பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்-5

செல்வங்களில் பெரிய செல்வம் எது?செவிச்செல்வம் என்கிறார் திருவள்ளுவர், அதாவது, நல்ல, பயனுள்ள விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது.
Published on
Updated on
5 min read

செல்வங்களில் பெரிய செல்வம் எது?

செவிச்செல்வம் என்கிறார் திருவள்ளுவர், அதாவது, நல்ல, பயனுள்ள விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது.

‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம், அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.'

ஏன் அப்படிச் சொல்கிறார்? மற்ற செல்வங்கள் இல்லாமல் வெறுமனே கேள்விஞானம் இருந்தால் ஒருவனால் மகிழ்ச்சியாக வாழ இயலுமா?

செல்வம் என்ற சொல்லே 'சென்றுகொண்டிருப்பது' என்ற பொருளில் அமைந்தது என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வது செல்வத்தின் இயல்பு.

ஆனால், கேள்விஞானம், அதாவது கேட்டு அறிந்துகொண்ட விஷயங்கள் அப்படியில்லை. அவற்றை ஒருமுறை கற்றுக்கொண்டுவிட்டால், நம்மைவிட்டுச் செல்லாது, நாமே வீசி எறிந்தால்தான் உண்டு.

மாறாக, அதை இன்னொருவருக்குச் சொல்லித்தரும்போது, இரட்டிப்பாகும். இருவருக்கு, பலருக்குப் பலன் தரும்.

மற்ற செல்வங்கள் அப்படியில்லை. அவற்றை இன்னொருவருக்குக் கொடுத்தால், தந்தவரிடம் இருக்கும் செல்வம் காணாமல் போய்விடும், இவருக்கு இழப்பு, அவருக்கு லாபம்.

ஆனால் செவிச்செல்வம், சொல்பவருக்கும் லாபம், கேட்பவருக்கும் லாபம், அதனை யாரும் வலுக்கட்டாயமாகப் பறிப்பதும் இயலாது.

ஆகவே, செல்வங்களில் சிறந்தது செவிச்செல்வம் என்கிறார் வள்ளுவர். கேட்டு அறிதலில் ஆர்வத்துடன் இருக்கவேண்டும் என்பதே இதன் உட்கருத்து.

கல்வி என்பதற்கு முற்றுப்புள்ளி கிடையாது, தொடர்ந்து புது விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்கும் மனோநிலை தேவை.

இங்கே கல்வி என்பது பாடப்புத்தகங்களின் அறிவு அல்ல, கற்றுக்கொள்கிறவை கல்வி, அவ்வளவுதான், அதற்குப் பள்ளி சென்று படிக்கவேண்டும் என்று அவசியமில்லை. இதையும் திருவள்ளுவர்தான் சொல்கிறார்:

'கற்றிலன்ஆயினும், கேட்க, அஃதுஒருவன்
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.'

பாடம் படிக்காவிட்டாலும் பரவாயில்லை, காதைத் திறந்துவைத்திருங்கள், கேட்டுக்கொண்டே இருங்கள், அவை மனத்தில் சென்று தங்கட்டும்.

சில விஷயங்களை இப்போது கேட்கும்போது அவற்றால் பலனே இல்லை என்று தோன்றும். ஆனால் பின்னர் எப்போதாவது அவை தேவைப்படும், அப்போது, 'நல்லவேளை, அப்போ கத்துக்கிட்டோம்' என்று தோன்றும். அதைதான் ‘ஒற்கத்தின் ஊற்றாம் துணை' என்கிறது திருக்குறள், அதாவது, தளர்ச்சி ஏற்படும்போது ஊன்றுகோலாகக் கேள்விஞானம் உதவும்.

நான்மணிக்கடிகையில் விளம்பிநாகனாரின் பாடலொன்று 'கற்றலின் வாய்த்த பிற இல்லை' என்கிறது. கற்றுக்கொள்வதைவிடச் சிறந்த ஒரு விஷயமே கிடையாது!

அந்தப் பாடலின் பிற வரிகளும் மிக முக்கியமானவை:

‘திருவின் திறல்உடையது இல்லை, ஒருவற்குக்
கற்றலின் வாய்த்த பிற இல்லை, எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லை, இல்என்னாத
வன்மையின் வன்பட்டது இல்.'

முதல் வரியில், ‘செல்வத்தைவிடச் சிறந்தது எதுவும் இல்லை' என்கிறார். கையில் செல்வம் இருந்தால் அதனால் வரும் பெருமிதம் அலாதியானது.

சரி, எந்தமாதிரி செல்வம்?

