சாவித்ரி - 22.என் உயிர்த் தோழி...!
‘ஆறாத காயா’ கன்னட மொழிச் சித்திரம் சாவித்ரி பங்கேற்ற கடைசி சினிமா.


‘ஆறாத காயா’ கன்னட மொழிச் சித்திரம் சாவித்ரி பங்கேற்ற கடைசி சினிமா. காக்கி நாடாவில் தொடங்கிய கலைப் பயணம் கர்நாடகாவின் மைசூர் பிரிமியர் ஸ்டுடியோவில் பூர்த்தி ஆனது. சவுகார் ஜானகி ஹீரோ சங்கர்நாக் உடன் நடித்தனர்.
சென்னை சின்மயா வித்யாலயாவில் ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிந்ததும், விடுமுறையில் அம்மாவுடன் அவுட்டோர் ஷூட்டிங்குக்குப் போய் இருந்தார் சாவித்ரியின் மகன் சதீஷ்.
மது ருசியின் உச்சக்கட்டத் தேடல்கள். விஸ்கியும் ரம்மும் ஜின்னும் தராத போதை பட்டை சாராயத்தினால் கிடைக்கிறது என்கிற விபரீத கோட்பாடு. காலையில் ஆறு மணிக்கெல்லாம் பல் விளக்காமல் குடிக்கத் துவங்கும் அளவு, போதையிலேயே வாழத் துடித்ததன் விளைவு...?
1980 மே 11. பெங்களூர் சாணக்யா ஹோட்டல் அறை. சாவித்ரிக்கு கண்கள் சொருகிய நிலையில் பிரக்ஞை அற்றுப் போனது.
‘ஒரு வாரமா ராப் பகலா ஷூட்டிங் இருந்ததால, அம்மா இன்ஸூலின் போட்டுக்காம விட்டுட்டாங்க. பெங்களூர் போன அன்னிக்கு ராத்திரி வெறும் வயித்தோட இஞ்ஜெக்ஷன் போட்டுக்கிட்டுப் படுத்துட்டாங்க. மூணு மணி சுமாருக்கு நான் பாத்ரூம் போக எழுந்தப்ப அம்மா வாயில நுரையோட, நினைவிழந்து படுத்திருந்தாங்க. இதுக்கு முன்னால இரண்டு மூணு தடவை அம்மாவுக்கு ‘கோமா’ வந்து, உடனே கவனிச்சதுல சரியாயிருக்கு. இந்த முறை ஏனோ இப்படிப் பெரிசா படுத்துட்டாங்க.’ - சதீஷ்.

நிர்வாகம் சரோஜாதேவிக்கு தகவல் தெரிவித்தது. சரோ அதிர்ச்சியின் துரத்தலில் ஓடோடி வந்தவர் உடனடியாக சாவித்ரியை பிரௌனிங் ஹாஸ்பிடலில் சேர்த்தார். ஜெமினி இந்தியாவிலேயே இல்லை. மலேஷியா சென்றவர் சீக்கிரத்தில் பெங்களூரூ திரும்பினார். மே 25. சாவித்ரி விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார்.
நுங்கம்பாக்கம் வெலிங்டன் மருத்துவமனை சாவித்ரியை அரவணைத்தது.
சாவித்ரியின் வாழ்க்கையை பிராப்தத்துக்கு முன் பிராப்தத்துக்குப் பின் என காலம் கிழித்துப் போட்டு விட்டது. சினிமா தயாரிப்பில் ஈடுபடும் வரையில் சாவித்ரியின் உல்லாச உலகம் இதோ:
‘லலிதா, பத்மினி, ராகினி அப்போது திரை உலகில் ஒன்றாக மின்னிய சகோதரிகள். நான் அவர்களுடைய குடும்பத்தில் ஒருத்தியைப் போலப் பழகினேன். நாங்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து பிக்னிக் போவோம். பொழுது போக்காக பெங்களூரு போய் விட்டு வருவோம்.
லலிதா தான் எல்லாருக்கும் லீடர். அவர் சொன்னவாறே நாங்கள் அனைவரும் கேட்போம். ராகினிக்குக் குறும்பு அதிகம். ஏதாவது சொல்லி வேடிக்கையாக விளையாட்டுகள் செய்வார்.
