பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்-3

‘துஷ்டரைக் கண்டால் தூர விலகு’ என்று நம் ஊரில் பழமொழி உண்டு. ‘இனியவை நாற்பது’ எழுதிய பூதஞ்சேந்தனாரும் இதையேதான் சொல்கிறார்: ‘சலவரைச் சாரா விடுதல்இனிதே.'
Published on
Updated on
6 min read

தீயவர்களை என்ன செய்யலாம்?

‘துஷ்டரைக் கண்டால் தூர விலகு’ என்று நம் ஊரில் பழமொழி உண்டு. ‘இனியவை நாற்பது’ எழுதிய பூதஞ்சேந்தனாரும் இதையேதான் சொல்கிறார்: ‘சலவரைச் சாரா விடுதல்இனிதே.'

அப்படியானால் யாரைச் சேர்தல்இனிது?

புலவர்களைச் சேரவேண்டுமாம்!

உடனே, ஊரில் யார் கவிதை எழுதுகிறவர் என்று தேடவேண்டாம். புலவர் வேறு, கவிஞர் வேறு, புலமை கொண்ட சிலர் கவிதை எழுதலாம், அதற்காக எல்லாக் கவிஞர்களும் புலவர்கள் என்று பொருள் இல்லை.

புலவர்கள், அதாவது ஏதாவது ஒரு விஷயத்தில் சிறந்து விளங்குகிறவர்களின் சொல்லைப் போற்றவேண்டும். இதைச் சொல்லிவிட்டு, அடுத்த வரியில், ‘தகுதியால் வாழ்தல்இனிது’ என்கிறது இந்தப் பாடல்.

அதாவது, எல்லா உயிர்களும் அவரவர் தகுதியால், அவரவர் உரிமையைக் கொண்டு இங்கே வாழவேண்டும். இந்த உலகம் எல்லாருக்குமானது.

‘சலவரைச் சாரா விடுதல்இனிதே,

புலவர்தம் வாய்மொழி போற்றல்இனிதே,

மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்குஎல்லாம்

தகுதியால் வாழ்தல்இனிது!'

தீயவர்களை நெருங்காமலிருக்கவேண்டும் என்று சொல்லக் காரணம் என்ன? நெருங்கினால் என்ன ஆகும்?

மின்சாரக் கம்பியின்மீது ‘தொடாதே’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தொட்டுத் தெரிந்துகொள்வேன் என்று சொல்வது ஒருவிதம். இதற்குமுன் யாரோ தொட்டுத் தெரிந்துகொண்டதை மதிப்பேன் என்று சொல்வது இன்னொருவிதம். தீயவர்களை நெருங்காதே என்கிற அறிவுரை அப்படிப்பட்டதுதான்.

தீயவர்கள் எப்படி இருப்பார்கள்? சினிமாவில் வருவதுபோல் வில்லன் வேஷத்தோடு இருப்பார்களா?

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது அவர்கள் விஷயத்தில் உண்மையில்லை என்கிறார் திருவள்ளுவர். ‘முகத்தில் சிரிப்பு இருக்கும், ஆனால் உள்ளே கெட்ட எண்ணம்தான். அத்தகைய வஞ்சர்களைக் கண்டு அஞ்சி விலகிவிடுங்கள்.'

‘முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா

வஞ்சரை அஞ்சப்படும்.'

திருவருட்பாவில் வள்ளலாரின் கோரிக்கை இது:

‘மனம்மெலியாமல், பிணிஅடையாமல், வஞ்சகர்தமை மருவாமல்,

சினம்நிலையாமல், உடல்சலியாமல் சிறியனேன்உற மகிழ்ந்துஅருள்வாய்.'

முதலில், மனம் தளரக்கூடாது. அது தளர்ந்துவிட்டால், எப்பேர்ப்பட்ட உடல் இருந்தாலும் தொடர்ந்து பணிசெய்ய இயலாது, வெற்றியும் வராது. ஆகவே, மனம்மெலியாமல் இருக்கவேண்டும் என்று கேட்கிறார்.

அதற்காக, உடலை விட்டுவிட இயலுமா? அதுவும் பிணியில்லாமல் இருந்தால்தான் நம் வேலைகளைக் கவனிக்கலாம். ஆகவே, நோய்கள் தாக்காமல் இருக்கவேண்டும், உடல் சலிக்காமலிருக்கவேண்டும் என்கிறார்.

