47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாவித்ரி - 19. மயங்குகிறாள் ஒரு மாது!

உலகமெங்கும் சாவித்ரியின்  இறவாப் புகழ் பரவியிருப்பதைப் போலவே, அவரது ரசிகர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.  இனி வரும் அத்தியாயங்களை அவர்கள் வாசிக்க நேர்ந்தால், வருத்தப்படுவார்கள்.

News image
Updated On :11 செப்டம்பர் 2015, 10:54 am

பா. தீனதயாளன்

உலகமெங்கும் சாவித்ரியின்  இறவாப் புகழ் பரவியிருப்பதைப் போலவே, அவரது ரசிகர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.  இனி வரும் அத்தியாயங்களை அவர்கள் வாசிக்க நேர்ந்தால், வருத்தப்படுவார்கள்.

 தமிழ் சினிமாவின் கதை’ எழுதிய அறந்தை நாராயணனின் வார்த்தைகளில் சொன்னால், நடிகையர் திலகம் ‘குடியினால் குடை சாய்ந்த கோபுரம்!’

தி.நகர். ஹபிபுல்லா சாலையில் அடுத்தடுத்து இரண்டு 12 கிரவுண்ட் நிலங்களை சாவித்ரி வாங்கினார். தன்னுடைய நுங்கம்பாக்கம் வீட்டைப் போலவே அங்கு  முன் நின்று ஸ்கெட்ச் போட்டு வீடு கட்டித் தந்தவர் காதல் மன்னன்.

அதில் பிரம்மாண்ட நீச்சல் குளம் ஒன்றையும் சாவித்ரி அமைத்தார். ஜெமினிக்கு அதில் விருப்பம் இல்லை. வேண்டாம் என்றார். சாவித்ரி ஜெமினியின் சொற்களைக் காதில் வாங்காமல் நீந்தும்  நீரில் விட்டு விட்டார். மவுனம் சாதிக்க ஜெமினி பழகிய முதல் தருணம் அது. நீச்சல் குளத்துக்கு மேலாக சாவித்ரியை அவர் விரும்பினார்.

1973 கோடை. சில நாள்களாக சாவித்ரியின் வீடு பூட்டியிருந்தது. ஏதேதோ வதந்திகள். விசாரித்த பின் சாவித்ரி சொன்னது;

‘வீட்டிலிருந்தால் கணக்கு வழக்கு குழப்பம். கரண்ட் வேறு அடிக்கடி ஆஃப் ஆகி விடுகிறது. பேசாமல் நர்சிங் ஹோமில் போய்ப் படுத்து விட்டேன். அங்கு ஏசி அறையில் வெயிலின் தாக்கம் தெரியவில்லை.’

நயாபைசா முதல் போடாமல், திரை வணிகர்கள் வாரி வழங்கிய  பணத்தில் தொடங்கியது ஸ்ரீதரின் வீனஸ் பிக்சர்ஸ்.

Story image

அமரதீபத்தில் சிவாஜி, பத்மினி, சாவித்ரி  நடிக்கிறார்கள்  என்கிற ‘தினத்தந்தி’ முழுப் பக்க விளம்பரம்  அதற்கு  உதவியது. திறமைமிக்க  இளம் எழுத்தாளனைக் கை தூக்கிவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், முன் பணம் கூட வாங்கிக் கொள்ளாமல் அன்றைய நட்சத்திரங்கள் அமர தீபத்துக்கு ஒளியூட்டினர். 

சாமர்த்தியசாலி ஸ்ரீதர் வாழ்ந்த தமிழ்நாட்டில் சாவித்ரி வீம்புக்காக விநியோகஸ்தர்களிடம் போகவில்லை.

பிராப்தம் படத்துக்காக சொந்த சொத்துகளை அடமானம் வைத்து, நீட்டிய காகிதங்களிலெல்லாம் கையெழுத்து போட்டதன் பலன், கடன்காரர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் சாவித்ரி திக்கித் திணறினார்.

