92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கடிகாரத்திலிருந்து முட்டைக்கு...

அபிஷேக் பசக் ஒரு டிசைனர். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளில் அழகிய டிசைன்களை வடிவமைப்பது அவரது கலை. கடிகாரங்களிலிருந்து பேனாக்களிலிருந்து, பென் டிரைவ்கள் என அனைத்துப் பொருட்களிலும் அழகிய நுண்ணிய டிசைன்கள். இந்த வடிவமைப்புகள் அனைத்திலும் பொறி சக்கரங்கள் இருக்கின்றன.

News image
Updated On :6 செப்டம்பர் 2015, 4:31 am

அரவிந்தன் நீலகண்டன்

அபிஷேக் பசக் ஒரு டிசைனர். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளில் அழகிய டிசைன்களை வடிவமைப்பது அவரது கலை. கடிகாரங்களிலிருந்து பேனாக்களிலிருந்து, பென் டிரைவ்கள் என அனைத்துப் பொருட்களிலும் அழகிய நுண்ணிய டிசைன்கள். இந்த வடிவமைப்புகள் அனைத்திலும் பொறி சக்கரங்கள் இருக்கின்றன. ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த பொறி சக்கரங்கள். அண்மையில் அவர், தனக்குள் தோன்றிய சித்திரம் ஒன்றை தனது நண்பரான ஓவியர் ஒருவரிடம் கூறியிருந்தார். சஷாங்க மிஸ்ரா எனும் அந்த ஓவியர், அதை அற்புதமான ஓவியமாகத் தீட்டியிருந்தார். முனிவர் ஒருவர் தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். பூமிக்கோளுக்குள் கடிகார முட்சக்கரங்கள், ஒன்றோடொன்று இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பூமியின் மீது கண்ணன் புல்லாங்குழல் ஊதிக் கொண்டிருக்கிறான். அண்டங்கள் சுழல, நான்கு கரங்கள் விரிந்திட நிற்கும் விஷ்ணு பின்னணியில். அவர் மீது ஒரு ஒளிச்சுழலில் ஃப்ராக்ட்டல் (fractal) தன்மை கொண்ட வட்டங்கள்.
 

Story image

இதுகுறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் அளித்த சிறு விளக்கத்தில், பாகவத ஸ்லோகம் ஒன்றைப் பயன்படுத்தியிருந்தார். பிரம்மம், பரமாத்மா, பகவான் ஆகிய மூன்றும் ஒன்று (பாகவதம் 1.2.11) எனச் சொல்கிற ஸ்லோகம் அது. த்வைத பார்வையில், பிரம்மத்திலிருந்து பரமாத்மா ஊடாக பகவான் என்கிற நிலைக்கு பக்தன் செல்கிறான். ஹரே கிருஷ்ணா இயக்கம் போன்றவை சொல்வது இதைத்தான். ஆனால், இதை மாற்றிப் பார்க்க முடியும்.

பகவான் என்பது ஆளுமை கொண்ட ஒரு தெய்வ வடிவம். Personal God. இந்த பெர்ஸனல் தெய்வம் – ஈஸ்வரன், இறைவன் என்பது பொதுவாக உலகத்தையெல்லாம் படைத்து, காத்து ரட்சிக்கும் தெய்வம். பக்தர்களின் கதறலுக்குச் செவிமடுக்கும் தெய்வம். இந்தத் தெய்வத்தை உருவாக்குவது மானுடப் பண்பாடுகள் அனைத்துக்கும் தேவையாக இருந்திருக்கிறது. மானுடக் குழுக்கள் அனைத்தும், தங்கள் தங்கள் தெய்வத்தையே அதி உயர் தெய்வம் என்றும், ஒரே இறைவன் என்றும் பேசியுள்ளன. விக்கிரக ஆராதனையை மறுப்பதாகக் கூறும் மதங்களிலும், இறைவனுக்கு இன்னும் வலுவான உளவியல் உருவம் உண்டு. அதாவது, physical form இல்லை என்றாலும், அதைவிடக் கெட்டியான psychological form உண்டு - பெருங்கருணை கொண்டவன், இணை வைப்பதை விரும்பாதவன், பொறாமை கொண்ட தேவன், இத்யாதி. இந்த இறையியலில்களில் எல்லாம் உள்ள பொது அம்சம் – இறைவன் ஒரு சிருஷ்டி கர்த்தர். உலகமே இந்த இறைவனின் உன்னத படைப்புத் திறனின் வெளிப்பாடு.

