லீ முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், தங்கள் மீது அரசின் அடக்குமுறை பாயும் என்று கம்யூனிஸ்டுகளும், பாரிசான் கட்சி உறுப்பினர்களும் பயந்தார்கள். தேர்தலில் வெற்றி கண்ட இரண்டு பாரிசான் கட்சி மக்கள் பிரதிநிதிகள் தலைமறைவானார்கள்.
அவர்கள் யூகம் சரியானதுதான். மக்களிடம் பேராதரவு பெற்றிருந்த பிரபலங்கள் சிலரைக் கைது செய்து, எதிர்க்கட்சிகளின் நரம்புகளில் பயம் ஏற்படுத்தி, அவர்கள் முதுகெலும்பை உடைப்பது லீயின் திட்டம். ஆனால், அவர் இதை மறைக்கவில்லை, ஏமாற்றுத்தனமாகச் செய்யவில்லை. வெளிப்படையாகவே முழங்கினார், கம்யூனிஸ்ட்களின் கைப்பாவைகளாக இயங்கி, சிங்கப்பூரின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிப்பவர்கள் எத்தனை பணக்காரர்களாக, சமூக அந்தஸ்து கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள்மீது அரசாங்கம் கடும் நடவடிக்கைகள் எடுக்கும்.’
லீ வைத்த முதல் குறி, டான் லார்க் ஸை (Tan Lark Sye). சீனர்களின் அபிமானத் தலைவர், நான்யாங் பல்கலைக் கழக நிறுவனர். டானின் குடியுரிமையை லீ ரத்து செய்தார். 20 பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தார். செயல்படும் உரிமையைப் பறித்துவிடுவதாக, ஏழு முக்கிய தொழிலாளர் யூனியன்களுக்கு நோட்டீஸ் பறந்தது.
மாணவர்களும், தொழிலாளர்களும் போர்க்கொடி தூக்கினார்கள். நூறு லாரிகளில் ஆதரவாளர்களத் திரட்டி வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சிங்கப்பூரின் பொருளாதார இதயம் துறைமுகம். இந்தத் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தார்கள். நாடு முழுக்க எல்லா யூனியன்களும் சேர்ந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக அறிக்கை விட்டார்கள். ஸ்டிரைக் தொடங்குவதற்கு முந்தைய நாள். லீ தன் இரும்புக் கரங்களைக் காட்டினார். 14 முக்கிய யூனியன் தலைவர்களைக் காவல்துறை கைது செய்தது. வேலை நிறுத்த நாளன்று, சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் உள்துறை அமைச்சகம் நோக்கி ஊர்வலம் வந்தார்கள். காவல்துறை அவர்களை எதிர்மோதியது. அடித்து விரட்டியது. பயந்த யூனியன்கள் ஒவ்வொன்றாகப் போராட்டத்திலிருந்து விலகின.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த சில தலைவர்களோடு லீ பேசினார் (பேச்சா? மிரட்டலா?) அரசியலிலிருந்து விலகிவிட்டால், அவர்களுக்கு விடுதலை. சில தலைவர்கள் இதற்குச் சம்மதித்தார்கள். அரசியல் சந்நியாசம் வாங்கிக்கொண்டார்கள். ஞானோதயம் பெற்ற சில தலைவர்கள் தந்த வாக்குமூல அறிக்கைகள் – ‘கம்யூனிச நடவடிக்கைகள் பிறர் வாழ்க்கையை எப்படிக் கெடுத்துவிட்டது என்று என் அனுபவங்கள் கற்றுத் தந்துவிட்டன.’ இனிமேல் நான் கம்யூனிச எதிரி.’
