அந்த டானிக், மக்களுக்குக் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் - முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா. தன் முடிவை PAP கட்சிச் சேர்மனுக்குக் கடிதம் எழுதினார். அவர் ஏற்கவில்லை. அசெம்பிளியில் நம்பிக்கை வாக்குப் பெற லீ முடிவு செய்தார். மிக மிக ரிஸ்க்கான முடிவு. ஏன் தெரியுமா? அசெம்பிளியில் மொத்த உறுப்பினர்கள் 51 பேர். அவருக்கு ஆதரவானவர்கள் 25 பேர்: எதிர் அணியினர் இன்னொரு 25 பேர். மீதம் இருந்த ஒற்றை அங்கத்தினர்- மலாய் இனத்தைச் சேர்ந்த சஹோரா பின்டே அஹ்மத் (Sahorah binte Ahmat). உடல்நலம் சரியில்லாத அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரு அணியினரும் சஹோரா ஆதரவு கோரி, நோய்ப் படுக்கையிலும் அவரை நச்சரித்துக்கொண்டிருந்தார்கள். ஆட்சியல்லவா ஆட்டத்தில் இருக்கிறது? அதுவும் சஹோராதானே துருப்புச் சீட்டு? ஆனால், அவர் எழுந்து நிற்க முடியாத நிலையில் படுக்கையில். மருத்துவமனையை விட்டு அவர் வெளியே வந்தால், உடல்நலத்துக்கே அபாயம் என்று மருத்துவர்களின் எச்சரிக்கைகள்.
ஜூலை 20, 1961. மதியம் 2.30. அசெம்பிளி கூடியது. 50 அங்கத்தினர்களும் அவையில். காரசாரமான விவாதங்கள். குற்றச்சாட்டுக்கள், அவதூறுப் பட்டியல்கள். இரவு முழுக்கத் தொடர்ந்தது. ஜூலை 11. அதிகாலை மணி 3. எப்போதும் வாக்கெடுப்பு நடக்கலாம். இருவருக்கும் தலா 25 வாக்குகள் கிடைக்கும். அப்போது பிரிட்டீஷ் கவர்னர் என்ன செய்வார்? ‘உங்கள் மக்களாட்சி போதும். அடுத்த தேர்தல் நடப்பதுவரை அதிகாரத்தை என் கையில் வைத்திருக்கிறேன் என்று அறிவிப்பாரா? லீ அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டதா? விடைகள் இல்லாத வினாக்கள்.
அப்போது, அசெம்பிளி வாசலில் ஒரு ஆம்புலன்ஸ் சைரன் ஒலி. கிரீச்சிடும் டயர்கள். மருத்துவமனைப் பணியாளர்கள் ஒரு வீல்சேரைக் கீழே இறக்குகிறார்கள். வாசலிலிருந்து 45 அடி தூரம். பணியாளர்கள் உதவியுடன் தள்ளாடியபடி நடந்துவருகிறார் சஹோரா! லீக்கு ஆதரவாகக் கை தூக்குகிறார். அது கையல்ல, தள்ளாடிக்கொண்டிருந்த அரசைத் தூக்கி நிறுத்திய தூண், லீ அரசியல் வாழ்வுக்குப் புத்துயிர்.

நம்பிக்கைத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த 25 மக்கள் பிரதிநிதிகளும், PAP கட்சியைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம். வெளியே போனார்கள் (லீயால் வெளியேற்றப்பட்டார்கள்.) பாரிசான் சோஷியலிஸ் (Barisan Socialis Party) என்னும் தனிக்கட்சி தொடங்கினார்கள். லீ களையெடுத்துவிட்டார். PAP கட்சி இப்போது அவர் வசம்.
லீ தன் வியூகத்தை விளக்கினார், ‘எதிரிகள் கடுமையாகத் தாக்கும்போது, பதிலடி கொடுப்பதற்குப் பதிலாக, மேலே விழும் அடிகளைத் தவிர்க்கவேண்டும். அதே சமயம், நம் அணுகுமுறையில் என்ன அடிப்படை மாற்றங்கள் செய்யவேண்டும் என்று ஆலோசிக்கவேண்டும்.’
