92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பூர்வீகக்குடிகள்: காலனிய பார்வையும் பாரதப் பார்வையும்

பூர்வீகக்குடிகள்: காலனிய பார்வையும் பாரதப் பார்வையும் அண்மையில், அமெரிக்கப் பல்கலைக் கழக வரலாற்று வகுப்பு ஒன்றில் ஒரு மாணவி, பேராசிரியர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பாடம், பூர்வீக அமெரிக்கக் குடிகளை ஐரோப்பியர்கள் இனஒழிப்பு (genocide) செய்தது குறித்தது

News image
Updated On :13 செப்டம்பர் 2015, 5:06 am

அரவிந்தன் நீலகண்டன்

பூர்வீகக்குடிகள்: காலனிய பார்வையும் பாரதப் பார்வையும் அண்மையில், அமெரிக்கப் பல்கலைக் கழக வரலாற்று வகுப்பு ஒன்றில் ஒரு மாணவி, பேராசிரியர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பாடம், பூர்வீக அமெரிக்கக் குடிகளை ஐரோப்பியர்கள் இனஒழிப்பு (genocide) செய்தது குறித்தது. ஆனால், பேராசிரியருக்கு இந்த இனஒழிப்பு என்பதில் உடன்பாடு இல்லை. ஐரோப்பியர்கள், அமெரிக்கக் கண்டங்களுக்குள் நுழைவதற்கு, பூர்வீகப் பழங்குடிகள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டுதான் இருந்தார்கள்; மேலும், அவர்களை ஐரோப்பியர்கள் கொன்றதைவிட நோய் நொடிகளால்தான் அவர்கள் இறந்தார்கள்; வேண்டுமென்று அவர்கள் ஒழிக்கப்படவில்லை; எனவே, இனஒழிப்பு என்கிற பதம் பயன்படுத்தப்படக் கூடாது என்பது பேராசிரியர் கூறிய கருத்து. இதை எதிர்த்த மாணவி, பூர்வீக அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் இதை எதிர்த்தார். இதனை, பேராசிரியர் மோசமாகக் கையாண்டார். அந்தப் பெண்ணை அந்தப் பாட வகுப்புகளிலிருந்து நீக்குவதாகக் கூறினார். பின்னர், நிர்வாகம் அப்படி அந்த மாணவி நீக்கப்படவில்லை என்று கூறியது. இந்த நிகழ்வு இன்னும் சரியாகக் கையாளப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியது.

(http://indiancountrytodaymedianetwork.com/2015/09/06/history-professor- enies-native-genocide-native-student-disagrees-gets-expelled-course)
 

Story image

இந்த நிகழ்வை ஒத்த மற்றொரு நிகழ்வு உண்டு. சந்திர்நாகூர் என்கிற வங்க நகரத்தின் பள்ளி ஒன்றில், வரலாற்று ஆசிரியர், வங்காளத்தின் பூர்வீகர்கள் வலிமையற்ற இயற்கை கொண்டவர்கள் எப்படி என்றும், அதனால்தான் பக்தியார் கில்ஜியால் வங்காளத்தை வெறும் 17 குதிரைப்படை வீரர்களைக் கொண்டு வெல்லமுடிந்தது என்றும் கூறிக்கொண்டிருந்தார். இதை வகுப்பில் இருந்த ஒரு மாணவன் எதிர்த்தான். தரவுகள் தவறானவை எனக் கூறினான். ஆசிரியர் அவனை வகுப்பை விட்டு வெளியேறுமாறு கூறினார். அவன் பள்ளியிலிருந்தும் நீக்கப்பட்டான். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட மாணவனே, இந்தியா விடுதலை அடைய முக்கிய உண்மைக் காரணமாக அமைந்த, இந்திய தேசிய ராணுவத்தின் முன்னோடி வடிவமான இந்திய விடுதலைக் கழகம் என்பதை உருவாக்கிய ராஷ் பிகாரி போஸ்.