நீங்கள் காணும் ஒவ்வோர் உயிரிலும், ஒவ்வோர் உயிர் அணுவிலும், படைப்பவனின் திறனைக் காண முடியும். எந்த ஓர் உறுப்பையும் எடுத்துக்கொள்ளுங்கள். அது அமைக்கப்பட்டுள்ள விதத்தில், அதை உருவாக்கிய இறைவனின் இருப்பை நீங்கள் உணர்ந்து அறிய முடியும். எனவே, இயற்கையின் மூலம் இறையியலை வந்து அடைவீர்கள். இயற்கை என்பதே இறைவனுக்குச் சான்று பகரும் ஒரு பெரிய நூல். ஆபிரகாமிய மதங்களும், அவற்றின் இறையியலாளர்களும், இந்த இயற்கை இறையியலை அதன் தர்க்க எல்லைகளுக்குக் கொண்டு சென்றார்கள்.

ஆனால், அப்படி இல்லை என்று பரிணாம அறிவியல் நிரூபித்தது. கடிகாரத்தின் உள்ளே சிக்கல் கொண்ட அமைப்புகள் இருக்கலாம்; அதற்காக அவற்றை நுண்ணறிவாளன் ஒருவன் வடிவமைத்திருக்கவேண்டியதில்லை என்றார்கள், பரிணாம அறிவியலாளர்கள். சார்ல்ஸ் டார்வின் கண்டறிந்த இயற்கைத் தேர்வு (natural selection) மூலம் அப்படி நடைபெற முடியும். பரிணாமம் ஒரு Blind watchmaker.
 

Story image

இங்கிருந்து, உயிர் என்றால் என்ன என்கிற கேள்விக்கு வரலாம். இதற்குப் பதில் தர, ஓர் உயிரினத்தை உடைத்து உடைத்துப் பார்க்கும் ஒரு பார்வை முன்வைக்கப்பட்டது. உடல் உறுப்புகள், திசுக்கள், செல்கள், மூலக்கூறுகள்... கட்டமைக்கப்பட்ட எந்த ஓர் இயந்திரத்தையும் உடைத்துப் பார்ப்பதுபோல பார்க்கும் ஒரு பார்வை, ஆழ அழுத்தமாக அறிவியலில் பதிந்திருக்கிறது. இது மேற்கத்திய பண்பாட்டில், ஆபிரகாமிய இறையியலின் பங்களிப்பு. கலீலியோ தொடங்கி டார்வின் என தொடர்ந்த, இறையுதிர் காலத்தில் இறை இல்லாத இயந்திரப் பார்வையாக இது மேலெடுக்கப்பட்டது. டெஸ்கார்த்தே, அனைத்தையும் பகுத்துப் பார்க்கும் ஒரு அறிதல் முறையை உருவாக்கியிருந்தார். நியூட்டானிய இயற்பியலையும், கார்ட்டீசிய பகுப்பு முறையையும் உட்கொண்டு உருவாகிய ஒரு அறிதல் முறை. அதை நாம் இன்று குறுக்கலியல் – reductionism - எனக் கூறுவோம். இதை இன்னும் நீட்டிக்கலாம். மனிதனின் தன்னுணர்வும், தன் அடையாளமும்கூட இப்படிக் குறுக்கப்பட முடியும். சூழலியலும், க்வாண்டம் இயற்பியலும் மேலோங்கியபோது, குறுக்கலியல் மட்டுமல்லாது, ஒரு முழுமைத்துவ பார்வையையும் (holism) அறிவியல் தனதாக்கிக்கொண்டது. ஆனால் அதுவரை, அறிவியல் கட்டமைக்கப்பட்ட இயற்கை இயந்திரத்தை அறிந்தது. வில்லியம் பிளேக் தீட்டிய இறைவனின் படைப்புச் சித்திரத்தையும், நியூட்டனையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்று தெரியும். இறைவனின் வடிவமைப்பை நியூட்டன் அறிய முயற்சிக்கிறார்.