இந்த இரண்டும் இருந்தாலும், தவறான நண்பர் கூட்டம் அமைந்துவிட்டால், நாம் எதையும் உருப்படியாகச் செய்வோமா என்பது சந்தேகம்தான். ஆகவே, ‘வஞ்சகர்களைச் சேராமல்’ இருக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார், இதன் பொருள், நம் கனவுகளை ஊக்குவிக்கிற, நாம் மேலும் சிறப்பாகச் செயல்படச்செய்கிற நல்லவர்களைச் சேரவேண்டும்.

அடுத்து, ‘சினம்நிலையாமல்’ என்கிறார், எத்தனை அழகான பயன்பாடு!

‘சினம்வராமல்’ என்றால், கோபமே வரக்கூடாது என்று பொருள். அது சிலருக்குச் சாத்தியம், பலருக்குச் சாத்தியமில்லை. ஆகவே, சினம் வந்தாலும், அது நிலைக்காமல் இருக்கவேண்டும் என்கிறார் வள்ளலார்.

நாலடியாரில் ஒரு பாடல், யார் யாருக்கு வருகிற கோபம் எவ்வளவு நேரம் இருக்கும் என்று விவரிக்கிறது.

தண்ணீரைச் சுடவைக்கிறோம், அது கொதிக்கிறது. அடுப்பை அணைத்துவிடுகிறோம். அந்தத் தண்ணீர் ஆறிப்போய்ப் பழையபடி மாறிவிடுகிறது.

அதுபோல, சான்றோருக்குக் கோபம் வந்தாலும், அது தானே தணிந்துவிடுமாம். வள்ளலார் ‘சினம்நிலையாமல்’ என்று சொன்னதுபோல.

மற்றவர்களுக்குக் கோபம் வந்தால், தீராது, அப்படியே மனத்தில் இருக்கும்:

‘நெடும்காலம் ஓடினும் நீசர் வெகுளி,

கெடும்காலம் இன்றிப் பரக்கும், அடும்காலை

நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே

சீர்கொண்ட சான்றோர் சினம்.'

இதையே ‘மூதுரை’யில் ஔவையாரும் சொல்கிறார். ஆச்சர்யமான விஷயம், அவரும் தண்ணீரைதான் உவமையாகப் பயன்படுத்துகிறார்.

சிலர் கோபப்படுவார்கள், மறுபடி சேரமாட்டார்கள், கல் உடைந்ததைப்போல.

சிலர் கோபப்படுவார்கள், மறுபடி சேர்ந்துவிடுவார்கள், தங்கம் உடைந்ததைப்போல, உருக்கி ஒட்டவைத்துவிடலாம்.

ஆனால், சான்றோரின் கோபம், வில்லை எடுத்துத் தண்ணீரில் அம்பு எய்தாற்போன்றது என்கிறார் ஔவையார்.

தண்ணீரில் அம்பை எய்தால், ஒரு நொடி தண்ணீர் விலகும், மறுநொடி சேர்ந்துவிடும், பழையபடி தண்ணீர் ஓடும். அதுபோல, சான்றோர் கோபத்தைச் சட்டென்று மறந்து பழையபடி பழகுவார்கள்.

‘கற்பிளவோடு ஒப்பர் கயவர், கடும்சினத்துப்

பொன்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே, வில்பிடித்து

நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே,

சீர்ஒழுகும் சான்றோர் சினம்.'

இவ்வளவு ஏன், ஔவையார் ‘ஆத்திசூடி’யில் ‘ஆறுவது சினம்’ என்று சொன்னது எல்லாருக்கும் தெரியுமே. கோபப்படலாம், ஆனால் அந்தக் கோபம் ஆறிவிடவேண்டும், எப்போதும் இருக்கக்கூடாது.

கோபம் வந்தவுடன் ஆறிவிட்டால் அதனால் என்ன பிரயோஜனம்?

வந்தவுடன் ஆறவேண்டும் என்று அவசியமில்லை, கோபத்துக்குக் காரணமான விஷயம் சரியானவுடன் ஆறினால் போதும்.

ஒருவர் ஏதோ தவறு செய்கிறார். இன்னொருவருக்கு அவர்மேல் கோபம்.

