பெருநகரங்களின் எல்லா மூலைகளையும் கடன் தருவோர் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
வீடு வாங்கக் கடன், வாகனம் வாங்கக் கடன், படிக்கக் கடன், கல்யாணம் செய்துகொள்ளக் கடன், ஊர் சுற்றிப்பார்க்கக் கடன், வீட்டு உபயோகப்பொருள்களை வாங்கக் கடன்... அனைத்துக்கும் கடன் கிடைக்கும், வங்கிக்குள் கால் வைத்தால் போதும்.
மேல்நாட்டிலிருந்து இங்கே வந்திருக்கும் இந்தக் கடன் கலாசாரத்தை நம் முன்னோர்கள் எப்படிப் பார்த்திருப்பார்கள்?
'தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்,
வேளாளன் என்பான் விருந்துஇருக்க உண்ணாதான்,
கோளாளன் என்பான் மறவாதான், இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது!'
திரிகடுகம் நூலில் வரும் பாடல் இது. நல்லாதனார் இயற்றியது.
'தாளாளன்' என்றால், ஊக்கமுள்ளவன் என்று பொருள். அப்படிப்பட்டவர்கள் யாரிடமும் கடன் வாங்காமல் வாழ்வார்கள்.
அடுத்து, வேளாளன், அதாவது, உழவன், இல்லையா?
ம்ஹூம். வேளாளன் என்றால், வேள்+ஆளன், 'வேள்' என்பதற்குப் பல பொருள்கள் உண்டு, இங்கே அருள் செய்பவன், உதவி செய்பவன் என்ற பொருள். அப்படிப்பட்டவன் வீட்டில் விருந்தினர் இருக்கும்போது அவர்களை விட்டுவிட்டுத் தான் உண்ணமாட்டான்.
மூன்றாவது, கோளாளன், அதாவது, பல விஷயங்களை மனத்தில் கொண்டு சிந்திக்கிறவன் தான் கேட்டவற்றை மறக்கமாட்டான். இந்த மூவருக்கும் உறவாக இருப்பது இனியது!
‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற வாசகம் மிகவும் பிரபலம். ஆனால், அது கம்பர் எழுதியதல்ல, வேறொருவர் எழுதிய தனிப்பாடல் வரி.
ஆக, கடன் வாங்குவது சிரமம் தரும், கடனின்றி வாழ்வதே சிறப்பு.
ஆனால், ஒரே ஒரு சூழலில் கடன் வாங்கலாம் என்கிறது பழமொழி நானூறு. எப்போது?
ஒருவர் பெரிய வள்ளல். வருபவர்களுக்கெல்லாம் வாரி வழங்குகிறவர், அவர்களுடைய முகம் மலர்வதைக் கண்டு மகிழ்கிறவர்.
அவருடைய வீட்டுக்குத் தினமும் வறியவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள், பலவிதமான உதவிகளைப் பெற்றுச் செல்வார்கள்.
ஒருகட்டத்தில், அவருடைய செல்வமெல்லாம் தீர்ந்துவிட்டது. இனிமேல் வருகிறவர்களுக்குத் தருவதற்கு எதுவும் இல்லை.
இப்போது, அவர் என்ன நினைக்கவேண்டும்? ‘பின்னால் வசதி வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று உதவி செய்வதை நிறுத்திவிடவேண்டுமா?
இல்லை, கடன் வாங்கியேனும் செய்த உதவியைத் தொடரவேண்டும் என்கிறார் முன்றுரையரையனார்:
‘அடர்ந்து வறியராய் ஆற்றாதபோழ்தும்
இடம்கண்டு அறிவாம் என்றுஎண்ணி இராஅர்
மடம்கொண்ட சாயல் மயில்அன்னாய், சான்றோர்
கடம்கொண்டும் செய்வார் கடன்.'
இந்தப் பாடலில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது, ‘கடன் வாங்கியாவது கடனைச் செய்யவேண்டும்’. அதென்ன இரண்டு கடன்?
தமிழில் கடன் என்ற சொல்லுக்குக் கடமை என்ற பொருள் உண்டு. சொல்லப்போனால், வங்கிக் கடன் என்பதுகூட, திருப்பிச் செலுத்தவேண்டிய கடமைதானே?
தன்னை நம்பி வருகிற வறியவர்களுக்கு உதவுவது ஒருவருடைய கடமை (கடன்), அதைச் செய்வதற்காக அவர் பிறரிடம் கடன் பெறுகிறார்.