மயிரிழையில், ஒரே வோட்டில் ஆட்சி தலை தப்பிவிட்ட இந்த வேளையில் லீ இதைத்தான் செய்தார். பிளவுபட்ட PAP கட்சிக்கும் தனக்கும் மக்கள் மத்தியில் எத்தனை ஆதரவு இருக்கிறது என்று லீ தெரிந்துகொள்ள விரும்பினார். அமைச்சர் பணியிலிருந்து தன்னைத் தற்காலிகமாக விடுவித்துக்கொண்டார். காலை முதல் இரவுவரை ஒரே வேலை, மக்கள் சந்திப்பு, அவர்களின் நாடித் துடிப்புக் கணிப்பு. வீதி வீதியாக நடந்துபோனார். பலமட்ட மக்கள், கட்சி நிர்வாகிகள், சாமானியர்கள் ஆகியோரோடு பேசினார். கட்சியின் ஆணிவேரான அடிமட்டத் தொண்டர்கள் தன்னோடு இருப்பது தெரிந்தது, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட்களை வேரறுக்க இதுதான் சரியான நேரம்.
அசெம்பிளியில் கிடைத்த 25 அங்கத்தினர்கள் ஆதரவு கம்யூனிஸ்ட்களுக்கும் புது ரத்தம் பாய்ச்சியது. தங்கள் அரசியல் கனவுகளுக்கு முக்கிய வில்லன் லீதான் என்பதை உணர்ந்தார்கள். அவர் அரசியல் அத்தியாயத்துக்கு அஞ்சலி எழுத முடிவெடுத்தார்கள். லீ – கம்யூனிஸ்ட்கள். சிங்கப்பூரின் வருங்காலம் யார்? தொடங்குகிறது போர், போர், போர்!
அரசாங்கத்தைக் கவிழ்த்த முயன்று தோற்ற இடதுசாரிகள் PAP கட்சியின் முதுகெலும்பை முறிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார்கள். PAP – க்கு 25 கிளைகள் இருந்தன. இவற்றுள் 20 கிளைச் செயலாளர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டார்கள். இவர்கள் வெறும் கைகளோடு போகவில்லை. கட்சி இருந்த இடங்கள், டைப்ரைட்டர்கள் போன்ற சொத்துக்கள், ஏராளமான தொண்டர் படை ஆகியவற்றையும் எடுத்துச் சென்றார்கள். தங்களோடு சேர மறுத்த கிளைகளை அடித்து நொறுக்கினார்கள். அந்தச் செயலாளர்களை அடி, உதை என்று மிரட்டினார்கள்.
லீ இளைஞர்களை நாட்டு முன்னேற்றத்தின் ஆக்க சக்தியாகப் பயன்படுத்த, உழைப்பாளர் அணி (Works Brigade) என்னும் அமைப்பை உருவாக்கியிருந்தார். ராணுவ பாணியில் சீருடை அணியும் இவர்கள், வசதிகள் குறைவான கூடாரங்களில் தங்கி, விவசாயம், ரோடு போடுதல், வீடுகள் கட்டுதல் ஆகிய பயிற்சிகளிலும், பணிகளிலும் செதுக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆரம்ப காலங்களில் நேரடியாக இதை லீ மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். முதலமைச்சரானதும், நேரமின்மையால், பொறுப்பை இன்னொரு அமைச்சரிடம் தந்தார். எல்லா ஆட்சிகளிலும் சாதாரணமாக நடப்பது போல், அந்த அமைச்சர் இன்னொரு குட்டித் தலைவரிடம் பொறுப்பைக் கொடுத்தார். மேற்பார்வை நீர்த்துப்போனது. கம்யூனிஸ்ட்கள் இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, உழைப்பாளர் அணியைத் தங்கள் ஆதரவாளர்களால் நிரப்பிவிட்டார்கள். உழைப்பாளர் அணி இடதுசாரிகள் கோட்டையாகிவிட்டது. நேரடியாகக் களத்தில் இறங்கியபோதுதான், இந்த விபரீதம் லீக்குத் தெரிந்தது.