அடுத்த வரியில் ‘கற்றலே சிறந்தது' என்று சொல்வதால், இது கல்விச்செல்வம்தான், கேள்விச்செல்வம் என்றும் சொல்லலாம்.

கல்விமட்டும் போதுமா? காசு இல்லாவிட்டால்?

அதுதான் மூன்றாவது வரி, ‘இன்மை' என்றால், இல்லாத நிலை, வறுமை, அதைவிடத் துன்பம் தருவது ஏதுமில்லை.

இங்கே வறுமை என்பதைக் காசு இல்லாத நிலை என்றும் எண்ணலாம், அறிவு இல்லாத நிலை என்றும் எண்ணலாம், அவரவர் சிந்தனையைப் பொறுத்து இந்த வரிக்கு வெவ்வேறு விளக்கங்கள் அமையும்.

அடுத்த வரி இதனை இன்னொரு தளத்துக்குக் கொண்டுசெல்கிறது, 'இல்லை என்று சொல்லாத மனஉறுதி வேண்டும்.'

எப்போது ‘இல்லை' என்று சொல்லக்கூடாது?

ஒருவர் நம்மிடம் இரக்கும்போது, அதாவது, ‘என்னிடம் இது இல்லை, தாருங்கள்' என்று கேட்கும்போது, அது நம்மிடம் இருந்தால், 'இல்லை' என்று மறுக்கக்கூடாது.

இது ஒரு சாதாரண விஷயம் என்று நமக்குத் தோன்றலாம். உண்மையில், பலரால் பின்பற்ற இயலாத அரிய விஷயம் இது.

ஓர் அலுவலகத்தில் எல்லாம் தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார். சிறியவர்கள்முதல் பெரியவர்கள்வரை எல்லாரும் அவரிடம் உதவி கேட்கிறார்கள்.

இந்நிலையில் உள்ள சிலர், மகிழ்ச்சியோடு பிறருக்குச் சொல்லித்தருவார்கள், உதவுவார்கள்.

வேறு சிலர், முரண்டு பிடிப்பார்கள், சொல்லிக்கொடுத்தால் தங்களுடைய திறன் குறைந்துவிடுமோ என்று நினைப்பார்கள்.

இன்னும் சிலர், சொல்லித்தருவார்கள், ஆனால் அதற்கு எதிராளி நிறைய கெஞ்சவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், அல்லது, 'என்னை நம்பிதான் நீ இருக்கிறாய்' என்று சொல்லிக்காட்டுவார்கள்.

சட்டைப்பையில் காசு இருந்தால் சட்டென்று எடுத்துக் கொடுத்துவிடலாம், அறிவை அப்படிக் கொடுப்பதற்குப் பெரிய மனம் வேண்டும். அப்படித் தரும்போது அது பலமடங்காகப் பெருகும் என்று தெரியாதவர்கள்தான் இப்படியெல்லாம் செய்வார்கள்.

கொடுப்பதற்கு ஆள் இருக்கிறது என்பதற்காக, வாங்கிக்கொள்ளலாமா? நிரந்தரமாக 'இலவச'த்திலேயே வாழ்ந்துவிடலாமா?

புறநானூற்றில் கழைதின்யானையார் எழுதிய ஒரு பாடல் இதற்குப் பதில் சொல்வதுபோல் அமைகிறது:

‘ஈ என இரத்தல் இழிந்தன்று, அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று,
கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.'

ஒருவரிடம் சென்று 'எனக்கு இதைக் கொடு' என்று கேட்பது இழிவானது. அதைவிட இழிவானது, அப்படிக் கேட்பவரிடம் ‘கொடுக்கமாட்டேன்' என்று மறுப்பது.

அதற்குப் பதிலாக, ‘இந்தா, வைத்துக்கொள்' என்று கொடுப்பது உயர்வானது. அதைவிட உயர்வானது, அப்படித் தருபவரிடம் 'எனக்கு வேண்டாம், நான் இதனை ஏற்கமாட்டேன்' என்று மறுப்பது.

மேலோட்டமாகப் பார்த்தால் கொடை என்கிற பண்பையே இந்தப் பாடல் மறுப்பதுபோல் தோன்றும். ஆனால் அப்படி முரட்டுத்தனமான பொருள் எடுத்துக்கொள்ளாமல், தனக்கு வேண்டியதைத் தானே உழைத்துப் பெறவேண்டும், அது இயலாதபோதுமட்டும் கேட்கவேண்டும், தருகிறார்கள் என்பதற்காக அதை நம்பியே வாழக்கூடாது என்று புரிந்துகொள்ளலாம்.