கடைசியில் வட்டிக்குப் பணம் கொடுத்த சேட்டே சாவித்ரியின் சகல சொத்துகளையும் எடுத்துக் கொண்டார். சாவித்ரி ஆசை ஆசையாகக் கட்டிய ஹபிபுல்லா சாலை மாளிகையிலிருந்து வெளியேற வேண்டி வந்தது.

‘சிக்கனம் வீட்டுக்கு. சேமிப்பு சேட்டுக்கு!’ என்று  லாரிகளில் எழுதி வைத்திருப்பார்கள். மிஸ்ஸியம்மா மூலம்  மில்லியனர் ஆன சாவித்ரி விஷயத்திலும் அது நிஜமாகி விட்டது.

‘உங்கம்மாவுக்குக் குடிக்கக் கத்துக் கொடுத்ததே உங்கப்பாதான்னு’ எங்கிட்டே எத்தனையோ பேர் சொல்லி இருக்காங்க. அப்பா பிரிஞ்சி போன துக்கத்தைத் தாங்க முடியாம அதை மறக்க அம்மா மதுவைத் தேடிப் போனாங்க. அதுக்கு அப்பா எப்படிக் காரணமாவார்னு என்னால் புரிஞ்சிக்க முடிஞ்சது.’- விஜய சாமுண்டீஸ்வரி.

ஷூட்டிங்குக்கு குடித்து விட்டுச் செல்வதெல்லாம் சாவித்ரிக்கு மிகச் சாதாரணம். அத்தகைய போதையான நிகழ்வுகள்.  முக்தா. வி. சீனிவாசனின் வார்த்தைகளில்:

‘எனது பூஜைக்கு வந்த மலர்’ படத்தில் ஜெமினிக்கு ஜோடியாக சாவித்ரி நடித்தார். முக்தா சார்னுதான் மரியாதையா கூப்பிடுவாங்க. கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால், தனக்குப் பணம் வேண்டாம், ஏரியா ரைட்ஸ் தாருங்கள் என்றார். நான் ஒத்துக் கொண்டேன்.

பின்னர் அவருக்கு என்னப் பிரச்சனையோ தெரியவில்லை, ஏரியா வேண்டாம், பணமாகக் கொடுத்து விடுங்கள் எனக் கேட்டார். எனது பைனான்சியர்கள் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.  நான் இக்கட்டான சூழலுக்கு ஆளானேன். கடைசியில் சாவித்ரிக்கு கேஷாகவே கொடுத்தோம்.

பூஜைக்கு வந்த மலருக்காக நெப்டியூன் (இப்ப சத்யா) ஸ்டுடியோவில் 8 அடி உயரத்திற்கு ஒரே ஒரு குத்து விளக்கை அமைத்தேன். அதற்குக் கெட்டியான அடித்தளத்தையும் ஏற்படுத்தி,  அதன் மீது  நின்று கொண்டு சாவித்ரி ‘மை ஏந்தும் விழி ஆட’ என்கிற டூயட் பாடலைப் பாடுவதாக காட்சி.

நேர்காணல்களில் எனக்குப் பொய்யே வராது. சாவித்ரிக்குக் குடிப்பழக்கம் உண்டு. அந்த சீன் எடுக்கப்பட்ட போது சாவித்ரி குடித்து விட்டு வந்து, விளக்கின் மேலே ஏறி ஆடத் தொடங்கியதும் நான் நடுநடுங்க ஆரம்பித்து விட்டேன். எந்த நிமிடமும் கீழே விழுந்து விடுவார்களோ என்கிற அதிர்ச்சி. பயம்.

ஷூட்டிங் நடக்காவிட்டாலும் பரவாயில்லை. இந்த அம்மாவை விளக்கிலிருந்து கீழே இறக்கி விட வேண்டுமென்று  நினைத்துப் பதறிப் போனேன். ஜெமினிக்கு போன் போட்டு உடனே வரச் சொன்னேன். அன்றைய சீனில் அவர் கிடையாது. எல்லாமே சாவித்ரியின் தனி ஷாட்கள், க்ளோஸ் அப்கள். எனவே ஜெமினி வீட்டில் இருந்தார்.