கம்யூனிசத் தீயை லீ இப்படி அணைத்துக்கொண்டிருந்தபோது, பங்காளியே பெரும் நெருப்பு வைக்கத் தொடங்கினான். துங்குவால் தன் கட்சியின் தேர்தல் தோல்வியை ஜீரணிக்கவே முடியவில்லை. PAP – க்கு வாக்களித்த மலாய்கள் துரோகிகள் என்று காட்டமாக வார்த்தைகளைக் கொட்டினார். இந்தப் பேச்சு அரசியல் நாகரிகமல்ல, சீனர்கள், இந்தியர்கள் ஆகியோருக்கு எதிராக மலாய்களைத் தூண்டிவிடும் இனவெறிப் பேச்சு என்று லீ நினைத்த போதிலும், இது தற்காலிகமானது, காலம் துங்குவின் தோல்விக் காயங்களைக் குணப்படுத்திவிடும் என்று நம்பினார்.
அதே சமயம் துங்குவின் பயங்களைப் போக்கினார். தான் என்றைக்குமே மலாய்கள் நாட்டை ஆள்வதற்குப் போட்டியல்ல என்று தெளிவாக்கினார். ‘நம் நாட்டில் 43 சதவிகிதம் மலாய் இனத்தவர்கள், 41 சதவிகிதம் சீனர்கள், 10 சதவிகிதம் இந்தியர்கள், 6 சதவிகிதம் பிறர். ஆகவே, அடுத்த இருபது ஆண்டுகளுக்கு மலேஷியாவின் பிரதமர் மலாய் இனத்தவராக மட்டுமே இருக்கமுடியும் என்று எங்களுக்குத் தெரியும். கோலாலம்பூரின் ஆட்சியைப் பிடிக்கும் போட்டியில் நாங்கள் இல்லை. மலேஷியாவின் வளர்ச்சிக்கு எங்கள் உழைப்பையும், ஒத்துழைப்பையும் தர விரும்புகிறோம்.’ ஆனால், துங்குவும், உம்னோ கட்சியும், PAP – யையும், லீயையும்தான் தங்கள் முதல் எதிரியாக நினைத்தார்கள், நடத்தினார்கள்.

ஆனால், ஒரு பொது எதிரி, இருவருக்குள்ளும் தற்காலிகச் சமரசம் கொண்டுவந்தார். அவர், இந்தோனேஷிய ஜனாதிபதி சுகர்னோ. ப்ரூனோ, வடக்கு போர்னியோ பகுதிகளில் இணைப்பு பற்றி நடந்த வாக்கெடுப்புகளில் ஏராளமான திலுமுல்லுகள், மறுபடி வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று போர் முரசம் கொட்டினார். துங்கு மறுத்தார். இந்தோனேஷியா சிங்கப்பூரில் வன்முறையைத் தொடங்கியது. ஒரு குடியிருப்புப் பகுதியில், குண்டு வெடித்தது. இருவர் பலி. சிங்கப்பூரின் மின்நிலையங்கள், குடிநீர் வசதிகள் ஆகியவற்றைத் தகர்த்து நாட்டை ஸ்தம்பிக்கவைக்க இந்தோனேஷியா போட்டிருந்த சதிகள் அம்பலமாயின. சிங்கப்பூரும், மலேஷியாவும் தங்கள் பாதுகாப்பை இரும்புக் கோட்டைகளாக்கினார்கள்.
இந்தோனேஷியாவின் சதியை முறியடித்தால் மட்டும் போதாது, உலக அரங்கிலும் அவர்கள் முகமூடியைக் கிழித்து, மலேஷியாவுக்கு ஆதரவு தேட வேண்டும் என்று லீ நினைத்தார். துங்கு சம்மதத்தோடு. ஆப்பிரிக்க நாடுகள் பயணம் தொடங்கினார். எகிப்து, துனீஷியா, மொராக்கோ, அல்ஜீரியா, மாலி, லைபீரியா, கென்யா, ஐவரி கோஸ்ட், கனா, நைஜீரியா, ஜாம்பியா, மலாவி, மடகாஸ்க்கர், டன்சானியா, உகண்டா, இத்தோப்பியா. எல்லா நாடுகளிலும், தன் அணுகுமுறையால், சாதுரியப் பேச்சால் லீ மலேஷியாவுக்கு ஆதரவு பெற்றுவிட்டார். இதோ எழுகிறார் ஒரு இளம் சூரியன் என்று உலகம் லீயைக் கவனிக்கத் தொடங்கியது. அதே சமயம், அத்தனை ஆப்பிரிக்க நாடுகளின் சாதனைகளும், பிரச்சனைகளும், லீ விரல் நுனிகளில்.