மக்கள் சங்கம் (Peoples Association) என அவர் தொடங்கியிருந்த அரசாங்க அமைப்பிலும் இதே கதைதான். நாட்டின் அனைத்து இசை, நடன, ஓவிய, சமையல் பள்ளிகள், சங்கங்கள், கிளப்கள், பொழுதுபோக்கு அமைப்புக்கள், விளையாட்டுச் சங்கங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பான இந்த மக்கள் சங்கம் நாடு முழுக்க 100 சமுதாயக்கூடங்கள் திறந்திருந்தது. இவை அறிவுத்தேடல், பொழுதுபோக்கு ஆகிய இரண்டுக்கும் மையங்களாக வடிவமைக்கப்பட்டு, டேபிள் டென்னிஸ், செஸ் போன்ற விளையாட்டுக்கள், ரேடியோ, ஃப்ரிஜ் ரிப்பேர் ஆகியவை கற்றுக்கொடுத்த இந்தக் கூடங்கள் பொதுவுடமைக் கொள்கைகள் போதிக்கும் கூடாரங்களாகியிருந்தன.
கட்சியில் இருந்துகொண்டே, கம்யூனிஸ்ட்கள் மறைமுகமாக நடத்திக்கொண்டிருந்த கொரில்லாப் போர் இது. தலைக்குமேல் தண்ணீர் போய்விட்ட நிலை. இன்னொரு மனிதராக இருந்திருந்தால், சோதனைமேல் சோதனை, போதுமடா சாமி என்று அரசியல் சந்நியாசம் வாங்கியிருப்பார். லீ வித்தியாசமானவர். சவால்களும், எதிரிகளின் சதிகளும் அவருக்கு உற்சாக டானிக்.

லீ உழைப்பாளர் அணியில் இருந்த கம்யூனிஸ்ட் அனுதாபிகளை அடையாளம் கண்டார். அவர்கள்மீது, தண்டனை, தற்காலிக நீக்கம் என்னும் கணைகளை ஏவினார். அவர்களுள் 150 பேர் உழைப்பாளர் அணித் தலைவரின் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். தலைவர், அவருடைய இரு உதவியாளர்கள் ஆகியோரின் சைக்கிள்களை நெருப்புவைத்துக் கொளுத்தினார்கள். அரசாங்கம் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.
சும்மா இருக்குமா எதிரணி? எதிர்ப்புக் கூட்டங்கள், மறியல்கள். அரசு தரப்பு அவர்களின் மூன்று முக்கிய தலைவர்களை டிஸ்மிஸ் செய்தது. 180 பேர் ஒரு
சமுதாயக்கூடத்தை முற்றுகையிட்டார்கள். வன்முறையில் இறங்கும் நோக்கத்தோடு வருகிறார்கள் என்று உளவுத்துறை சொன்னது. அரசாங்கம் முன்னேற்பாடாக, ராணுவத்தைக் கூடத்துக்கு அனுப்பினார்கள். கலவரம் வெடிக்கும் முன்னால், அடக்கப்பட்டது. உழைப்பாளர் அணி, மக்கள் சங்கங்கள் ஆகியவற்றைத் தன் இரும்புக் கரங்களால், உறுதியான நடவடிக்கைகளால், லீ தன் கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்துவிட்டார்.
தொழிலாளர் உறவு அத்தனை சுலபமானதாக இல்லை. எரியும் கொள்ளியில் கம்யூனிஸ்ட்கள் எண்ணெய் வார்த்துக் கொண்டேயிருந்தார்கள். கட்சி உடைந்த பதினைந்தே மாதங்களில், சிங்கப்பூரில் நடந்த வேலை நிறுத்தங்கள் 153 – நாட்டின் வரலாற்றில் ஒரு ரெக்கார்ட். அத்தனையும் கம்யூனிஸ்ட்கள் உபயம்!