என் போனை கேட்டு உடனே வந்து, மெதுவாக சாவித்ரியை கீழே வரச் சொல்லித் தன் காரில் ஏற்றி அழைத்துச் சென்றார் .நிலைமையைச் சமாளிக்க ஜெமினி செய்த உதவி போற்றுதலுக்கு உரியது. படப்பிடிப்பு கேன்சல் ஆனாலும் விபத்துகள் நடக்காமல் இருந்ததே என்பதில் நான் மகிழ்ச்சி கொண்டேன்.

எனது சூரியகாந்தி படப்பிடிப்பிலும் சாவித்ரி குடித்து விட்டு வந்ததால், ஒழுங்காக நடிக்க இயலாமல் பதினாறு பதினேழு டேக்குகள் ஆனது. ‘போதும் சார். நாளைக்கு மீதியை எடுப்போம்’ என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால், உடனடியாக  பேக் அப் சொல்லி விட்டேன்.

ஜெய்சங்கர் மெர்சி ஹோமில் சாவித்ரிக்காக ஒரு பாராட்டு விழா எடுத்தார். மைக்கைப் பிடித்த  சாவித்ரி

‘முக்தா மாதிரி ஒரு சகோதரன் இருந்திருந்தா நான் இப்படி சீரழஞ்சி இருக்க மாட்டேன்.  அடுத்த ஜென்மத்துலயாவது அவரது சகோதரியாகப் பிறக்கணும்னு ஆசைப்படறேன் என்றார்.’

Story image

சாவித்ரியுடன் நெருங்கிப் பழகிய பிரபலங்கள் நடிகையர் திலகம் பற்றிக் கூறிய நன்றும் தீதும்:

‘சாவித்ரிக்கு ஜெமினி  சிபாரிசெல்லாம் செய்ய மாட்டார். தனது திறமையால் நின்றவர் சாவித்ரி. தன் குணத்தாலே கடைசியிலே அழிஞ்சி போயிட்டா!’

‘சாவித்ரி ரொம்ப சென்ஸிட்டிவ் ஆர்ட்டிஸ்ட்.’

‘குடிச்சிட்டா வாடா போடாதான் ஜெமினியை...!’

‘சில விஷயத்துல வெகுளி! சில விஷயத்துல அடமன்ட்!’

‘ஏகப்பட்ட நாயகிகளுடன் ஜெமினிக்குத் தொடர்பு  ஏற்பட்டது. அதனால் சாவித்ரி விரக்தி அடைந்தார். மனம் போன போக்கில் நடக்கத் தொடங்கினார். அழிந்தது சொத்து. ஜெமினி அதைக் கண்டிக்காமல் விட்டுவிட்டார்.’

‘சாவித்ரிக்கு ஒரு போதும் ஜெமினி ரெகமன்ட் செய்தது இல்லை. பக்கா பிசினஸ் மேன் ஜெமினி.’

----------------------------------

‘பாலநாகம்மா, சம்சாரம்’ புகழ்  புஷ்பவல்லி என்கிற பிரபஞ்ச சுந்தரியுடன் கூடி ஜெமினி குதூகலித்த காலம். நாடு விடுதலையான நேரத்தில் நடந்தது ஜெமினி - புஷ்பவல்லியின்  ‘ஓ காதல் கண்மணி!’ கொண்டாட்டம்.

‘அப்பாவுக்கு முதல் மனைவி இருப்பதே ரொம்ப நாள்களுக்குப் பிறகுதான் என் அம்மாவுக்குத் தெரியும்.’-  நடிகை ரேகா.

‘பொதுவாக செட்டில் சுமாரான பெண்களிடம் முதலில் பேச்சு கொடுப்பேன். அழகுள்ள பெண்கள் தானாகவே வந்து என்னிடம் பேச ஆரம்பித்து விடுவார்கள். எப்படி என் ட்ரிக்.’- ஜெமினிகணேசன்.

ஜெமினி காதல் தேசத்தின் முன்னோடி! அவரது ஸ்ரீகிருஷ்ண லீலா தொடர்ந்தது. சாவித்ரி அவரது கண்களில் பட்டார்.