மலேஷியா திரும்பும் முன், லீ பயணத்தின் கடைசி நிறுத்தம் இந்தியா. நேருஜியைச் சந்தித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் சந்தித்த நேருஜியா இவர்? 1962 – ல் நடந்த சீனப் போர் அவர் நெஞ்சத்தைச் சுக்கல் நூறாக்கிவிட்டிருந்தது. நம்பிக்கைத் துரோகம் ஒரு மாபெரும் தலைவரை எப்படிச் சிதைத்துவிடும் என்று லீ அதிர்ச்சியோடு உணர்ந்தார்.
லீ தில்லியிலிருந்து சிங்கப்பூர் போகவில்லை: கோலாலம்பூர் போனார். துங்குவைச் சந்தித்துப் பயண விவரங்களை நேரடியாகச் சொல்லிவிட்டு ஊர் போகும் திட்டம். அப்போதுதானே அவரைச் சந்தோஷப்படுத்த முடியும்? யுக்தி பலித்தது. அடங்கியிருக்கும் பிள்ளையைப் பார்த்துத் துங்கு அகமகிழ்ந்தார். மலேஷிய ஊடகங்கள் இந்தோனேஷியாவுக்கு எதிராக மலேஷியாவுக்கு ஆதரவு வளர்த்த லீயின் திறமையை வானளாவப் புகழ்ந்தன. லீ இரண்டு மாங்காய்களை ஒரே கல்லால் வீழ்த்திவிட்டார்.
மலேஷியாவில் பொதுத்தேர்தல்கள் 1964 ஏப்ரலில் நடக்கப்போவதாக அரசாங்க அறிவிப்பு வந்தது. PAP கட்சி தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிடத் தீர்மானித்தது. லீ சூறாவளிப் பிரச்சாரம் செய்தார். சமூகப் புரட்சி ஏற்படுத்தி, மலேஷியாவுக்கு முன்னேற்றம் காண்பதுதான் தங்கள் கட்சியின் கொள்கை என்று தெளிவாக்கினார். துங்குவின் வழிகாட்டலில், உம்னோ கட்சி லீ மீது தனிமனிதத் தாக்குதல் நடத்தியது. கட்சியின் பொதுச் செயலாளர் சையத் ஜாஃபர் அல்பார் (Syed Jaafar Albar), ‘லீ கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவரல்ல. லீ போன்றவர்களுக்கு மலேஷியாவில் இடம் கிடையாது’ என்னும் கருத்தை மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்தார்.
வாக்குகள் எண்ணப்பட்டன. துங்குவின் கூட்டணி மொத்த 104 இடங்களில் 89 இடங்களைப் பிடித்தது. PAP கட்சி ஜெயித்த தொகுதி ஒன்றே ஒன்றுதான். மற்ற 8 இடங்களில் மாபெரும் தோல்வி.
தன்மீது சுமத்தப்பட்ட பழிகளையும், தேர்தல் தோல்வியையும், அரசியல் விளையாட்டின் அத்தியாவசிய அம்சங்களாக லீ எடுத்துக்கொண்டார். காழ்ப்புணர்ச்சி இல்லாமல், தன்னைப் பழித்தவர்களோடும் நட்போடு பழகினார். ஆனால், பல சின்னச் சின்ன சம்பவங்கள், மலாய் இனவெறி அவர்கள் அடிமனங்களில் நீறுபூத்த நெருப்பாக இருப்பதை அவருக்கு நினைவுபடுத்தி வந்தன.