Story image

(நன்றி: அமர்சித்ரகதை)

இந்த இரு நிகழ்வுகளிலும், அடிப்படையான ஒரு கேள்வி இருக்கிறது. காலனி ஆதிக்கம் என்பது அழிவைக் கொடுத்ததா? அல்லது பண்பாட்டை வளர்த்ததா? உண்மையில், காலனி ஆதிக்கம் ஏற்படாவிட்டால், பழங்குடிகள் அல்லது பூர்வீகர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டிருப்பார்கள். பூர்வீகப் பண்பாடுகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள ஏன்

இயலவில்லை?

உலகின் பூர்வீகப் பண்பாடுகள் அனைத்துமே படையெடுப்புகளின் முன்னால் உடைந்துபோயிருக்கின்றன. ஏன்? இதுதான் அடிப்படை வரலாற்று நியதியா? ‘ஆம்’ எனக் கூறுகின்றனர் மைய வரலாற்றாசிரியர்கள். பேராதிக்கம் செலுத்தும் படையெடுப்புகள், உலகின் ஒரே மதமாக தம்மை நிறுவ விழையும் பெருமதங்கள், காலனி ஆதிக்கம், மிகப்பெரிய அடிமை அமைப்பு இவற்றை, வரலாற்றின் கசப்பான ஆனால் கட்டாய நியதிகளாக நாம் கடக்க வேண்டியவை என அவர்கள் கருதுகின்றனர். இதில் அநியாயம் உள்ளது. அடக்குமுறை, மனிதத்தன்மையற்ற செயல்பாடு எல்லாம் உள்ளது. ஆனால் இறுதியில், இதனால் பூர்வீகக் குடிகளுக்கு நன்மையே ஏற்பட்டுள்ளது. மானுட பண்பாட்டின் பெரும் முன்னகர்வுக்கு நாம் கொடுக்கும் சிறுவிலை இது என்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

இந்தப் பார்வையை நாம் மார்க்ஸியவாதிகளிலும் காணலாம். காலனிய வாதிகளிலும் காணலாம். பூர்வீகப் பண்பாடுகள் குறித்த இந்த ஐரோப்பிய - கிறிஸ்தவ மையப் பார்வை, தத்துவார்த்த ரீதியாக ஹெகலிடம் இருந்து பெறப்பட்டது. இந்தியாவையும் ஆப்பிரிக்காவையும், வரலாறு இல்லாத இருள்பிரதேசங்களாகக் கருதினார். ஹெகலைத் தொடர்ந்து, கார்ல் மார்க்ஸும்  அவ்வாறே கருதினார்.

Story image

இன்று, ஆப்பிரிக்கப் பண்பாட்டிலிருந்து வரும் வரலாற்று - சமூக ஆராய்ச்சியாளர்கள், ஹெகலின் ஆப்பிரிக்கா குறித்த பார்வையைப் பொய்யானது, மிகைப்படுத்தப்பட்டது எனக் கருதுகிறார்கள். இயற்கைச் சூழலில் இருந்து எந்த அளவுக்கு ஒரு சமுதாயம் மேலெழும்புகிறதோ, அந்த அளவுக்கு அது பண்பாட்டில் முன்னேற்றமடைந்தது என ஹெகல் கருதுகிறார். இந்தத் தத்துவம் அரசியல் சித்தாந்தமானபோது, அதற்குத் தெளிவான காலனிய சாதக அம்சங்கள் இருந்தன.

எப்போதெல்லாம் ஐரோப்பிய காலனிய ராணுவங்கள் ஐரோப்பியர் அல்லாத சமுதாயங்களின் மீது வெற்றி அடைந்தனவோ, அப்போதெல்லாம் மார்க்ஸும் ஏங்கல்ஸும் மனம் மகிழ்ந்தனர். எப்போதெல்லாம் ஐரோப்பிய காலனிய விரிவாதிக்கம் விமரிசிக்கப்பட்டதோ அப்போது எரிச்சல் அடைந்தனர் என, இன்றைய மார்க்ஸியம் குறித்த ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வரலாறு என்பதற்குள் இருளில் மூழ்கிக் கிடந்த ஆப்பிரிக்க, ஆசிய, அமெரிக்க பூர்வீகக் குடிகளைக் கொண்டுவரும் பெரும் மாற்றத்தை, தொழில்மயமான ஐரோப்பா செய்துகொண்டிருப்பதாக அவர்கள் கருதினர்.