பத்மினியும் நானும் ஸ்டுடியோவுக்கு வெளியிலும் நெருங்கிய தோழிகளாகப் பழகினோம். எங்களை இணைத்து வைத்த ஒரு முக்கிய பொழுது போக்கு கிரிக்கெட்! நிதி உதவிக்காக அப்போதெல்லாம் வட இந்திய நட்சத்திரங்கள் சென்னைக்கு வந்து கிரிக்கெட் ஆடுவார்கள்.
நார்த்தில் திலீப் குமாரும், சவுத்தில் ஜெமினி கணேசனும் உண்மையாகவே நன்றாக ஆடுவார்கள். நாங்கள் கிளாமருக்காக ஆடியவர்கள்.
லலிதா, பத்மினி, ராகினி, நான், எம்.என். ராஜம் ஆகிய ஐந்து பேரும் எல்லா இடங்களுக்கும் ஒன்றாகவே சேர்ந்து போவது வழக்கம். டெலிபோனில் ஒருவருக்கொருவர் பேசி வைத்துக் கொண்டு, என்ன மாதிரி புடைவை அணிந்து கொள்வது என்று தீர்மானம் செய்து கொண்டு, ஒரே அமைப்புடன் போவோம்.
சில சமயம் நகைகள் கூட ஒரே மாதிரி இருக்கும். அப்படி ஒருவரிடம் இல்லையானால், மற்றவர் கொடுத்துக் கொள்வதும் உண்டு. உடனே கடைக்குப் போய் வாங்கி அணிந்து கொள்வதும் உண்டு.
‘என்ன ? ஐந்து பேரும் சகோதரிகளைப் போல் இருக்கிறீர்களே...?’ என்று எங்களிடம் வந்து கேட்பார்கள். அவ்வாறு கேட்பவர்களுக்கு
‘ஆமாம்’ என்று பதில் சொல்லுவதில் எங்களுக்கும் ஒரே குஷி!’
சாவித்ரியின் சொற்களுக்கு சத்திய சாட்சியாக இன்றும் விளங்குகிறார் லிவிங் லெஜன்ட் எம். என். ராஜம். அத்தகைய கலகலப்பும் கொண்டாட்டமும் எதுவரையில் நீடித்தது...?
‘ஜெமினி - சாவித்ரியை நான் முதன் முதலில் சந்தித்தது சேலம் மாட்ர்ன் தியேட்டர்ஸில். ரத்தக் கண்ணீருக்குப் பின் மகேஸ்வரி ஷூட்டிங்கில் அவர்களோடு நடிக்கத் தொடங்கினேன். அதில் ஜெமினியின் இரண்டாவது மனைவி வேடம் எனக்கு.
எங்களை விடப் புகழிலும் செல்வாக்கிலும் பெரிய நடிகைகளாக அஞ்சலி, பானுமதி, கண்ணாம்பா ஆகியோர் இருந்தார்கள். சாவித்ரிக்கும் எனக்கும் ஒரே வயசு. நாங்க அப் கமிங் ஆர்ட்டிஸ்ட்டா சேர்ந்து பழக நிறைய சந்தர்ப்பம் கிடைச்சது.
தினந்தோறும் எங்களுக்கு ஷூட்டிங் இருக்கும். வாகினி, மெஜஸ்டிக் ஸ்டுடியோக்களில் தினமும் சந்தித்துக் கொள்வோம். சாவித்ரிக்கு உலகம் தெரியாது. சிறந்த நடிகை என்று பேர் வாங்கினாளே தவிர கள்ளங்கபடம்மில்லாமல் என் சகோதரியாகப் பழகினார்.
சாவித்ரி முதல் நாள் இரவே என் அம்மாவிடம் ஃபோன் பேசி விடுவாள். ‘அம்மா, நானும் உங்க மாப்பிள்ளையும் சாப்பிட வரப்போறோம். எங்களுக்கு இன்ன இன்ன அயிட்டங்கள் சமைச்சு வைங்கன்னு’ சொல்லிடுவா.
நான் ஷூட்டிங் முடிஞ்சி வீட்டுக்குத் திரும்பறப்ப ஏதோ அவ ரெசிடென்ஸ்குள்ள நான் நுழையற மாதிரி வா ராஜம்னு வாயார வரவேற்பா. அப்படியொரு அன்யோன்யம்!
