பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்-2

பாப்பாவை ஓடி விளையாடச் சொன்ன பாரதியார், 'காலை எழுந்தவுடன் படிப்பு' என்றார்.
Published on
Updated on
5 min read

பாப்பாவை ஓடி விளையாடச் சொன்ன பாரதியார், 'காலை எழுந்தவுடன் படிப்பு' என்றார்.

அவர் சொன்னது பாடப் புத்தகப் படிப்பை அல்ல. பொதுவான கல்வியை.

இரண்டும் ஒன்றுதானே?

பாடப் புத்தகங்கள் படிக்கப்படவேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், படிப்பு என்றால் அதுமட்டும்தானா?

கற்பதற்கு எத்தனையோ வகைப் புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்களுக்கு வெளியிலும் நிறைய கல்வி இருக்கிறது. ஓர் எழுத்தும் வாசிக்க, எழுதத் தெரியாமல், உலகை அறிந்தவர்களைப் பார்க்கிறோமே.

'காலை எழுந்தவுடன் படிப்பு' என்ற வாசகத்தை, அதிகாலையில் புத்தகத்தைப் பிரித்துப் படித்தால் புத்தியில் பாடம் நன்றாக ஏறும், அதன் மூலம் நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என்கிற பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம், தூங்கி எழுந்த கணம் தொடங்கி உன்னைச் சுற்றியிருக்கிறவர்களை வாசிக்கத் தொடங்கு என்கிற பொருளிலும் காணலாம்.

'இளமையில் கல்' என்பார்கள். இதை நல்லாதனார் எழுதிய திரிகடுகத்தில் ஒரு பாடலும் வலியுறுத்துகிறது:

'முந்தை எழுத்தின் வரவுஉணர்ந்து, பிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு, வந்த
ஒழுக்கம் பெருநெறி சேர்தலில் மூன்றும்
விழுப்ப நெறிதூரா ஆறு'

முதலில், எழுத்தை உணர்ந்துகொள்ளவேண்டும். அதாவது, படிக்கவேண்டும்.

அதன்பிறகு, தந்தை, தாயை வழிபடவேண்டும். 'அன்னையும் பிதாவும் முன்அறி தெய்வம்' என்ற பழமொழியைக் கல்விக்குப்பிறகு வைக்கிறது இந்தப் பாடல். 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என்ற வரிசையையும் மாற்றிக் கற்றலை முதலாவதாகப் போற்றுகிறது.

அன்னை, தந்தையை வணங்கும்போது என்ன கிடைக்கும்?

ஆசி கிடைக்கும், ஒழுக்கம் கிடைக்கும். அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம்.

அடுத்து, தாய், தந்தைக்கு இணையான உயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காட்டிய வழிகள் இருக்கின்றன, அவற்றைப் பின்பற்றவேண்டும்.

நம் முன்னே பல பாதைகள் இருக்கும்போது, அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம் உரிமைதான். சிலர் புதுப்பாதைகளை அமைத்து முன்னேறுவார்கள்.

அதே சமயம், ஒழுக்கம் என்று வரும்போது, ஏற்கெனவே பெரியோர் காட்டிய பாதைகளைப் பின்பற்ற வேண்டும். காலத்துக்கேற்ப ஒழுக்கம் மாறும் என்றாலும், சில அடிப்படை விஷயங்கள் மாறிவிடக்கூடாது.

ஆக, இளம்வயதில் கல்வி, தந்தை, தாய்மீது மரியாதை, பெரியோர் சொன்ன ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுதல். இந்த மூன்றும் சேர்ந்தால், உயர்வை நோக்கிச் செல்லும் பாதை தூர்ந்துபோகாது. அதாவது, அந்தப் பாதையில் தடைகள் இருக்காது, நிச்சயம் உயர்வோம்.

கவனியுங்கள், வெல்வோம் என்று சொல்லவில்லை. உயர்வோம் என்கிறார். என்ன வித்தியாசம்?

வெற்றி என்பதை வணிக வெற்றியாக மட்டும் சுருக்கிப் பார்க்கப் பழகிவிட்டோம். ஒருவர் நன்றாகச் சம்பாதிக்கிறார், நிறைய சொத்து வைத்திருக்கிறார், புகழோடு இருக்கிறார் என்றால் அவர் வென்றவர் என்கிறோம். அதுவே உயர்வு என்றும் கருதுகிறோம்.