(Babacar Camara, Marxist Theory, Black/African Specificities, and Racism, Lexington Books, 2010, p.70).

Story image

1885 முதல், இந்தியாவில் மானுட-இனவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, மக்களை இனக்கலப்பு ரீதியாக வகைப்படுத்துவதில் மிகவும் முனைந்தவர், காலனிய அதிகாரி சர் ஹெர்பர்ட் ரிஸ்லே. இவர்தான், பிரபலமான ‘மூக்களவு’ (nasal index) அடிப்படையில் இந்தியச் சாதிகளை வகைப்படுத்தினார்.  இவரைப் பொறுத்தவரையில், பேரினங்களிலிருந்து உருவாகும் இனக் குழுக்கள், ஐரோப்பாவில் தேசங்களாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தன; இந்தியாவிலோ, அவை சாதிகளாகத் தேங்கிவிட்டன.

Story image

1917-ல், வில்லியம் ஆர்ச்சர் என்கிற ஸ்காட்டிஷ், இந்தியாவும் எதிர்காலமும் (India and the Future) என்கிற நூலை எழுதினார். அதில், இந்தியர்கள் தன்னளவில் ஒரு தேசமாக எழும்பக்கூடிய சக்தி கிடையாது என்றும், அவர்களின் சமூக வாழ்க்கை, ஒழுக்கம், ஓவியம், இசை, சிற்பக்கலை அனைத்துமே, ஐரோப்பிய சமூக வாழ்க்கையும் பண்பாடும் அடைந்த நிலையை அடையவில்லை என்றும் கூறினார். இந்த நிலையை இந்தியர்கள் அடையும்வரை, அவர்களை ஆங்கிலேயர் ஆள்வது அவசியம்.

கோசாம்பி போன்ற ஆழமான மார்க்சிய வரலாற்றாசிரியர்கள், மார்க்ஸைவிட இந்த விஷயத்தில் இன்னும் திறந்த மனத்துடன் இந்தக் கேள்வியை அணுகினார்கள். ஆனால், அவர்களின் அடிப்படைப் பார்வைச் சட்டகம், அப்படி ஒன்றும் மார்க்ஸிடமிருந்து வேறுபடவில்லை. இந்தியா பலவிதமான வனவாசி சமுதாயங்களைக் கொண்ட நிலப்பரப்பு. அதில் பிராம்மணீயம் ஒரு பண்பாட்டு - அரசியல் சக்தியாக இயங்கியது. பற்பல வனவாசிகளை அது உள்ளிழுத்து சூத்திரராக ஆக்கியது. இவ்வாறு செய்யும்போது, வனவாசி சமுதாயங்களின் சம்பிரதாயங்கள் (உட்குழு திருமணம் உட்பட), ஐதீகங்கள், புராணங்கள் ஆகியவற்றை – சிறிய மாற்றங்களுடன் – தக்கவைத்துக் கொண்டது. பிராம்மணீயத்தின் இந்த இயக்கம், மிக மிகக் குறைவான வன்முறையுடன், வனவாசி சமுதாயங்களை உள்ளிழுக்க உதவியது என்கிறார். கூடவே, இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார் கோசாம்பி. இந்த இயக்கத்தின் இயற்கையே, சமுதாய வளர்ச்சி – குறிப்பாக உற்பத்தி - ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் தாண்டிச்செல்ல முடியாமல் ஆக்கியது என்கிறார்.

(Damodar Dharmanand Kosambi, The Culture and Civilisation of Ancient India in  Historical Outline, Vikas Publishing House, 1965, pp.172-3).