சிங்கப்பூரே இப்படிப் பற்றி எரியும்போது, லீ மலாயோடு இணையும் தன் தொலைநோக்கு இலக்கை மறக்கவில்லை. அடிக்கடி மலாயா போய், தன் கனவுக்கு மலாயாத் தலைவர்களிடமும், பொதுமக்களிடமும் ஆதரவு திரட்டிக்கொண்டிருந்தார். ஒவ்வொருமுறை பயணிக்கும்போதும், கண்டுகொண்டிருந்த சில காட்சிகள் அவர் நெஞ்சில் ஆறா ரணம் ஏற்படுத்தின.
வழியில், தொழிலாளர்கள் வேலைக்குப் போகாமல் சின்னச் சின்னக் கூட்டங்களாக நின்று வம்படித்துக்கொண்டிருப்பார்கள்: அல்லது கைகளில் கோரிக்கை அட்டைகளோடு முழக்கம். சிலர் தொழிற்சாலைகளின் வேலிகளை அழிப்பது, சுவர்களை உடைப்பது, பொதுச் சொத்துக்களைச் சேதம் செய்வது என்னும் பல்வேறு நாச வேலைகளில். ‘பைத்தியக்காரர்களே, நீங்கள் அழிப்பது உங்கள் முதலாளிகளையல்ல, என் ஆட்சியையல்ல, உங்கள் பிறந்த பொன்னாட்டைத்தான்’ என்று லீ நெஞ்சு கதறும், ரத்தக் கண்ணீர் விடும்.
கம்யூனிஸ்ட்கள் பிடியிலிருந்து காப்பாறினால்தான் சிங்கப்பூர் உருப்படும் என்பதில் லீ தெளிவாக இருந்தார். அவரைக் கருவியாக வைத்து, கம்யூனிஸத்துக்குச் சிங்கப்பூரில் சமாதிகட்ட பிரிட்டீஷாரும், துங்குவும் விரும்பினார்கள். சாமர்த்தியசாலி லீக்கா இது தெரியாது? தான் பொதுவுடைமைவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை அடக்க முயற்சிப்பது அபாயகரமான வேலை என்பதை லீ அறிவார். இந்த முயற்சியில் தோற்றாலும், ஜெயித்தாலும், மக்கள் அனுதாபம் கம்யூனிஸ்ட்கள் பக்கம் இருக்கும். சொந்தச் சகோதரர்களையே அடக்கி ஒடுக்கிய அவரை மக்கள் வெறுப்பார்கள். பிரிட்டீஷாரும், மலாயர்களும், அவரைப் பலிகடாவாக்கிவிட்டு, அமைதிப்பூமியாக சிங்கப்பூரை ஆட்சி செய்வார்கள். இது அரசியல் தற்கொலை முயற்சி. பிரிட்டீஷார் – துங்கு ஆட்டத்தில் தான் எப்போதுமே பகடைக்காயாகப் போவதில்லை. இந்த அடிப்படையில் லீ ராஜதந்திர நடவடிக்கைகள் எடுத்தார்.
மலாயாவோடு சிங்கப்பூரை இணைக்கும் வேலையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அத்தனை சீக்கிரம் செய்யவேண்டும். அப்போது, கம்யூனிஸ்ட்கள் மீது அவர் கடும் நடவடிக்கைகள் எடுத்தாலும், அதன் பொறுப்பு மலாயா அரசின் மீதுதான் விழும். பொறுப்பின் சிறு சுமைதான் அவர் தலையில் விழும்.

மலாயோடு இணைவது காலத்தின் கட்டாயம் என்பதை மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிய வைப்பதுதான் முக்கிய வேலை. லீ தன் பணிகளிலிருந்து விடுப்பெடுத்தார். இரண்டு வாரத் தனிமை. சிங்கப்பூர் வானொலியில் மக்களோடு மனம்விட்டுப் பேசவேண்டும். விதம் விதமான 30 நிமிடப் பேச்சுக்கள் தயார் செய்தார். பல்வேறு கோணங்களில் அணுகி, ஆழமாக ஆராய்ந்து, மலாயா – சிங்கப்பூர் இணைப்பு ஏன் தவிர்க்கமுடியாத, வரவேற்க வேண்டிய அவசியம் என்பதை மக்கள் மனங்களில் பதியவைக்கும் வாதங்கள்.
