புண்ணியம் – கலாம் கண்ட தொழில்நுட்பத்தின் ராமேஸ்வர இதயம்
ஜவஹர்லால் நேருவுக்குப் பெரும் கனவு இருந்தது. இந்தியா தொழில்நுட்பத் தன்னிறைவு பெற வேண்டும்; இந்தியா ஒரு சோஷலிஸ


ஜவஹர்லால் நேருவுக்குப் பெரும் கனவு இருந்தது. இந்தியா தொழில்நுட்பத் தன்னிறைவு பெற வேண்டும்; இந்தியா ஒரு சோஷலிஸ நாடாகத் திகழ வேண்டும்; அதே நேரத்தில், இந்தியா ஒரு ஜனநாயக நாடாகவும் இருக்க வேண்டும்.
நேருவின் சோஷலிஸ கனவும் தொழில்நுட்பக் கனவும், அரசு மையத்தன்மை கொண்டவை. அத்துடன், நேருவுக்கு இந்தியப் பண்பாட்டை குறித்த ஒரு விலகல் இருந்தது. இந்தியா, மூடர்கள் நிறைந்த நாடு. இந்தியப் பண்பாடு என்பது சாதியமும் மூடநம்பிக்கையும் கொண்டது. ஆனால், இந்தியா ஒரு காலத்தில் சிறந்த சிந்தனைகளைக் கொண்ட நாடாக இருந்தது. ஆரியர்களின் உன்னதக் கருத்துகள் உபநிடத – பௌத்த சிந்தனைகள்... அதன்பிறகு, அதனையொத்த சிந்தனை வீச்சை மார்க்ஸிய கருத்தியலில் மட்டும்தான் நேருவால் காண முடிந்தது. அல்லது தாராளவாத கருத்துகளுடைய மேற்கத்தியர்களிடம் அவரால் காண முடிந்தது. காரணம், அவர்கள்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் சர்வதேச அளவில் இந்தியர்களுக்கு ஓரளவாவது ஆதரவாக இருந்தார்கள்.
இதனுடைய விளைவுகள் என்னவென்றால், இந்தியாவில் அறிவியலும் தொழில்நுட்பமும் அரசுக் கேந்திரங்களில் மையம் கொள்ள ஆரம்பித்தன. மக்களுக்கும் அறிவியலுக்குமான விலகல் அந்நியப்படுதல் நிகழ்ந்தது. அடிப்படையில், காந்தி செய்ததற்கு முரணான செயல்பாடு இது. காந்தி எப்போதுமே குவிமையமற்ற தொழில்நுட்பங்களை முன்வைத்தார்.
ராட்டை ஒரு தொழில்நுட்பக் குறியீடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சாண எரிவாயுவாகட்டும், பசு பாதுகாப்பு ஆகட்டும், லாரி பேக்கர் பின்னாட்களில் பிரபலப்படுத்திய உள்ளூர் கட்டடக் கலை தொழில்நுட்பம் ஆகட்டும், காந்தியத் தொழில்நுட்பமும் காந்தியப் பொருளாதாரமும் குவிமையத்தன்மை அற்றவை. மக்கள் தொழில்நுட்பங்கள்.
ஆனால் நேரு, குவிமையம் கொண்ட தொழில்நுட்பங்கள், பெரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் பெரும் பொருளாதார மற்றும் சமுதாய மாற்றங்களைக் கொண்டுவந்துவிட முடியும் என நம்பினார். அப்படி ஒரு மாற்றம் வரும்போது, இந்தியாவின் பண்பாடும் மதிப்பீடுகளும்கூட மாறிவிடும் என நம்பினார். இந்தியப் பண்பாடு உருவாக்கிய சமுதாய அமைப்புகள், அவற்றின் மதிப்பீடுகள் ஆகியவற்றின் அழுகிய கனிகளிலிருந்து மரத்தையே வெறுக்கும் மனநிலைக்கு வந்து சேர்ந்திருந்தார் நேரு.
ஆனால், நேருவுக்கு அந்த மனநிலையிலும் சங்கடம் இருக்கத்தான் செய்தது. மார்க்ஸிஸ்ட்களின் சீன ஆக்கிரமிப்பும் துரோகமும், அவரை அவரது சோஷலிஸ கனவுகளிலிருந்து தரை இறக்கியிருக்கலாம். அவர் மாறியிருந்தார் என கருத இடமிருக்கிறது. ஆனால், அந்த மாற்றத்தை செயல்படுத்த காலம் இடமளிக்கவில்லை.