Story image

காலனியவாதிகள், மிஷினரிகள், மார்க்ஸியர்கள் ஆகியோர் ஒன்றுபடக்கூடிய புள்ளி இதுதான்.ஆனால், இது காலனிய காலத்துடன் நின்றுவிடவில்லை. காலனிய ஐரோப்பியர்கள், இந்தியர்களை குறித்து என்ன பார்வைகளை வைத்திருந்தனரோ, அதே பார்வையை இன்று நம்மில் பெரும்பான்மையோர், ஆப்பிரிக்கா குறித்தும், நம் வனவாசி சமுதாயங்களையும் குறித்தும் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, வனவாசிகள் தம் பண்பாட்டு இயல்பிலேயே வன்முறைத் தன்மை கொண்டவர் என்றும், அவர்கள் ‘பெருமதங்கள்’ கொண்ட விரிவாதிக்க சக்திகளால் தடுத்தாட்கொள்ளப்படா விட்டால், அவர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள் அல்லது பஞ்சத்தில் அழிவார்கள் என்றும், பெருமதங்கள் இல்லாமல் வேளாண்மை, வாணிபம் போன்றவை உருவாக முடியாதென்றும், இன்றும் ஒரு வலுவான கருத்து நிலவுகிறது.

பெருமதங்கள் இல்லாமல் பண்பாடு உருவாக முடியாதென்பது ஒரு மாயையே. கிரேக்கத்தின் மிகப்பெரிய பண்பாடு, பெருமதம் இல்லாத ஒரு பாகனியச் சூழலில்தான் உருவானது. அதன் தத்துவம், ஜனநாயக முறை இவை அனைத்தும் உருவாக ஒரு பெருமதம் தேவைப்படவே இல்லை. ஆனால், பெருமதமான கிறிஸ்தவம், நான்காம் நூற்றாண்டில் ரோமானியத்தில் தன்னை நிலை நிறுத்தியது. கி.பி. 390-ம் ஆண்டு,  கிறிஸ்தவப் பற்றாளர்களால் அலெக்ஸாண்ட்ரியா பல்கலைக்கழகம் தாக்கப்பட்டது. ஆனால் கி.பி. 415-ல், ஐரோப்பாவை ஒரு பெருமதம்  முழுமையாக வெற்றிகொள்வதற்கான ஆகச்சிறந்த நிரூபணம் நிகழ்ந்தது.

Story image

ஹைப்பேஷியா, ஒரு கணிதவியலாளர், வானவியலாளர். நியோ பிளேட்டோனிய தத்துவமரபில் வந்த பாகனியப் பெண். அவருக்கு, மக்களிடையேயும் அறிஞர்களிடையேயும் செல்வாக்கு இருந்தது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த கணிதவியலாளர் அப்பலோனியஸ். இவரது நூல்களுக்கான பாடியத்தை ஹைப்பேஷியா எழுதினார். இவற்றில், நீள்வட்டங்கள் குறித்த அவரது விளக்கங்கள் முக்கியமானவை. ஆனால், அவை அப்படியே புறந்தள்ளப்பட்டன. (ஹைப்பேஷியாவின் பலிதானத்துக்கு, நூற்றாண்டுகளுக்குப் பிறகு நீள்வட்டப் பாதைகளை வானவியலாளர் கெப்ளர் கண்டடைவார்).

அலெக்ஸாண்ட்ரியாவின் சங்கைக்குரிய கத்தோலிக்க ஆயரான சிறில், பரமண்டலப் பிதாவை மகிமைப்படுத்த, ஹைப்பேஷியாவை கொலை செய்ய முடிவு செய்தார். ஹைப்பேஷியா, கர்த்தரின் ஆலயத்துக்கு இழுத்து வரப்பட்டாள். அவள் உடைகள் அகற்றப்பட்டு, அவளது உடலின் தோலும் சதையும், உடைந்த பானை ஓடுகளாலும் சிப்பிகளாலும் தோண்டி, சீவி அகற்றப்பட்டன. இறுதியில், துண்டு துண்டாக வெட்டி அவள் கொல்லப்பட்டாள். அவளது உடல் பாகங்கள், மக்கள் அனைவரின் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன. இறுதியில் அவை எரியூட்டப்பட்டன. இந்நிகழ்ச்சியே, ஐரோப்பாவில் பெருமதமாக கிறிஸ்தவம்  நிலைபெற்றதன் ஆதார நிகழ்ச்சி.

