நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

13. ஸ்வீட் எடு, கொண்டாடு! - 4

டயாபட்டிஸ் எனப்படும் சர்க்கரை நோய் ஏற்பட்டுவிட்டால், அதையொட்டிய சிக்கல்களாக பசியின்மை, அசதி, மயக்கம், ரத்த நாளங்கள் சேதமடைதல், ரத்த ஓட்டம் தடைபடுதல், புண்கள் ஏற்படுதல், கண் பார்வை பாதிக்கப்படுதல், மாரடைப்பு வருதல் போன்றவை ஏற்படலாம். ஏன், திடீர் மரணம்கூட வரலாம் என்று சொல்லப்படுகிறது.

News image
Updated On :9 ஜூன் 2016, 6:25 am

நாகூர் ரூமி

‘சிறுநீரில் க்ளூக்கோஸ் இருப்பதன் காரணமாக சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்துவிட்டது என்று கூறுவது ஆங்கில மருத்துவத்தின் அறியாமையாகும்’

- டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான், MBBS, DV, MRSH, MD, PhD (Acu).

டயாபட்டிஸ் எனப்படும் சர்க்கரை நோய் பற்றிய பொய்களையும், அதுபற்றி ஆங்கில மருத்துவம் என்ன சொல்கிறது, அம்மருத்துவத்தை ஏற்றுக்கொண்டு செயல்படும் சில சிந்திக்கத் தெரிந்தவர்களும் அதை நம்பி எந்த அளவுக்கு தம் வாழ்முறையை மாற்றிக்கொள்கிறார்கள், அதனால் எப்படி மேலும் மேலும் சிக்கல்கள் உருவாகின்றன என்றெல்லாம் இதுவரை பார்த்தோம். இனி, சர்க்கரை நோய் பற்றிய உண்மைகளைப் பார்க்கலாம்.

இதுவரை, சர்க்கரை நோய் பற்றி அலோபதி சொன்ன வரையறைகளை மறந்துவிடலாம். சர்க்கரை நோய் பற்றி மனத்தில் எவ்வித கசப்பான கருத்துகளும் இல்லாமல், புதிதாக, குளித்துவிட்டு வந்தமாதிரி ‘ஃப்ரெஷ்’ ஆக, இந்த நோய் பற்றிப் பார்க்க இருக்கிறோம், எவ்வித அச்சமும் இன்றி.

ஏனெனில், அச்சம்தான் எல்லாக் கேடுகளுக்கும் தாய் என்பதை நாம் இதுவரை தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். இனியாவது திறந்த மனத்துடன் நான் சொல்ல வருவதை கவனமாகக் கேட்டு அதுபற்றி சிந்தியுங்கள், ஆராயுங்கள், நான் சொல்வதெல்லாம் உண்மையா என்று கண்டுபிடியுங்கள். அதன்பிறகு, நீங்கள் கண்டுகொண்ட உண்மைகளுக்குத் தக்கபடி செயலாற்றுங்கள்.

டயாபட்டிஸ் என்ற பிரச்னை எப்படி உருவாகிறது?

டயாபட்டிஸ் எனப்படும் சர்க்கரை நோய் ஏற்பட்டுவிட்டால், அதையொட்டிய சிக்கல்களாக பசியின்மை, அசதி, மயக்கம், ரத்த நாளங்கள் சேதமடைதல், ரத்த ஓட்டம் தடைபடுதல், புண்கள் ஏற்படுதல், கண் பார்வை பாதிக்கப்படுதல், மாரடைப்பு வருதல் போன்றவை ஏற்படலாம். ஏன், திடீர் மரணம்கூட வரலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம், உண்மையில் டயாபட்டிஸ் அல்ல. ஆங்கில மருத்துவத்தின் சிபாரிசின் பேரில், டயாபட்டிஸுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்து மாத்திரைகள் மற்றும் இன்சுலின் போன்ற ஊசிகள்தான் காரணம்!

அதிர்ச்சியூட்டினாலும் உண்மை இதுதான். டயாபட்டிஸ் என்று கண்டுபிடிக்கப்படும் அலோபதியின் டயக்னோசிஸும் அதன்பிறகு கட்டாயமாக்கப்படும் மருந்து மாத்திரைகளும், உணவுக் கட்டுப்பாடுகளும்தான், எல்லா சனியன்களையும் ஒட்டுமொத்தமாக ஊர்வலமாக நம் உடலுக்குள் அழைத்து வருகின்றன!