கேட்டுப் பெறுவதே ஓரளவுக்குமேல் தவறு என்றால், கேளாமல் எடுத்துக்கொள்வது எப்படிப்பட்ட பிழையாக இருக்கும்!

நாலடியார் இப்படிச் சொல்கிறது:

'ஆசை பிறன்கண்படுதலும், பாசம்
பசிப்ப மடியைக் கொளலும், கசிந்துஒருவன்
கல்லான்என்று எள்ளப்படுதலும் இம்மூன்றும்
எல்லார்க்கும் இன்னாதன.'

பிறருடைய பொருள்மீது ஆசைப்படக்கூடாது, அது இன்னாத செயல்.

அடுத்து, சுற்றத்தவர்கள் பசியோடு இருக்கும்போது, சோம்பலாக அமர்ந்திருக்கக்கூடாது. அவர்களுடைய பசியைத் தீர்ப்பதற்குத் தன்னால் என்ன செய்ய இயலும் என்று யோசித்துச் சுறுசுறுப்பாகச் செயல்படவேண்டும்.

இங்கே சுற்றம் என்பதை அவரவர் குடும்பம் என்று எடுத்துக்கொள்ளலாம், அல்லது உலகையே சுற்றமாகவும் கொள்ளலாம், நம் பசி தீர்ந்தால் போதாது, சுற்றியிருக்கிற எல்லாருடைய பசியும் தீரும்வரை உழைக்கவேண்டும், சோம்பல் ஆபத்து.

அடுத்து, கல்லாதவன் என்று யாரிடமும் பெயர் வாங்கி இகழப்படக்கூடாது. அதாவது, கற்கவேண்டும். காசு இல்லாதவன், அழுக்கானவன், குற்றம் செய்தவன் என்பதுபோன்றவற்றையெல்லாம்விட மிக இழிவான திட்டு, கல்லாதவன் என்பதுதான்!

கல்லாதவர்களைப்பற்றித் திருமந்திரத்தில் திருமூலர் சொல்வது:

'கல்லாத மூடரைக் காணவும் ஆகாது!'

அவர் சொல்வது இறைவனைக் கற்காதவர்கள், நாம் அதனைப் பொதுவான கல்வி என்றும் எடுத்துக்கொள்ளலாம், கற்காமல் இருப்பது இழிவு, அவர்களைப் பார்ப்பதும் ஆகாது.

'விலங்கொடு மக்கள் அனையர், இலங்குநூல்
கற்றாரோடு ஏனையவர்'

என்கிறது திருக்குறள். கற்காதவர்களையும் கற்றவர்களையும் அருகருகே வைத்துப்பார்த்தால், கல்வி அறிவு இல்லாதவர்கள் வெறும் மிருகத்தைப்போலதான் இருப்பார்கள் என்கிறார் வள்ளுவர்.

இதையும் புத்தக அறிவு என்று எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. அனுபவ அறிவாகக்கூட இருக்கலாம், கற்கும் ஆர்வமின்றி இருப்பது இழிவு.

'பழமொழி நானூறு'வில் முன்றுறையரையனார் எழுதும் ஒரு பாடல்:

'கல்லாதார் ஆற்றுவாரைக் கறுப்பித்துக் கல்லாதார்
சொல்தாற்றுக் கொண்டு சுனைத்துஎழுதல் எற்றுஎனின்
தானும் நடவான், முடவன் பிடிப்(பு) ஊணி
யானையோடு ஆடல் உறவு.'

ஒரு பெரிய சபை, நன்கு கற்ற ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார், அப்போது இன்னொருவர் எழுந்து கேள்வி கேட்கிறார்.

கேள்வி கேட்பது தவறில்லை, கேட்டால்தான் ஞானம் வரும், எப்பொருளை யார் சொன்னாலும் மெய்ப்பொருள் அறியக் கேள்வி கேட்கலாம்.

ஆனால், அந்தக் கேள்வியில் ஓர் ஒழுங்கு இருக்கவேண்டும், அது நியாயமான சந்தேகமாகவோ, அறியும் ஆர்வத்துடன் கேட்கப்பட்டதாகவோ இருக்கவேண்டும், அப்போது அந்த நிபுணர் அதற்கு மகிழ்ச்சியோடு பதில் சொல்வார்.

பல நேரங்களில் கேள்விகள் இப்படி அமைவதில்லை. சிலர் சும்மா வீம்புக்காகவே கேட்பார்கள், சிலர் தங்களுடைய மேதைமையைக் காட்டுவதற்காகவே கேட்பார்கள், சிலர் பேசுபவரை அவமானப்படுத்துவதற்காகவே கேட்பார்கள்.

