பண்புடை நெஞ்சம்: அத்தியாயம் - 9

சினிமாவில் நாயகன்மீது குண்டுகள் பாயும், ஆனால் எவையும் அவருடைய உடலைத் துளைக்காது.
Published on
Updated on
5 min read

சினிமாவில் நாயகன்மீது குண்டுகள் பாயும், ஆனால் எவையும் அவருடைய உடலைத் துளைக்காது.

இத்தனைக்கும் அவர் உடலில் புல்லட்ப்ரூஃப் ஆடையெல்லாம் அணிந்திருக்கமாட்டார். ஆனாலும் எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பித்துவிடுவார். இது எப்படி சாத்தியம்?

மாய, மந்திரமில்லை, 'தர்மம் தலைகாக்கும்' என்பார்கள், அதுபோல, உயிர்காக்கும் உபாயம் ஒன்று உண்டு. சிறுபஞ்சமூலத்தில் காரியாசான் சொல்லும் பாடல் அது:

'நாண்எளிது பெண்மை, நகைஎளிது நட்டானேல்,
ஏண்எளிது சேவகனேல், பெரியார் பேண்எளிது,
கொம்பு மறைக்கும் இடையாய், அளியன்மீது
அம்பு பறத்தல் அரிது.'

கொம்பு போன்ற இடையைக் கொண்ட பெண்ணே, பொதுவாகப் பெண்களுக்கு நாணம் எளிதாக வரும், நண்பர்களோடு இருக்கும்போது சிரிப்பு எளிது, வீரர்களுக்கு வலிமை எளிது, பெரியவர்களுக்குப் பிறரைப் பாதுகாப்பது எளிது...

அப்படியானால் எதுதான் அரிது?

அளியன்மீது அம்பு பறத்தல், அதாவது, பிறர்மீது கருணை வைப்பவன்மீது அம்பு பறக்காது. எதிரிகள் எத்தனை ஆயுதங்களை எறிந்தாலும், அவர்களை நெருங்கும்போது அவை வலிமையிழந்து கீழே விழுந்துவிடும்.

ஆக, அந்தக் கருணைதான் கேடயம், உயிரைக் காப்பாற்றும் கருவி.

திருவள்ளுவர், 'அருள் இருந்தால் துன்பமில்லை!' என்கிறார்.

அவர் சொன்னால் நம்பிவிடுவதா? இதற்கு என்ன சாட்சி?

'இந்த உலகமே சாட்சி' என்கிறார் வள்ளுவர், 'சுற்றிப் பாருங்கள், அருளோடு வாழ்கிறவர்களெல்லாம் நன்கு வாழ்கிறார்கள், அருளில்லாதவர்கள் அவஸ்தையில் கிடக்கிறார்கள். ஆகவே, உலகத்தீர், சக உயிர்கள்மீது அருள் செய்வீர்!'

'அல்லல் அருள் ஆள்வார்க்குஇல்லை, வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி!'

இதே அதிகாரத்தில் இன்னொரு புகழ்பெற்ற குறள்:

'அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள்இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகியாங்கு.'

இந்தக் குறளுக்குப் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிற பொருள், 'அன்னிக்கு உலகத்துல அருள் இல்லாம வாழமுடியாது, ஆனா இன்னிக்கு, பொருள் வேணும்ய்யா, இப்பல்லாம் துட்டு இருந்தால்தான் மதிப்பு!'

'அருளுடைமை' என்று அதிகாரத்துக்குப் பெயர்வைத்த வள்ளுவர் அப்படியா பொருளை உயர்த்தி அருளைத் தாழ்த்தி எழுதியிருப்பார்? அடுத்த குறளில் அவரே சொல்வது:

'பொருள்அற்றார் பூப்பர் ஒருகால்; அருள்அற்றார்
அற்றார், மற்றுஆதல் அரிது.'

பொருளில்லாமல் இருக்கிறவர்கள் என்றைக்காவது வாழ்வில் வளம் பெற்றுச் சிறந்து விளங்கலாம். ஆனால், அருளில்லாமல் இருக்கிறவர்களுடைய வாழ்க்கை ஏற்கெனவே முடிந்துவிட்டது. இனி அவர்கள் உருப்பட வழியே இல்லை!

ஆக, பொருள்தான் உயர்வு என்று திருவள்ளுவர் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. அவர் சொல்லவருகிற விஷயமே வேறு!

பொருள் இல்லாதவர்களுக்கு நாம் வாழும் இந்த உலகம் இல்லை. அதாவது, கையில் காசு இல்லாவிட்டால் இங்கே நம்மால் வாழ இயலாது, சாப்பாடு, தண்ணீர், வீடு, உடை என்று சகலத்துக்கும் காசு வேண்டும்.