Story image

பாரத மரபிலும் இந்தக் குறுக்கலியல் பார்வைக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. உடைத்து உடைத்துப் பகுத்தாய்ந்து சென்று, இறுதியில் முழுமையான ஒரு அனுபவத்துக்கான தாவலாக அது அமைய வேண்டும் என்பது பாரத மரபுகளில் சுட்டப்படுவதைக் காணலாம். பட்டினத்தார், பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி-ஞானி.

Story image

பட்டினத்தடிகள், ‘தான் யார்?’ எனக் கேட்கிறார். அதற்கான விடையைத் தேட, ஒரு கடுமையான குறுக்கலியல் வாதத்தையே அவர் முன்வைப்பதைக் காண இயலுகிறது -

பாவிய தோலின் பரப்போ?

தோலிடைப் புகவிட்டுப் பொதிந்த புண்ணோ?

புண்ணிடை ஊறும் உதிரப் புனலோ?

கூறு செய்து இடையிடை நிற்கும் எலும்போ?

எலும்பிடை முடைகெழு மூளைவிழுதோ?

வழுவழுத்து உள்ளிடை ஒழுகும் வழும்போ?

மெள்ளநின்று ஊரும் புழுவின் ஒழுங்கோ?

நீரிடை வைத்த மலத்தின் குப்பையோ?

வைத்துக் கட்டிய நரம்பின் கயிறோ?

உடம்பிற்குள் பிரியாது ஒறுக்கும் பிணியோ?

‘நான் யார்?’ என்பதை, இரக்கமற்ற குறுக்கலியக் கேள்விகளுடன் பட்டினத்தடிகள் அணுகுகிறார். அவர் கேட்ட சில கேள்விகள், இன்றைய அறிவியல் கண்டடைந்திருக்கும் உண்மைகளுடன் இன்னும் ஆழம் பெறுகின்றன. ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

‘நான்’ என அறியப்படுவது என்ன? அது ‘மெள்ளநின்று ஊரும் புழுவின் ஒழுங்கோ’ எனக் கேட்கிறார் பட்டினத்தார்.

Story image

இன்று நம் தன்னடையாளம் (self-identity) என்பதில், தனி மனித உடலுக்குள் அதற்கென்றே பிரத்யேகமாக இருக்கும் நுண்ணுயிரிகளின் பங்கு அசாதாரணமானது என்பதை நாம் அறிவோம். நம்முள் இருக்கும் நுண்ணுயிரிகளின் தன்மை, நமக்கென்றே பிரத்யேகமானது. நம் வயிற்றுக்குள் இருக்கும் நுண்ணுயிரிகள், நம் மூளைச் செயல்பாட்டில்கூட முக்கியப் பங்கு வகிக்கின்றன. நம் வயிற்றுக்குள் இருக்கும் நுண்ணுயிரிகளின் எடை, ஏறக்குறைய நம் மூளையின் எடை. டோபோமைன், ஸெரட்டோனின், காபா (GABA) என்கிற காமா அமினோ ப்யூட்ரிக் அமிலம் – இவையெல்லாம், மூளைச் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் வேதியியல் பொருட்கள். இவற்றை வயிற்றில் இருக்கும் நுண்ணுயிரிகள் உற்பத்தி செய்கின்றன.

இன்றைக்கு, psychobiotics என்பது ஒரு முக்கியமான அறிதல் புலம். ‘நம்முடைய’ ஜீன்கள் என்று நாம் கருதும் 23,000 ஜீன்கள் மட்டுமல்ல, நமக்குள்ளே இருக்கும் 20 லட்சம் நுண்ணுயிரி ஜீன்கள், நம்மை உயிர்வாழ வைக்கின்றன. டாம் இன்ஸெல் (Tom Insel), அமெரிக்காவின் மனநல மையத்தின் (National Institute of Mental Health) இயக்குநர். இந்த நுண்ணுயிரிகளின் இருப்பும் செயல்பாடும், நம் தன்னடையாளத்தின் வரையறையை மாற்றி அமைப்பதை அவர் உணர்கிறார். நாம் நம்மை தனிமனிதனாக அடையாளம் காணுவதைக் காட்டிலும், நுண்ணுயிரிகளின் தொகுப்பு ஒழுங்காக அடையாளம் காண முடியும் எனக் கருதுகிறார் - “இது ஒரு அட்டகாசமான பார்வை. மனித வளர்ச்சியைக் குறித்து சிந்திக்கும்போது, இதை நாம் சீரியஸாக எடுத்துக்கொண்டாக வேண்டும்”.