ஆனால், இப்படிச் செய்தால் ஏமாந்துபோவோமே என்று யோசித்தால், அதற்கும் ஒரு முன்னோர் வாசகம் இருக்கிறது, ‘தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தருமமும்.'
குழப்புகிறதே, கடன் வாங்கலாமா, கூடாதா?
ஒரு நல்ல விஷயம் நடப்பதற்குப் பணம் தடையாக உள்ளபோது, பின்னர் நம்மால் அதைத் திருப்பித்தர இயலும் என்று நிச்சயமாகத் தெரிந்தால், கடன் வாங்கலாம். மற்றபடி சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சக்திக்கு மீறிக் கடன் வாங்கும் பழக்கம் ஆபத்தையே தரும். இதை நாம் கண்ணெதிரே பார்க்கிறோம்.
சரி, யாராவது கடன் கேட்டால் கொடுக்கலாமா?
அதற்கு, இதே விதிமுறையைத் திருப்பிப்போடவேண்டும்: அவர்கள் கடனைத் திருப்பித் தருவார்கள் என்று நிச்சயமாகத் தெரிந்தால் தரலாம், அதைக் கொண்டு அவர்கள் ஒரு நல்ல விஷயத்தைச் செய்யப்போகிறார்கள் என்று தெரிந்தால் தரலாம்.
ஆனால், அப்படித் தந்துவிட்டுச் சும்மா இருந்துவிடக்கூடாது. ‘அவர்களே திரும்பத் தருவார்கள்’ என்று நினைக்கக்கூடாது, ‘எப்படிக் கேட்பது?’ என்று தயங்கக்கூடாது, அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் கடன் நேரத்துக்குத் திரும்பி வரும்.
இதைக் குறிப்பிடும் அழகான பழமொழி வாசகம் ஒன்று, ‘கேளாது கெட்டது கடன்’. அதாவது, ‘எப்போது திரும்பத் தருவாய்?’ என்று கேட்கக் கூச்சப்பட்டுக்கொண்டிருந்தால், கடன் திரும்பி வராது.
பணக்கடன் இருக்கட்டும், மற்ற கடன்களைக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
புறநானூறில் பொன்முடியார் எழுதிய அழகான இந்தப் பாடல் பலவிதமான கடன்களைப் பட்டியலிடுகிறது:
‘ஈன்று புறம்தருதல் என்தலைக் கடனே,
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே,
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே,
நல்நடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறுவாள் அரும்சமம் உருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!’
ஒரு வீரனுடைய தாய் சொல்கிறாள்:
குழந்தையைப் பெற்றுப் பாதுகாத்து வளர்ப்பது என்னுடைய கடமை.
அவனுக்கு உரிய பண்புகளைச் சொல்லித்தந்து சான்றோனாக ஆக்குவது அவன் தந்தையின் கடமை.
இங்கே சான்றோன் என்ற சொல்லுக்குச் சிறந்தவன்/அறிஞன் என்பதுபோன்ற பொருள்களை எடுத்துக்கொள்ளாமல், வீரன் என்ற பொருளைக் கொண்டு வாசிப்பது சிறப்பு. காரணம், அடுத்த வரி: போருக்கு ஏற்ற நல்ல வேலை வடித்துக்கொடுப்பது கொல்லருடைய கடமை. ஆக, அந்த வேலை வைத்து அவன் போர் செய்வதற்கான கலையைச் சொல்லித்தரவேண்டியது தந்தையின் கடமையாகிறது.
ஒருவன் என்னதான் வீரனாக இருந்தாலும், அவன் வேலை பார்க்கிற மன்னன் சரியாக இல்லையென்றால், கெட்ட நோக்கத்துக்குத் துணைபோகிறவனாகிவிடுவான். ஆகவே, அவன் நல்லவழியில் நடப்பதை உறுதிசெய்யவேண்டியது, அந்நாட்டை ஆளும் அரசனின் கடமை.
அதே புறநானூறில் மோசிகீரனாரின் பாடல் அரசனின் கடமையை விளக்கமாகச் சொல்கிறது:
‘நெல்லும் உயிர்அன்றே, நீரும் உயிர்அன்றே,
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்,
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே.’
ஒரு நாட்டைக் காப்பாற்றுவது என்ன? அவர்கள் சாப்பிடும் உணவா? அல்லது, அவர்கள் குடிக்கும் நீரா?