உடனே, தவறு செய்தவர் அதைத் திருத்திக்கொண்டுவிடுகிறார். இப்போது, கோபம் கொண்டவர் அந்தக் கோபத்தை விடுவதுதான் முறை. ‘நீ அப்போ தப்புச் செஞ்சியே’ என்று முறைத்துக்கொண்டிருப்பதால் பலன் இல்லை. வந்த சினம், அதன் தேவை தீர்ந்ததும் ஆறவேண்டும்.

ஆக, கோபம் என்பது தவறில்லை, அது தணியாமல் இருப்பதுதான் தவறு.

சரியான நேரத்தில் கோபம் வரவேண்டும், ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ என்பதுபோல்தான் அதுவும், ’ரௌத்திரம் பழகு’ என்றார் பாரதியார். குணம் என்கிற குன்றின்மீது ஏறி நிற்பவர்களுக்கும் கோபம் வரும் என்றார் வள்ளுவர்.

‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பார்கள். அதுபோல, இந்தக் குணக்குன்றானவர்கள் அவசியமான காரணங்களுக்காகக் கோபப்பட்டால், எதிரே நிற்பவர்களால் ஒரு கணம்கூட அதைத் தாங்க இயலாது!

‘குணம்என்னும் குன்றுஏறி நின்றார், வெகுளி

கணமேயும் காத்தல் அரிது!’

கோபப்படவேண்டியவற்றுக்குக் கோபப்படலாம். அதற்காக எப்போதும் கோபப்பட்டுக்கொண்டிருந்தால், உறவுகள் கெட்டுப்போகும். ஒருவேளை நம்பக்கம் நியாயமே இருந்தாலும்கூட, அதைச் சொல்லும்விதத்தில் சொல்கிற பக்குவம் கோபத்தோடு பொருந்தாது, கண்மண் தெரியாமல் எதையாவது பேசிவிட்டுப் பிறகு வருத்தப்படுவோம்.

ஆங்கிலத்தில் ‘Winning a battle, but losing the war’ என்பார்கள். சிறு சண்டையில் வெல்வது, பெரிய போரைக் கோட்டை விடுவது. கோபமும் அப்படிதான், உடனடி வெற்றியைத் தரும், ஆனால் தொலைநோக்கோடு பார்த்தால், நாம் கோபப்பட்டுப் பேசிய நபரோடு அதேபோல் நம்மால் உரையாடவே இயலாது. இது எப்பேர்ப்பட்ட வருத்தம்!

ஒரு பையன் எல்லாரிடமும் கோபப்படுவான். பிறகு சட்டென்று புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்பான்.

அவனுடைய தந்தைக்கு அவனை எண்ணி மிகவும் கவலை, ‘இப்படி எதுக்கெடுத்தாலும் கோவப்படாதே’ என்று அறிவுரை சொன்னார்.

‘அதான் அப்புறமா மன்னிப்புக் கேட்டுடறேனே’ என்றான் மகன்.

தந்தை கேட்டார், ‘மன்னிப்புக் கேட்டா ஆச்சா?'

‘வேற என்ன செய்யணும்?'

‘கோவப்படாம இருக்கணும்.'

‘அதெல்லாம் என்னால முடியாது’ என்று மகன் முறைத்தான். அவனுக்கு விஷயத்தை ப்ராக்டிகலாக விளக்கத் தீர்மானித்தார் தந்தை. மரக்கட்டை ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார், நூறு ஆணிகள், ஒரு சுத்தியலையும் கொடுத்து, ‘இஷ்டம்போல எங்க வேணும்ன்னாலும் அடிச்சுக்கோ’ என்றார்.

பையனும் ஆணிகளை அடித்துவிட்டான். ‘அடுத்து என்ன செய்யணும்?'

இப்போது, அதே சுத்தியலின் பின்பகுதியை வைத்து, அந்த ஆணிகளைப் பிடுங்கச் சொன்னார் தந்தை. பையனும் பிடுங்கினான்.

அந்தக் கட்டையைக் காட்டித் தந்தை சொன்னார், ‘ஆணி அடிச்சே, உடனே பிடுங்கிட்டே, சரியாப்போச்சா?’ என்றார்.

‘அதெப்படி? கட்டையில இத்தனை ஓட்டை விழுந்திருக்கே!'