அப்ப தினசரி ஷூட்டிங் இருக்கும். ஓய்வே கிடையாது. அஞ்சலிதேவி நடிகர் சங்கத் தலைவியா வந்தாங்க. அவங்க கிட்டே போய் முறையிட்டோம் எங்களுக்கும் லீவு வேணும்னு. இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை விடுமுறையா அறிவிச்சது அஞ்சலி அம்மாதான்.

ஒவ்வொரு செகன்ட் சன்டேவும் நாங்க ஒண்ணாவே ஊர் சுத்தப் போயிடுவோம். நாங்கன்னா நான், சாவித்ரி, பத்மினி, லலிதா, ராகினி, ராஜசுலோசனா - எங்களோட ஜெமினிகணேசனும் அவசியம் வருவாரு. சனிக்கிழமை ராத்திரியே நீ இந்த அயிட்டம் சமைச்சு கொண்டா நான் இதை எடுத்துட்டு வரேன். பப்பி இதைக் கொண்டு வரான்னு பேசி வெச்சிக்கிட்டுப் படுப்போம்.
முதல்ல ராமாபுரத்துல எம்.ஜி.ஆர். தோட்டத்துக்குப் பக்கத்துல இருந்த பத்மினி கார்டனுக்குப் போவோம். அங்கே சீட்டு, கேரம், ஷட்டில் காக், இதெல்லாம் விளையாடுவோம். மதியம் எல்லா வீட்டுச் சாப்பாட்டையும் ஒரு பிடி பிடிப்போம். சாப்பிட்டுட்டு ஏதாவது ஒரு சினிமாவுக்குக் கிளம்புவோம். ஒரு சமயம் மினர்வா தியேட்டரில் ‘பவானி ஜங்ஷன்’ இந்திப் படம் பார்க்க மேட்னி ஷோ போயிட்டோம். இண்டர்வெல்ல எங்களைப் பார்த்துட்டு பெரிய கூட்டம் கூடிடுச்சி. போலீஸ் வந்து ரசிகர்கள் கிட்டயிருந்து எங்களைக் காப்பாத்தினாங்க.
‘இனிமேல் உங்கள மாதிரி பெமிலியர் ஆர்ட்டிஸ்ட்டுங்க, சினிமா பார்க்க வெளியில வந்தா எங்களுக்குத் தெரிவிச்சிட்டு வரணும்’ னு ஜெமினி கிட்ட போலீஸ் கண்டிச்சி சொல்லிட்டாங்க.
ஃபிலிம் பார்த்துட்டு சாயங்காலம் பீச்சுக்குப் போவோம். அப்பலாம் மெரீனால இந்த அளவு கூட்டம் கிடையாது. ஜெமினி தன் டிரைவரை அனுப்பி எங்கெங்க என்னென்ன ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் கிடைக்குமோ அதையெல்லாம் வாங்கி வரச் சொல்வார். அத்தனையும் தின்னு முடிச்சுட்டு ராத்திரி வீட்டுக்குப் போவோம்.இந்த மாதிரி வருஷக் கணக்கில் நடந்தது. இப்படியெல்லாம் சாவித்ரியோட சந்தோஷமா காலம் போனது. அவ பிராப்தம் எடுக்க ஆரம்பிச்ச சூழல்ல ஏனோ என்னையெல்லாம் விட்டு விலகிட்டா. ஃபோன் பண்ணாக் கூட எடுக்க ஆளிருக்காது. யாராவது எடுத்தாலும் அம்மா வீட்டில இல்லன்னு டக்குனு வெச்சிடுவாங்க. ஏதாவது பார்டியில் பார்த்தாலும் பேச மாட்டா. அவாயிட் பண்ணிடுவா.
‘என்ன சாவித்ரி ஏன் பேச மாட்டேங்கிற?’ன்னு கேட்டா ‘ஒண்ணுமில்ல, அவசரமா போறேன்’னு தள்ளிப் போயிடுவா. அவளுக்குக் கஷ்டம் வந்ததுன்னு தெரிஞ்ச நேரத்துல நாங்க யாரும் கிட்ட இல்லாம போயிட்டோம். என்னதான் நெருங்கிப் பழகினாலும் சிலதைக் கேட்க முடியாது. அப்படியும் ஒரு முறை விஜயா நர்சிங்ஹோமில் அட்மிட் ஆயிருக்கான்னு கேள்விப்பட்டேன். உடனே சாவித்ரியைப் பார்க்கப் போனேன். அவளோட டாட்டர் விஜி மட்டும் உடன் இருந்தா. நிராதரவா இருந்தது சாவித்ரியோட நிலைமை. கிடைச்ச சான்ஸை வீணாக்காம நான் அவ கிட்ட மனசு விட்டுப் பேசினேன்.