பத்மினி-வைஜெயந்தியின் வண்ணமிகுத் தோற்றமோ, வாளிப்போ, உயரமோ இல்லாவிட்டாலும் சாவித்ரியும் எழிலரசி! மாநிறம். நாட்டுக்கட்டை.

‘வதனமே சந்திர பிம்பமோ... மதன சரோஜமோ... என வாய் விட்டு உற்சாகமாகப் பாடவைக்கும்; எவரையும் மறுமுறை திரும்பிப் பார்க்கச் சொல்லும் வட்ட வடிவ வசீகர சந்திரமுகி. சாவித்ரியின் முகத்தில் எப்போதும் கள்ளங் கபடமில்லாத குழந்தைத்தனம் குடி இருக்கும்.

ஆயிரம் பாவம் காட்டிக் கவர்ந்திழுக்கும் ஆகாய விழிகள். வாய் திறந்து பேசாதோ... ஐ லவ் யூ சொல்லாதோ என காதல் மன்னனை ஏங்க வைத்த, சீராக  அளவெடுத்து பிரம்மன்  அணிவித்த மெல்லிய இதழ்கள்... மற்ற அங்கங்கள் யாவிலும் யவ்வனத்தின் தேரோட்டம்.

ஜெமினியுடனான தன் காதலை சாவித்ரி அஞ்சலிதேவியிடம் மனம் விட்டுக் கூறியிருந்தார்.

‘நீ தெலுங்கு பெண். அவர் தமிழர். எச்சரிக்கையாக இருக்கணும்!’ என்று சாவித்ரியை உஷார் படுத்தினார் அஞ்சலி.

கணவனே கண் கண்ட தெய்வம் ஷூட்டிங். சாவித்ரி பற்றி ஜெமினியிடம் நேரடியாகவே பேசி தெளிவு பெற்றார் அஞ்சலி.

‘கல்யாணம்னு சொல்லுதே அந்தப் பொண்ணு. உங்களை நம்பி வருது. ஜாக்ரதையாகப் பார்த்துக்குங்க.’ என்றார் அஞ்சலி அக்கறையோடு.

அஞ்சலிக்கும் அப்போது தெரியாது. ஜெமினி ஏற்கனவே மணமானவர்  என்று.

பிராப்தம் தோல்வி அடைந்ததன் விளைவாக சாவித்ரி குடிக்கத் தொடங்கவில்லை. அவரது அழகிய முகத்தை நோக்கி சினிமா காமிரா  நிலை பெற்ற நாள் முதலாகவே தொற்றிக் கொண்ட பழக்கம்.

புஷ்பவல்லியிடம்  சாவித்ரியை அறிமுகம் செய்து வைத்தார் ஜெமினி.

மூவரின் இன்ப விநாடிகளில்  சாவித்ரிக்கு லாகிரி வஸ்துகள்  பழக்கமானது. புஷ்பவல்லி ஊற்றித் தர, காதல் மன்னன் வற்புறுத்த ஸ்டார்களின் சியர்ஸ்!

பருகப் பருக சாவித்ரிக்கு உற்சாக பானத்தின் தங்க நிறமும், அலாதி ருசியும், அற்புத போதையும் ஜெமினியை விடப்  பிடித்துப் போனது. உதடுகளில் மதுக் கோப்பைகளின் உரசல் இல்லாமல் உல்லாச உலகம் இல்லை என்றானது.

புஷ்பவல்லிக்கும் ஜெமினிக்கும் மாறுதல் தேவை எனத் தோன்றியது. காரணம் புஷ்பவல்லியின் எளிய நோக்கம் நிறைவேறி விட்டது. ஜெமினி மூலம் வேண்டி விரும்பி புஷ்பவல்லி இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்.

Story image

தேவைகள் தீர்ந்தவுடன் நாகரிகமாக டாட்டா சொல்லி  பிரியத்தோடு பிரிந்தார்கள். புஷ்பவல்லி குறித்த மலரும் நினைவுகள்:

‘ஜெமினியில் நானும் புஷ்பவல்லியும்  நடித்துக் கொண்டு இருந்த போது இருவருக்கும் காதல் பிறந்தது.  ஒட்டிப் பழகினோம். கல்யாணத்தைப் பற்றி நாங்கள் எண்ணவே இல்லை.  மனம் விரும்பிப் பழகுபவர்களுக்குத் திருமணம் தடையில்லைதான்!