‘அந்தமாதிரிதான் நீ கேட்கிற மன்னிப்பும்’ என்றார் தந்தை, ‘அது ஆணியைப் பிடுங்கும், ஓட்டையை அடைக்குமா? நீ ஒவ்வொருமுறை கோவப்படும்போதும் யார் மனசுலயோ ஓட்டை போடறே, அதை அடைக்கறது ரொம்பக் கஷ்டம்!'

இந்தக் கதையில் வரும் தந்தை சொல்லாத ஒரு விஷயம், அத்தனை ஆணிகளை அடிப்பதற்காக வீணாக்கிய ஆற்றல், அது திரும்பக் கிடைக்குமா?

வள்ளுவர் சினத்தைப்பற்றிப் பேசும்போது, ‘நிலத்தறைந்தான் கை’ என்கிறார். கோபத்தில் நிலத்தை அறைந்தால், நிலத்துக்கா வலிக்கும்? அறைந்தவனுக்குதானே வலிக்கும்? அதுபோலதான், பிறர்மீது கோபப்படுகிறவன் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்கிறான்:

‘சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு,

நிலத்துஅறைந்தான் கை பிழையாதுஅற்று.'

கோபப்படுவதால் வீணாகும் ஆற்றல் ஒருபக்கமிருக்க, மன்னிப்புக் கேட்பதால் இன்னும் ஆற்றல் வீணாகும். எப்படிக் கேட்பது என்று தயங்கி, வெட்கப்பட்டு, அவர்களிடம் பேசி, அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தவித்து… ஒரு நொடியில் பேசிவிட்ட சொல்லுக்கு மன்னிப்புக் கேட்கப் பல நிமிடங்களும் மன உளைச்சலும் வீணாகும்.

அப்போதும், கோபத்துக்கு ஆளானவர்கள் அந்த மன்னிப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வார்களா என்றால், சந்தேகம்தான். என்னதான் வாயால் சிரித்தாலும், சுடுசொல் மனத்தில் நிற்குமே! வள்ளுவர் சொன்னதுபோல்,

‘தீயினால் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே

நாவினால் சுட்ட வடு!'

சிலர் மன்னிப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள், மன்னிப்பே கேட்காவிட்டாலும் ஏற்றுக்கொள்வார்கள், அவர்களுக்கு நல்லதையே செய்வார்கள். இதையும் திருவள்ளுவர் சொல்கிறார்:

‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்,

என்ன பயத்ததோ சால்பு!'

நமக்கு ஒருவன் தவறு செய்துவிட்டான் என்றால், அவனுக்குக்கூட நல்லதையே செய்யவேண்டும், அதுதான் நல்ல பண்பு.

ஆகவே, நம் கோபத்துக்கு, அதனால் அவர்கள் மனத்தில் ஏற்படுத்திய காயத்துக்கு மன்னிப்புக் கேட்கத் தயங்கவேண்டியதில்லை, ஏற்றுக்கொள்வது அவர்கள் பெருந்தன்மை, கேட்கவேண்டியது நம் கடமை.

இப்படித் தயங்கித் தயங்கி மன்னிப்புக் கேட்கிறவர்கள்கூடப் பரவாயில்லை, சிலர் ‘மன்னிப்பு, தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை’ என்பார்கள், ‘இந்த விஷயத்துல என்மேல தப்பு இல்லையே, நான் ஏன் மன்னிப்புக் கேட்கணும்?’

தான் தவறே செய்யாவிட்டாலும், தவறுசெய்தவர்மீது கோபப்பட்டது ஒரு தப்புதான், அதற்காக மன்னிப்புக் கேட்கலாமே, முறைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால், எதிரில் உள்ளவன் உங்கள் எதிரி அல்ல, அந்தக் கோபம்தான் உங்கள் எதிரி!

இதுவும் திருக்குறள்தான்:

‘நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற?'

சிரிப்பையும் மகிழ்ச்சியையும் சினம் கொன்றுவிடும், அந்தப் பகை நமக்கு வேண்டாமே.

அவ்வளவு ஏன், கோபப்படுகிறவர்களுடைய வீட்டு வாசல்படியையே மிதிக்காதீர்கள் என்கிறார் உலகநாதர். அவருடைய ‘உலகநீதி’யிலிருந்து ஒரு பாடல்:

‘சினம்தேடி, அல்லலையும் தேடவேண்டாம்,

சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல்வேண்டாம்.’

