92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஷ்ரோட்டிஞ்சரின் பூனையும், மெய்கண்டாரின் சூத்திரமும்

இயற்பியலில் சுவாரசியமான ஒரு  பரிசோதனை இருக்கிறது.  நாம் நம் உயர்நிலைப் பள்ளி இயற்பியல் பாடங்களில்கூட அது குறித்துப் படித்திருக்க வாய்ப்புள்ள ஒரு பரிசோதனை.

News image
Updated On :26 ஜூலை 2015, 8:47 am

அரவிந்தன் நீலகண்டன்

யற்பியலில் சுவாரசியமான ஒரு  பரிசோதனை இருக்கிறது.  நாம் நம் உயர்நிலைப் பள்ளி இயற்பியல் பாடங்களில்கூட அது குறித்துப் படித்திருக்க வாய்ப்புள்ள ஒரு பரிசோதனை. இரட்டை நெடுந்துளைகள் மூலம் எலெக்ட்ரான்களை அனுப்பி அவற்றை ப்ளோரஸெண்ட் திரையில் பதியவைக்கும் பரிசோதனை.

Story image

பொதுவாக, ஒரு திரையில் இரு நெடுந்துளைகள் மூலம் துகள்களை அனுப்புகிறோம் என்றால், அவை இரண்டு இடங்களில் இரு பட்டைகளாகப்  பதியும். ஆனால், இந்த இரு நெடுந்துளைகள் மூலமாக அலைகள் பரவினால், அவை ஒன்றோடொன்று மோதி அழுந்தியும் அழுந்தாமலுமாக தொடர்பட்டைகளை உருவாக்கும் (interference patterns). அனுப்படுபவை எலெக்ட்ரான்கள். துகள்கள். சின்ன பந்துகளைப்போல் இருப்பவை. எனவே, அவை இரு பட்டைகளைத்தான் உருவாக்க வேண்டும். ஆனால் நம் ப்ளோரெஸண்ட் திரையில் உருவாவது என்னவோ தொடர்பட்டைகளால் ஆன interference pattern.

சரி, கூட்டம் கூட்டமாக எலெக்ட்ரான்களை அனுப்பாமல், ஒரு சமயம் ஒரே ஒரு எலெக்ட்ரான் மட்டும் அனுப்புகிறார்கள். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் தொடர் பட்டைகள். அதாவது, ஒரே ஒரு எலெக்ட்ரான்கூட இரு நெடுந்துளைகள் மூலமாகச் சென்று தன்னுடன் தானே அலையாகி தொடர்பட்டைகளை உருவாக்குகிறது. ஆனால் எந்தத் துளை வழியாக இந்த எலெக்ட்ரான் செல்கிறது என்பதை அளந்தறிய ஒரு கருவியை ஏற்பாடு செய்தால், எலெக்ட்ரான் இந்த குறும்புத்தனத்தை விட்டுவிடுகிறது. நல்லபிள்ளையாக மீண்டும் துகளாகச் செயல்படுகிறது. ப்ளோரெசண்ட் திரையில் இரு பட்டைகளை உருவாக்குகிறது.

அப்படியென்றால், எலெக்ட்ரான் என்பது உண்மையில் என்ன? துகளா அல்லது அலையா? இந்த அடிப்படை இயற்கையை எது உருவாக்குகிறது? அளத்தல் அல்லது கவனித்தல் என்கிற தன்னறிவு (consciousness) சார்ந்த சமாசாரமா? அல்லது தன்னறிவு என்கிற விஷயம் இல்லாமலே அளத்தல் அல்லது அவதானித்தல் என்பது சாத்தியமா?

கோபன்ஹேகன் வியாக்கியானம் ஒன்று க்வாண்டம் இயற்பியலின் இந்தப் பிரச்னை குறித்து முன்வைக்கப்பட்டது. நெய்ல்ஸ் போர், வெர்னர் ஹெய்ஸன்பர்க் போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட அந்த வியாக்கியானம் என்ன சொன்னதென்றால் –

இந்த அவதானித்தல் அல்லது அளத்தல் என்கிற விஷயம் நடப்பதற்கு ‘முன்னால்’, எந்த ஒரு அடிப்படை துகளும் அதன் அனைத்து க்வாண்டம் சாத்தியங்களிலும் ‘இருக்கிறது’. அதாவது, ‘அவதானிக்கப்படும் முன்’ எலெக்ட்ரான் அலையும் துகளுமாக இணைந்த நிலையில் உள்ளது.

