பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்- 10

ஒருவரிடம் ஏதோ உதவியைப் பெறுகிறோம். அதற்காக அவரிடம் நன்றியுடன் இருக்கிறோம். இது ஒரு நல்ல பண்பு.
Published on
Updated on
5 min read

ஒருவரிடம் ஏதோ உதவியைப் பெறுகிறோம். அதற்காக அவரிடம் ன்றியுடன் இருக்கிறோம். இது ஒரு நல்ல பண்பு.

ஆனால், நாளைக்கே ஒரு பிரச்னை. அதில் அவருக்கும் இன்னொருவருக்கும் மோதல், நாம் யார் பக்கம் நிற்கவேண்டும்?

ஆயிரம்தான் இருந்தாலும் இவர் நமக்கு உதவியவர். சரியான நேரத்தில் அந்த விசுவாசத்தைக் காட்டவேண்டாமா? இவர் பக்கம்தான் நிற்கவேண்டும். இது ஒரு கட்சி.

இன்னொரு கட்சி, நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்கள் பக்கம்தான் நாம் நிற்கவேண்டும்.

அப்படியானால், நாம் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோமே. அவர் கையால் சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டிருக்கிறோமே?

அதெல்லாம் உண்மைதான். அதேசமயம், உண்மை என்பது இவற்றையெல்லாம்விட மேலானது என்கிறது பழமொழி நானூறு:

'மொய்கொண்டுஎழுந்த அமர்அகத்து மாற்றார்வாய்ப்
பொய்கொண்டு அறைபோய்த் திரிபவர்க்கு என்கொலோ?
மையுண்டு அமர்ந்தகண் மாண்இழாய், சான்றவர்
கையுண்டும் கூறுவர் மெய்.'

இரண்டு அரசர்களிடையே மோதல். இருவரும் ஒருவர்மீது ஒருவர் போர் தொடுக்க ஆயத்தமாகிறார்கள்.

அப்போது, அவர்களில் ஓர் அரசர் எதிரி நாட்டுப் படையினரிடையே ஒரு வதந்தியைப் பரப்புகிறார், 'நீங்கல்லாம் நம்ம பக்கம் வந்துட்டீங்கன்னா, உங்களுக்கு என்ன வேணுமோ தர்றேன்!'

இதைக் கேட்டதும், சில வீரர்கள் சட்டென்று அந்தப்பக்கம் தாவுகிறார்கள், சிலர் இந்த அரசனின் படையிலேயே நிற்கிறார்கள்.

இவர்களில் யார் செய்வது சரி?

விசுவாசமாக இந்த அரசனின் பக்கம் நிற்பவர்கள் சரியா? அல்லது, காசு கிடைக்கிறது என்று அந்தப் பக்கம் தாவியவர்கள் சரியா?

இந்தப் பாடலை எழுதிய முன்றுரையரையனார் 'விசுவாசிகளை விடுங்கள், அவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்கிறார்களா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது, ஆனால் அந்தக் கட்சி மாறியவர்கள் இருக்கிறார்களே, அந்தத் துரோகிகளை மன்னிக்க இயலாது!' என்கிறார்.

அவர்கள் செய்த துரோகம், அரசனுக்கு அல்ல, நியாயத்துக்கு. இருதரப்பினர் மோதும்போது, அதில் நம்மை ஆதரித்தவர் பக்கம் நிற்பது ஒருவிதத்தில் சரி, நியாயத்தின் பக்கம் நிற்பது இன்னொரு விதத்தில் சரி, எவனோ எதையோ தருகிறான் என்றதும் கட்சி மாறிவிடலாமா? இது இழிவில்லையா?

'சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய்' என்று முத்தாய்ப்பு வைக்கிறது இந்தப் பாடல். நல்ல சான்றோர் ஒருவரின் கையால் நன்மைகளைப் பெற்றிருக்கிறோம் என்பதற்காக, அல்லது, அவர்களால் ஏதேனும் நன்மைகள் கிடைக்கும் என்பதற்காக அவர்கள் சார்பாகப் பொய் சொல்லமாட்டார்கள், மெய்யை மட்டுமே பேசுவார்கள்.