எங்கள் இருவர் உயிரும் கலந்து மூன்றாவது உயிர் தோன்றியது. பானுரேகா பிறந்தாள். காலப் போக்கில் இருவரும் வேறு பாதையில் செல்ல வேண்டி இருந்ததால் பிரிந்தோம். எங்களுக்குள் கல்யாணம் ஆகாததால் விவாகரத்து பிரச்சனையும் எழவில்லை.’- ஜெமினி கணேசன்.

இரு தார மணம் குற்றம் என்கிறது  சட்டம். ஜெமினி சமர்த்தர். பாப்ஜி தவிர வேறு யாரையும் அவர் சாஸ்திரப்படியோ,  சப் ரிஜிஸ்ட்ரார் முன்போ பதிவுத் திருமணம் செய்து கொள்ளவில்லை. முன் எச்சரிக்கை முனுசாமி!

ஜெமினிக்கும் பாப்ஜிக்கும் நிறைவாக 1962 பிப்ரவரி 28ல் பிறந்தவர், ஜெயஸ்ரீ ஸ்ரீதர். சாவித்ரியின் வீட்டிலேயே தங்கி விட்ட போதிலும், ஜெமினி தன் முதல் மனைவி  பாப்ஜியிடம் காட்டிய நேசம் மரியாதைக்குரியது.

பாப்ஜியோ, சாவித்ரியோ ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என்று காதல் மன்னன் விஷயத்தில் நடந்து கொள்ளவில்லை. காரணம் இருவருமே கள்ளங் கபடம் அறியாதவர்கள்.

நடிகைகளின் கணவர் பற்றி ஏராளமாக கேலி கிண்டல் தொனிக்க ஜோக்குகள் எழுதுபவர்கள்   இன்றைக்கும் அதிகம். ஆனால் ஜெமினியை சத்தியமாக அந்தப் பட்டியலில் சேர்த்து விட முடியாது.  

சாவித்ரி ஜெமினியை கவனித்துக் கொண்ட விதம் அருமை!  அதற்குக் கண் கண்ட சாட்சி. டாக்டர் கமலா செல்வராஜ்.

‘ஒரு பீரோ நிறைய ஷர்ட்-பேன்ட்-கோட்- சூட். ஒரு பீரோ நிறைய ஷூ.  கை தட்டினால் சட்டையை மாட்டி விட,  ஷூ போட்டு விட ஆள், கூப்பிட்ட குரலுக்கெல்லாம்  கேட்டதை செய்ய சாவித்ரி ஓடி வந்தார். எங்க அப்பாவை சாவித்ரி ராஜா மாதிரி நடத்தியதைப் பார்த்து நான் பிரமித்து நின்றதுண்டு.’

மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் நேயர்களே... ஜெமினியின் நட்சத்திர சம்பாத்தியத்தில் சாவித்ரி ஒரு வேளை கூட சோறு தின்னவில்லை.

1958-  ஜூலை 8. ‘கொஞ்சும் சலங்கை’ அவுட்டோருக்குச் சென்ற ஜெமினி, டைஃபாயிட் ஜூரத்துடன் திரும்பினார். அப்போது சாவித்ரி கர்ப்பிணி.

தாய்மை அடைந்தப் பூரிப்பில் அவர் ஜெமினியிடம் காட்டிய பரிவு, பாசம், கவனம், அக்கறை, உபசரிப்பு, பதற்றம், எந்தவொரு குணசுந்தரியான மனைவியின் பிரியத்துக்கும் சற்றும் குறைந்தது அல்ல. இதை நான் சொல்லவில்லை. ஜெமினியின் மகள் நாராயணி பதிவு செய்துள்ளார்.