க்வாண்டம் இயற்பியலின் அடிப்படையில் இருக்கிற குடைச்சலான கேள்விகள் இவை. க்வாண்டம் இயற்பியலை தமிழில் நுண்ணலகு இயற்பியல் எனலாம்.

Story image

எட்வர்ட் ப்ரென்கெல் (Edward Frenkel) கணிதவியலாளர். க்வாண்டம் இயற்பியலின் இந்த விசித்திர தன்மையின் வசீகரத்தை விரிவாகப் பேசுகிறார். அண்மையில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில், க்வாண்டம் இயற்பியலின் மர்மத்தை அகிரா குரோஸவாவின் ‘ரஷமான்’ (Rashomon)  திரைப்படத்தில் வரும் ஒரு அடிப்படை பிரச்னையைக் கொண்டு விளக்குகிறார்.

அத்திரைப்படத்தில் ஒரு சமுராய் கொல்லப்படுகிறான். அவன் ஏன் கொல்லப்பட்டான், எதற்காகக் கொல்லப்பட்டான் என்பது தெரியவில்லை. பல கதாபாத்திரங்கள் அவரவர் பார்வையில் சம்பவக் கோர்வையை விவரிக்கின்றனர். அவை ஒன்றொடொன்று முரண்படுகின்றன. அவரவர் பார்வையில் அது உண்மையே. எனில் எது உண்மை? இத்திரைப்படம் இன்னும் ஆழமான கேள்வி ஒன்றை முன்வைக்கிறது. உண்மையான சம்பவக் கோர்வை என்று ஒன்று இருக்கிறதா என்ன? புறவயமான ஒரு உண்மை என்பது சாத்தியமா?

புறவயமான சம்பவக் கோர்வை ஒன்று இருக்கலாம். ஆனால் அதை அறிவது என்பது நம் அறிதலின் எல்லைகளால் சுருக்கப்படலாம் அல்லது மாற்றுச் சாத்தியங்களால் ஆன சம்பவக் கோர்வைகளின் கூட்டாக நமக்குத் தெரியலாம். இது நம்முடைய இயலாமையால் ஏற்படுவது எனக் கருதலாம். இதைவிட ஆச்சரியம் தரக்கூடிய இன்னொரு சாத்தியமும் இருக்கிறது என்கிறார் ப்ரென்கெல். அது என்னவென்றால், புறவயமான யதார்த்தம் என்று எதுவுமே இல்லை என்பதுதான்.

இந்த ஆண்டு (2015) பிப்ரவரி மாதம் புகழ்பெற்ற ‘நேச்சர்’ இதழில் வெளியான ஒரு ஆய்வு, ஏறக்குறைய அப்படித்தான் சொல்கிறது. காமம் செப்பாது கண்டது மொழிவதென்பது இயலாத ஒன்று. அடிப்படை இயற்கையே அப்படித்தான் அமைந்துள்ளது. இது ஒரு முக்கியமான மாற்றுச் சாத்தியம் என்கிறது அந்த ஆய்வுத்தாள். (http://arxiv.org/abs/1412.6213)

இப்படிப் பொருண்மை என்கிற ஜடப்பொருளின் ஆதார அடிப்படையில் இருக்கும் முரணை எப்படிப் புரிந்துகொள்வது? எட்வர்ட் ப்ரென்கெல் தன் கட்டுரையை இப்படி முடிக்கிறார் – க்வாண்டம் இயற்பியலின் முரண்களை நம் இருப்பின் முடிவிலி சாத்தியங்களின் உருவகங்களாக நாம் கருத வேண்டுமென்று நான் நினைக்கிறேன். இதையே வேதம் அழகாக வெளிப்படுத்துகிறது: ‘அணுவிலிருப்பதே பிரபஞ்சத்திலும்; அண்டத்திலிருப்பதே பிண்டத்திலும். மானுட உடல் போன்றே பிரபஞ்ச உடலும்; மானுட மனம் போன்றே பிரபஞ்ச மனமும்’.

