92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருவள்ளுவரும் முகுர நியூரான்களும்

வான்மீகி எப்படி கவிதை சுலோகத்தை கண்டடைந்தார் என்பது குறித்து ஒரு கதை வழங்கப்படுகிறது. வேடனாக இருந்து முனிவரானவர் வான்மீகி. ஒரு நாள், தன் சீடர்களுடன் செல்லும்போது, கிரௌஞ்ச பறவைகள் இணையில் ஒன்றை வேடனின் அம்பு கொன்று விட மற்றொன்று துடிப்பதை அவர் காண்கிறார். அதன் சோகத்தை தன்னில் உணர்கிறார்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2015, 4:44 am

அரவிந்தன் நீலகண்டன்

வான்மீகி எப்படி கவிதை சுலோகத்தை கண்டடைந்தார் என்பது குறித்து ஒரு கதை வழங்கப்படுகிறது. வேடனாக இருந்து முனிவரானவர் வான்மீகி. ஒரு நாள், தன் சீடர்களுடன் செல்லும்போது, கிரௌஞ்ச பறவைகள் இணையில் ஒன்றை வேடனின் அம்பு கொன்று விட மற்றொன்று துடிப்பதை அவர் காண்கிறார். அதன் சோகத்தை தன்னில் உணர்கிறார். அந்தச் சோகத்தில் இருந்து சுலோகம் உருவாகிறது. தன் சுயம் விரிவடையும்போது, பிற உயிரினம் ஒன்றின் சோகத்தை தன் சோகமாக வான்மீகி உணர்கிறார். அந்த உணர்விலிருந்துதான் ஆதி காவியம் பிறந்தது.

மற்றொருவரின் வேதனையை நாம் எப்படி நம் வேதனையாக உணர முடியும்? இதற்கான விடை ஒருவேளை நம் மூளையை ஆராய்ச்சி செய்கிறவர்களிடம் இருந்து நமக்குக் கிடைக்கலாம். மூளை ஆராய்ச்சியாளர்கள் கியகொமோ ரிஸோலட்டியும் (Giacomo Rizzolatti) விட்டோரியோ காலெஸி (Vittorio Gallese) என்பவரும், ‘மிர்ரர் நியூரான்கள்’ (mirror neurons) என்கிற விஷயத்தைக் கண்டுபிடித்தார்கள். மூளையின் முன்மடிப்புகளில் நம் செயல்படு தன்மைக்கான நியூரான்கள் உள்ளன. நாம் கதவைத் திறக்கும்போதோ அல்லது கையை உயர்த்தும்போதோ இந்த நியூரான்கள் மின்னியக்கம் அடைகின்றன. இவற்றில் ஒரு சிறு பகுதி நியூரான்கள், நாம் இயங்கும்போது அல்லது பிறர் இயங்குவதை நாம் கவனிக்கும்போது மின்னியக்கம் அடைகின்றன. அதாவது, பிறர் இயங்குவதைப் பார்க்கும்போது அந்த இயக்கம் குறித்த அவர்களின் மூளைச் செயல்பாட்டை இவை பிரதிபலிக்கின்றன. எனவே, கண்ணாடிபோல இவை செயல்படுகின்றன. ஆகவேதான் அவை ‘மிர்ரர் நியூரான்கள்’ என அழைக்கப்படுகின்றன. இவற்றை முகுர நியூரான்கள் என அழைக்கலாம். முகுரம் என்றால் பிரதிபலிக்கும் கண்ணாடி. செயல்களை மட்டுமல்ல, உணர்வுகளையும் இவை பிரதிபலிக்கின்றன என்கிறார் நரம்பியலாளர் வி.எஸ்.ராமச்சந்திரன்.

குறிப்பாக, நாம் வேதனையை அனுபவிக்கும்போது நம் முன்மூளை மடிப்புகளுக்கு உள்ளே இருக்கும் anterior cingulate என்கிற இடத்திலுள்ள நியூரான்கள் இயக்கம் பெறுகின்றன. பிறர் வேதனையை அனுபவிப்பதை நாம் பார்க்கும்போதும் அதே நியூரான்களில் சில இயக்கம் பெறுகின்றன. பிறர் வலியை தன் வலியாக காணும் தன்மை – empathy என்பார்களே, அதன் நியூரானிய அடிப்படை, முகுர நியூரான்களாக இருக்கக்கூடும் என ராமச்சந்திரன் கருதுகிறார்.