ஒருவருக்கு டயாபட்டிஸ் வந்துவிட்டால் எல்லா நோய்களும் வந்துவிடும் என்பது உண்மையானால், டயாபட்டிஸ் போய்விட்டால் எல்லா நோய்களும் போய்விடுமல்லவா என்று கேட்கிறார் ஹீலர் பாஸ்கர். அப்படியானால், வந்துவிட்ட சர்க்கரை நோயைப் போக்குவது எப்படி? சர்க்கரை நோயே வராமல் பாதுகாத்துக்கொள்வது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமெனில், உண்மையில் சர்க்கரை நோய் எப்படி உருவாகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

நாம் சாப்பிடும் முறை தவறாக இருக்குமானால், சாப்பிட்ட உணவு முறையாக ஜீரணம் ஆகாமல், இறுதியில் உருவாகும் தரம் குறைந்த க்ளுக்கோஸ், உயிரணுக்களுக்குள் செல்ல முடியாமல் ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். இதுவே சர்க்கரை நோய் என்று அறியப்படுகிறது என்கிறார் ஹீலர் பாஸ்கர். அதாவது, சர்க்கரை நோய் உருவாக அவர் சொல்லும் காரணம், முறைப்படி உண்ணாததால் உண்டாகும் ஜீரணக் கோளாறு; அதன் விளைவான தரம் குறைந்த க்ளுக்கோஸ்.

நம்முடைய ஜீரண உறுப்புகளான வயிறு, மண்ணீரல், கல்லீரல், பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகிய உறுப்புகளிலும் அவற்றின் இயக்கத்திலும் பாதிப்பு ஏற்படுவதால் சர்க்கரை நோய் உருவாகிறது என்கிறார் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான்.

இரண்டு பேருமே, ஒரே உண்மையைத்தான் அவரவர் பாணியில் கூறுகின்றனர், கொஞ்சம் வித்தியாசமாக. டாக்டர் ஃபசுலுர் ரஹ்மானின் பள்ளியில் உருவானவர்கள்தான் ஹீலர்கள் என்பவர்கள். ஹீலர் பாஸ்கர், ஹீலர் உமர் ஃபாரூக் போன்றவர்கள் அப்படி உருவானவர்கள்தான்.

Story image

ஹீலர் உமர் ஃபாரூக்

நாம் சாப்பிடும் முறையே சரியில்லை என்றால் ஜீரணம் எப்படி ஒழுங்காக இருக்கும்? எனவே, சர்க்கரை நோயை நம் தவறான வாழ்முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும்தான் உருவாக்குகின்றன என்று சொல்லலாம். அதன்விளைவாக, நம்முடைய ஜீரண உறுப்புகள் பாதிப்படையலாம். எனவே, இரண்டு பேர் சொல்வதும் ஒன்றுதான். ஹீலர் பாஸ்கர் சொல்வதை நோயின் ஆரம்பகட்ட நிலையாகவும், டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் சொல்வதை தீவிர நிலை, அல்லது அடுத்தடுத்த நிலையென்றும் புரிந்துகொள்ளலாம்.

பொதுவாக, டயாபட்டிஸ் வந்துவிட்டது என்று ஆங்கில மருத்துவம் எப்படிக் கண்டுபிடிக்கிறது? சிறுநீர்ப் பரிசோதனை மூலமாக. சிறுநீரில் க்ளுக்கோஸ் எனப்படும் சர்க்கரை இருப்பதைக் கண்டுபிடித்து, அதன்காரணமாக ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது என்று கூறுகிறது அலோபதி.

இப்படியாக, ஒருவருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது என்று அலோபதி கூறுமானால், தன் சிறுநீரகங்களுக்கு அந்த மனிதர் நன்றி சொல்ல வேண்டும்! ஏனெனில், உடலில் இருந்து வெளியேறும் எல்லாமே உடலுக்குத் தேவைப்படாத கழிவுதான். சிறுநீர், மலம், வியர்வை, வாந்தி, பேதி, சீழ், பொடுகு, அழுக்கு என எது வெளியேறினாலும், எல்லாமே வெளியேற வேண்டிய கழிவுகளாகும். கழிவுகள் உடம்புக்குள்ளேயே தங்கி இருந்தாலோ, தேங்கி இருந்தாலோதான் பிரச்னை. அப்படியானால், வெளியேறிய க்ளுக்கோஸும் கழிவுதான்.

ஒரு கழிவு வெளியேறுவது நோயா அல்லது உடம்புக்குள்ளேயே தங்கி இருப்பது நோயா? சிறுநீரில் சர்க்கரை இருக்குமானால், நோய் வெளியாகிவிட்டது அல்லது வெளியாகிக்கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டுமா அல்லது நோய் வந்துவிட்டது என்று சொல்ல வேண்டுமா? ஒரு பயங்கரமான நோய் வந்துவிட்டது என்று சொல்கிறது ஆங்கில மருத்துவம்! வெளியேறும் கழிவை நோயாக நினைத்து அதற்கு வைத்தியம் செய்வதால்தான் எல்லாப் பிரச்னைகளும் உருவாகின்றன.