ஆங்கில நாவலாசிரியர் E.M.பார்ஸ்டர், ஹைப்பேஷியாவை அத்தனை பெரிய ஆளுமையாகப் பார்க்காதவர்தான். ஆனால், அவர்கூட அவள் மரணத்தை இப்படி விவரிக்கிறார் -

அவள் மரணத்துடன், கிரேக்கமெனும் ஜீவத்துடிப்பு மடிந்தது. சத்தியத்தையும் அழகையும் தேடும்    கிரேக்கத்தின் ஜீவன் அவளோடு அழிந்தது. (E.M. Forster, Alexandria: A History and Guide, Tauris Parke Paperbacks, 1922:2014, p.64).

ஆக, பெருமதம் இல்லாத பாகனீயத்தின் அழிவுடன், கிரேக்க பண்பாடு – வெறுப்பினை நிறுவனமயமாக்காத பாகனீயத்துடன் – மேற்குலகின் மானுட அறிவியக்கத்தின் முன்னேற்றம், அடுத்த ஆயிரமாண்டுகளுக்கு மேலாக பின்தங்கியது. எனவே, பெருமதங்கள் இல்லாமல் முன்னேற்றம் இல்லை என்பது சரியல்ல என்பது மட்டுமல்ல; பெருமதங்கள், பெரும்பாலும் மானுட முன்னேற்றத்தைக் கீழ்நோக்கியே இழுத்திருக்கின்றன.

இனி, பூர்வீகவாசிகள் அல்லது வனவாசிகள் ஆகியோர் குறித்த பார்வைக்கு வரலாம். ஐரோப்பிய - அமெரிக்க காலனியாதிக்கம், எப்போதுமே பூர்விகர்கள் / வனவாசிகள் ஆகியோரைப் பண்படுத்தும் சக்தியாகத் தன்னை முன்னிறுத்தியுள்ளது. இப்பார்வையில், ரத்தவெறி கொண்ட பண்பாடற்ற பூர்வீகவாசிகளை, அவர்களிடமிருந்து அவர்களையே  காப்பாற்றும் ஆபத்பாந்தவர்களாக மேற்கத்தியப் பண்பாடு இயங்குகிறது. காலனியத்தின் எதிரிகள் என்பதாகப் பொதுவாகக் கருதப்படும் மார்க்ஸியர்களும், இப்பார்வையில் காலனியவாதிகளிடமிருந்து வேறுபடுவதில்லை. ஆனால், உண்மை என்னவோ வெகு வேறாகத்தான் இருக்கிறது.

Story image

பாகனியத்திலிருந்து பெருமதப் பிடியில் சிக்கிய ஐரோப்பியம், மீண்டும் ஜனநாயகத்துக்குள் வருவதற்கே பூர்வீகக் குடிகளின் பங்களிப்பு தேவையாக இருந்திருக்கிறது. அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களுக்கு, பூர்வீகக் குடிகள் வாழ்ந்த கூட்டமைப்புகள், அரச அதிகாரத்துக்கு ஒரு கவர்ச்சிகரமான மாற்றாக இருந்தது. அமெரிக்காவில் குடிபுகுந்த அமெரிக்கர்களின் மனத்தில், ஏற்கெனவே உருவாகிக்கொண்டிருந்த ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு ஏற்றவையாக, இரொக்யோஸ் (Iroquois) எனும் பூர்வீகக் குடிகளின் ஐங்குடிகளின் கூட்டமைப்பு இருந்தது. ஆனால், எந்தப் பூர்வீகக் குடிகளின் கூட்டமைப்பின் தாக்கத்தால் ஜனநாயகத்தன்மையை அமெரிக்க சட்டம் அடைந்ததோ, அதே சட்டம், பூர்வீகக் வகுடிகளின் உரிமைகளைப் பறித்தெடுக்கும் க்ஷரத்துகளை உருவாக்கியது. (Iroquois Constitution: A Forerunner to Colonists' Democratic Principles, The New York Times, 28-June-1987 மேலும் (Bruce E. Johansen, Native American Political Systems and the Evolution of  Democracy: An Annotated Bibliography, Greenwood Publishing Group,1996)).