அடுத்த இரண்டு மாதங்கள். பன்னிரெண்டு வானொலி உரைகள். லீ மிக மிகச் சாமர்த்தியமாக வார்த்தைகளை வைத்து விளையாடினார். கம்யூனிஸ்ட்கள் மீது தனிப்பட்ட முறையில் தனக்கு இருக்கும் அபிமானம், அன்பு, மரியாதை உண்டு. இதையும் தாண்டி, அவர்களைத் தான் எதிரியாக நினைக்க ஒரே காரணம், அவர்கள் சிங்கப்பூரின் வளர்ச்சியை, முன்னேற்றத்தைத் தடுப்பதால்தான் என்பதைத் தெளிவாக்கினார்.
‘ஏராளமான யூனியன் தலைவர்களை எனக்குத் தெரியும். அவர்கள் ஏமாற்றுக்காரர்களல்ல, சந்தர்ப்பவாதிகளல்ல. பொதுவுடமைக் கொள்கைகளுக்காகத் தங்கள் சுதந்திரத்தை இழக்கத் தயாராக இருப்பவர்கள்....சீனாவுக்கு நாடு கடத்தப்பட்ட அவர்களுள் பலர் என் நெருங்கிய நண்பர்கள்....ஜனநாயக ஆட்சிமுறை நேர்மையான, சமத்துவமான சமுதாயத்தை உருவாக்காது என்று அவர்களோடு சம்மதித்து, நான் அவர்களோடு சேருவேன் என்று நினைத்தார்கள். ஆனால், அந்தச் சமுதாயத்தை உருவாக்கக் கம்யூனிஸம் வழியல்ல, சீனர்களையும், இந்தியர்களையும் மலாய்களோடு தேசிய மொழியால் இணைத்து, ஒற்றுமையையும், தேசப்பற்றையும் வளர்க்கவேண்டும் என்று அவர்களோடு நான் வாதாடினேன்.’
மலாயோடு சிங்கப்பூரை இணைப்பதற்கு அவர் வாதங்களை அடுக்கிய பாணி, இங்கிலாந்தில் முதன்மை மாணவனாக அவர் சட்டம் படித்ததற்குச் சாட்சி.
‘ஏன் மலாய் – சிங்கப்பூர்க் குடியரசு உருவாகவேண்டும் என்பதற்கான காரணங்கள் உங்கள் அனைவருக்கும் தெரியும். மலாயா ரப்பர்தான் சிங்கப்பூர்ப் பொருளாதாரத்தின் அடித்தளம். இரண்டு நாடுகளும், அரசுகளும், பொருளாதாரமும் இணையாவிட்டால், நம் பொருளாதாரம் சீர் கெட்டுவிடும். உங்கள் வாழ்வாதாரம் மறைந்துவிடும்.’
இயற்கையும் லீக்கு உதவிக்கரம் நீட்டியது. சிங்கப்பூரில் மழையே பெய்யவில்லை. நீர்த்தேக்கங்கள் காலி. தினமும் ஆறு மணி நேரத்துக்குத் தண்ணீர் ரேஷன். மக்கள் அவதிப்பட்டார்கள். அதே சமயம், மலாயாவில் உபரித் தண்ணீர். இரண்டும் ஒரே நாடாக இருந்திருந்தால், தங்கள் தாகம் எளிதில் தணிந்திருக்கும் என்னும் நிதர்சன நிஜம் மக்களுக்குப் புரிந்தது. மூளைச்சலவை என்றுகூடச் சொல்லலாம். பெரும்பாலான மக்கள் இணைப்புக்கு ஆதரவு தரும் மனநிலைக்கு மாறிவிட்டார்கள்.
லீ ஜெயித்துவிட்டார். காய்களை நகர்த்தத் தொடங்கினார். பிரிட்டிஷ் அரசு, துங்கு ஆகியோரோடு தீவிரப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராஜா ராணி போல் உருவாகும் ஆர்யா - 40!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மனைவியுடன் வந்து வாக்களிப்பு!
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அதிகாரிகள் நினைக்கிறார்கள்; அது நடக்காது!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