உண்மையில், உயர்வு என்பது பல காரணங்களால் ஏற்படலாம். வணிக வெற்றி, பண உயர்வு என்பது அவற்றில் ஒன்று, அவ்வளவே.

பணம் நிறைய வைத்திருக்கும் ஒருவர் பண்பற்றவராக இருந்துவிட்டால், அவரை உயர்ந்தவர் என்று குறிப்பிடுவது பொருந்தாது. அதனால்தான் 'விழுப்ப நெறி' என்கிறது இந்தப் பாடல், 'வெற்றி நெறி' என்று சொல்லவில்லை.

'ஒழுப்பம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.'

இது திருக்குறள். ஒழுக்கமே உயர்வு தரும். அதனால், ஒழுக்கமானது உயிரைக் காட்டிலும் முக்கியம்!

அதென்ன 'ஒழுக்கம்', மிகவும் பொதுவான சொல்லாக இருக்கிறதே.

பொய் பேசாமல் இருப்பதுதான் ஒழுக்கமா? பிறருக்கு உதவுவதுதான் ஒழுக்கமா? பேராசையில்லாமல் இருப்பதுதான் ஒழுக்கமா?

இவையெல்லாம் ஒழுக்கங்கள்தான். ஆனால், இவைமட்டும்தான் ஒழுக்கம் என்றில்லை. அதற்குப் பல அறநூல்கள் பலவிதமான வரையறைகளை வழங்கியிருக்கின்றன.

உதாரணமாக, பெருவாயின்முள்ளியார் எழுதிய 'ஆசாரக்கோவை' என்ற நூலின் முதல் பாடல், எட்டுவிதமான ஒழுக்கங்களைக் குறிப்பிடுகிறது.

'ஆசாரம்' என்றாலே ஒழுக்கம்தான், 'கோவை' என்றால் தொகுப்பு, ஒழுக்கத்துக்குரிய கருத்துகளைத் தொகுத்துச் சொல்லும் இந்த நூலில், 'ஆசார வித்து', அதாவது, ஒழுக்கத்தின் விதைகள் என்று குறிப்பிடப்படும் அந்த எட்டு:

1. தனக்குப் பிறர் செய்த நன்றியை மறவாமல் இருத்தல்

2. பொறுமையோடு பணிசெய்தல்

3. இனிமையாகப் பேசுதல்

4. எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காமலிருத்தல்

5. நன்கு படித்தல், தொடர்ந்து படித்தல்

6. ஒப்புரவை அறிதல்

7. அறிவுடைமை

8. நல்லவர்களோடு பழகுதல்
 

'நன்றிஅறிதல், பொறையுடைமை, இன்சொல்லோ(டு)
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோ(டு)
ஒப்புரவுஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல்இனத்தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து.'

மற்றதெல்லாம் புரிகிறது, அதென்ன 'ஒப்புரவு'?

ஆத்திசூடி நினைவிருக்கிறதா? 'ஒப்புரவு ஒழுகு' என்று ஔவையார் எழுதிய அதே விஷயம்தான் இது.

ஒப்புரவு என்றால், உலக நடைமுறைகளைப் புரிந்துவைத்திருத்தல். அதன்படி நடத்தல். பிறர் நம்மைப் 'பழசு' என்று சொல்லி விடாதபடி பழகுதல்.

சில முதியவர்கள் இளைஞர்களுடன் சகஜமாகப் பழகுவதைப் பார்க்கிறோம், 'என்ன மச்சி சௌக்கியமா?' என்கிற ரேஞ்சுக்கு அவர்கள் தங்கள் பேரன் வயதுள்ளவர்களுடன் அவர்களுக்குத் தெரிந்த விஷயங்களைப்பற்றிப் பேசுவார்கள், புதுப் படங்களைப் பற்றி கமென்ட் அடிப்பார்கள், லோவெய்ஸ்ட் ஜீன்ஸ் அணிந்து கோல்ட் காஃபி உறிஞ்சிக்கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

ஒப்புரவு என்றால் சைட் அடிப்பதல்ல. 'நாங்கல்லாம் அந்தக் காலத்துல...' என்று ஒதுங்கியிருக்காமல் உலகத்தோடு கலந்துவிடுகிற பெரியவர்களின் குணத்தை ஓர் உதாரணமாகச் சொல்கிறோம். அதுபோல, உலக நடைமுறையை அறிந்து அதன்படி நடத்தலைதான் ஒப்புரவு என்கிறார்கள்.