பொய்யைச் சொன்னால்தான் இன்றைக்குப் பிழைக்கமுடியும் என்கிறார்களே!

'அட, மெய்யைச் சொல்லிக் கிடைக்காத வாழ்க்கையா பொய்யைச் சொல்வதால் கிடைத்துவிடப்போகிறது?' என்கிறார் படிக்காசுப்புலவர். அவருடைய தண்டலையார் சதகத்தில் ஒரு பாடல்:

'பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும் கிடையாது, பொருள்நில்லாது,
பொய்சொல்லி வாழ்ந்ததுஉண்டோ?
மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி வாழ்வதுஇலை, மெய்ம்மைதானே.'

'வாய்' என்ற சொல்லே 'வாய்மை'யைக் குறிப்பதற்காக வந்தது என்பார்கள். உண்மையைப் பேசுவதற்குதான் வாய். அதன்மூலம் சாப்பிடுவதெல்லாம் அடுத்த பயன்.

ஆகவே, அந்த வாயால் பொய்யைச் சொன்னால், சாப்பாடு கிடைக்காது, சம்பாதித்த எதுவும் நிலைக்காது, பொய்சொல்லி யாரும் பலநாள் வாழ இயலாது, மெய் சொல்வதால் கிடைக்காத எந்த நன்மையும் பொய் சொல்வதால் கிடைக்காது, இதுவே மெய்!'

இதுபற்றி பாரதியாரின் அழகிய உரைநடைப்பகுதி ஒன்று உண்டு:

'ஞானநெறியிலே செல்லவிரும்புவோன் முக்கியமாக எதை ஆரம்பத் தொழிலாகக் கொள்ளவேண்டும்?' என்று ஒருவர் கேட்கிறார். அதற்குச் சாமியார் சொல்லும் பதில்:

'முதலாவது, நாக்கை வெளுக்கவேண்டும். பொய் சொல்லக்கூடாது. சில இடங்களில் பொய் சொல்லித் தீரும்படியாக இருந்தால் அப்போது மௌனத்தைக் கொள்ளவேண்டும். அதை விட்டுப் பேசும்படி நேர்ந்தால் உண்மையே சொல்லவேண்டும். உண்மை விரதம் தவறக்கூடாது. தவறவேண்டிய அவசியமில்லை. உண்மை கூறினால் தீங்கு நேரிடுமென்று நினைப்போர், தெய்வம் உண்மை என்பதை அறியமாட்டார்கள். தெய்வம் உண்மை. அதன் இஷ்டப்படி உலகம் நடக்கிறது. ஆதலால், பயப்படுகிறவன் மூடசிகாமணி.'

பாப்பாவுக்குப் பாடியபோதும் பாரதி இதையே சொன்னார்:

'பொய்சொல்லக்கூடாது பாப்பா, என்றும்
புறஞ்சொல்லல்ஆகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா, ஒரு
தீங்குவரமாட்டாது பாப்பா!'

உண்மை சொல்வதால் ஏதேனும் கெடுதல் வருமோ என்ற நினைப்பைத் தூக்கியெறியச்சொல்கிறார் பாரதியார். உண்மை சொல்வதுதான் இயல்பு, அதுதான் நியாயம், அதை நாம் செய்தால், தெய்வம் தொடங்கி மனிதர்கள்வரை எல்லாரும் நம் பக்கம் நிற்பார்கள், நமக்கு எந்தத் தீங்கும் வராது.