சீனர்களோடும், இந்தியர்களோடும், திறமையிலும், கடும் உழைப்பிலும் தாங்கள் போட்டி போடமுடியாது என்று மலாய்களுக்குத் தெரியும். இந்தப் பாதுகாப்பின்மையால் பயம் வந்தது. பிற இனத்தவரை முன்னேறாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்கள். சீன மொழிப் பள்ளிகளுக்கு ஏராள இடையூறுகள் போட்டார்கள். ஆங்கிலத்தின் இடத்தில் மலாய் மொழி வந்தது. இதனால், அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள். இதுவரை, தங்கள் ஆங்கில அறிவால், பெரும்பாலான இந்தியர்கள் ரெயில்வே போன்ற அரசு அலுவலகங்களில் பணிகள் பெற்றார்கள். மலாய் மொழித் திணிப்பு, இந்த வாய்ப்புக் கதவுகளை மூடியது.
அலுவலங்களில் மட்டுமல்ல, அடிமட்ட வேலைகளிலும், மலாய் இனவெறி தலைவிரித்து ஆட ஆரம்பித்தது. பெரும்பாலான ரப்பர் தோட்டங்கள் பிரிட்டீஷ் முதலாளிகளிடம் இருந்தன. இவற்றின் தொழிலாளிகள் ஏழைத் தமிழர்கள். ஆங்கில ஆட்சி அகன்றவுடன், ரப்பர் தோட்டங்கள் மலாயர் வசமாயின. அவர்கள் செய்த முதல் வேலை, தமிழர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். அந்த இடங்களில் மலாய்த் தொழிலாளிகள்.
லீ பிறப்பால் சீனர். ஆனால், உணர்வால் சிங்கப்பூரியர். மலேஷியாவில், சீனர்கள், இந்தியர்கள், மலாய்கள் ஆகிய மூன்று இனத்தவருக்கும் சம உரிமை உண்டு, ஒருவர்க்கொருவர் உயர்வு தாழ்வு கிடையாது என்னும் சமத்துவப் போக்குக் கொண்டவர். மலாய் இன ஆதிக்கமும், இதற்குத் துங்கு துணை போவதும் லீ ரத்தத்தைக் கொதிக்கவைத்தன.
மலாய் ஆதிக்க ஆசைகளுக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பும் முதுகெலும்பு லீக்கு மட்டுமே இருந்தது. மக்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டிருந்த அவர் பிம்பத்தைக் குலைக்கவேண்டும். இதற்காகத் துங்கு ஆசியுடன் அல்பார் என்னும் உம்னோ கட்சித் தலைவர் முன் நிறுத்தப்பட்டார். அல்பார் அற்புதப் பேச்சாளர். ஆயிரமாயிரம் மக்களின் இனவெறியை ஐந்தே நிமிடங்களில் கொழுந்துவிட்டு எரியவைக்க அவரால் முடியும். லீ துங்குவை மதிப்பதில்லை, லீ சிங்கப்பூரில் மலாய்கள்களுக்கு வாய்ப்புக்கள் தர மறுக்கிறார். ஆகவே, அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள் என்று சரமாரியாகக் குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். லீ அரசு மலாய்களுக்கும், இஸ்லாம் மதத்துக்கும் எதிரான அரசு. எனவே, போர்க்கொடி தூக்குங்கள் என்று சிங்கப்பூர் மலாய்களைத் தூண்டினார்.
அவருடைய ஒரு பேச்சு: ‘சிங்கப்பூர் மலாய்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். நம் இனத்தின் வருங்காலத்துக்காகச் சேர்ந்து வாழ்வோம், சேர்ந்து மடிவோம். உலகின் எந்த சக்தியும் நம்மை அடிபணியவைக்கவோ, அவமானப்படுத்தவோ முடியாது. ஒரு லீ குவான் யூ அல்ல, ஓராயிரம் லீ குவான் யூக்கள் வந்தாலும், நாம் அனைவரையும் ஒழித்துக் கட்டுவோம்.' (கூட்டத்தில் ஆரவாரக் கை தட்டல்கள், கொல்லுவோம், கொல்லுவோம், லீ குவான் யூவைக் கொல்லுவோம் என்னும் வெறிக்குரல்கள்.) இந்தக் கூட்டத்தை மலேஷியத் தொலைக்காட்சி பலமுறை ஒளிபரப்பியது. உணர்ச்சிகள் தூண்டப்பட்ட மலாய்கள் காவல் நிலையங்களைத் தாக்கினார்கள். பல இடங்களில் மலாய்களுக்கும், சீனர்களுக்குமிடையே ரத்தக்களரியான மோதல்கள்.