ஆனால், இது மனிதர்களிடம் மட்டுமே உள்ள ஒரு விஷயமா? பார்பாரா ஜே கிங் என்கிற மானுடவியல் ஆராய்ச்சியாளர், ஒரு முக்கியமான அவதானிப்பை முன்வைக்கிறார்.

ஒரு இளம் பெண் சிம்பான்ஸி. அவளுக்கு மானுட ஆராய்ச்சியாளர்கள் வைத்த பெயர் டினா. ஏற்கெனவே தாயை இழந்திருந்த டினாவுக்கு, ஒரு ஐந்து வயது சகோதரன் உண்டு. அவனுக்கு வைக்கப்பட்ட பெயர் டார்ஸான். அந்த சிம்பான்ஸி கூட்டத்தின் முதன்மையான ஆண், டினாவுடன் நெருக்கமாக இருந்தான். ஒரு நாள், டினாவை ஒரு சிறுத்தை கடித்துக் கொன்றுவிட்டது. டினாவின் உடலுடன் பல மணி நேரங்கள் அந்த முதன்மை ஆண் அமர்ந்திருந்தான். வேறு எவரையும் டினாவின் உடலின் அருகில் அவன் விடவில்லை. ஆனால், டினாவின் சகோதரனான டார்ஸானை மட்டும் அவன் அனுமதித்தான். டார்ஸான், டினாவின் உடலருகில் அமர்ந்து அவள் கையை பிடித்து உடலைத் தடவ அந்த முதன்மை ஆண் அனுமதித்தான். அதாவது, டினாவுக்கும் டார்ஸானுக்குமான சகோதர உறவும், அதனால் டார்ஸானுக்கு ஏற்பட்ட இழப்பையும் முதன்மை ஆண் சிம்பான்ஸியால் உணர முடிந்தது. மனிதரிடம் மட்டுமல்ல, மனிதரற்ற பிற பேரினக் குரங்குகளிலும் இந்த ‘எம்பதி’  இருக்கிறது.

ஆனால், மானுடத்தில் என்ன நிகழ்கிறது? நாம் மிகவும் பிரக்ஞைபூர்வமாக நம் எம்பதியை, கருணையை வளர்த்துக்கொள்கிறோமா? வான்மீகி கதையை எடுத்துக்கொள்வோம். வான்மீகியே ஒரு வேடனாகத்தான் இருந்தார். வேட்டையாடியிருப்பார். ஆனால், அந்த கிரௌஞ்ச பறவைகளின் சோகத்தினை அவர் எப்படி தனக்குள் உணர்ந்தார்? அவர் செய்த அக பயிற்சிகள் அதற்கு உதவியதா? அறிவு என்பதன் இறுதி இலக்கே, பிறர் வேதனையை தன் வேதனையாக உணர்ந்துகொள்வதுதான். அதுவன்றி அறிவினால் பிரயோஜனம் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்

தம் நோய் போல் போற்றாக் கடை.   (திருக்குறள்: 315)

Story image

அறிவு என்பது, ‘எம்பதி’ என்கிற இந்தத் தன்மையை நோக்கித்தான் செலுத்த வேண்டும். இன்னும்  சொன்னால், எல்லா மானுட உன்னதங்கள் என நாம் கருதும் அனைத்தும், இறுதியில் தன்னை அனைத்துயிர்களுடனும் இணைத்துணரும் தன்மை நோக்கித்தான் செலுத்த வேண்டும் என்பது நம் பண்பாட்டு மரபு. கலை, இப்பெரும் ஒருமையுணர்வை தூண்டுவதற்கான கருவியாகவே நம் மரபில் கருதப்பட்டது.