சரி, ரோம்ல ரோமானியனா இருக்கணும், அமெரிக்கால அமெரிக்கனா இருக்கணும், அவ்ளோதானா ஒப்புரவு?

இன்னும் இருக்கிறது. திருவள்ளுவர் சொல்வதைக் கேளுங்கள்:

'இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன்அறி காட்சியவர்.'

தன்னுடைய கடமையை உணர்ந்தவர்கள், செல்வம் இல்லாதபோதும் ஒப்புரவிலிருந்து தளரமாட்டார்கள் என்கிறது இந்தக் குறள்.

ஒப்புரவு என்றால், உலகத்தோடு ஒட்டிவாழ்தல் என்றுதானே பார்த்தோம்? அதற்கும் பணத்துக்கும் என்ன சம்பந்தம்? திருவள்ளுவர் ஏன் இப்படிச் சொல்கிறார்?

அவரிடமே க்ளூ கேட்போம். அதே அதிகாரத்தின் முதல் குறள்:

'கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங்கொல்லோ உலகு.'

யாருக்காவது உதவி செய்துவிட்டு, அவர்கள் நம்மிடம் நன்றியோடு இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமே, பதிலுக்கு அவர்கள் நமக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறோமே, அதெல்லாம் நியாயமா?

இந்த வானம் நமக்கு மழையைத் தருகிறது. பதிலுக்கு நாம் வானத்துக்கு என்ன செய்கிறோம்? அது எதையாவது நம்மிடம் எதிர்பார்க்கிறதா?

அப்படிப் பலனை எதிர்பார்க்காமல் உதவுவதுதான் ஒப்புரவு என்று திருவள்ளுவர் நேரடியாகச் சொல்லவில்லை. ஆனால் அந்த அதிகாரத்தின் முதல் பாடலாக இதை வைத்து நமக்கு க்ளூ கொடுக்கிறார்.

தொடர்ந்து வாசித்தால், இன்னும் மூன்று குறள்கள்:

'ஊருணி நீர்நிறைந்தற்றே, உலகவாம்
பேரறிவாளன் திரு.'
'பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால், செல்வம்
நயனுடையான்கண் படின்.'
'மருந்துஆகித் தப்பா மரத்துஅற்றால், செல்வம்
பெருந்தகையாளன்கண் படின்.'

பெரிய அறிவை உடைய சிறந்தவனுடைய  செல்வம், ஊர்மக்கள் நீர் உண்கிற பொது நீர்நிலையைப்போன்றதாம், ஊருக்கு நடுவே பழுத்த மரத்தைப்போன்றதாம், மருந்து மரத்தைப்போன்றதாம்.

இதன் அர்த்தம், நீர்நிலையில் பலரும் நீர் உண்பார்கள், பழத்தைப் பலரும் பறித்துச் சாப்பிடுவார்கள், அதன் இலையை, பழத்தைச் சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டவர்கள் உடல் குணமாவார்கள், அதுபோல, இந்த ஒப்புரவாளர்களிடம் உள்ள செல்வம் பலருக்குப் பயன்படும், பலரும் பயன்பெறும்வகையில் அவர்கள் வாழ்வார்கள்.

இங்கேயும் ஒப்புரவு என்ற சொல் இல்லை, ஆனால் அதற்கான இலக்கணம் இருக்கிறது.

ஆக, ஒப்புரவு என்பது பிறருக்கு உதவுதல், அவர்களுக்காக வாழுதல்.

ஆனால், இதெல்லாம் இப்போ சரிப்படுமா? இப்படி இருந்தா நம்ம தலையில மிளகாய் அரைச்சுடமாட்டாங்களா?

அதற்கும் திருவள்ளுவர் பதில் சொல்கிறார்:

'ஒப்புரவினால் வரும் கேடுஎனின், அஃதுஒருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.'

பிறருக்கு உதவி செய்வதால் உனக்கு ஒரு கேடு வரும் என்றால், அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள். இன்னும் சொல்லப்போனால், உன்னையே விற்றுக்கூட அந்தக் கேட்டை வாங்கிக்கொள் என்கிறார் வள்ளுவர்.