'மனதில் உறுதி வேண்டும்' என்று கோரிக்கைகளைத் தொடங்கும் பாரதியின் முத்தாய்ப்பு வரியைப் பாருங்கள்:

'மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்,
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்படவேண்டும்,
கனவு மெய்ப்படவேண்டும்,
கைவசம்ஆவது விரைவினில் வேண்டும்,
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்,
கண் திறந்திடவேண்டும்,
காரியத்தில் உறுதி வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்கவேண்டும்,
மண் பயனுறவேண்டும்,
வானகம் இங்கு தென்படவேண்டும்,
உண்மை நின்றிடவேண்டும்!'

மனத்தில் உறுதி, வாக்கில் இனிமை, நல்ல நினைவுகள், சகல வளங்கள், பெருமை, அகத்தில் ஒளி என யாவும் தனக்காகக் கேட்கும் பாரதி, பெண் விடுதலை, மண் பயனுறுதல், வானகக் காட்சி என்று தொடர்ந்து, உண்மை நிலைக்க வேண்டும் எனத் தன் கோரிக்கைகளை விரிவாக்குகிறான். இந்த 'உண்மை' மிகவும் பரந்த எல்லையைக் கொண்டது.

பக்தியினாலே என்னவெல்லாம் நடக்கும் என்று விவரிக்கும் பாரதி வரிகள்:

'தெய்வ
பக்தியினாலே,
பொய்ப்பாம்பு மடியும்,
மெய்ப்பரம் வென்று நல்ல
நெறிகள் உண்டாய்விடும்.'

பொய் மறையும்போதுதான் வழி பிறக்கும், இல்லையென்றால் அது நிஜத்தை மாற்றிக்காட்டி நம்மை எப்போதும் மாயையில் வைத்திருக்கும்.

'புறத்தூய்மை நீரான்அமையும், அகத்தூய்மை
வாய்மையால் காணப்படும்.'

இது திருக்குறளின் வரையறை. உடலுக்குச் சோப்புப் போட்டுக் குளிப்பதுபோல, உள்ளே போடுகிற சோப்புதான் வாய்மை. நடக்கும்போது வழிகாட்டிக்கொண்டு வருகிற விளக்கும் அதுவே:

'எல்லா விளக்கும் விளக்குஅல்ல, சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.'

விளக்கு என்பது வழிகாட்டுவது, நமக்குமட்டுமல்ல, எதிரில் வருகிறவர்களுக்கும்.

அதுபோல, ஒருவேளை நமக்கு வாய்மை என்பது என்ன என்று தெரியாவிட்டால்கூட, நம்மிடம் இல்லாத விளக்கை எதிரில் வருகிற சான்றோரிடம் பார்த்து, அவர்கள் நடந்துகொள்ளும் முறையைத் தெரிந்துகொள்ளலாம், பின்பற்றலாம், அதுவே 'பொய்யா விளக்கு.'

நீதிநெறிவிளக்கத்தில் குமரகுருபரர் சொல்வது:

'குலம் விற்றுக் கொள்ளும் வெறுக்கையும், வாய்மை
நலம் விற்றுக் கொள்ளும் திருவும், தவம்விற்றுஆங்கு
ஊன்ஓம்பும் வாழ்வும், உரிமைவிற்று உண்பதூஉம்
தான்ஓம்பிக் காத்தல் தலை.'

இங்கே குலம் என்பது ஒருவர் பிறந்த குலத்துக்குரிய ஒழுக்கம். அந்த ஒழுக்கத்தை விற்றுவிட்டு யாராவது செல்வத்தை வாங்குவார்களா? பாரதியார் கேட்டதுபோல்:

'கண்இரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்,
கைகொட்டிச் சிரியாரோ!'

அதேபோல், உண்மையை விற்று, அதாவது பொய் சொல்லிப் பெறுகிற செல்வமும் இழிவானதுதான். தவத்தை விற்று அதனால் கிடைத்த பொருளைக் கொண்டு உடல் வளர்ப்பது, தன்னுடைய உரிமையை விற்றுவிட்டு சாப்பாட்டில் மயங்கிக்கிடப்பது... இதெல்லாம் நமக்கு வரக்கூடாத குணங்கள் என்கிறார் குமரகுருபரர்.