பட்டினத்தார் காலத்தில், நுண்ணுயிர்கள் குறித்த அறிவு இருந்திருக்க வாய்ப்பில்லை. பதினொன்றாம் நூற்றாண்டில், நுண்ணோக்கிகள் கிடையாது. 17-ம் நூற்றாண்டில்தான், ஆண்டனி வான் லியூவென்காக், நுண்ணோக்கி மூலம் நுண்ணுயிரிகளைக் கண்டடைந்தார். ஆனால், இங்கு கிருமிகள் என வயிற்றில் இருக்கும் சிறுபுழுக்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். நம் உடலின் உள்ளே உள்ள சிறு உயிரினங்களின் கூட்டுச் செயல்பாடுதான் ‘நானா’ என்கிற கேள்வியை அன்று பட்டினத்தார் எழுப்பியிருக்கிறார். அந்தக் கேள்வியின் ஆழத்தை அறிய, அறிவியல் அவருக்குப் பின் ஒன்பது நூற்றாண்டுகள் காத்திருக்கவேண்டி இருந்தது.

ஆனால், பட்டினத்தார் அத்துடன் நிற்கவில்லை. இன்னும் பல குறுக்கலியல் சாத்தியங்களை முன்வைக்கிறார். பின்னர், இறுதியில் அவர் கூறுவது முக்கியமானது. இப்படியெல்லாம் தேடினாலும், அந்த ‘நான்’ யார் என்பது தெரியவில்லை என்கிறார்.

தெரியாது.

இன்னது யான் என்று அறியேன்,

என்னை எங்கும் தேடினேன் யாதிலும் காணேன்...

என்றால், நான் உடலற்ற, உடலோடு தொடர்பில்லாத ‘ஆவி’ போன்ற ஒரு உயிரா? அரிஸ்டாட்டிலில் ஆரம்பித்து அகஸ்டைன் வழியாக வந்த மேற்கத்தியக் கோட்பாடு அப்படித்தான் கருதியது. ஆனால், பட்டினத்தார் அப்படிச் சொல்லவில்லை. அவர், உண்மையான ‘நான்’ என்பதை ஒரு பிரக்ஞை நிலையுடன் இணைக்கிறார். எப்படிப்பட்ட பிரக்ஞை நிலை?

தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்

மாயப்படலம் கீறித் தூய

ஞானநாட்டம் பெற்றபின் யானும்

நின் பெருந்தன்மையும் கண்டேன்;

கண்டலும் என்னையும் கண்டேன், பிறரையும் கண்டேன்

நின்னிலை அனைத்தையும் கண்டேன்; என்னே!

நின்னை காணா மாந்தர் தன்னையும் காணாத் தன்மையோரே

மாயத்திரை நீக்கி, உண்மையின் முகம் காண்பதென்பது, பாரதத்தின் மற்றொரு தொடர் படிமம். ஈசாவாஸ்ய உபநிடதத்திலிருந்தே ஆகி வருவது. ஆழ ஆராய்ந்து, குறுக்கலியல் பார்வையுடன் ‘நான் யார்’ என்பதை அறிய நுழைந்து நுழைந்து, இறுதியில் கிடைப்பது ஒரு முழுமைத் தாவல். இந்தத் தாவல், எல்லா அறிதல் புலங்களிலும் நிகழ முடியும் என்று பின்னர் விவேகானந்தர் கூறுவார். மிகவும் பொருள்முதல் தன்மை கொண்ட அறிவியல் புலங்களில்கூட, ஆழமாக ஆழமாகச் செல்ல செல்ல, இறுதியில் இந்தத் தாவுதல் நிகழும் என்பது அவர் துணிபு.