கலவரம் பரவாமல் தடுக்க லீ கடுமையான நடவடிக்கைகள் எடுத்தார். அதே சமயம், அவர் அணுகுமுறை இரும்புக்கரம் அல்ல, குறைகள் தீர்க்கும் அன்புக் கரம். அனைத்து மலாய்க் கட்சிகளையும் கூட்டுப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்து, லீ முகத்தில் கரி பூசுமாறு உம்னோ கட்சி வேண்டுகோள் (எச்சரிக்கை?) விடுத்தது. மலாய் மக்கள் உம்னோ கட்சித் தலைவர்கள் மூஞ்சிகளில் அட்டைக்கரி பூசினார்கள். 900 பிரதிநிதிகள் கூட்டத்துக்கு வந்தார்கள். ஐந்து மணிநேரக் கருத்துப் பரிமாற்றம். தன் அரசு எல்லா இனத்தவரையும் சமமாக நடத்துவதைப் புள்ளிவிவரங்களுடன் லீ தெளிவாக்கினார். கல்வி, வேலை வாய்ப்புக்கள், வீட்டு வசதிகள் போன்ற சில குறிப்பிட்ட அம்சங்களில் மலாய்களுக்கு இருந்த குறைகளை நிவர்த்தி செய்யும் திருத்தங்கள் போர்க்கால அடிப்படையில் தொடங்கும் என உறுதிமொழி தந்தார். சுமுகமாக, பரஸ்பர நம்பிக்கையோடு இரு தரப்பாரும் பிரிந்தார்கள்.
மலேஷியச் செய்தித்தாள்கள், பத்திரிகைகள், தொலைகாட்சி ஆகிய அத்தனை ஊடகங்களும் வெற்றிகரமாக நடந்து முடிந்த பேச்சு வார்த்தைகளை முழு இருட்டடிப்புச் செய்தன. லீக்கு அதிர்ச்சி. தன் மாநிலங்கள் ஒன்றின் பிரச்சனையில் தனக்குத் துணை நிற்கவேண்டிய மத்திய அரசு, சிங்கப்பூரையும், தன்னையும் எதிரியாக நடத்துகிறது.
ஜூலை 21, 1964. முகமது நபி பிறந்த நாள். மலேஷியர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். பொது இடத்தில் கூடுவார்கள். இசை, நடனம், குர்ஆன் பாராயணம் ஆகியவற்றோடு ஊர்வலம் போவார்கள். இதைப் பயன்படுத்திச் சில விஷமிகள் நாசவேலைகளில் இறங்கலாம் என்று உளவுத்துறை லீயை எச்சரித்தது.
இது நடந்தது. முந்தைய நாள். ஜூலை 20. ஒரு நாளிதழில் கொட்டை எழுத்துச் செய்தி – ஆசிரியர் மாணவனைக கட்டாயப்படுத்தி, பன்றி இறைச்சி சாப்பிடவைத்தார்.