ஆனால், அந்தக் காசு நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்தியாவில் ரூபாய்க்கு மவுசு, அமெரிக்கா சென்றால் டாலர், இன்னொரு நாட்டில் யூரோ, தினார் என்று ஆங்காங்கே கரன்ஸி மாறிக்கொண்டிருக்கும்.

அதுபோல, 'அவ்வுலகத்தில்', அதாவது, நம்முடைய வாழ்நாளுக்குப்பிறகு நாம் சென்றுசேரப்போகும் இன்னோர் உலகத்தில், நம்முடைய சரியும் தவறும் எடை போடப்படும்போது... அங்கே உங்கள் கையில் காசு இருக்காது, அதை வைத்து வசதியாக வாழ இயலாது.

ஒருவேளை நீங்கள் மறுபிறப்பு எடுக்கவேண்டியிருந்தாலும், நல்ல பிறவியாக எடுக்கவேண்டுமல்லவா? அதை ரிசர்வ் செய்வது எப்படி?

அதற்கான கரன்ஸிதான் அருள். அதாவது, உயிர்களிடம் அன்பாக வாழ்கிறவர்கள் எப்போதும், எந்தப் பிறவியிலும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

வள்ளுவர் சொர்க்கம், நரகம், மறுபிறவியையெல்லாம் நம்பினாரா என்று நாம் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை, அந்தப் பொருள்களையெல்லாம் மறந்துவிட்டால்கூட, உன் கண்முன்னே பொருளைச் செல்வமாக மதிக்கிறாயே, அது நீண்டகால நோக்கில் பயன் தராது, அன்பை மதிக்கப் பழகு என்று இதைப் புரிந்துகொள்ளலாம்.

யார்மீது அன்பு செலுத்தவேண்டும்?

'ஆற்றும் இன்அருள் ஆருயிர்மாட்டெலாம்'

என்பது 'வளையாபதி'ப் பாடல். அதாவது, எல்லா உயிரினங்கள்மீதும் அன்பு செலுத்தவேண்டும், இதற்கென்று கட்டுப்பாடுகளெல்லாம் இருக்கக்கூடாது.

இதெல்லாம் சாத்தியமா? அருள் சாதாரணமாகக் கிடைத்துவிடுமா?

பால் இருக்கிற இடத்தில் நெய் இருக்கும், நெய்யை ஊற்றினால் விளக்கு எரியும், விளக்கு எரிந்தால் வெளிச்சம் பிறக்கும், இதெல்லாம் இயல்பான நிகழ்வுகள்தானே?

அதுபோல, ஒழுக்கம் உள்ள மனத்தில் அருள் பிறக்கும், அருளிருந்தால் அறிவு வரும், அதனால் அறியாமை விலகும் என்கிறது முனைப்பாடியர் எழுதிய 'அறநெறிச்சாரம்':

'இருளே உலகத்துஇயற்கை, இருள்அகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை, கைவிளக்கின்
நெய்யே தன்நெஞ்சத்து அருள்உடைமை, நெய்பயந்த
பால்போல் ஒழுக்கத்தவரே, பரிவுஇல்லா
மேல்உலகம் எய்துபவர்.'

'ஆத்திசூடி'யில் ஔவையாரின் அறிவுரை இது:

'நைவினை நணுகேல்.'

அதாவது, பிறரைத் துன்புறுத்தும்படியான செயல்களைச் செய்யவேண்டாம். உடலால்மட்டுமல்ல, மனத்தாலும் துன்புறுத்தவேண்டாம். இதுவும் ஔவையார் சொல்வதுதான்:

'பழிப்பன பகரேல்.'

நமக்குமேலே இருக்கிறவர்களிடம் பேசும்போது, நம்முடைய மொழி தானாகப் பணிந்துவிடும். அதேசமயம், நமக்குக்கீழே இருக்கிறவர்களிடம் வேண்டுமென்றே எகிறுவோம், அவர்களிடம் அதிகாரத்தைக் காட்ட நினைப்போம்.

'உலகநீதி' பாடிய உலகநாதர் சொல்வது:

'எளியாரை எதிரிட்டுக்கொள்ளவேண்டாம்.'

அதாவது, எளிமையானவர்களைப் பகைத்துக்கொள்ளவேண்டாம். அவர்களை நண்பர்களாக்கிக்கொண்டால் இன்னும் சௌக்கியம்.