ஞானக்கண் கொண்டு பார்த்தல் என்பது, பாரத மரபில் ஒரு முக்கியமான விஷயம். இறுதியில், நான் என்பது இறைவனின் பெரும் தன்மை - பேரியற்கை. அதில், தன்னையும் பிறரையும் இணைந்து உணரும் அறிதல் நிலையே, அறிதலின் உச்சம்.

Story image

இங்கு அனைத்தையும் படைத்து காத்து ரட்சிக்கும் இறைவன் என்பதிலிருந்து, பரமாத்மா என்கிற அனைத்துயிர்களிலும் இருக்கும் இறைத்தன்மையை தேடுபவன் அறிகிறான்.

பாரதப் பண்பாட்டின் அடிப்படைகளில் ஒன்றாக, இந்த விஸ்வரூப தரிசனம் உள்ளது. ஏறக்குறைய எல்லா தெய்வங்களும் விஸ்வரூப தரிசனம் அளித்ததாக, ஒரு புராணக் கதை நிச்சயம் இருக்கும். ‘புவனமெங்கும் மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படுகின்ற விண்ணோர் நாயகன் வடிவம்’ என்று கச்சியப்ப சிவாச்சாரியார், முருகனின் விஸ்வரூப காட்சியைக் கூறுகிறார்.

பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் ஒருமைத் தோற்றமே, பௌராணிக மொழியில் விஸ்வரூப தரிசனங்களாகின்றன. ஆனால், இங்கு அனைத்து உயிர்களிலும் இருக்கும் பரமாத்மா என்பதுடன், இந்த விஸ்வரூப தரிசனங்கள், கால ஓட்டத்தையும் உள்ளடக்கியவையாக உள்ளன. அர்ஜுனன், கிருஷ்ணனின் விஸ்வரூபத்தில் அண்ட சராசரங்களை வெறுமனே காணவில்லை. காலச் சுழலில் அவை அடையும் மாற்றங்கள் அனைத்தையும் சேர்ந்தே காண்கிறான். இது, ஒட்டுமொத்த பிரபஞ்ச இயக்கத்தை உயிரியக்கமாக மாறுகிறது. இந்தப் பேரிருப்பின் ஆதிமூலம், அதற்கு வெளியே இருக்கும் ஒரு சிருஷ்டிகர் அல்ல; மாறாக, அனைத்தையும் உள்ளடக்கி உள்ளடங்கி விரியும் ஒரு தத்துவம். விதைக்குள் இருந்து தாவரம் வெளிவருவது போலவும், முட்டை விரிசலடைந்து உள்ளே இருக்கும் உயிர் வெளிவருவது போலவும், படைப்பும் பரிணாமமும் நிகழ்கின்றன. கீதாச்சாரியன், ‘உயிர்கட்கெல்லாம் எதுவோ வித்து, அதுவே நான்’ என்கிறான். (பகவத் கீதை 10:39).

சர்வ சாதாரணமாக நம்மிடையே புழங்கும் வார்த்தைகளில்கூட, இந்தப் பார்வை வேரூன்றியிருக்கிறது. அண்டம், பேரண்டம், பிரம்மாண்டம் ஆகிய பதங்களை நாம் மிகவும் சகஜமாக – take it for granted - என்று சொல்வார்களே, அப்படிப் பயன்படுத்துகிறோம். இந்திய மரபில், இந்த ஆதி பேரண்டம் ‘ஹிரண்ய கர்ப்பம்’ (பொன்முட்டை) எனப் கூறப்படுகிறது.

Story image

ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் உள்ள ஹிரண்யகர்ப்ப சூக்தம் (10.8.121), படைப்பின் கர்ப்பத்தையும் அக்கினியையும் தன்னுள் கொண்ட பொன்முட்டையைப் பாடுகிறது. மேற்கத்திய மறைஞான மரபுகளிலும் இந்த உருவகம் – பிரபஞ்ச அண்டம் இருந்திருக்கிறது. ஹெர்மெடிக் மறைஞான மரபினருக்கு அது ஒரு முக்கியக் குறியீடு. கத்தோலிக்கச் சபையால் உயிருடன் எரிக்கப்பட்ட ஜியோர்டனோ ப்ரூனோ (Giordano Bruno), இந்த மரபினைச் சார்ந்தவர் எனக் கருதப்படுகிறது.
 