தொல்காப்பியர், ‘நுண்ணிதின் உணரும்  உணர்வு’ எனக் கூறுகிறார். அபிநவகுப்தர் ‘தன்மயீபாவனை’ எனக் கூறுகிறார். கலை வெளிப்பாட்டுடன், தன்னை முனைந்து, தொடர்ந்து அதனைக் கேட்டும் கண்டும் (வாசித்தும்) உணர்ந்து, அதனுடன் அந்நியமற்று பேதமற ஒன்றுவது. ஒரு கலை வெளிப்பாட்டை, அதனை உருவாக்கியவரின் பிரக்ஞை நிலையிலிருந்து அதனுள் செல்வது அவசியமென நம் மரபில் கருதப்பட்டது. அத்தகையவர்களே, அது குறித்துப் பேசவும் அதனை மதிப்பிடவும் தகுதியுடையவர்கள் எனக் கருதப்பட்டது. அவர்கள் ‘சஹிருதயர்கள்’ என அழைக்கப்பட்டனர். ஜெயகாந்தனால் நம் இலக்கிய வெளியில் மிகவும் பிரபலப்படுத்தப்பட்ட சொல்தான் இது. சஹிருதயனாக தன்மயீபாவனை எனும் ‘நுண்ணிதின் உணரும் உணர்வினை’ வளர்த்துக்கொள்கிறவன், ஒரு கட்டத்தில் தன்னை கலை வெளிப்பாட்டின் மெய்ப்பாட்டு அனுபவத்தில் கரைக்கிறான்.

இவை எல்லாமே, நரம்பியல் பார்வையில் முகுர நியூரானதிர்வுகளை அதிகமாக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம். முகுர நியூரான்கள் குறித்த அறிவியல் எதையும் அறியாமலே, நம் அழகியல் கோட்பாட்டாளர்கள் அதன் அடிப்படை செயலியக்கத்தை வந்தடைந்திருக்கிறார்கள். சஹிருதயனை விளக்கும் அபிநவகுப்தர், மன முகுரம் – மனக் கண்ணாடி - மாசற துடைக்கப்பட்டு, கவியின் இதயத்துடன் இணைந்திடுபவன் என்றே கூறுகிறார். இந்தத் துடைக்கும் செயல்பாடு, கற்பதன் மூலம் நடைபெறுகிறது.

பிறிதின் நோயை, வேதனையைத் தன் நோயாகப் பார்க்கும் தன்மையை அடைவதே அறிவின் பலன் எனக் கூறும் திருவள்ளுவரின் குரல், சஹிருதய தன்மையை இலக்கிய அழகியல் கோட்பாட்டைத் தாண்டி விரித்து பேரிதயத்தன்மை கோரும் இயக்கமாக மானுட அறிவின் அனைத்து புலங்களையும் மாற்றுகிறது.

இந்தப் பேரிதயத்தன்மைக்கு, முகுர நியூரான்கள் ஓர் உயிரியல் அடிப்படையைக் கொடுக்கின்றன. மேலும், இது ஒன்றும் மானுடத்தின் தனித்தன்மை அல்ல என்பதையும், இவை சிம்பான்ஸிகளிலேயே இருக்கின்றன என்பதையும் நாம் பார்த்தோம். எனவே, கட்டாயமாக இந்த விரிவடையும் தன்னுணர்வுக்கு நிச்சயம் ஒரு பரிணாம பரிமாணம் இருக்க வேண்டும், அதற்கே உரிய சாதக பாதகங்களுடன். அந்தப் பரிணாம நியாயம்தான் என்ன?

சதுரங்க விளையாட்டை எடுத்துக்கொள்வோம். தன் ‘இடத்திலிருந்தும்’ எதிரியின் ‘இடத்திலிருந்தும்’ சதுரங்கப் பலகையைப் பார்க்க முடிந்த ஒருவருக்கும், தன் இடத்திலிருந்து மட்டுமே சதுரங்கப் பலகையைப் பார்க்க முடிந்த ஒருவருக்கும் இடையில் நடக்கும் சதுரங்க விளையாட்டில், வெற்றி பெறுவது எவராக இருக்க முடியும்? அடிப்படையில், பிறர் உணர்வினை, பிறர் மனச் செயல்பாட்டைப் புரிந்துகொண்டு செயல்படுவது ஒரு பரிணாம சாதகத்தை அளிக்கிறது. ஆனால், அத்துடன் அது நின்றுவிடவில்லை. மானுடத்தின் அறவியல் கோட்பாடுகளை அது உருவாக்க ஆரம்பிக்கிறது. எளிய தனிமனித இனப்பெருக்க - உணவுப் போர் வெற்றிகளுக்கு அப்பால் பேரிதயத்தன்மை, இதய விரிவு மானுடத்தின் கூட்டு வெற்றிக்கும் பயனளிக்கிறது.