ஆக, பொய்யினால் எது கிடைத்தாலும் மயங்கிவிடக்கூடாது, கட்சி மாறிவிடக்கூடாது, உண்மையின்பக்கம் நிற்கவேண்டும்.

ஒருவர் பொய் சொல்லமாட்டேன் என்று தீர்மானித்துக்கொள்வது ஓர் அணிகலன் என்கிறது 'வளையாபதி'ப் பாடல் ஒன்று:

'பொய்யின் நீங்குமின், பொய்யின்மை பூண்டுகொண்டு
ஐயம் இன்றி அறநெறி ஆற்றுமின்
வைகல், வேதனை வந்துறல் ஒன்றுஇன்றிக்
கௌவைஇல் உலகு எய்துதல் கண்டதே.'

பொய் பேசாதீர்கள், ஏற்கெனவே பேசிக்கொண்டிருந்தால், இந்தக் கணத்தில் அதிலிருந்து விலகிவிடுங்கள், இனிமேல் 'நான் பொய் பேசமாட்டேன்' என்ற உறுதிதான் உங்களுடைய ஆபரணம்.

யோசித்துப்பாருங்கள், பொய் சொல்கிற ஒருவருக்கு ஏதேதோ வளங்கள் கிடைக்கும் என்பதுதான் எதார்த்தமான உண்மை. ஆனால், அந்தச் செல்வம் வேண்டாம் என்று ஒருவர் உறுதியுடன் இருக்கிறார் என்றால், அந்தக் கம்பீரமான அறிவிப்பைதான் ஆபரணம் என்கிறது இந்தப் பாடல்.

பொய் சொல்லாமலிருக்கும்போது, அடிக்கடி சலனங்கள் வரும், ஒரே ஒரு பொய் சொல்லலாமே, என்ன தவறு என்றெல்லாம் தோன்றும். மயங்கிவிடாதீர்கள், உறுதியோடு இருங்கள்.

எத்தனை நன்மைகள் கிடைத்தாலும், பொய் சொல்லாதீர்கள் என்கிறது நாலடியார்:

'தான்கெடினும், தக்கார்கேடு எண்ணற்க, தன்உடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க, வான்கலிந்த
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்.'

ஒருவன் தான் கெட்டாலும் பரவாயில்லை, தகுதி உள்ளவர்களுக்குக் கேடு நினைக்கக்கூடாது. பட்டினியால் உடல் வாடினாலும் பரவாயில்லை, அன்பில்லாமல் உணவு தருகிறவர்களுடைய சாப்பாட்டை உண்ணக்கூடாது, இந்த உலகமெல்லாம் பரிசு தருகிறேன் என்று யாராவது சொன்னாலும், பொய் கலந்த பேச்சு கூடாது.

அதாவது, ஐந்தாறு உண்மைகளுக்கு நடுவே ஒரு பொய் கலப்பதுகூட வேண்டாம். உண்மை என்றால் முழு உண்மைதான், அரைகுறை உண்மைகளெல்லாம் செல்லாது.

இதைச் சொல்வது எளிது, செய்வது கடினம். ஒருவேளை பொய் சொல்லியிருந்தால் முன்னேறியிருக்கலாமே என்று மனம் சிந்திக்குமே!

அந்த ஐயமே வேண்டாம், அறத்தின்பக்கம் நில்லுங்கள் என்கிறது மேற்கண்ட 'வளையாபதி'ப் பாடல். அதனால், உங்களுக்கு இந்தப் பிறவியில்மட்டுமல்ல, என்றென்றும் நன்மைதான், துன்பமில்லாத வீடுபேற்றை நீங்கள் அடைவீர்கள்.

'சத்யமேவ ஜெயதே' என்பார்கள். இதைத் தமிழில் 'வாய்மையே வெல்லும்' என்று மொழிபெயர்க்கிறோம்.