Story image

நவீன அறிவியலில், மீண்டும் இந்த ‘பிரபஞ்ச முட்டை’ எனும் உருவகம், கத்தோலிக்கப் பாதிரியாரும் வானவியலாளருமான ஜியார்ஜ் லுமாத்ரெ (Georges Lemaître) என்பவரால், 1930-களில் கொண்டுவரப்பட்டது. இன்று பெருவெடிப்பு என அழைக்கப்படும் அறிவியல் கோட்பாட்டை முன்வைத்தபோது, அவர் ‘சிருஷ்டியின் தருணத்தில் பிரபஞ்ச அண்டம் வெடித்தது’ ('the Cosmic Egg exploding at the moment of the creation') எனக் கூறினார். அண்ட வெடிப்பையும், பின்னர் பிரபஞ்சம் விரிவடைவதையும் அதன்பின்னர் சுருங்கிக் கரைவதையும் பேசும் பிரபஞ்சவியல் கோட்பாடுகள் இன்று நிலவுகின்றன. இவை அனைத்திலும் உள்ளோட்டமாக, பிரபஞ்சம் என்பது தன்னியக்கம் கொண்ட ஒன்றாக உருவகிக்கப்படுவதைக் காணலாம்.

எலிஸபெத் ஸஹ்டோரிஸ் (Elisabet Sahtouris) எனும் பரிணாம உயிரியலாளர், உலக மதங்களின் இயற்கை சார்ந்த பார்வையை இரண்டாகப் பிரிக்கிறார். இயற்கையை கட்டமைக்கப்பட்டதாகவும், சத்தியத்தை இயற்கையை உருவாக்கும் தனிப்பெரும் கர்த்தராகவும் காணும் மதங்கள்; பொதுவாக, ஆபிரகாமிய மதங்கள். மற்றொன்று, விதையாக, ஆதி பெரும் நிலையை ஒரு முட்டையாக உருவகிக்கும் மதங்கள். விதையின் இயக்கம் உள்ளிருந்து நடக்கிறது. முட்டை உள்ளிருந்து உடைகிறது. பொதுவாக, அற-மைய சமயங்களில் இந்தப் பார்வையே உள்ளது என்கிறார் அவர்.

Story image

இந்திய மரபில், இறை மரபில் இந்த இரண்டையும் இணைக்கும் ஒரு பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. சத்தியம், இறைவனாக உணரப்படுகிறது. இந்நிலையில், உலகமும் அதிலுள்ள பொருட்களும் வடிவமைக்கப்பட்டவை. அவை தனித்தனியானவை. அவற்றை இணைப்பது, அவை இறைவனின் படைப்பு என்பதுதான். ஆனால், அந்த வடிவமைப்புகளைத் தொடர்ந்து அறிய அறிய, இந்த எளிய சிருஷ்டிகர்த்தர் எனும் இறைவன் உதிர்ந்து, அவை அனைத்துக்குள்ளும் இருக்கும் ஓர் ஒருமைத் தத்துவம், பரமாத்மாவாக அறியப்படுகிறது. இங்கு, பகவான் பரமாத்மாவாக அறியப்படுகிறான்.

இறுதியில், இவை அனைத்துமே பிரம்மத்திலிருந்து எழுந்து பிரம்மத்தில் கரைவன என ஞானி உணர்கிறான்.

மேற்கத்திய மரபில், ஒரு இறை விசுவாசி இந்த இடத்தை வந்தடைய மிகப்பெரிய போராட்டங்களை நிகழ்த்தவேண்டி இருந்தது. அவை இன்னும் முற்றுப்பெறவில்லை. சிருஷ்டிகர்த்தர் எனும் இறைவனை, ஒரு மாறாத புறவய உண்மையாகக் கருதும்போது, பரிணாமத்தை எதிர்க்கவும் இன்ட்டலிஜென்ட் டிசைன் போன்ற போலி அறிவியல் வாதங்களை முன்வைக்கவும் வேண்டியிருக்கிறது. அமெரிக்க ரிபப்ளிக்கன் அடிப்படைவாதிகள் – குறிப்பாக, பாபி ஜிண்டால் போன்றவர்கள் - பரிணாம அறிவியலுக்கு எதிராக ஒரு புனிதப் போரையே தொடுக்கிறார்கள்.