எனவேதான், எல்லா மதங்களின் ஒழுக்கங்களும் அறக் கோட்பாடுகளும் இந்த இதய விரிவையே பேசுகின்றன. ஒரு சமுதாயத்தில் சமூக தேக்கநிலை ஏற்படும்போது, ஒடுக்கப்பட்டவரை தானேயாக நினைப்பதுதான் அறம் எனக் கூறும் குரல்களை நாம் காண்கிறோம். ஐயா வைகுண்டர், ‘தாழக்கிடப்பவரை தற்காப்பதே தர்மம்’ எனக் கூறியது இதன் வெளிப்பாடுதான். ஆனால், சில விரிதல்கள் தன் குழு/மதம் சார்ந்தும், சில விரிதல்கள் மானுடம் சார்ந்தும் நின்றுவிடுகின்றன.

ஆபிரகாமிய மதங்களின் ஒழுக்க விதிகள் நின்றுவிட்ட இடம் இதுதான். தன் - குழு / சமயம் சார்ந்த மானுடத்தைத் தாண்டிய இதய விசாலத்தை அவற்றால் பேசிட இயலவில்லை. தன் சமய அனுபவம் தாண்டிய பிற அனுபவங்களை உணர்ந்திடவும் அவை அனுமதிக்கவில்லை. ஆனால், மானுடம் முழுமைக்குமான விரிவைத் தாண்டி, அனைத்து உயிர்களுக்குமான பேரிதய விரிவை, பாரத மெய்யியல் மரபு பேசியது. ‘உயிரற்ற’ பாறைகளின் உணர்வுகளை உணர்ந்துகொள்ள முனைந்த கவிகளை, ரிக் வேதத்தில் சந்திக்கிறோம்.

இன்று மானுட மையக் கோட்பாடு, சுற்றுச்சூழலை அழித்து நம்மை பேராபத்தில் வைத்துள்ளது. இந்நிலையில், மானுடம் தாண்டி அனைத்து உயிர்களையும் தன்னுயிராக உணரும் தன்மைக்கு அழைத்துச் செல்லும் அறிவு நமக்குத் தேவையாக உள்ளது. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’  உணர்வு நிலைக்கு நம்மை இட்டுச்செல்லும் அறிவியலும் கலையும் ஆன்மிகமும் நமக்குத் தேவை. திருவள்ளுவர் கூறிய பிறிதின் நோயைத் தன் நோயாகக் காணும் அறிதல், வெறும் கவித்துவ உன்னதம் மட்டுமல்ல. மானுடம் நாளை வாழ்ந்திருக்குமா என்பதை நிர்ணயிக்கும் உயிரியல் அவசியமும் கூட.

உங்கள் குடும்ப உறுப்பினருக்காக மின்னியக்கம் பெறும் முகுர நியூரான்களை, உங்கள் மொழி பேசுபவருக்காக, உங்கள் சமயம் சார்ந்தவருக்காக, உங்கள் தேசம் சார்ந்தவருக்காக மின்னியக்கம் பெற வைக்கவும், பின்னர் ஒட்டுமொத்த மானுடத்துக்காகவும், பின்னர் தந்தங்களுக்காகக் கொல்லப்படும் யானைகளுக்காகவும், பூச்சிக்கொல்லி நஞ்சில் கொல்லப்படும் சிறு பூச்சியினங்களுக்காகவும், உயிரிழக்கும் நதிகளுக்காகவும், கரைந்தழியும் பெரும் பனிப்பாறைகளுக்காகவும், மின்னியக்கம் பெற வைக்கவுமான அறிவின் விரிவை நோக்கி நாம் சென்றாக வேண்டும்.

விரிதலே உயிர் வாழ்தல் என்றார் சுவாமி விவேகானந்தர். Expansion is Life.

மேலதிகம் அறிய -

Barbara J King, Evolving God: A Provocative View on the Origins of Religion, Doubleday Religious Publishing Group, 2007

Harsha V. Dehejia & Kapila Vatsyayan, The Advaita of Art, Motilal Banarsidass Publ., 1996

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.