இதென்ன விநோதமான அறிவுரை, பொதுவாக வலியவர்களைதானே பகைத்துக்கொள்ளக்கூடாது என்பார்கள்?

எளியவர்களைப் பகைத்துக்கொள்ளாமலிருக்கப் பல காரணங்கள் சொல்லலாம். அவற்றில் முதன்மையானது, அருள்.

திருப்பி அடிக்கமுடியாத நிலையில் இருப்பவனை அடிக்காமலிருப்பது உன்னதமான ஒரு குணம். அதன்மூலம் அவனை மேலும் கீழே தள்ளிவிடாமலிருக்கிறோம். கைகொடுத்துத் தூக்கிவிடமுடிந்தால் இன்னும் சிறப்பு.

இதையே கொஞ்சம் ப்ராக்டிகலாக யோசித்தால், இன்றைய ஏழை என்றைக்கும் ஏழையாக இருப்பான் என்று சொல்வதற்கில்லை. நாளைக்கு அவன் மேலே வரும்போது நாம் இப்போது செய்த அவமானத்துக்குப் பழி வாங்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?

இப்படிப் பலனை எதிர்பார்த்துச் செய்தாலும் சரி, இயல்பாகவே மனத்தில் அருள் சுரந்தாலும் சரி, ஏழைகளைப் பகைத்துக்கொள்ளவேண்டாம்.

அவ்வளவு ஏன், பொதுவாகப் பகையே வேண்டாம் என்பதுதான் ஔவையாரின் கட்சி. 'கொன்றைவேந்தன்' பாடலொன்றில் இப்படிச் சொல்கிறார்:

'ஊருடன் பகைக்கின், வேருடன் கெடும்.'

இவனோடு இந்தச் சண்டை, அவனோடு அந்தச் சண்டை என்று பார்த்துக்கொண்டிருந்தால், வேரோடு விழவேண்டியதுதான். ஊரைப் பகைத்துக்கொள்ளாமல் கைகோத்து வாழவேண்டும். அதற்கு வழி, அருள்மனம்தான்.

'தன்னைப்போலப் பிறரைஎண்ணும்
தன்மைவேண்டுமே, அந்தத்
தன்மை வர உள்ளத்திலே
கருணை வேண்டுமே!'

என்று ஒரு திரைப்பாடலில் எழுதுவார் வாலி. தன்னைப்போலப் பிறரை எண்ணுகிற முதிர்ச்சியான சிந்தனை எல்லாருக்கும் வந்துவிடாது. அப்படி வந்துவிட்டால், அந்த உலகில் எந்தச் சண்டைகளும் இருக்காது.

அந்தச் சிந்தனைக்கு, உள்ளத்தில் கருணை வேண்டும். அல்லது, இன்னொருவர்முன் தான் கைகட்டிக் கூசி நின்ற காட்சியை நினைக்கவேண்டும், அப்படியொரு நிலையை நான் இன்னொருவருக்குத் தரமாட்டேன் என்று உறுதிகொள்ளவேண்டும். திருவள்ளுவர் சொல்வதுபோல:

'வலியோர்முன் தன்னை நினைக்க, தான் தன்னின்
மெலியோர்மேல் செல்லும்இடத்து.'

நமக்குக் கீழே உள்ளவர்களிடம் கை ஓங்கும்போது, நம்மைவிட வலியவர்கள்முன் தன் நிலைமை எப்படி இருந்தது என்று யோசித்தால் போதும். எல்லாம் சமம் என்கிற எண்ணம் வந்துவிடும், அதன்பிறகு கருணை சுரப்பது எளிது. அல்லது, முன்பே மனத்தில் கருணை இருந்தால், இந்த எண்ணம் தோன்றும்.

வள்ளலார் பாடியது:

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன், பசியினால் இளைத்தே
வீடுதோறு இரந்தும் பசிஅறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம்பதைத்தேன்,
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேர்உறக் கண்டு உளம்துடித்தேன்,
ஈடுஇல் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர்தமைக் கண்டே இளைத்தேன்.'

இறைவா, வாடிக்கிடக்கும் பயிர்களைப் பார்த்தால் என் மனம் வாடுகிறது, பசியால் வருந்தி வீடு வீடாகக் கையேந்தியும் எதுவும் கிடைக்காமல் சுருண்டு கிடக்கிறவர்களைப் பார்த்துப் பதைக்கிறேன், நோயால் வருந்துகிறவர்கள் எதிரில் வந்தால் துடிக்கிறேன், ஏழைகள் தங்கள் மானத்தை இழந்து இப்படிக் கையேந்தி நின்று இளைத்திருப்பதைப் பார்த்து நான் இளைத்துவிட்டேன்.