அவற்றைத் தாண்டி, இறைவனை பரமாத்மாவாக மாற்றும் இடத்துக்கு இறுதியில் இறையியல் வந்து சேர வேண்டிய அவசியத்தை பரிணாமம் உண்டாக்கியுள்ளது. ஆக்ஸ்போர்ட் பிஷப் ரிச்சர்ட் ஹாரீஸ், ரிச்சர்ட் டாவ்கின்ஸுடன் இணைந்து பரிணாமத்தை, ‘ஒரு உண்மை; கிறிஸ்தவ பார்வையில் இறைவனின் பெரும் செயல்களில் ஒன்று’ எனக் கூறுகிறார். படைப்பு என்பது என்றோ நிகழ்ந்து முடிந்த ஒன்றல்ல; இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது – இதைக் கூறும்போது, எவ்வித இறையியல் சமாதானங்களை ஏற்படுத்தவேண்டி இருக்கிறது. இறைவன், ஓர் ஓய்வுபெற்ற பொறியியலாளர் – தொடக்க நிலைகளை ஏற்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்து ஓய்வெடுத்து, அவ்வப்போது தலையிடும் ஓர் ஓய்வுபெற்ற பொறியாளர். அல்லது தெயில்ஹார்ட் தி சார்டின் (Teilhard de Chardin) போல, கிறிஸ்து என்பதையே ‘பிரபஞ்ச கிறிஸ்து’ என்பது போன்ற கருத்தாக்கமாக ஆக்க வேண்டும். ஆக, பரிணாமத்தின் வழியாக இறைவன் என்கிற கருத்தாக்கத்தில் இருந்து, நிர்குண இறை – impersonal God - என்பதற்கு வந்தடையவேண்டி இருக்கும்.
 

Story image

குறுக்கலியல் – முழுமைத்துவம், இரண்டுமே அறிதல் முறைகள். அவை ஒன்றுக்கொன்று முரணானவையாக இருக்கவேண்டியதில்லை. கடிகார இயக்கம், உயிரியக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணாகப் பார்க்கப்பட வேண்டியவை அல்ல. நிர்குண இறையும் சகுண இறையும் கொண்டு, இயற்கையுடன் மானுடம் ஏற்படுத்தும் உறவுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவற்றை ஒரு தொடர் பயணமாகவும், இசைவு கொண்ட அறிதல் முறைகளாகவும் கையாளுவதற்கான சாத்தியத்தை நம் பண்பாடு அளிக்கிறது.

Story image

கோகுலத்து மாட்டிடையன், இருவித அறிதல்களையும் அனுபவிக்கச் சொல்கிறான். வெவ்வேறாகத் தோன்றும் உயிர்களின் ஊடே இருக்கும் ஒருமையையும், ஒன்றேயாக இருப்பதிலிருந்தே அனைத்துப் பன்மையையும் விரிவதையும் அனுபவிப்பவன் எவனோ அவனே உண்மை நிலையை, பிரம்ம உணர்வை அடைபவன் என்கிறான் (கீதை 13:20). கடிகார முட்சக்கரங்களில் இருந்து முட்டையை நோக்கிய பயணத்தில், வழித்துணையாக கரியோனின் புல்லாங்குழல் இசை. இங்கு அறிவியலை இசைக்கலாம்.

மேலதிக விவரங்களுக்கு -

பட்டினத்தார், திருவிடைமருதூர் மும்மணிக் கோவை.

John Cryan & Timothy Dinan, A light on psychobiotics, New Scientist, 25-Jan-2014

Peter Andrey Smith, Can the Bacteria in Your Gut Explain Your Mood?, Newyork Times, 23-06-2015

https://www.facebook.com/pages/Absynthe-Design/201464006548020?fref=photo

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.