மனம், உடல் என்று தனித் தனியாகக் கூறினாலும், க்வாண்டம் இயற்பியலின் அடிப்படையில் இருக்கும் விசித்திர முரண், நம் தன்னுணர்வின் வெகு இயற்கையில் இருப்பதை இந்திய மெய்யியல் தொடர்ந்து கூறி வந்திருக்கிறது. இந்திய மெய்யியலாளர்களுக்கு க்வாண்டம் இயற்பியல் தெரியாது. ஆனால், அவர்களின் தத்துவ சிந்தனைகள் தங்கு தடையின்றி அபாரமான அடிப்படை சாத்தியங்களுக்குள் சென்று துருவியிருக்கின்றன.

Story image

எர்வின் ஷ்ரோட்டிஞ்சர் (Erwin Schrodinger), க்வாண்டம் இயற்பியலின் அடிப்படையில் இருக்கும் முரண்களை – குறிப்பாக கோபன்கேஹன் வியாக்கினத்தின் விளைவாக ஏற்படும் அபத்த முரண்களை - சுட்டிக்காட்ட ஒரு கற்பனையான பரிசோதனையை வடிவமைத்தார். ஒரு மூடிய உருக்குப் பெட்டிக்குள் ஒரு பூனை இருக்கிறது. அந்தப் பெட்டிக்குள்ளே ஒரு கெய்ஜர் கவுன்ட்டர் இருக்கிறது. அதனோடு ஒரு சுத்தியல் இணைக்கப்பட்டுள்ளது. அந்தச் சுத்தியலின் கீழே விஷம் நிரம்பிய குடுவை ஒன்று உள்ளது. அந்த விஷம் வெளியே வந்தால் பூனை இறந்துவிடும். கதிரியக்கச் சிதைவு கொண்ட ஒரு பொருள் அங்கே உள்ளது. கதிரியக்கச் சிதைவு ஏற்பட்டால் போதும் பூனை இறந்துவிடும். திறந்து பார்க்கும்போது, ஒன்று பூனை இறந்திருக்கும் அல்லது உயிருடன் இருக்கும். ஆனால், அப்படிப் பார்ப்பதற்கு முன்பு எப்படி இருக்கும்? இறப்பும் இறப்பின்மையுமான ஒரு கலந்த நிலையில் அல்லது இரண்டும் கலந்த இரண்டுமற்ற நிலையில் இருக்கும்.

Story image

ஷ்ரோடிஞ்சரின் பூனை முரணை ஒத்த ஒரு நிலை, சைவ சித்தாந்தத்தில் பேசப்படுகிறது என்பதுதான் அதிசயமான விஷயம். சைவத்தின் நான்கு சந்தானாச்சாரியர்களில் முக்கியமானவர் மெய்கண்டார். அவரது ’சிவஞான போதம்’, 12 சூத்திரங்களில் சைவசித்தாந்தம், மெய்பொருள் எனக் கருதுவதையும் அதனுடன் இரண்டற கலப்பதையும் விளக்குகிறது.

இதில், ஆறாம் சூத்திரமும் ஏழாம் சூத்திரமும் நம் கவனத்துக்கு உரியவை –

உணர்உரு அசத்து எனின், உணராது இன்மையின்

இருதிறனல்லது சிவசத்தாமென

இரண்டு வகையின் இசைக்குமன் உலகே

இது ஆறாம் சூத்திரம்.

இதை  விளக்குவோர் இப்படிக் கூறுவர் - நம் புலன்களால் உணரப்படும் உருவென்றால் அது அசத்து. அதாவது, மாறுவது. எனவே அழிவுக்கு உட்பட்டது உருவமுடையது. உணரப்படாதது என்றால் அது இல்லாத ஒன்று. இவ்விரு தன்மையிலும் இல்லாத ஒன்றாக சிவசத்து கூறப்படுகிறது.

அடுத்த சூத்திரம் –

யாவையும் சூனியம் சத்தெதிர், ஆதலின்

சத்தே அறியாது அசத்து இலது அறியாது

இருதிறன் அறிவுளது இரண்டிலா ஆன்மா

என்று கூறுகிறது.