அவல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம், 1998-ல் பொக்ரான் குண்டுவெடிப்பின் மூலம் இந்தியா முழுக்கப் பேசப்பட்டாலும், அதற்கு முன்னரே அவரது பெயர் ஒரு ஆதர்ச தேசபக்த தொழில்நுட்பவாதி என அறியப்பட ஆரம்பித்துவிட்டது. 1998 பொக்ரான் குண்டுவெடிப்பின்போது எழுந்த ஒரு பரவச அலையைப் பயன்படுத்தி, தேச வளர்ச்சிக்கான தனது பெரும் திட்ட வரைவை கலாம் முன்வைத்தார்.
‘இந்தியா 2020’ நூலை படிக்கும் எவருக்கும் ஒன்று புரியும். அது மேலோட்டமாக, ஒரு நேருவிய தேசியப் பொருளாதார வளர்ச்சியை முன்வைக்கிறது. அதற்கு தொழில்நுட்பத்தையே பெருமளவு நம்பியிருக்கிறது. தொழில்நுட்பக் கருவிலிருந்து உதயமாகும் பெரும் வளர்ச்சி – ஆற்றலில், உணவு உற்பத்தியில், போக்குவரத்தில், உள் கட்டமைப்பில், விண்வெளி தொழில்நுட்பத்தில் என அனைத்திலும்...
ஆனால், உள்ளே நோக்க நோக்க ஒரு விஷயம் புரியும். நேருவிய சிந்தனையில் இருக்கும் ஒரு அடிப்படை குறைப்பாட்டை கலாம் நிவர்த்தி செய்கிறார். இந்து ஆன்மிக-சமுதாய மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் ‘புண்ணியம்’ என்கிற கோட்பாட்டை மையமாகக் கொண்டு ஒரு சமுதாய – பொருளாதார மாற்றத்துக்கான மாதிரியை அப்துல் கலாம் முன்வைக்கிறார்.
‘நம் பணி என்பது புண்ணிய-அதிகாரிகள், புண்ணிய-ஆத்மாக்கள், புண்ணிய-தலைவர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு தங்க முக்கோணத்தை உருவாக்குவது. அதன்மூலம் பல்வேறு நல்ல விஷயங்களை நாம் அடித்தளங்களில் செயல்படுத்த முடியும்.’
மூன்றாண்டுகளுக்குப் பிறகு, குஜராத் சுவாமி நாராயண் அமைப்பின் தலைமைத் துறவியிடம் பேசும்போதும் இதே கருத்தை கலாம் வலியுறுத்தினார்: ‘இந்தப் பெரும் கனவை நிறைவேற்ற மூன்றுவித மனிதர்கள் தேவை - புண்ணிய-அதிகாரிகள், புண்ணிய-ஆத்மாக்கள், புண்ணிய-தலைவர்கள். நம் மக்களிடையே இந்த மூவகையினரும் அதிகரித்தால், இந்தியா ஜகத்குருவாக மாறிவிடும்.’
இந்தப் புண்ணியம் என்பதற்கான தொழில்நுட்ப வடிவத்தை கலாம் உருவாக்கினார். இதய நோயாளிகளுக்காக அவர் உருவாக்கிய ராஜு-கலாம் ஸ்டென்ட், மேலும் போலியோ தாக்குதலுக்கு உள்ளான மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான எடை குறைந்த, ஆனால் வலிமையான காலிபர் (caliper) இவை அனைத்துமே, தொழில்நுட்பத்தின் புண்ணிய வடிவங்கள்தான். இதற்கான உத்வேகம் அவருக்கு எங்கிருந்து கிடைத்திருக்கலாம்?
ஒருவேளை, அவர் பிறந்து வளர்ந்த ராமேஸ்வரத்தில் இருந்தே கிடைத்திருக்கலாம். ஜனவரி 28, 2014 அன்று, ராமேஸ்வரத்தில் விவேகானந்த கேந்திரத்தினர் ‘பசுமை ராமேஸ்வரம்’ செயல்திட்ட தொடக்க விழாவுக்கு அவரை அழைத்திருந்தனர்.

2013-ல், சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளை ஒட்டி, கோவிலுக்கு வெளியே ராமேஸ்வரம் தீவில் உள்ள பழமையான, ஆனால் புறக்கணிக்கப்பட்டு அழிந்துகொண்டிருந்த தீர்த்தங்களை புனரமைப்பு செய்திருந்தனர். அவை அனுமான் குண்ட தீர்த்தம், நகுல தீர்த்தம், சகாதேவ தீர்த்தம், திரௌபதி தீர்த்தம், அர்ஜுன தீர்த்தம், பீம தீர்த்தம், தர்ம தீர்த்தம் எனும் பெயர்கள் கொண்டவை.
