என்கிற நம்பிக்கை வேண்டும், அதற்கு நமக்குள் இருக்கும் நம்மைப் புரிந்துகொள்ளவேண்டும்:

'நம்நாடு திருந்தச்செய்யோணும்,
உன்னால்முடியும் தம்பி,
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!'

இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, திருவள்ளுவர் சொல்வதுபோல், கள் என்பது நஞ்சு என்கிற உணர்வு பரவவேண்டும்: 'நஞ்சுஉண்பார் கள்உண்பவர்.'

யாராவது பணம் கொடுத்து மெய்மறந்த நிலையை வாங்குவார்களா? அது நஞ்சின்றி வேறென்ன? வாழத்தெரியாதவர்கள்தான் அப்படிச் செய்வார்கள் என்கிறார் வள்ளுவர்:

'கைஅறியாமைஉடைத்தே, பொருள்கொடுத்து
மெய்அறியாமை கொளல்.’

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com