Story image
Story image

ஸிம்பாப்வே நாட்டில் காணப்பட்ட பண்பாட்டு இடிபாடுகள், கறுப்பின மக்களால் உருவாக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், மேற்கத்திய மனம் இதை ஏற்க மறுத்தது. சாலமோன் மன்னன் முதல் பினீஷியர்கள் வரை, பலர் இதை உருவாக்கியதாகக் கருதப்பட்டனர். எப்பாடுபட்டாவது, ஆப்பிரிக்கர்களைத் தவிர வேற்றினத்தவர்களே இந்தப் பண்பாட்டை உருவாக்கினார்கள் என்றும், இல்லையென்றால் இதை உருவாக்கியவர்களிடம் வேற்றினக் கலப்பிருந்தது என்றும் கூறப்பட்டது. உண்மையில், இவை ஒன்றும் மிகப் பழமையான இடிபாடுகள் அல்ல என்பது, ஆப்பிரிக்காவின் கறுப்பின மக்கள் சிறப்பான பண்பாடுகளை உருவாக்கியவர்கள் என்பதற்கான ஆதாரமாகும். இதை ஏற்றுக்கொள்வது, தம் காலனியத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று கருதிய வெள்ளையர்கள், இந்த இடிபாடுகள் குறித்த செய்திகளை – டூரிஸ்ட் கையேடுகள் உட்பட அனைத்தையும் – கடுமையாகத் தணிக்கை செய்தனர். ஆனால், இன்று உண்மை அனைவரும் அறிய நிற்கிறது. (Henrika Kuklick, Contested Monuments, in Colonial Situations: Essays on the Contextualization of Ethnographic Knowledge,(Ed. George W. Stocking), University  of Wisconsin Press, , 1991, pp.158-9).

பாரம்பரிய இந்திய அணுகுமுறை, காலனிய அணுகுமுறைக்கு நேர் மாறானதொரு அறிதல் சட்டகத்தை அளிக்கிறது. இந்த அணுகுமுறை, வனவாசிகளின் தன்னியல்பான பண்பாட்டுப் பன்மையையும், இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறைகளையும், ஆன்மிக மரபுகளையும் ஏற்கிறது.

Story image

வடகிழக்கு வனவாசிகள், காலம் காலமாக ஆன்மிக மரபுகளும், பண்பாட்டு அம்சங்களும் கொண்டவர்களாக வாழ்ந்துவந்திருக்கின்றனர். அருணாசலப் பிரதேசத்தில், டோனியிபோலோ என்கிற ஆன்மிக மரபு இருக்கிறது. இவற்றை, ‘இயற்கைப் பொருட்களை வழிபடுவதாக’ மேற்கத்திய மானுடவியல் காண்கிறது. ஆனால், அருணாசலப் பிரதேசத்தைச் சார்ந்த பேராசிரியர் டி.படு, இந்த ஆன்மிக மரபுகளை, இயற்கைச் செயல்பாடுகளைப் புனிதமாக உணரும் மரபுகளாகக் காண்கிறார். இம்மரபுகள் சார்ந்த சடங்கு, பாடல்கள், அந்த மரபுகளிலிருந்து நீங்காமல், கல்வி பெறும் அந்த மரபாளர்களால் தொகுக்கப்படும்போது, அது நாம் அறியும் எந்த ஞானமரபின் விதைகளுக்கும் வீரியம் குறைந்தவையாக இல்லை என்பதே உண்மை.

அருணாசலப்பிரதேச பூர்வீக மரபுகளில், மோபின் என்று இயற்கை அன்னை வணங்கப்படுகிறாள். அவளது பூசகர்கள் பாடும் துதியிலிருந்து சில வரிகள் -