கவனியுங்கள், ‘நம்மீது கோபப்படுகிறவர்கள் வீட்டு வாசலை மிதிக்காதீர்கள்’ என்று பாடலில் இல்லை. அவர்கள் யார்மீது கோபப்பட்டாலும் சரி, அவர்களைவிட்டுச் சற்று விலகியே இருங்கள்!

நியாயமான காரணங்களுக்காக ஒருவேளை கோபப்பட்டாலும், யார்மீது கோபப்படுகிறோம் என்பதைக் கவனிக்கவேண்டும்.

’எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?’ என்ற பழமொழி உண்டு. அம்பு தைத்துவிட்டது என்றால், அம்பின்மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்? எய்தவன் அல்லவா அதற்குக் காரணம்?

அம்பின்மீது நாம் கோபப்படுவது ஏன் என்றால், மேலோட்டமான பார்வைக்கு அதுதான் தெரிகிறது. ஆகவே, ‘இந்த அம்பை ஒடிச்சுப் போட்டுட்டா பிரச்னை சரியாகிடும்’ என்றே தோன்றுகிறது. எய்தவனிடம் இன்னும் பல அம்புகள் இருப்பது தெரிவதில்லை.

அலுவலகமொழியில் இதனை ‘Root Cause Analysis' என்பார்கள், மூலகாரணம் எது என்று தேடிக் கண்டுபிடித்தல், அதன்பிறகு, அதைத் தாக்குதல், கண்ணுக்குத் தென்படுகிற முதல் விஷயத்தை அல்ல.

‘நீதிநூல்’ என்ற தொகுப்பில் வேதநாயகம்பிள்ளை எழுதிய ஒரு பாடல்:

‘பைதலே எய்தல் ஆதிப்பரன்செயலாம், அப்பைதல்

செய்தவர் தமைச் சினத்தல் சினவரா, தன்மேல் கல்லைப்

பெய்தவன்தனை விட்டு அக்கல் பிளந்திடப் பொரலும், கையால்

எய்தவன்தனை விட்டு அம்பை முனிதலும் ஏய்க்குமாலோ!’

நமக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்றால், அந்தக் கஷ்டத்தைத் தந்தவன்மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்? அவனால் அதற்குக் காரணம்?

உங்கள்மீது ஒரு கல் வந்து விழுந்தால், அந்தக் கல்லைப் பிளந்து பழிதீர்த்துக்கொள்வீர்களா? எவனோ உங்கள்மீது அம்பு எய்தால், அந்த அம்பின்மேல் கோபப்படுவீர்களா?

அதுபோல நமக்கு வரும் கஷ்டத்துக்கும் இன்பத்துக்கும் இறைவன் பொறுப்பு. மற்றவர்கள் என்ன செய்தாலும் அவர்கள்மீது கோபம் வேண்டாம்.

சுருக்கமாகச் சொன்னால், யார்மீதும் கோபப்படாதீர்கள் என்கிறார் வேதநாயகம்பிள்ளை.

இந்தத் தத்துவமெல்லாம் நமக்குச் சரிப்படுமா? யாராவது ஒரு தவறு செய்தால் அவர்கள்மேல் கோபம் வருகிறது, என்ன செய்யலாம்?

குறைந்தபட்சம், அதை உடனே காட்டாமல் உள்ளே வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார் திருவள்ளுவர். அறிவுள்ளவர்கள் அப்படிதான் செய்வார்களாம்.

கோபம் என்பதே வெளிப்படையாகக் காட்டுவதற்குதானே? அதை உள்ளே வைத்துக்கொண்டிருந்து என்ன பிரயோஜனம்?

ஒருவர் நமக்குக் கெடுதல் செய்த அந்தக் கணத்திலேயே அவர்கள்மீது கோபப்படுவது புத்திசாலித்தனம் இல்லை. அப்போது சூழல் நமக்குச் சாதகமாக இல்லாமலிருக்கலாம். அல்லது, உண்மையிலேயே நம்மீது தவறு இருக்கலாம்.

ஆகவே, அந்தக் கோபத்தை உள்ளே வைத்துக்கொள்ளவேண்டும், அதைத் தீர்க்க என்ன செய்வது என்று யோசிக்கவேண்டும், சரியான தருணத்தில் அதைத் தீர்த்துக்கொள்ளவேண்டும்.

இதன் அர்த்தம் என்ன?