‘ஏன் சாவித்ரி இப்படி ஆயிட்டே? நமக்கு எவ்வளவோ ஆசைகள் இருக்கலாம். ஆனா குழந்தை குட்டின்னு ஆனவுடனே அவங்களுக்காக அதையெல்லாம் தியாகம் செஞ்சிடனும்னு’, சொல்லும் போதே அழுதுட்டேன். அதைப் பார்த்து விஜியும் அழ ஆரம்பிச்சா. ஆனா சாவித்ரி என்ன பண்ணா தன் வாட்சைப் பார்த்துட்டு என் முகத்தைப் பார்த்தா. அது என் மனசுக்குக் கஷ்டமாயிடுச்சி. அப்புறம் நான் அங்கே நிக்கல. வந்துட்டேன். அதுக்குப் பிறகு அவளுக்கு ரொம்பவும் முடியாம வெலிங்டன் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாங்க. நான் போனேன். ஜெமினி கதறினார்.
‘சாவித்ரி, ராஜம் வந்திருக்கா பாரு சாவித்ரி. கண்ணைத் திறந்து பாரு சாவித்ரி'ன்னார். நானும் அழுது ‘என்னைக் கண் திறந்து பார் சாவித்ரின்னேன். அசைவே இல்லாத கோமாவுக்குப் போயிட்டா. அவளை நான் கடைசியா பார்த்து பேசினப்ப ரொம்பவும் மெலிஞ்சு போயிருந்தா. என்னைக் கட்டிப் பிடிச்சி அழுதா. ‘ராஜம் எனக்கு பிரியாணி சாப்பிடணும்னு ஆசையா இருக்கு. உங்கையால செஞ்சு போடறியான்னு’ அழுது கிட்டே கேட்டா.
‘நீ ஒரு ஃபோன் பண்ணிட்டு வீட்டுக்கு வா சாவித்ரி. அவசியம் பிரியாணி செஞ்சி வைக்கிறேன்னேன்.’ எத்தனையோ முறை பிரியாணி செஞ்சேன். சாவித்ரி கிட்டேயிருந்து ஃபோனும் வரல. சாவித்ரியும் வரல.’ - எம்.என். ராஜம்.
சாவித்ரி கோமாவில் மயங்கிய அண்ணா நகர் வீடு அளவில் மிகச் சிறியது. கிழிந்த அழுக்கு சோபாக்கள். காற்றில் ஆடும் பழைய திரைச்சீலைகளுடன் நடிகையர் திலகத்தின் அன்றைய தேய்மானம் போலவே தோன்றியது.
தென்னகத்தின் ஒப்பற்ற நட்சத்திரக் குடியிருப்பு என்று கோயிலில் கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். சொறி பிடித்த நாய்கள் தங்களின் சொந்த கூடாரமாக கூடி குலைத்தன.
அண்ணா நகர் வீட்டில் அக்கறையுடன் சாவித்ரியைப் பாதுகாத்தார் ஜெமினி கணேசன். உடனிருந்து கவனித்துக் கொள்ள நர்ஸ் ஒருவரையும் வேலைக்கு அமர்த்தினார்.
‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ என கண்ணதாசனால் பாடல் பெற்றப் பாசமலர் சருகாகி உலர்ந்து கிடந்தது. அந்த அவலத்தை என் வார்த்தைகளால் சொல்ல மாட்டேன். நேரில் கண்ட சிவசங்கரியை துணைக்கு அழைக்கிறேன்.
‘படுக்கையில் எலும்புச் சுருளாக அவர். ரொம்ப சூம்பிப் போன கை, கால்கள்... கறுத்துப் போன தோல்... மூன்று வயசுப் பிள்ளையின் வளர்த்தி. மூடின கண்கள்; மூக்கிலிருந்து ஓடும் ரப்பர் குழாய், மழமழவென்று வாரி இரட்டைப் பின்னலாகப் பின்னி, மடித்துக் கட்டப்பட்ட முடி, சிவப்புப் பொட்டு.