காரணம், ஒப்புரவு என்ற குணம் கேட்டைக் கொண்டுவராது. மேல்பார்வைக்கு அது கேட்டைப்போலத் தோன்றலாம். ஆனால், அது உயர்வைமட்டுமே தரும். பிறருக்கு உதவுதல் எப்போதும் ஒருவரைக் கைவிடாது. இதுவும் திருவள்ளுவர் சொல்வதுதான்:

'புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற.'

ஒப்புரவைவிட ஒரு நல்ல விஷயம், இந்த உலகத்தில்மட்டுமல்ல, அந்தத் தேவர்கள் உலகத்திலும் கிடைக்காது என்கிறார் வள்ளுவர்.

அதனால்தான், ஒருவர் சான்றோராக இருக்கவேண்டுமென்றால், அவர் அவசியம் பெற்றிருக்க வேண்டிய ஐந்து தூண்களைச் சொல்லும்போது, அதில் ஒப்புரவையும் ஒன்றாகக் குறிப்பிடுகிறார் அவர்:

'அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு
ஐந்து சால்ஊன்றிய தூண்.'

சான்றாண்மை என்பது ஒரு கட்டடம் என்றால், அதைத் தாங்கும் ஐந்து தூண்கள்: பிறர் மீது அன்பு செலுத்துதல், குற்றம் செய்ய வெட்கப்படுதல், ஒப்புரவு/ உதவும் மனப்பான்மை, கண்ணோட்டம்/ இரக்ககுணம், உண்மையைமட்டுமே பேசுதல்.

யோசித்துப்பார்த்தால், இந்த ஐந்து தூண்களும் தனித்தனியே நில்லாமல், ஒன்றையொன்று ஆதரவாகக் காத்து நிற்பது புரியும். அன்பு இல்லாமல் உதவும் மனப்பான்மை வராது, இரக்கம் இல்லாமல் உதவமாட்டோம், கருணையுள்ளவர்கள் தங்கள் நலன் கருதிப் பொய் பேசமாட்டார்கள், குற்றம் செய்யமாட்டார்கள். எல்லாம் ஒன்றோடொன்று இணைந்தவை.

'ஒப்புரவுஅறிதலின் தகுவரவு இல்லை'

முதுமொழிக்காஞ்சி என்ற நூலில் மதுரைக்கூடலூர்கிழார் சொல்லும் வாசகம் இது. ஒப்புரவை அறிந்து பின்பற்றுவதைவிடத் தக்க செயல் வேறு எதுவும் இல்லையாம்.

ஒப்புரவின் முக்கியத்துவம் ஓரளவு புரிந்திருக்கும். இப்போது, அந்த ஆசாரக்கோவைப் பாடலுக்குத் திரும்பச் சென்று அந்த எட்டு 'ஆசார வித்து'களைப் பார்த்தால், இன்னொரு சந்தேகம் வருகிறது: கல்வி என்று தனியே சொல்கிறார், அறிவுடைமை என்று இன்னோர் இடத்தில் சொல்கிறார். கல்வியால்தானே அறிவு வரும்? இவற்றை இரண்டு வெவ்வேறு விஷயங்களாக ஏன் சொல்லவேண்டும்?

மறுபடியும் திருவள்ளுவரைதான் கேட்கவேண்டும். அவர் 'கல்வி' என்று ஓர் அதிகாரம் எழுதியிருக்கிறார், 'அறிவுடைமை' என்று இன்னோர் அதிகாரம் எழுதியிருக்கிறார். போதாக்குறைக்கு இப்படியும் எழுதுகிறார்:

'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.'

மணலில் தோண்டினால், மணற்கேணி நீராகப் பொங்கிவரும், அதுபோல, படித்தால் அறிவு ஊறும்.

ஆக, கல்வியால் அறிவு வரும், அதில் சந்தேகமில்லை. ஆனால் கல்வி வேறு, அறிவுடையவனாக இருத்தல் வேறு. அது கல்வியால்மட்டும்தான் வரும் என்று சொல்வதற்கில்லை, அனுபவத்தால் வரலாம், பெரியவர்கள் வழியைப் பின்பற்றுவதால் வரலாம்.

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.'

யார் எதைச் சொன்னாலும் சரி, உண்மை எது என்று ஆராய்ந்து காண்பது அறிவு. இது புத்தகத்தால் வருமா?