இப்படி ஒரு பார்வை நமக்கு வருமா? வந்தால், அதுதான் கடவுள்நிலை என்கிறார் வாலி:

'பாசம்உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான், அவன்

கருணைஉள்ள நெஞ்சினிலே கோயில்கொள்கிறான்.'

இப்போதெல்லாம் அண்ணன், தம்பியே ஒருவர்மீது ஒருவர் பாசம் காட்டுவதில்லை என்று கண்ணதாசன் ஒரு பாடலில் பாட ஆரம்பிக்கிறார், பிறகு, அந்தப் பாடலின் நிறைவில், அண்ணன், தம்பிக்கு ஒரு புது விளக்கத்தையே தந்துவிடுகிறார்:

'அண்ணன் என்னடா, தம்பி என்னடா,
அவசரமான உலகத்திலே...
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன், தம்பிகள்தானடா!'

ஓர் உயிர் பதைக்கும்போது, ஓடிச்சென்று அணைக்கும் மனம் வேண்டும், அதுதான் தோழமை, சகோதரத்துவம், மனிதாபிமானம், எல்லாமே.

கருணை நெஞ்சத்தில் இருந்தால்மட்டும் போதாது, அதை வாயாலும் சொல்லவேண்டும். அப்போதுதான் எதிரில் இருக்கிறவர்களுக்கு அது முழுமையாகச் சென்று சேரும். குருபாததாசர் எழுதிய 'குமரேச சதகம்' நூலில் ஒரு பாடல் இதனைக் குறிப்பிடுகிறது:

'பகல் விளக்குவது இரவி, நிசி விளக்குவது மதி,
பார் விளக்குவது மேகம்,
பதி விளக்குவது பெண், குடி விளக்குவது அரசு,
பரி விளக்குவது வேகம்,
இகல் விளக்குவது வலி, நிறை விளக்குவது நலம்,
இசை விளக்குவது சுதி, ஊர்
இடம் விளக்குவது குடி, உடல் விளக்குவது உண்டி,
இனிய சொல் விளக்குவது அருள்,
புகழ் விளக்குவது கொடை, தவம் விளக்குவது அறிவு,
பூ விளக்குவது வாசம்,
பொருள் விளக்குவது திரு, முகம் விளக்குவது நகை,
புத்தியை விளக்குவது நூல்,
மகம் விளக்குவது மறை, சொல் விளக்குவது நிசம்,
வாவியை விளக்குவது நீர்,
மயில்ஏறி விளையாடு குகனே, புல் வயல் நீடு
மலைமேவு குமரேசனே.'

மயில்மேல் ஏறி விளையாடுகின்ற முருகனே, பயிர்கள் செழித்து வளர்ந்த மலைமீது எழுந்தருளியிருப்பவனே,

பகல் நேரத்துக்கு வெளிச்சம் தருவது சூரியன், இரவுக்கு வெளிச்சம் தருவது சந்திரன், நிலத்தை விளக்குவது, அதாவது, செழிப்பாக்குவது மேகம், கணவனைச் சிறப்புறச்செய்பவள் அவனுடைய மனைவி, மக்களைச் சிறந்து விளங்கச் செய்பவன் அரசன், குதிரைக்குச் சிறப்பு அதன் வேகம், பகைக்குச் சிறப்பு அதன் வலிமை (அதாவது, வலிமையில்லாத ஒருவன் யாரையும் பகைத்துக்கொண்டு பயன் இல்லை!)

அழகைச் சிறப்புறச்செய்வது ஒழுக்கம், இசைக்குச் சிறப்பைச்சேர்ப்பது சுருதி, ஊருக்குச் சிறப்பைத்தருவது மக்கள், உடலை அழகாக்குவது உணவு, அதுபோல, அருளைச் சிறப்பாக்குவது, இனிய சொல்!

ஒருவருடைய புகழை விளக்குவது அவர் தரும் கொடை, தவத்தின் சிறப்பு, அதனால் வரும் அறிவு, மலருக்குச் சிறப்பு, அதன் மணம், செல்வத்தைக் காட்டுவது, அதன் அழகு, முகத்துக்கு அழகு, புன்னகை, நூலுக்கு அழகு, அது தரும் புத்தி, வேள்விக்கு அழகு, வேதத்தை ஓதுதல், சொல்லுக்கு அழகு உண்மை, பொய்கைக்கு அழகு, நீர்.