இதெல்லாம் இல்லை, மன்னன்தான் நாட்டுக்கு உயிர். இதனை உணர்ந்துகொள்ளவேண்டியது அந்த மன்னனின் கடமை. அப்படி உணர்ந்துகொண்டால், அவன் தவறான வழியில் நடக்கமாட்டான், தனக்குக் கீழே உள்ளவர்களையும் தவறாக நடத்தமாட்டான்.
ஒருவேளை, மன்னனோ பிறரோ நம்மைத் தவறான வழியில் நடத்தினால்?
பிரச்னையில்லை, நம்மிடம் ஞானம் இருந்தால் போதும், எந்தத் தடுமாற்றங்களும் இல்லாமல் நல்வழியில்மட்டுமே செல்வோம்.
அதனால், மயக்கங்களில் சிக்காமல் தன்னைக் காக்கவேண்டியது தெய்வத்தின் கடமை என்கிறார் வள்ளலார்:
‘நாயகா, எனது மயக்குஎலாம் தவிர்த்தே
நன்றுஅருள் புரிவது உன் கடனே!’
ஆக, தாய், தந்தை, கொல்லன், அரசன் (அல்லது, தெய்வம்) என இத்தனை பேரும் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்தால், என் மகன் வீரனாவான், அவனுடைய கடமை, போர்க்களத்தில் எதிரியின் யானையைக் கொன்று வெற்றியோடு மீண்டுவருதல்!
இந்தப் பாடல் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்துமா?
பிள்ளையைப் பாதுகாக்கும் பொறுப்பு தாய்க்கு, அவனுக்குக் கலை கற்றுத்தரும் பொறுப்பு தந்தைக்கு என்கிற பிரிவின இப்போது இல்லை, அப்பொறுப்புகளை இருவரும் பகிர்ந்துகொள்கிறார்கள், ஆகவே, முதல் இரு வரிகளைப் ‘பெற்றோர் கடமை’ என்று வரையறுக்கலாம்.
அடுத்து, கொல்லன், அதாவது, பெற்றோரால் நன்கு வளர்க்கப்பட்ட பையனோ பெண்ணோ தன் பணியைச் சிறப்பாகச் செய்வதற்கான கருவியை, சூழ்நிலையை உருவாக்கித்தரும் சமூகம். அதன் கடமை, இளைஞர்கள் நன்கு செயலாற்றுவதற்கு வேண்டியவற்றைத் தருவது.
இப்படி நல்ல வளர்ப்பு, கருவிகளைக் கொண்டு திறமையாளனாக வளரும் ஒருவன், யாருக்காகப் பணிபுரிகிறானோ, அவர்கள் அவனைச் சரியாக வழிநடத்தவேண்டும். அல்லது, அவன் தன்னைத்தானே நல்ல பாதையில் வழிநடத்திக்கொள்ளவேண்டும்.
நிறைவாக, இந்த அனைவரும் தங்கள் கடமையைச் சரியாகச் செய்தபின், தான் எடுத்துக்கொண்ட பணியில் வெற்றி, அதுவும் பெரிய வெற்றி அடையவேண்டும், எலியைக் கொல்வது அல்ல, யானையை வெல்வதுதான் பெரிய வெற்றி. அந்தக் கடமை ஒவ்வொருவர் மனத்திலும் இருக்கவேண்டும். போர் வீரருக்குமட்டுமல்ல, அனைவருக்கும் இது பொருந்தும்.
இங்கே வெற்றி என்பதுகூட கொஞ்சம் வலியச் சொல்வதுதான், ’கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே’ என்கிறது கீதை, பாரதியார் அதை அழகாக எழுதுகிறார்:
‘அறம்
செய்தல்உன் கடனே, அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே!’
இதனைக் கொஞ்சம் மாற்றி ஒரு பாடலில் எழுதுகிறார் புலமைப்பித்தன், ‘கடமையைச் செய், ஆனால், அதன்பிறகு சும்மா அமர்ந்திருக்காதே, உனக்கு உரிமையானதைக் கேட்டுப் பெற்றுக்கொள்!’
‘கடமைசெய்வோம் கலங்காமலே,
உரிமைகேட்போம் தயங்காமலே!’