மாலை மணி 5. 25,000 பேர் கொண்ட முஸ்லிம்கள் ஊர்வலம் புறப்பட்டது. சீனர்கள் வாழும் பகுதியைக் கடக்கும்போது, யார் தொடங்கிவைத்தார்கள் என்று தெரியவில்லை. அடிதடி தொடங்கியது. போலீசாரால் அடக்க முடியவில்லை. கலவரமும், அதைவிட வேகமாக வதந்திகளும் காட்டுத் தீயாகப் பரவின. மலாய்கள் சீனர்களைக் கொன்றார்கள்: சீனர்கள் மலாய்களைக் கொன்றார்கள். இரு தரப்பிலும் எக்கச்சக்கச் சேதம். நாள் முடிவில் 23 பேர் மரணம், 454 பேர் படுகாயம். கலவரங்கள் 14 நாட்கள் நீடித்தன. ஆகஸ்ட் 2 அன்றுதான் ஓரளவு அமைதி திரும்பியது.
இந்தோனேஷியா, அலிபார் இருவரும் எரியும் தீயில் எண்ணெய் வார்த்தார்கள். ‘லீதான் கலவரங்களுக்குக் காரணம்’ என்று இந்தோனேஷிய ஊடகங்கள் ஓலமிட்டன. அலிபார் இன்னும் பல படிகள் மேலே போனார், ‘சிங்கப்பூரில் ஒரு பிசாசு இருக்கிறது. அது மலாய்களையும், சீனர்களையும் ஒருவருக்கு ஒருவர் எதிராகத் தூண்டிவிடுகிறது. பிரிட்டீஷ், ஜப்பானிய ஆட்சிகளில் இத்தகைய சம்பவங்கள் ஏன் நடக்கவில்லை? ஏன் தெரியுமா? லீ குவான் யூ மலேஷியத் தேசிய உணர்வைக் குலைக்க முயற்சி செய்கிறார். உங்கள் சுதந்திரம் வெள்ளித்தட்டில் கிடைத்தது என்று நம்மைக் கேலி செய்கிறார். துங்கு அப்துல் ரஹ்மான் திறமை இல்லாதவர் என்று சொல்கிறார்.’

காமன்வெல்த் பிரதமர்கள் கூட்டத்துக்காக வெளிநாடு போயிருந்த துங்கு, கலவரங்கள் பற்றித் தன் அதிர்ச்சியைத் தெரிவித்தார். துங்குவின் பயண காலத்தில் தற்காலிகப் பிரதமர் பொறுப்பேற்றிருந்த ரஸாக் சிங்கப்பூர் வந்தார். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது, ஆனால் ஊரடங்குச் சட்டம் தொடரும் என்று லீயோடு சேர்ந்து அறிவித்தார்.
லீ பிரச்சனைப் பகுதிகள் அத்தனைக்கும் போனார். பொதுமக்களோடு பேசினார். இனச் சண்டைகளைத் தன் அரசு இரும்புக் கரங்களோடு கையாளும், அவற்றுக்கு முடிவு கட்டும் என்று உறுதிமொழி தந்தார். மலேஷியாவின் குழி பறிக்கும் வேலைகளை மெளனசாமியாக ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை. சூடாக வந்தது அரசு அறிக்கை. ‘செல்வாக்குப் படைத்த அரசியல் தலைவர்களும், செய்தித்தாள்களும் பல மாதங்களாக, அரசியல், இனவெறிப் பிரச்சாரம் நடத்திவருகிறார்கள். இவர்களில் பலர் மத்திய அரசோடும், மத்திய ஆளும் கட்சியோடும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்.’ இனவெறியைத் தூண்டிய ஒருவரைக்கூடக் கைது செய்யாமலும், ஏன் கண்டிக்காமலும் இருப்பதன் மர்மம் இந்தத் தொடர்புதான் என்று அச்சமில்லாமல் போட்டு உடைத்தார். விசாரணைக் கமிஷன் அமைக்கவேண்டும் என்னும் சிங்கப்பூர் அரசின் வேண்டுகோளை மத்திய அரசு ஒதுக்கித்தள்ளியது.
இந்த உரசல்கள் எங்குபோய் முடியுமோ?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராஜா ராணி போல் உருவாகும் ஆர்யா - 40!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மனைவியுடன் வந்து வாக்களிப்பு!
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அதிகாரிகள் நினைக்கிறார்கள்; அது நடக்காது!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