Story image

சத்தின் முன்னர் அனைத்தும் சூனியமாகிவிடும். எனவே, அறிதற்கென என தன்னில் அந்நியமாக ஒரு பொருள் இல்லை. எனவே சத்து அறியாது. அசத்தோ உண்மையானதல்ல. எனவே, தன்னை அறியும் தன்மையற்றது. ஆக, ஆன்மா எனப்படும் தன்னறிவோ (consciousness), அசத்து - சத்து ஆகிய இரண்டையும் அறியும்படியான நிலையில் உள்ளது. ஆனால், இரண்டுமில்லா நிலையில் இருக்கிறது. இருதிறன் அறிவுடன், இரண்டுமல்லாத ஆன்மா இருக்கிறது. அது எதனுடன் செல்லும் என்பது பூனையின் இருப்பு இறப்பு தொடர்பான முரண் போன்றதுதான். எதுவானாலும், ஏற்கெனவே இருநிலைச் சாத்தியங்களிலும் ஆன்மா என்கிற தன்னறிவு இருக்கிறது.

இங்கு ஒரு எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தியாக வேண்டும். க்வாண்டம் இயற்பியலை மெய்கண்டாரோ சந்தானாச்சாரியார்களோ, ஏன் திருமூலரோ அறிந்திருக்கவில்லை. அவர்கள் அகத்தினுள் பயணித்தவர்கள். அக பரிமாணங்களை விளக்கியவர்கள். தன்னறிவின் இயற்கையையும், அதன் ஆகப்பெரிய விரிவின் சாத்தியத்தையும் விடுதலையையும், அறிவியலாகவும் கவிதையாகவும் சமயமாகவும் ஒரு நிகழ் கலாசாரமாகவும் நமக்கு அளித்தவர்கள்.

இப்போது எட்வர்ட் ப்ரென்கெலுக்கு மீண்டும் வருவோம். அவர் சொல்வதுபோல், க்வாண்டம் இயற்பியலின் முரண்கள் உண்மையில் இயற்கையின் ஆதாரமான ஆதி உருவகங்களாக இருக்கக்கூடும். நம் தன்னறிவில் அவை வெளிப்படும் சாத்தியங்களும் உண்டு. அப்படியென்றால், நம் தன்னறிவு குறித்த மெய்கண்டாரின் சூத்திரங்களுக்கும், க்வாண்டம் இயற்பியல் காட்டும் பொருண்மையின் தன்மைக்கும் இருக்கும் இணைத்தன்மை நிச்சயமாக ஆராய்ச்சிக்குரிய ஒன்றுதான். கலை உலகம், சமயம், தத்துவம், உயர் இயற்பியல் ஆகியவற்றில் மாற்றுச் சாத்தியங்களை மனம் மத்தாகக் கடைந்திட நல்ல ஒரு தளமாக நம் மெய்யியல் அமைந்திருக்கிறது.    

க்வாண்டம் இயற்பியலின் கணிதமொழியை அல்லது அதன் பரிசோதனைகளை அறிய, நிச்சயமாக சைவ சித்தாந்தமும் அதன் மொழியும் தேவை இல்லாதவையாக இருக்கலாம். ஆனால், இன்று க்வாண்டம் இயற்பியல் அடிப்படையான தத்துவ கேள்விகளை எழுப்பி நிற்கிறது. எனவே அவற்றைப் புரிந்துகொள்ள, அவற்றின் அடிப்படையில் மாற்றுச் சாத்தியங்களை சிந்திக்க ஒரு அற்புதமான பொக்கிஷப் பெட்டியாகவே சைவசித்தாந்தம் அமைந்திருக்கிறது.

அடிப்படைவாத சமய நோக்குகளைத் தாண்டி, இந்தச் சித்தாந்த அறிவியல் தத்துவ இணைப்பை நம் கல்வி அமைப்பில் செய்ய முடிந்தால், உலக அறிவியல் வரலாற்றிலும் சரி, மெய்யியலிலும் சரி, முன்னெப்போதும் இல்லாத ஒரு பெரிய முன்னகர்வையும் விரிதலையும் மானுடத்துக்குப் பாரதம் சாத்தியப்படுத்தலாம்.

(எட்வர்ட் ப்ரென்கெலின் முழுக்கட்டுரை - 'The Reality of Quantum Weirdness', நியூயார்க் டைம்ஸ், பிப்ரவரி 20 2015: http://www.nytimes.com/2015/02/22/opinion/sunday/the-reality-of-quantum-weirdness.html)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.