உரிமை கேட்பது புரட்சிச்சிந்தனை, எல்லாம் உடையவன் பார்த்துக்கொள்வான் என்பது ஆன்மிகச்சிந்தனை. அந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ‘கடமை’ என்பதற்கான வரையறைகள் சற்றே மாறுகின்றன.
உதாரணமாக, முனைப்பாடியர் எழுதிய ‘அறநெறிச்சாரம்’ என்ற நூலில் ஒரு வரி: ‘பெரும்பயன் கொள்வதே கற்றுஅறிந்த மாந்தர் கடன்.'
எல்லாவற்றையும் வாசித்து அறிந்தவர்களுடைய கடமை, பெரும்பயனுக்குரிய வேலைகளைச் செய்வது. அதாவது, உடலைமட்டும் கவனித்துக்கொண்டிருக்காமல், இந்த உடல் மீண்டும் பிறக்காதபடி இருப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யவேண்டும்!
‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்பார் திருநாவுக்கரசர்.
பணிசெய்வது சரி, ஆனால், யாருக்கு?
‘இறைவனுடைய கடமை, அடியவர்களைத் தாங்குவது, அடியவனாகிய என்னுடைய கடமை, அவனுக்கும், அவனது அடியவர்களுக்கும் பணிசெய்வது’ என்கிறார் திருநாவுக்கரசர்.
இதைச் சற்றே நீட்டித்துப்பார்த்தால், நாம் எல்லாருமே பிறருக்கு உதவுவதற்காகதான் இங்கே பிறந்திருக்கிறோம் என்பார்கள். சுயநலமின்றி தெய்வத்துக்கு, குடும்பத்தினருக்கு, உறவினர்களுக்கு, நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாருக்கும் பணிவிடை செய்வதே நம் கடமை என்று ஒவ்வொருவரும் நினைத்தால் இந்த உலகம் எத்துணை அழகாகிவிடும்!
சேக்கிழார் பெரியபுராணத்தில், ‘தருமம்தன் வழிச்செல்கை கடன்’ என்கிறார். அறநெறியில் செல்லுதலே ஒருவருடைய கடமை.
இவையெல்லாம் பொதுக்கடமைகள், ஆணுக்கென்று ஒரு கடமை இருக்கிறது, தன் குடும்பத்துக்காகப் பொருள் சேர்த்தல். இதனைத் திணைமாலை நூற்றைம்பது என்ற நூலின் ஒரு பாடலில் கணிமேதாவியார் குறிப்பிடுகிறார்:
‘ஆண்கடனாம் ஆற்றை ஆயுங்கால், ஆடவர்க்குப்
பூண்கடனாப் போற்றி புரிந்தமையால், பூண்கடனாச்
செய்பொருட்குச் செல்வரால், சின்மொழி, நீசிறிது
நைபொருட்கண் செல்லாமை நன்று.’
ஆண்களுடைய கடமை என்ன என்று ஆராய்ந்தால், பொருள் தேடுவதுதான். அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் பணம் சம்பாதிக்கச் செல்வார்கள்.
அப்படியானால் பெண்ணின் கடமை என்ன?
அது அடுத்த வரியில் வருகிறது: கணவன் பிரிந்து செல்கிறானே என்று வருந்தாமல், அவன் தன் கடமையை ஆற்றுகிறான் என்று எண்ணிப் பொறுத்திருப்பது.
பொருள்சேர்த்தல் என்ற கடமை இப்போது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்துவதால், இந்த இரண்டாவது கடமையையும், அதாவது, பிரிவைப் பொறுத்துக்கொண்டு மற்றவர் தம் கடமையை ஆற்ற அனுமதிப்பதையும் பொதுவாக்கலாம்!
ஒரு திரைப்பாடலில் வாலி எழுதுவார்:
‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்: கடமை!’
என்ன கடமை? அதையும் அவரே பட்டியல் போடுகிறார்:
‘பதவி வரும்போது
பணிவு வரவேண்டும்,
துணிவும் வரவேண்டும்,
பாதை தவறாமல்,
பண்பு குறையாமல்,
பழகிவரவேண்டும்,
வாழை மலர்போல
பூமி முகம்பார்க்கும்
கோழை குணம் மாற்று,
கொள்கை நிறைவேற்று!’
ஆனால், இந்த வரிகளெல்லாம் கொஞ்சம் ஓவர்டோஸ் இல்லையா என்று இளைஞர்கள் கேட்பார்கள். கடமை ஏதும் இல்லாமல் ஆனந்தமாகத் திரியவேண்டிய வயது எங்களுடையது என்பார்கள்.