‘அம்மகாரு ச்சூடு... அம்மகாரு இக்கட ச்சூடு! மீ ப்ரெண்ட் ஒச்சுண்டாரு... ச்சூடும்மா என்று நர்ஸூம் பாபுவும் குனிந்து குரல் கொடுக்க, சாவித்ரி மெதுவாகக் கண்களைத் திறக்கிறார். உள்ளுக்குள் என்னமோ வேதனை இருக்கிற தினுசில் கைகளை இப்படியும் அப்படியும் சுழற்றுகிறார்; மஞ்சள் ஏறிப் போன பற்களை ‘நக் நக்’ கென்று கடிக்கிறார்; அரை நிமிஷம் என்னை உற்றுப் பார்க்கிறார். திரும்ப கண்களை மூடி அமைதியாகிறார்.
ஹோ... சாவித்ரியா! இவரா!
கவனத்தை அறையின் மற்ற விவரங்களில் செலுத்துகிறேன். ஒரு பக்கமாக ஸ்ட்ரெலைஸ் செய்யும் பாத்திரம். ஒரு மேஜையில் காம்ப்ளான், ப்ரொடீனெக்ஸ், டானிக், மருந்துகள்... உடம்புப் புண்களைத் தவிர்க்க ’ஆல்ஃபாபெட்’ என்ற படுக்கையை உபயோகிக்கிறார்கள். இது குமிழ் குழிழான ரப்பராலான படுக்கை. மின்சாரத்தில் இயங்கி, சிறு அலைகளை உண்டாக்குவதன் மூலம் காற்றோட்டத்தை உண்டாக்கி, நோயாளியின் உடம்பை ரணத்திலிருந்து காக்கிறது.
‘இந்தப் படுக்கை இல்லேன்னா அம்மகாரு நிலைமை மோசமா ஆகி இருக்கும்...’நாலு பேராய், பத்துப் பேராய் சாவித்ரி அபிமானிகள் யார் யாரோ வந்து, ஜன்னல் வழியாக சாவித்ரியைப் பார்த்து விட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இத்தனைப் பேரின் அன்புக்கும் பரிவுக்கும் பிரார்த்தனைக்கும் பலன் இருக்க வேண்டும். தனித்துத் தவிக்கும் பிள்ளைக்காகவாவது சாவித்ரி மயக்கத்திலிருந்து மீண்டு வர வேண்டும்.’ (29.11.1981 ஆனந்தவிகடன்)
------------------
தங்கக் கொலுசு கால்களில் தவழத் தவழ கற்பகம் படத்தில் ‘பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் பிடிச்சான்’ பாடலில் சிருங்காரமாக நடித்தவர் சாவித்ரி.
1981 நவம்பரில் தமிழ் சினிமாவின் பொன் விழா!
வைத்திய உதவிகளுக்கும் வழியின்றி போன அவரது பரிதாப நிலையை கருத்தில் கொண்டு பத்தாயிரம் ரூபாயை பொன் விழா கமிட்டி வழங்கியது. சாவித்ரி விஷயத்திலும் புரட்சித்தலைவர் தனது வள்ளல் தன்மையை நிருபித்தார். சாவித்ரிக்கான சிகிச்சை செலவுகள் முழுவதையும் எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார் என நாட்டியப் பேரொளி பத்மினி கூறியுள்ளார்.
1981. கொடிய கோடையின் உக்கிரம் தீராத சித்திரை ஞாயிறு. வெப்பம் தீண்டாத காலையில் ரிலாக்ஸாக குமுதம் வார இதழைப் புரட்டினர் வாசகர்கள். 62 ஆம் பக்கத்தில் கண் பதித்த இளைஞர்கள் கூக்குரலிட்டார்கள்.
‘அம்மா... கொஞ்சம் சீக்கிரம் வாயேன். காபியெல்லாம் அப்புறம் போடலாம். இங்க பார்... உன் ஃபேவரைட் ஆர்ட்டிஸ்ட் சாவித்ரி பத்தி பிரார்த்தனை கிளப்லே உருக்கமா எழுதியிருக்கு.’