இந்தச் சூழ்நிலைகளில் அவையில் இருப்பவர்கள் கேள்வி கேட்டவரை இழிவாகப் பார்ப்பார்கள். 'முட்டாளே, இதைக் கேட்க உனக்கு என்ன தகுதி?' என்று நினைப்பார்கள்.

அதைதான் இந்த நாலடியார் பாடல் பேசுகிறது, 'நடக்க இயலாத ஒரு முடவன், குச்சியைத் தரையில் ஊன்றி எழுந்து நிற்கிறான், அவனால் யானையுடன் விளையாட இயலுமா?'

அறிஞர்கள்முன்னால் கேள்வி கேட்கும் முட்டாள்களும் அப்படிதான். அவர்களுக்குத் தங்களால் நடக்க இயலாது, அதாவது தங்களுக்கு அறிவு இல்லை என்பதும் தெரியாது, எதிரில் உள்ள நிபுணர் யானையைப்போல் (அந்தத் துறையில்) பலமானவர் என்பதும் தெரியாது, கையில் குச்சி இருக்கிறதே என்று சண்டை போட வந்து அவமானப்படுவார்கள். சரிவரக் கற்காதவர்களுடைய நிலைமை இதுதான்.

அப்படியானால், கல்லாதவர்கள் அறிஞர்கள்முன்னால் வரக்கூடாதா?

வராவிட்டால் எப்படி அறிவு வளரும்? கண்டிப்பாக வரவேண்டும், அப்போதுதானே கேள்விஞானம் சேரும், நாம் என்ன வாசிக்கவேண்டும் என்பது தெரியும்!

ஆனால், அப்படி வரும்போது, தம்முடைய நிலை என்ன என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவேண்டும். ஒருவேளை தங்களைத்தாங்களே பெருமையாக நினைத்துக்கொண்டிருந்தால், அது உண்மையல்ல என்று உணரவேண்டும்.

உதாரணமாக, ஒருவர் நன்றாகப் பாடுவதாக எண்ணியிருப்பார். அவர் ஒரு பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டால், தன்னைவிடச் சிறப்பாகப் பாடுகிற பலரைச் சந்தித்தால், அவருடைய தன்மதிப்பு கொஞ்சம் குறையும், தான் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது புரியும்.

இதில் அவமானம் ஏதும் இல்லை. அவர்களும் என்றைக்கோ இப்படிப் பாடிக்கொண்டிருந்தவர்கள்தான். அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டு நம்முடைய பாடும் திறமையை மேம்படுத்தலாம் என்ற உணர்வுதான் இங்கே முக்கியம்.

அப்படியில்லாமல், தன் வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு தான் உலகின் மிகச் சிறந்த பாடகன் என்று எண்ணிக்கொண்டிருந்தால், அவர்கள் வளர்வதற்கான வாய்ப்பே இருக்காது. அதைதான் இந்தக் குறள் சுட்டிக்காட்டுகிறது:

'கல்லாஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வுபடும்.'

கற்காத ஒருவன் தன்னைப்பற்றி உயர்வாக நினைத்துக்கொண்டிருந்தால், கற்றவர்களுடன் உரையாடவேண்டும், அப்படிப் பேசப் பேச, அவனுக்குத் தான் கற்றுக்கொண்டது குறைவு என்பது புரியும், அந்தக் கர்வம் குறையும், அதனை எதிர்மறையாக எடுத்துக்கொள்ளாமல், முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பாக எண்ணலாம்.

சிலர் பெரிய அறிஞர்களோடு பழகினாலும், தங்களுடைய அறியாமையைக் காட்டிக்கொள்ளமாட்டார்கள், அதை உணரக்கூடமாட்டார்கள், 'நானும் உன்னைமாதிரி அறிஞன்தான்' என்பதுபோல் நடந்துகொள்வார்கள்.

இவர்கள் எதையும் கற்காமலே தங்களைக் கற்றவர்கள்போல் காட்டிக்கொள்வதற்காகக் கண்டுபிடித்த ஒரு வழி, காப்பியடிப்பது. அதாவது, அறிஞர்கள் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே செய்வது.

இந்தப் பழக்கத்தை ஔவையார் 'மூதுரை'யில் கேலி செய்கிறார், 'மயிலின் தோகை அழகானது, ஆகவே, அது தோகையை விரித்து ஆடுவதும் பார்க்க இனிமையாக இருக்கும், இதைப் பார்த்துப் பொறாமைப்பட்டு ஒரு வான்கோழி சிறகை விரித்து ஆடினால், யாரால் பார்க்க இயலும்? அதுமாதிரிதான் கற்காதவர்கள் கற்றவர்களைப்போலவே நடந்துகொள்வதும்!'