அந்த உணர்வுகளைக் கண்ணதாசன் அழகாகப் பாடினார்:
‘பணங்களைச் சேர்த்துப் பதுக்கிவைத்தால்,
அது மடமை,
பகவான் படைத்த பணமெல்லாம்,
பொது உடைமை,
கையில் கிடைப்பதை வீசி ரசிப்பதுதான்
என் கடமை,
அந்தப் பெருமை,
எந்தன் உரிமை!’
இந்த மனப்போக்குக்குப் பதில்சொல்வதுபோல் அமைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடலொன்று இருக்கிறது. ‘வாரி இறைப்பதா செல்வம்? திறமைதானே உண்மையான செல்வம்?’ என்று கேட்கிறார் அவர்:
‘செய்யும் தொழிலே தெய்வம், அந்தத்
திறமைதான் நமது செல்வம்,
கையும் காலுந்தான் உதவி, கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி!’
மேலாண்மை வகுப்புகளில் பதவியோடு கடமை, பொறுப்புகள் வரும், ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை என்று விளக்குவார்கள். அதைப் பட்டுக்கோட்டையார் மிக எளிமையாகச் சொல்லிவிடுகிறார்!
நாமக்கல் கவிஞரின் பாடலொன்றும் இதையே சொல்கிறது:
‘கடமை உணர்ந்தவனே,
உடமைக்குரியவனாம்!
கருணை சிறப்பதுவும்
கடமை தெரிவதனால்,
மடமை பெருகுவதும்
கடமை மறப்பதனால்!’
கடமையையும் கருணையையும் இணைக்கிறாரே, அதற்கு என்ன பொருள்? இதே பாடல் அதையும் விளக்குகிறது:
‘கடமைகள் புரிவதில் கருணையை மறவான்,
கருணைஎன்று அறநெறிக் கடமையைத் துறவான்.’
ஒருவன் தன்னுடைய கடமைகளைச் செய்துகொண்டிருக்கும்போது, அதனால் இன்னோர் உயிருக்குப் பாதிப்பு உண்டாகிறது என்றால், கருணையோடு நடந்துகொள்ளவேண்டும், அதேசமயம் தன்னுடைய கடமையையும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது. இரண்டையும் சமநிலைப்படுத்த வேண்டும்.
பேருந்து நடத்துநர் ஒருவர். தன்னுடைய பேருந்தில் வருகிற எல்லாருக்கும் பயணச்சீட்டு தந்து பணம் வசூலிக்கவேண்டியது அவருடைய கடமை.
ஒருநாள், அவருடைய பேருந்தில் முதியவர் ஒருவர் ஏறுகிறார். அவரிடம் பணம் இல்லை. பர்ஸைத் தொலைத்துவிட்டதாகச் சொல்கிறார்.
இப்போது, அந்த நடத்துநர் கடமைதான் முக்கியம் என்று அவரைக் கீழே இறக்கிவிடலாம். அல்லது, கருணையினால், பணம் வாங்காமல் அவரை அழைத்துச்செல்லலாம்.
ஒருவேளை, அப்படிச் செய்வதற்கான அதிகாரம் அவருக்கு இல்லாவிட்டால்?
அப்போது, கருணையினால் கடமையை மீறக்கூடாது. அந்த முதியவருக்கு அவரே தன் செலவில் பயணச்சீட்டு வாங்கலாம். அப்போது, கடமையும் பூர்த்தியாகிவிட்டது, கருணைக்கும் குறைவில்லை!
இதுபோன்ற சங்கடங்களைத் தனி நபர்கள் மட்டுமல்ல, நிறுவனங்களும் உணர்ந்திருக்க வேண்டும், அவற்றைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.
உதாரணமாக, ஒரு பள்ளியில் நூறு மாணவர்களுக்கு இடம் இருந்தால், அதில் இரண்டு இடங்கள் ஏழை மாணவர்களுக்குத் தரப்படலாம். இதனை அந்தப் பள்ளியே பகிரங்கமாக அறிவித்துவிட்டால், அங்கே பணிபுரிகிறவர்களுடைய கடமையில் கருணைக்கும் இடமிருக்கும்.
அவை இரண்டு இடங்களா இருபது இடங்களா என்பது அவரவர் மனத்தின் உயரத்தைப்பொறுத்தது!
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.