Story image

‘அப்பா படுத்த படுக்கையாக இருந்தார். கமலா, ரேவதியுடன் அப்பாவைப் பார்க்க என்னை அழைத்துக் கோண்டு போனார்கள் அப்பாவின் சின்னம்மா.(ஜெமினியின் சித்தி)

அங்கு அப்பாவுக்குப் பக்கத்தில் பணி விடை செய்து கொண்டிருந்தார் ஒரு பெண்.  வெள்ளை உடையிலிருந்த அப்பெண்ணின் அழகு  என்னைக் கவர்ந்தது. அப்பாவைப் பார்க்கச் சென்ற நான், ‘ அந்த நர்ஸ் ரொம்பவே அழகாயிருக்கா!’ என்றேன்.  சின்னம்மா என் தொடையில் கிள்ளி, பேசாமல் இருக்குமாறு  சைகை காட்டினாள்.

‘நர்ஸ் அழகாய் இருக்கான்னு சொன்னா ஏன் என்னைக் கிள்ளினே...’  என்றேன். வெகு நாள்களுக்குப் பிறகே அந்த அழகான நர்ஸ், நடிகை சாவித்ரி என்பது எனக்குத் தெரிந்தது!’ - நாராயணி.

சாவித்ரியின் ஈடு இணையற்ற கவனிப்பால் ஜெமினிகணேஷ் எதிர்பார்த்ததை விடச் சீக்கிரத்தில் குணமாணார். அடுத்து ‘கல்யாணப் பரிசில்’ பாஸ்கராக தோன்றி வசந்திக்கு( சரோஜாதேவி)  தூண்டில் போட்டார்.

ஜெமினியை மட்டும் அல்ல. அவரது மகள்களில் தன்னுடன் நெருங்கிப் பழகிய நாராயணியையும்  சாவித்ரி கண்ணுக்குக் கண்ணாக கவனித்த சந்தர்ப்பங்களும் உண்டு. அதைப் பற்றி நாராயணி :

‘சாவித்ரி ஆன்டீ வீட்டுக்குப் போய் விஜியுடன் விளையாடுவேன். ‘கங்கா கினாரே’ இந்தி சினிமா ஷூட்டிங்குக்காக சாவித்ரியுடன் மும்பை போய் இருக்கிறேன். சாவித்ரி தன் தலை முடியை ‘சாதனா’ கட் செய்திருந்தார். மும்பையில் தங்கியிருந்த போது என்னை ரொம்ப நன்றாக பார்த்துக் கொண்டார்.

ஸ்டுடியோவுக்குப் போகும் போது மேக் அப் ரூமில் எங்களை இருக்கச் செய்வார். சாப்பிட சாக்லெட், பிஸ்கட், சாப்பாடு - படிக்க காமிக்ஸ் கொடுத்து விட்டு நடிக்கப் போவார்.

எனக்கு சாவித்ரியைப் போலவே சாதனா கட் செய்து கொள்ள எக்கச்சக்க பிளானுடன் போய் இருந்தேன். அதை சாவித்ரியிடம் கூறிய போது அவங்க பயந்துட்டாங்க. நான் ரொம்பவும் கெஞ்சினேன்.  திரும்பத் திரும்ப கெஞ்சிய போதும் அவர் தயங்கினார்.

‘எங்கள் வீட்டில் தலை முடியை வெட்டிக் கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள். பாட்டி கேட்டால் நான் தான் விரும்பி செய்து கொண்டதாகச் சொல்லி விடுகிறேன்’  என்று கெஞ்சினேன்.

என்னை ஒரு சைனீஸ் பார்லருக்கு அழைத்துப் போய் முடி வெட்டினார். ‘சாதனா கட்’டுக்கு எப்படி தலை சீவிக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்.

அப்பாவுக்குத் தெரிந்தவர்கள் எனக்கும் நெருக்கமானவர்கள் என்கிற உணர்வின் உந்துதலால் சாவித்ரியிடம் நான் நெருங்கிப் பழகினேன். அப்பாவோடு நெருங்கி நிற்க  என் மனத்தில் மறைமுகமாக எழுந்த ஆசையாகக் கூட அது இருக்கலாம்.’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.