புத்தகத்தின் பலனும் பலனின்மையும், அதைப் படிக்கிறவர் கையில்தான் இருக்கிறது. இதையும் திருக்குறளே சொல்கிறது:

'கற்க கசடுஅறக் கற்பவை, கற்றபின்
நிற்க அதற்குத் தக.'

குறையில்லாமல் படிக்கவேண்டும், அதன்பிறகு, அதற்கேற்ப நடந்துகொள்ளவேண்டும். படித்தவுடன் மறந்துபோனால் கல்வி வரும், அறிவு வராது, ஒழுக்கம் வராது.

அதற்காக, 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகாது' என்று நூல்களை ஓரங்கட்டிவிடவேண்டியதில்லை. கல்வியின்மூலம்தான் நாம் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள இயலும். அதன் முக்கியத்துவத்தைப் பல பெரியோர்கள் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.

பாரதிதாசன் குழந்தைக்கு எழுதிய பாடலொன்று:

'நூலைப் படி, சங்கத்தமிழ்
நூலைப் படி, முறைப்படி
நூலைப் படி!'
எப்போது படிக்கவேண்டும்?
'காலையில் படி,
கடும்பகல் படி,
மாலை, இரவு, பொருள்படும்படி
நூலைப் படி!'
எப்படிப் படிக்கவேண்டும்?
'கற்பவை கற்கும்படி,
வள்ளுவர் சொன்னபடி,
கற்கத்தான் வேண்டும் அப்படி,
கல்லாதவர் வாழ்வதுஎப்படி?'
எதைப் படிக்கலாம்?
'அறம் படி, பொருளைப் படி,
அப்படியே இன்பம் படி!
அகப்பொருள் படி, அதன்படி
புறப்பொருள் படி, நல்லபடி!'


புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள எல்லாமே உண்மையா?

இல்லை. ஆனால், அவை பொய் என்பதை அறிவதற்காகவேனும் அதைப் படிக்கதான் வேண்டும்!

'பொய்யிலே முக்கால்படி,
புரட்டிலே கால்படி,
வையகம் ஏமாறும்படி
வைத்துள்ள நூல்களை ஒப்புவதுஎப்படி?
நூலைப் படி!'

புத்தகம் படிச்சா தூக்கம் வருதே!

பரவாயில்லை, சமாளித்துப் படிக்கத்தான் வேண்டும், அதுதான் இன்பம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே:

'தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப் படி,
அடங்கா இன்பம் மறுபடி
ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி,
நூலைப் படி!'

படிக்கத்தொடங்கும்போது சிரமம் இருக்கும், ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து படிக்கவேண்டும் என்று 'நீதிநெறி விளக்கம்' என்ற நூலில் குமரகுருபரர் சொல்லியிருக்கிறார்:

'தொடங்குங்கால் துன்பமாய், இன்பம் பயக்கும்,
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி.'

என்னது? கல்வி அறிவை அகற்றுமா? குழப்புதே!

இங்கே 'அகற்றுதல்' என்றால், 'நீக்குதல்' என்ற பொருள் இல்லை. 'அகலமாக்குதல்' என்று பொருள். நம்மிடம் இருக்கும் அறிவைக் கல்வி அகலமாக்கும், மடமையைக் கொல்லும், இன்பம் தரும்.

அதனால்தான், கல்வியைச் செல்வம் என்றே குறிப்பிடுவது நம் மரபாக இருக்கிறது. அதிலும், மற்ற செல்வங்களையெல்லாம்விடச் சிறந்த செல்வம்:

'கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு,
மாடுஅல்ல மற்றையவை!'

கல்விதான் ஒருவருக்குத் தாழ்வைத் தராத உயர்ந்த செல்வம், அதோடு ஒப்பிடும்போது மற்ற செல்வங்களெல்லாம் செல்வங்களே அல்ல என்கிறார் வள்ளுவர்.

ஔவையாரும் இதையே குறிப்பிட்டிருக்கிறார்:

'கைப்பொருள்தன்னின் மெய்ப்பொருள் கல்வி.'

கைவசம் உள்ளவைதான் செல்வம் என்று நினைக்காதீர்கள், உண்மையான செல்வம் நீங்கள் கற்ற கல்விதான்.

அதாவது, கசடுஅறக் கற்றுக்கொண்டு, அதற்குத் தக நிற்கும் கல்வி, அதனால் வரும் அறிவு, அதனால் வரும் ஒழுக்கம், அதுவே உண்மையான செல்வம்!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com