கலாம், அந்தச் சீரமைப்புப் பணிகளின் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார். பின்னர், அங்கிருந்த கேந்திர ஊழியர்களிடம், ‘ராமேஸ்வரத்தில் பணி செய்கிறீர்கள். எனவே, ராமாயணத்துடன் தொடர்புடைய தீர்த்தங்களையும் கண்டெடுத்து சரி செய்யுங்கள்’ எனக் குறிப்பிட்டார். முன்பு, ராமர் தீர்த்தம் தெப்பத் திருவிழாவில், அவர் வீட்டார்தாம் விக்கிரகங்களைக் கொண்டு செல்ல படகு அமைப்புகளைக் கொண்டு தெப்பங்கள் செய்து தருவார்கள் என்பதைச் சொன்னார். இன்று, விவேகானந்த கேந்திரம், ராமர் தீர்த்தத்தை புனரமைப்பு செய்துள்ளது. அது, நீரும் மீன்களும் நிறைந்து காணப்படுகிறது.
இந்த நீர்நிலைகளை உருவாக்குவதில் ஒரு சிறப்பான நிலவியல் அறிவும், பருவ மழைகள் குறித்த அறிவும் இருந்திருக்கிறது. உதாரணமாக, ‘அனுமான் குண்ட தீர்த்தம்’ என்கிற பாரம்பரிய நீர்நிலை முழுக்க முழுக்க முட்செடிகளால் மூடப்பட்டுவிட்டது. சுவர்கள் உடைய ஆரம்பித்துவிட்டன. இது போதாதென்று, நம் ‘குடிமகன்கள்’ அவ்வப்போது வந்து காலி பாட்டில்களை போட்டுவிட்டுச் செல்வார்கள். இறந்த நாய் பூனை ஆடுகள் இவற்றின் உடல்களை தூக்கிப் போடவும் இதுதான் இடம்.

ஆனால் இவ்வளவையும் தாண்டி இந்தத் தீர்த்தம் சரி செய்யப்பட்டபோது, அதன் நடுவில் இருந்த செவ்வக வடிவத்தில் பாதுகாக்கப்பட்ட ஊற்றிலிருந்து நல்ல நீர் ஊறிக்கொண்டிருந்தது - எவ்வளவுதான் காலம் காலமாக சமுதாய தேக்கநிலைகள் எனும் மாசு படர்ந்தபோதிலும், எப்போதும் உள்ளே ஊற்றெடுத்துக்கொண்டிருக்கும் நம் பண்பாட்டை போலவே. என்னதான் முட்செடிகளை வளர்த்து, உடைந்த மதுபாட்டில்களை போட்டு, அழுகிய இறந்துபோன பிராணிகளைப் போட்டாலும், உள்ளே நல்ல நீர் ஊற்றெடுப்பது நின்றுவிடவில்லை.
இதே கதையை, விவேகானந்த கேந்திரத்தினர் திரௌபதி தீர்த்தத்திலும், அர்ஜுனன் தீர்த்தத்திலும், பீமன் தீர்த்தத்திலும், மங்கல தீர்த்தத்திலும், ஜடா தீர்த்தத்திலும், இன்னும் பணியாற்றிய 16 தீர்த்தங்களிலும் சந்தித்தனர்.
ராமேஸ்வரம், கடலில் உள்ள சிறு தீவு. ஆனால், கோவிலுக்கு வெளியே ஏறக்குறைய 40 தீர்த்தங்கள் உள்ளதாக சாஸ்திரங்கள், தல புராணங்கள் கூறுகின்றன. இதுவரை கண்டெடுத்த அனைத்து தீர்த்தங்களிலும் நன்னீர் ஊற்றெடுப்பது நிற்கவில்லை. இதை சாத்தியப்படுத்திய நீர் மேலாண்மை தொழில்நுட்பம், நம் பாரம்பரிய அறிவியலின் ஒரு பகுதி.
டாக்டர் கலாம், இந்தச் சீரமைப்புப் பணி குறித்து கூறினார்: ‘விவேகானந்த கேந்திர நண்பர்கள், புனித நீர்த் தீர்த்தங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று அவர்கள், பல பத்தாண்டுகளாக கைவிடப்பட்டு மாசடைந்த தீர்த்தங்களை சீரமைக்கின்றனர். அவர்கள் முட்செடிகளை அகற்றியுள்ளனர். தேங்கி நிற்கும் மாசடைந்த நீரை அகற்றியுள்ளனர். அவர்கள், உடைந்த மது பாட்டில்களையும் உள்ளே எறியப்பட்ட இதர மாசுகளையும் அகற்றியுள்ளனர். இப்போது யாத்ரீகர்கள் இந்த தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடலாம். விவேகானந்த கேந்திரத்தினரின் இந்தப் பணி பாராட்டுதலுக்கு உரியது. அவர்கள் ஒவ்வொருவரையும் இந்த உயர்ந்த செயலுக்காக நான் பாராட்டுகிறேன்’.