நித்தியத்துவத்தின் புதல்விகளுக்கு மங்களம்

செழிப்பருளும் புதல்விகளுக்கு மங்களம்

நித்தியத்துவத்தின் செல்வங்கள் பூமியில் பெருக

அவற்றை பெற்றிட நாங்கள் வருகிறோம்

நல்ல அறுவடை அமையட்டும்

பூமியின் கனிம வளங்கள் பெருகட்டும்

பறவைகளின் கூடுகள் முட்டைகளால் நிரம்பட்டும்

பூமியெங்கும் செல்வம் நிரம்பட்டும்

அறிவு வளரட்டும்

கொல்லருலையில் எப்போதும் நெருப்பு வளரட்டும்

புதிய இலைகள் மிளிரட்டும்

மூங்கில்கள் வளர்ந்து பெருகட்டும்

ஆறுகளில் மீன்கள் பெருகட்டும்

வயல்களில் தானிய விளைச்சல் பெருகட்டும்

மோபின் அன்னையே

மனித வாழ்க்கை சுழலை வளமுடையதாக்கு

(Prof.T.Padu, Nature Worship as practiced by the Adi Galo, Traditional Customs and Rituals of Northeast India- Vol-II, Ed.Dr.P.C.Sharma, Vivekananda Kendra Institute of Culture, 2004 pp.150-7).

அதர்வண வேதத்தின் பூமி சூக்தத்துக்கு எவ்விதத்தில் மேற்கண்ட துதி குறைந்திருக்கிறது? எனில், வனவாசிகள் - மலைவாசிகள் பண்பாட்டுக்கும், நகரவாசிகள் -கிராமவாசிகள் பண்பாட்டுக்கும் உள்ளார்ந்த வேறுபாடு உள்ளதா என்றால், பாரத மரபில் அப்படி ஒரு தீர்க்கமான வரையறை சார்ந்த வேறுபாடு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவேதான், இந்து மதம் என்பதை ஒரு ‘பெருமதம்’ என கிறிஸ்தவம், இஸ்லாம்போல கூற முடியாது. கிழக்கத்திய மதங்களில் பெரும்பாலானவை, இந்து மதத்தின் இத்தன்மையைக் கொண்டவைதாம். சில விதிவிலக்குப் போக்குகளும் இருக்கலாம்.

வடகிழக்கு மாநிலங்களில், கடந்த நாற்பதாண்டுகளாகப் பணிபுரிந்துவரும் விவேகானந்த கேந்திரம், இங்குள்ள பூர்வீகர்களின் பண்பாடுகளையும் ஆன்மிக மரபுகளையும் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறது. ஒருமுறை, கேந்திரத்தின் உயர் அமைப்பாளர் ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ‘வடகிழக்கில் உள்ள வனவாசிகளிடம், மிஷினரிகள் கிறிஸ்தவத்தைப் பரப்புவதுபோல நீங்களும் உங்கள் மதத்தைப் பரப்புகிறீர்களா?’ இதற்கு அவர் அளித்த பதில் – ‘நாங்கள் மதம் எதையும் பரப்பவில்லை. மாறாக, அவர்களின் ஆன்மிக மரபுகளின் உள்ளார்ந்த மதிப்பை மீள் உறுதி (validate) செய்கிறோம்’.

இதற்கான மிகச்சிறந்த வரலாற்று ஆதாரம், நம் கண் முன் உள்ளது.

இன்றைக்கு, முழுக்க கிறிஸ்தவத்துக்கு மாற்றப்பட்டுள்ளது நாகாலாந்து. கிறிஸ்தவம் வருவதற்கு முன்னால், அவர்கள் தலைவேட்டை ஆடுவோர் என நம்பவைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், 1910-களில்கூட நாகா பண்பாடு, பிரிட்டிஷ் – கிறிஸ்தவ ஆதிக்கத்துக்கு எதிராக, திராணியுடன் போரிட்டது. இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்திலேயே, நாகாலாந்தின் முக்கியத்துவம் பிரிட்டிஷாருக்குத் தெரிந்துவிட்டது. அவர்கள் முழுமூச்சுடன் மதமாற்றம் செய்யப்பட்டு, பிரிட்டிஷ் ஆதரவு சக்திகளாக மாற்றப்பட்டனர். ஒட்டு மொத்தமாக, அவர்களின்  வெளித்தோற்றத்தில் மட்டுமே சடங்குகள் பாதுகாக்கப்பட்டு, உள்ளார்ந்த மரபு - பொருட்கள் அழிக்கப்பட்டன.