இந்த மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல என்கிறார் கண்ணதாசன். சத்தியம் என்ற வடசொல்லுக்கு, மனம், சொல், உடல் ஆகிய மூன்றாலும் நேர்மையாக நடத்தல் என்பது பொருள் என விளக்குகிறார்.

ஆக, பொய்யைச் சொல்லாமலிருந்தால் போதாது, அதன்படி நடக்காமலிருந்தால் போதாது, மனத்தாலும் நியாயமாக இருக்கவேண்டும். இப்படி நடக்கிறவர்களைதான் உலகம் மதிக்கும்.

இந்த மூன்றோடு எழுத்தையும் சேர்த்துக்கொள்கிறார் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை. உண்மையைதான் எழுதவேண்டும், அதுதான் கவிதை என்பது அவருடைய கட்சி:

'உள்ளத்துஉள்ளது கவிதை, இன்பம்
உருஎடுப்பது கவிதை,
தெள்ளத்தெளிந்த தமிழில், உண்மை
தெரிந்துஉரைப்பது கவிதை.'
 

இதை வைரமுத்து முழுமையாக ஏற்கவில்லை. அவரது வாதம்:

'கவிதைக்குப் பொய் அழகு.'

இங்கே வைரமுத்து சொல்லும் பொய், அறத்துக்கு எதிரான விஷயம் அல்ல, கவிஞர்கள் கற்பனை அழகுக்காகச் சில விஷயங்களை மிகைப்படுத்திச்சொல்வார்கள், அவற்றைப் பொய் என்று வரையறுக்க இயலாது, ஆனால் நிஜவாழ்க்கையில் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்பதால், கவிஞரின் கற்பனையில் தோன்றுகிற அந்த விஷயம், ஒரு ரசமான 'பொய்', அதைதான் கவிதைக்கு அழகு என்கிறார் வைரமுத்து.

பிற உயிர்களைக் கொல்லாதிருத்தல், பொய் சொல்லாதிருத்தல் இந்த இரண்டும்தான் அறங்கள் என்கிறார் நாமக்கல் கவிஞர்:

'கொல்லாமை, பொய்யாமை எனும் இவ்விரண்டில்
எல்லா நல்அறம்முற்றும் இடைநிற்றல் கண்டு,
சொல்லும் செயலாலும் மனதாலும் தொழுதோர்
நல்லோர்கள் பணிதந்த தமிழ்வாழ்க நாளும்.'

இங்கேயும் சொல், செயல், மனம் என்ற மூன்றும் வருவதைக் கவனியுங்கள், சொல்லாலும் செயலாலும் மனத்தாலும் தமிழைத் தொழுத நல்லவர்கள் அதன் அடியவர்களாகச் செயல்படுகிறார்கள் என்று சொல்லும் நாமக்கல் கவிஞர் தமிழை என்றும் வாழ்க என்று போற்றுகிறார். அதன் சிறப்புகளை விவரிக்கும்போது, மீண்டும் பொய்ஞ்ஞானத்தை இகழ்கிறார்:

'விஞ்ஞானம் அதனோடும் விளையாடி நிற்கும்,
மெஞ்ஞானம் அதைமட்டும் மிகநாடிக் கற்கும்,
பொய்ஞானம் வாதித்துப் புனிதத்தை இகழும்
அஞ்ஞானம் இல்லாமை அதுபெற்ற புகழாம்.'

நாமக்கல் கவிஞர் சொல்லும் அதே பொய்யாமை, கொல்லாமையைக் குறிப்பிடும் பழம்பாடலொன்று சிறுபஞ்சமூலத்தில் இருக்கிறது. நல்லவை எவை என்று சொல்லும் அந்தப் பாடலை எழுதியவர் காரியாசான்:

'பொய்யாமை நன்று, பொருள் நன்று, உயிர்நோவக்
கொல்லாமை நன்று, கொழிக்கும்கால் பல்லார்முன்
பேணாமை பேணும் தகைய, சிறிதுஎனினும்
மாணாமை மாண்டார் மனம்.'