'கானமயில்ஆடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் தானும்தன்
பொல்லாச் சிறகை விரித்துஆடினாற்போலுமே
கல்லாதான் கற்ற கவி.'


கிட்டத்தட்ட இதே கருத்தைச் சொல்லும் ஔவையாரின் இன்னொரு பாடல்:

'காணாமல் வேணதெல்லாம் கத்தலாம், கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே, நாணாமல்
பேச்சுப்பேச்சு என்னும், பெரும்பூனை வந்தக்கால்,
கீச்சுக்கீச்சு என்னும் கிளி.'

ஒரு கிளி வளவளாவென்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தது. யார் என்ன சொன்னாலும் அது பேச்சை நிறுத்தவில்லை.

அப்போது, அங்கே ஒரு பூனை வந்தது. அதைப் பார்த்ததும், பயத்தில் கிளிக்குப் பேச்சு வரவில்லை, கீச்சுக்கீச்சு என்று கத்தியது.

அதுபோல, அரைகுறையாகப் படித்தவர்கள் ஏதேதோ பேசுவார்கள், குறைகுடம் கூத்தாடும்.

ஆனால், அவர்கள் படித்த ஒருவரைப் பார்த்தால் போதும், பேச இயலாமல் இருந்துவிடுவார்கள். வாயைத் திறந்தால் அவர் பதிலடி கொடுத்துவிடுவாரோ என்கிற பயம்தான்!

கற்றோர், கற்றோர் என்று சொல்கிறோமே, அவர்கள் எதைக் கற்றார்கள்? எவ்வளவு கற்றார்கள்?

'கல்வி கரைஇல, கற்பவர் நாள்சில' என்கிறது நாலடியார். கல்வி ஒரு பெருவெள்ளம், அதோடு ஒப்பிடும்போது, மனிதனின் ஆயுள் மிகச் சிறியது.

ஆகவே, யாராலும் எல்லாவற்றையும் கற்க இயலாது. ஓரளவுதான் கற்க இயலும்.

ஓரளவு என்றால், எதைமட்டும் கற்கலாம்?

அதற்கும் இதே நாலடியார் பாடலில் பதில் உள்ளது: 'நீர்ஒழியப் பால்உண் குருகின் தெரிந்து.'

அன்னப்பறவைமுன்னே பால், தண்ணீர் இரண்டையும் கலந்துவைத்தாலும், அது பாலைமட்டும் உண்ணும், தண்ணீரை விட்டுவிடும்.

அதுபோல, கற்கிறவர்கள் நல்லதை எடுத்துக்கொள்ளவேண்டும், பயனில்லாதவற்றில் நேரத்தை வீணடிக்கக்கூடாது.

ஆனால், கல்வியால் உண்மையிலேயே பலன் உண்டா? பள்ளிக்கூடம், கல்லூரிப் படிப்பு என்றாலாவது வேலை கிடைக்கும், சம்பளம் வரும் என்று சொல்லலாம், பொதுவான கல்வி, நல்லதைத் தெரிந்துகொள்வது போன்றவை எந்தவிதத்தில் பயன்படும்?

இதற்கு நான்மணிக்கடிகை பதில் சொல்கிறது, 'அந்தப் பயன் இப்போது தெரியாது, விழுந்தால்தான் தெரியும்!'

விழுந்தால் எப்படித் தெரியும்?

கற்றவன் விழுந்தால், மீண்டும் எழுந்து நடமாடுவான். அதற்கான நுட்பம் அவனுக்குத் தெரிந்திருக்கும். கல்லாதவன் விழுந்தால், கால் முறிந்து அங்கேயே கிடப்பான்!

'கற்றான் தளரில் எழுந்திருக்கும், கல்லாத
பேதையான் வீழ்வானேல் கால்முறியும்.'

அதுமட்டுமல்ல, கற்பவன் மன்னனைவிடச் சிறந்தவன் என்கிறார் ஔவையார். எப்படியென்றால், மன்னனுக்கு அவன் ஆளும் நாட்டில்மட்டுமே சிறப்பு, கற்றவன் எங்கு சென்றாலும் சிறப்பு.

இக்கருத்தைச் சொல்லும் அவரது 'மூதுரை'ப் பாடல்:

'மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புஉடையன், மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்புஇல்லை, கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.'

கவனியுங்கள், வெறும் கற்றோன் அல்ல, மாசுஅறக் கற்றோன். அதாவது, குற்றங்களை நீக்கி, சரியானவற்றைக் கற்றவன், அன்னப்பறவையைப்போல, அவனுடைய பெருமை, அரசனைவிடப் பெரியது!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com