Story image

அதிர்ஷ்டவசமாக, ராணி மா கைடின்லியு நினைவுகள், நமக்கு கிறிஸ்தவத்துக்கு முந்தைய நாகா பண்பாடு, தலைவாங்கி பண்பாடு அல்ல என்பதைப் பறைசாற்றுகின்றன. நாகா ஆன்மிக மரபுகளை மீட்டு, ஸெலியன்க்ராங்க் ஹெரகா அல்லது கச்ச நாகா எனப்படும் ஆன்மிக இயக்கம் மூலமாக காலனிய விரிவாதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர் ராணி கைடின்லியு. இவர், 1979- ல் பிரயாகையில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் தாம் இந்து அல்ல என்பதைக் கூறி, ஒரு இந்து மாநாட்டுக்கு தாம் வர இயலாது என கூறிவிட்டார். மாநாட்டு அமைப்பாளர்கள் அவரிடம், இந்து ‘மதத்தின்’ தன்மையை அவரிடம் விளக்கினர். தம் ஆன்மிக மரபை எவ்விதத்திலும் மற்றொரு மரபுக்குக் கீழானதாகவோ அல்லது சமரசம் செய்துகொள்ளவோ வேண்டியதில்லை என்பதை உணர்ந்த ராணி, விஸ்வ இந்து பரிஷத்தின் மாநாட்டில் மிக சந்தோஷமாகப் பங்கேற்றார். அம்மேடையில் அவர் ஆற்றிய உரையில், இந்து இயக்கத்தவர்கள், வடகிழக்கில் மதமாற்றங்களை எதிர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ச்சிபூர்வமாக எடுத்துரைத்தார். (M.G.Chitkara,Dr. Ambedkar and Social Justice, APH Publishing, 2002, p.136).

உண்மையில், பெருமதங்கள் வரும்போது, பூர்வீகர்களின் பண்பாடுகளுக்கும் அவற்றுக்குமான மிகப்பெரிய வேறுபாடு, பெருமதங்களின் கட்டுக்கோப்பான ஆக்கிரமிப்புத்தன்மையும், வன்முறையை நியாயப்படுத்தும் இறையியல்/ கருத்தியல் கட்டமைப்புகளும்தான். 

இந்தியப் பண்பாட்டில், வனவாசிகளையும் மலைவாசிகளையும் பூர்வீகப் பண்பாடுகளையும், அவற்றின் உள்ளார்ந்த மதிப்பீடுகளுக்காக மதிக்கும்/ஏற்கும் தன்மை உள்ளது. தெய்வங்களுக்கு இடையேயான உறவுமுறைகள் மூலம், நகர-கிராமவாசிகளுக்கும், வன-மலைவாசிகளுக்குமான உறவுப் பாலங்கள் உருவாக்கப்பட்டு, பண்பாட்டு-ஆன்மிக-சமுதாயப் பிணைப்புகள் உருவாக்கப் படுகின்றன. கலம்பகம் போன்ற இலக்கிய வடிவங்களிலும், வனவாசி-மலைவாசி சமூகத்தவர், பிறிதொருவராக எதிர்மறையாகக் காட்டப் படவில்லை. அரசர்களுக்கும், மலைவாசி-வனவாசிகளுக்குமான பிணக்குகள் இருந்திருக்கின்றன என்றாலும், அவை புனிதப்போர்களாக மாறிவிடாமல், பெரும்பாலும் சமரசங்களில் முடிந்திருக்கின்றன.

இன்று, நகர-கிராமவாசிகளின் தெய்வங்கள், வனவாசி சமுதாயங்களிலிருந்து சென்று சேர்ந்திருக்கின்றன அல்லது இணைந்து பரிணமித்திருக்கின்றன. இதை, இந்தியப் பண்பாடு பெருமையுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறது. கிராதார்ஜுனியம் முதல் பகவான் பிர்ஸா முண்டா வரை, பாரதப் பாரம்பரியம் என்பது, வனவாசி-மலைவாசி-நகரவாசி-கிராமவாசி மக்களின் ஒருங்கிணைந்த வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பாடுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.