பொய் பேசாமலிருப்பது நல்லது, நம்முடைய முயற்சியால் சம்பாதித்த பொருள் நல்லது, உயிர்கள் நோகும்படி அவற்றைக் கொல்லாமலிருப்பது நல்லது.

ஒரு விஷயம் நமக்குப் பிடிக்கிறது என்றால், அதை எல்லார்முன்னாலும் காட்டிக்கொள்ளாமலிருப்பது நல்லது, ஒரு விஷயத்தில் ஈடுபடவேண்டும் என்று துணிந்து இறங்கிவிட்டபிறகு, பழைய வாழ்க்கையின்மீது ஆசைப்படாமலிருப்பது நல்லது. அதாவது, புகை பிடிப்பதில்லை என்று தீர்மானித்தபிறகு, 'தினமும் ஒண்ணே ஒண்ணு' என்று நப்பாசைப்படக்கூடாது.

இது பொய்யாமைக்கும் பொருந்தும். 'எப்பவாச்சும் பொய் சொல்லுவாரு' என்று சொன்னாலே, அவரிடம் 'பொய்யாமை' குணம் இல்லையே!

நாட்டில் அரசாங்கம் ஏதேதோ சட்டங்களைப் போட்டு மக்களை வழிநடத்துகிறதே, 'பொய் பேசக்கூடாது' என்று ஒரு சட்டம் போடலாமே.

இந்த விஷயத்தில் பிறர் சட்டம் போட்டுப் பயனில்லை, உள்ளே இருக்கும் நீதிபதி விழித்தெழவேண்டும் என்கிறது திருக்குறள்:

'தன்நெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.'

ஒருவர் பொய் சொல்வது யாருக்கு வேண்டுமானாலும் தெரியாமல்போகலாம், அவருடைய நெஞ்சுக்கு நிச்சயம் தெரியும், மற்றவர்கள் அவரை மன்னித்தாலும், அது மன்னிக்காது, பொய் சொன்னதை நினைவுபடுத்தி அவரை வதைக்கும். அந்த அச்சம்தான், ஒருவரைப் பொய் சொல்லாத வாழ்க்கையை நோக்கி அனுப்பவேண்டும்.

இங்கே அச்சம் என்பது பொய் சொன்னதால் நமக்குத் தண்டனை கிடைத்துவிடுமோ என்கிற எண்ணம் அல்ல. கில்லாடித்தனமாகப் பொய் சொல்கிறவர்கள் சிக்கிக்கொள்ளமாட்டார்கள், இந்தத் தண்டனைகள் அவர்களை ஒன்றுமே செய்யாது.

ஆனால், பொய் சொல்லிவிட்டோமே என்கிற மன உளைச்சல் ஒரு மிகப் பெரிய தண்டனையாக அமையும், இனி பொய் சொல்லாமல் வாழவேண்டும் என்று எண்ணவைக்கும்.

பட்டுக்கோட்டையார் ஒரு சிறுவர் பாடலில் இவற்றை அழகாகத் தொகுத்துச் சொல்கிறார்:

'உன்னை எண்ணிப்பாரு,
உழைத்து முன்னேறு,
உண்மையைக் கூறு,
செம்மை வழி சேரு!
அன்புக்கு வணங்கு,
அறிந்தபின் இணங்கு,
பண்புடன் விளங்கு,
பசித்தவர்க்கு இரங்கு!
பேதங்கள் தீர்த்து,
பெருமையை உயர்த்து,
நீதியைக் காத்து,
நேர்மையைக் காட்டு!
பொன்மொழி கேட்டு,
பொய்மையை மாற்று,
பொறுப்புகள் ஏற்று,
பொதுப்பணி ஆற்று!’

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com