வாத்தியார் ஒரு பையனைத் திட்டுகிறார், ‘பரீட்சைல ஃபெயிலாகியிருக்கியே, உனக்கு வெக்கமில்லையா? நீயெல்லாம் எதுக்குப் பள்ளிக்கூடத்துக்கு வர்றே?’

பையனுக்குக் கோபம். ஆனால், அதைக் காட்ட இயலுமா? வாத்தியார் பின்னிவிடுவாரே.

ஆகவே, கோபத்தை உள்ளே வைத்துக்கொள்கிறான், யாருக்கும் தெரியாமல் வாத்தியாரின் சைக்கிளில் காற்றைப் பிடுங்கிவிட்டுவிடுகிறான். கேட்டால், ‘கோபத்தை உள்ளே வெச்சுக்கோ, சரியான நேரத்துல பயன்படுத்து-ன்னு திருவள்ளுவர்தான் சொன்னார்’ என்கிறான்.

‘கோபத்தை உள்ளே வெச்சுக்கோ’ என்று திருவள்ளுவர் சொல்வதன் நோக்கம் இதுவாக இருக்காது என்று தோன்றுகிறது.

இந்தக் குறள் ‘காலம் அறிதல்’ என்ற அதிகாரத்தில் வருகிறது. அதாவது, நேரம் பார்த்துச் செயல்படுதல்.

வாத்தியார் ‘ஏண்டா ஃபெயிலானே?’ என்று திட்டும்போது, மாணவன் வெளிப்படையாகக் கோபப்பட இயலுமா? அது கோபத்துக்கு ஏற்ற நேரமா?

அவன் நிஜமாகவே தேர்வில் தோல்வியடைந்திருக்கிறான். அதைதான் அவர் சொல்கிறார். ஆகவே, கோபத்தைக் காட்டும் நேரம் அதுவல்ல.

அந்தக் கோபத்தை உள்ளே வைத்துக்கொண்டு நன்றாகப் படிக்கவேண்டும், அடுத்த தேர்வில் வெற்றியடையவேண்டும், அப்போது அவர் முன்னே சென்று, ‘அன்னிக்கு என்னவோ திட்டினீங்களே, இந்த மார்க் போதுமா? இன்னும் வேணுமா?’ என்று கேட்கவேண்டும். அன்றைய கோபத்தை வெளிப்படுத்துவதற்கு இதுதான் சரியான நேரம்.

இங்கே அந்த மாணவனுக்கு ஆசிரியர்மீது உள்ள கோபம், சரியானது. ஆனால் அந்தக் கோபம் அவரை அடிக்கவேண்டும், அவருடைய பொருள்களுக்குச் சேதம் விளைவிக்கவேண்டும் என்று செல்லாமல், அவர்முன்னே வெல்லவேண்டும் என்கிற திசையில் சென்று நன்மை தந்திருக்கிறது.

‘பொள்ளென ஆங்கே புறம்வேரார், காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளியவர்.’

ஆனால், எல்லா மாணவர்களுமா இப்படி இருந்துவிடுகிறார்கள்? யாராவது ஒரு பையன் வாத்தியார் திட்டினார் என்று அவர்மீது கோபப்பட்டு அவரை அடிக்கக் கிளம்பிவிட்டால்?

‘பிரச்னையில்லை, நீங்கள் நல்லவராக இருந்தால், மற்றவர்கள் கோபம் உங்களைப் பாதிக்காது’ என்கிறது நாலடியார்.

‘என்னங்க சொல்றீங்க? அவன் பார்க்கறதுக்குப் பெரிய முரடனா இருக்கான், வாத்தியார் நோஞ்சானா இருக்காரே, அவன் அடிச்சா இவர் என்ன ஆவார்?’

‘கவலை வேண்டாம், கலப்பை வயலை உழும், ஆனால் அங்கே இருக்கிற புல்லை அதனால் எதுவும் செய்ய இயலாது, அதுபோலதான் நல்லவர்கள்மீது கெட்டவர்கள் காட்டும் கோபமும்!’

‘கொல்லை இரும்புனத்துக் குற்றியடைந்த புல்

ஒல்காவே ஆகும் உழவர் உழுபடைக்கு,

மெல்லியரே ஆயினும், நற்சார்வு சார்ந்தார்மேல்

செல்லாவாம் செறார் சினம்!’

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com