இங்கே 'அருளைச் சிறப்பாக்குவது இனிய சொல்' மற்றும் 'சொல்லுக்கு அழகு உண்மை' என்ற இரு பகுதிகளையும் நாம் இணைத்து வாசிக்கலாம். வெறுமனே இனிமையாகப் பேசினால் போதாது, அது உண்மையான சொல்லாக இருக்கவேண்டும். மனத்தால் உணர்வதுதான் கருணை.


'பகைவனுக்குஅருள்வாய் நல்நெஞ்சே!
புகைநடுவினில் தீஇருப்பதைப் பூமியில் கண்டோமே,
பகைநடுவினில் அன்புஉருவான நம் பரமன் வாழ்கிறான்,
சிப்பியில் நல்ல முத்து விளைந்திடும் செய்திஅறியாயோ?
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக்கொடி வளராதோ?
உள்ளநிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ?
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ?
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வு பிறர்க்குஎண்ணத் தான்அழிவான்என்ற சாத்திரம்கேளாயோ?
தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையில் போற்றிடுவாய்,
அன்னை பராசக்தி அவ்வுரு ஆயினள், அவளைக் கும்பிடுவாய்!'

இது பாரதியாரின் அன்புநிலை. பகைவனுக்கு அருள்செய்வாய் என்று தன் நெஞ்சுக்குச் சொல்கிறார். 'புகைநடுவில் தீ இருப்பதைப்போலதான், பகைநடுவில் தெய்வம் இருக்கிறது, அந்த நல்ல விஷயத்தைப் பார்' என்கிறார்.

ஆனால், அவனைப் பார்த்தால் அன்பு செலுத்தத் தோன்றவில்லையே.

பார்வையால் எல்லாவற்றையும் தீர்மானிக்க இயலுமா? சிப்பியிலே முத்து வரவில்லையா? குப்பையிலே அழகிய மலர் பூக்கவில்லையா?

இருந்தாலும்...

இதோ பார், அவன்மேல் பகை கொள்வதால் அவஸ்தை உனக்குதான், தெரியுமா?

அது எப்படி?

எல்லார்மீதும் அன்பு செலுத்தினால், உன்னுடைய உள்ளம் நிறைந்திருக்கும். ஒரே ஒருவர்மீது கோபப்பட்டாலும், உள்ளம் நிறையாது. இனிமையான தேனில் கொஞ்சம் விஷத்தைக் கலந்தபிறகு அதைத் தேன் என்று சொல்ல இயலுமா?

நீ உன் வாழ்வைக் கவனி, முன்னேறும் வழியைப் பார், பகையை இழுத்துவிட்டுக்கொண்டு தாழ்வைத் தேடாதே. யாராவது அழியவேண்டும் என்று நினைத்தால், அதனால் நீயே அழிந்துவிடுவாய், ஆகவே, நல்லதைமட்டும் நினை.

தின்னவருகிற புலியைக்கூட அன்பாகப் பார், அதுவும் அன்னை பராசக்தியின் உருவம்தான் என்று எண்ணிக்கொள், அதன்பிறகு பகை இருக்காது, ஒருவேளை அவர்கள் மனத்தில் பகை இருந்தாலும், உன் மனத்தில் அன்புதான் இருக்கும். ஆகவே, அவர்கள் அனுப்பும் பகையானது உதிர்ந்து விழுந்துவிடும்!

இதெல்லாம் சாத்தியமா? எவ்வளவுதான் முயன்றாலும் அடுத்தவர்கள்மீது ஒரு சிறிய கோபமாவது இல்லாமல் வாழ இயலுமா?

இதற்குத் திருவள்ளுவர் ஒரு தந்திரம் சொல்கிறார், கெட்டது மனத்தில் சேரக்கூடாது என்றால், அங்கே கொஞ்சம்கூட இடமில்லாமல் நல்லதை நிரப்பிவைத்துவிடு!

'அல்லவை தேய, அறம்பெருகும், நல்லவை
நாடி இனிய சொலின்.'

நல்லவற்றைத் தேடிச்செல், இனியவற்றைப் பேசு, கெட்டவை தேயும், அறம் வளரும்!

நான் அப்படி இருக்கத் தயார், ஆனால் எதிரில் வந்து எவனாவது திட்டினால்?

'சாப்பிடாமல் நோன்பு இருப்பதுபோல, அடுத்தவர்களின் வசவுகளை ஏற்றுக்கொள்ளாமல் நோன்பு இரு' என்கிறார் வள்ளுவர். 'உண்ணாவிரதத்தைவிட, இப்படித் திட்டைப் பொறுத்துக்கொண்டு சிரிப்பது பெரிய விரதம்!'

'உண்ணாது நோற்பார் பெரியர், பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின்பின்.’

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com