‘எங்கே காட்டு. புஸ்தகத்தை எங்கிட்ட கொடு. பாட்டியும் பார்க்கட்டும்.’ ஒட்டு மொத்த வீடும் தங்கள் வீட்டுத் துக்கமாக 62 ஆம் பக்கத்தில் ஆழ்ந்தன.

அதில் ஜெமினி - சாவித்ரி இரு கரம் கூப்பி வணங்கும் கருப்பு வெள்ளை படத்தோடு, ‘குமுதம் பிரார்த்தனை கிளப்’ அங்கத்தினர்களுக்கு ஜெமினி கணேசனின் வேண்டுகோளும் பிரசுரமாகி இருந்தது.
‘நடிகையர் திலகம் சாவித்ரியின் நிலை பற்றி எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். சூழ்நிலை காரணமாகவோ, விதி வசத்தாலோ ஒரு வருடமாகியும் இன்னும் நினைவு திரும்பாமல் பரிதாபகரமான கோமா என்ற உணர்வற்ற நிலையில் இருக்கிறாள்.
என்னால் இயன்ற வரையில் நானும் என் உதவியாளர்களும், மருத்துவர்களும், சில உறவினர்களும் சகல விதமான சிகிச்சைகளையும் செய்து பார்த்தாகி விட்டது. ஆயினும் பலனில்லை. எனக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளையெல்லாம் நான் மறந்து விட்டேன். நாங்கள் முடி சூடா ராஜா ராணிகளாக இருந்த நல்ல நாள்களை நினைத்துதான், நான் இன்னும் என் மனச் சாட்சியால் உந்தப்பட்டு ஆவன செய்து கொண்டு இருக்கிறேன். ரசிகப் பெருமக்களுக்கும், சினிமா தொழிலில் ஈடுபட்டிருக்கும் அத்தனை பேர்களுக்கும் சாவித்ரி பால் அன்பும், பாசமும், இணையற்ற அவள் நடிப்பில் மோகமும் உண்டென்பது உலகறிந்ததே. சாவித்ரியின் தற்போதைய நிலைமையும், நோயும் நீங்கி அவள் நிம்மதி அடைய, நல் உள்ளம் படைத்த நல்ல மனிதர்களை, நமக்கு அப்பாற்பட்ட சக்தியிடம் வேண்டிக் கொள்ளும் படி, என் அருமை சகோதர சகோதரிகளிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். நாங்கள் யாரிடமும் பண உதவியோ, பொருள் உதவியோ கனவிலும் எதிர் பார்த்ததில்லை. யாரும் தப்பர்த்தம் செய்து தவறுதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உண்மையான நண்பர்களும் வழிகாட்டிகளும் தான் தேவை.’ - ஜெமினி கணேசன்.
‘ரொம்பப் பாவம் சாவித்ரி! காலையில ஏண்டா இதை படிச்சோம்னு இருக்கு. ஜெமினி கணேசனும் நல்ல மனுஷன் போலத்தான் தெரியுது. பொண்டாட்டியை கொலை செஞ்சு அவ சொத்தைக் கொள்ளையடிக்கிற புருஷனுங்களுக்கு நடுவுல, எல்லாத்தையும் இழந்து நிக்கிற சாவித்ரிக்காக, ஜெமினி கஷ்டப்படறது கடவுளுக்கே அடுக்காது.’
‘இனிமேலாவது சாவித்ரி கண் விழிச்சி ரெண்டு பேரும் மறுபடியும் சேர்ந்து வாழ்ந்தா எத்தனை நல்லாயிருக்கும்...!’
‘திருவிளையாடல்ல, சாவித்ரி பார்வதியா வந்து என்ன அற்புதமா சிவ பூஜை செய்வா. அந்த அம்பாள் தான் அவளைக் காப்பாத்தணும்.’
ஒரே த்வனியில் ஒவ்வொரு இல்லறத்திலும் ஒலித்த குரலில் தினுசு தினுசாக ஆதங்கம். தங்கள் அபிமான நடிகைக்கு விரைவில் குணமாகி விடாதா என்கிற நப்பாசையில் விளைந்த ஆற்றாமை.
மொழி. மதம், இனம், சாதி வித்தியாசங்களைக் கடந்து சாவித்ரி அன்றைய தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி ஆகி இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...