நீர்நிலைகளை உருவாக்கியதுடன் நிற்கவில்லை நம்மவர்கள். அதனை பாதுகாக்க சமூக உளவியல் அமைப்புகளையும் உருவாக்கினார்கள். இதற்கு அடிப்படையாக இருக்கிற விஷயம் என்னவென்றால், அது ‘புண்ணியம்’. இந்த தீர்த்தங்களில் வந்து நீராடிச் செல்வதுடன், அவற்றின் கரைகளில் என்னென்ன தான தர்மங்கள் செய்ய வேண்டும் என்பதையும் நம் பாரம்பரியம் சொல்கிறது.

நீர்நிலையை உருவாக்கினால் புண்ணியம்; நீர்நிலையை ஆழப்படுத்தினால் புண்ணியம்; நீர்நிலை அருகே மரம் செடிகொடிகளை நட்டால் புண்ணியம்; உங்களுக்கு உங்கள் தலைமுறைகளுக்குப் புண்ணியம். எனவே, நீர்நிலைகளை போற்றுங்கள், போற்றிப் பரமாரியுங்கள் என்று இந்தப் பண்பாடு தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறது. ஒருவிதத்தில், பாரதத்தை இணைக்கும் தீர்த்த யாத்திரைகள் அனைத்துமே, ‘புண்ணியம்’ என்கிற கோட்பாட்டின் அடிப்படையில்தான் இயங்குகின்றன.
நம் ‘செக்யூலர்’ அரசாட்சி அமைப்புகளால் சில பத்தாண்டுகள்கூட காப்பாற்ற முடியாத இந்த நீர்நிலைகளை, ஆயிரமாண்டுகளுக்கு மேலாக ‘புண்ணியம்’ என்கிற பண்பாட்டு-உளவியல் கோட்பாட்டின் மூலம் காப்பாற்றி வந்திருக்கிறது நம் பாரம்பரியம். இந்தப் பண்பாட்டுச் சூழல் முற்றிலும் அறுந்துபோகும் முன்னர், அதில் தோய்ந்து வளர்ந்திருக்கிறார் டாக்டர் அப்துல் கலாம். இந்தப் பண்பாட்டு அறிவுதான், அவரை நேருவிய தொழில்நுட்பப் பார்வையிலிருந்த குறைபாடுகளை களைந்து, அதனை முழுமையடைய வைத்தது போலும்.
பாரதத்தின் சமன்வயப் போக்கின் மற்றொரு அற்புதம், அப்துல் கலாம். நேருவின் வேரிழந்த தொழில்நுட்பப் போக்கை மீண்டும் இந்த மண்ணின் வேருடன் இணைத்த, பாரதிய தொழில்நுட்ப மேதை. சாதாரண மனிதனுக்கு அறிவியலின் கனியான தொழில்நுட்பத்தை பிணியகற்றும் மருந்தாக அளித்தவர். அவர், நமக்கு மறுக்கப்பட்ட மேற்கத்திய தொழில்நுட்பத்தை பிரதியெடுத்து வென்றவர் எனக் கூறப்படுகிறது. ஆனால், அதைத் தாண்டி அதைவிட முக்கியமாக, தொழில்நுட்பத்தை பாரதத்தின் பாரம்பரிய ஆதார மதிப்பீட்டுடன் அவர் இணைத்தார்.
உலக தொழில்நுட்ப வரலாற்றில் மிக முக்கியப் பார்வை மாற்றம் இது. மூன்றாம் உலகம் என அழைக்கப்படும் காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட மிகப்பெரிய ஜனத்திரளிடம், தொழில்நுட்பத்தை அவர்களுடையதாக்கும் பிரயத்தனம். பெரும் வனம் ஒன்றை உருவாக்க, நேருவிய சோஷலிச அரசு இயந்திரங்களிலும் ஆராய்ச்சிக்கூடங்களிலும் முடங்கிக்கிடந்த தொழில்நுட்ப ஞானகங்கையை வெளிக் கொணரும் பகீரதனின் வாழ்க்கை தவம். அதன் கனிகள் பல்கிப் பெருகி, பாரதத்தில் மண் சார்ந்த தொழில்நுட்பத்தின் மகாவனம் ஒன்றை உருவாக்கும். அதுவே அவர் நமக்கு விட்டுச்சென்ற கடமையும் கனவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...