சரி, அப்படியானால் சிறுநீர் வழியாக ஏன் சர்க்கரை வெளியேறியது? இதைப் புரிந்துகொள்ள, நம் வயிற்றுக்குள் என்ன நடக்கிறது என்று கொஞ்சம் பார்க்கவேண்டி உள்ளது. எனவே, உடலுக்குள் ஒரு உள்நோக்கிய பயணம் போகலாமா? வாருங்கள்.

என்ன நடக்கிறது?

காலையில் டிவி பார்த்துக்கொண்டே மூன்று இட்லிகளை விழுங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். முக்கியமான செய்தி. எலக்ஷன் ரிசல்ட். நாம் எதிர்பார்த்த கட்சி படுதோல்வியடைந்து, டெபாசிட் கிடைக்காமல் நம் நட்சத்திர வேட்பாளர் தோற்றுவிடுகிறார் என்று செய்தி சொல்கிறது. அல்லது இன்னும் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் விளையாடிய அணியின் கேப்டன், நம் ஆதர்ஷ நாயகன், மட்டையை சுழற்றி வீசுகிறான். ஆனால், எதிரணியில் இருக்கும் ஒரு சாதாரண விளையாட்டு வீரர் கபாலென்று ‘கேட்ச்’ பிடித்து நம் நாயகனை ‘அவுட்’ ஆக்கி அவர் நாயகனாகிவிடுகிறார்!

‘அடச்சே, எல்லாம் போச்சுடா’ என்று வாயைப்பிளந்து அங்கலாய்த்தபடி இட்லியை விழுங்குகிறோம். ம்ஹும், நாம் விழுங்கவில்லை. பழக்கதோஷத்தின் காரணமாக வாய்க்குள் போட்ட துண்டு, அதுவாகவே விழுங்கப்படுகிறது. எதிரில் அமர்ந்துகொண்டிருக்கும் சகோதரனிடமோ, நண்பனிடமோ கட்சியின் அல்லது அணியின் தோல்வி பற்றி இட்லியை விழுங்கிக்கொண்டே அங்கலாய்க்கிறோம்.

இப்படியாகத்தான் நாம் சாப்பிடுகிறோம் என்றால், உள்ளே சென்ற உணவு என்னாகும் என்ற கேள்விக்குப் பதில்தான் டயாபட்டிஸ்! எப்படி என்கிறீர்களா? சொல்லத்தானே போகிறேன்.

உணவு முறையாகச் செரிக்க வேண்டும் என்றால், அது முதலில் வாயில் செரிக்கப்பட வேண்டும் என்கிறார் ஹீலர் பாஸ்கர். உணவை வாயில் போட்டுவிட்டால், வாயைத் திறக்கக்கூடாது. உணவை மென்றுகொண்டே இருக்க வேண்டும். அது கூழாகி, உமிழ் நீருடன் உறவாடிக் கலந்து, கரைந்து வயிற்றுக்குப் போக வேண்டும். வாயைத் திறந்துகொண்டும், பேசிக்கொண்டும் சாப்பிட்டால் என்னாகும்?

Story image

ஹீலர் பாஸ்கர்

வாயைத் திறந்தால் வாய்க்குள் காற்று புகும். காற்று புகுந்தால், சுரக்க வேண்டிய உமிழ் நீர் சரியான அளவில் சுரக்காது. எனவே, வாய்க்குள் உணவு சரியாக அரைக்கப்படாது. அதாவது, முதல் செரிமானம் முறையாக நடைபெறாது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? அது, சாப்பாட்டு விஷயத்தில்தான் ரொம்பச் சரி போலும்! வாயிலேயே முறையாக உண்ணப்படாத உணவு, வயிற்றிலும் முறையாகச் செரிக்கப்படாது.

நீங்கள் சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா? இந்தப் பழக்கமும் முறையற்ற ஜீரணத்துக்கு வழி வகுக்கும், எப்படி? வயிற்றில் உணவுப்பொருள்களைப் பிரித்து, உடைத்து, கரைத்து, கூழாக்கிச் செரிக்க உதவுவது ஹைட்ரோகுளோரிக் ஆஸிட் என்று சொல்லப்படும் அமிலமாகும். நீங்கள் சாப்பிடும்போது தண்ணீரை குடித்துக்கொண்டே இருந்தால், அந்த அமிலம் நீர்த்துப்போய், அதன் வீரியம் குறையும். அதனால் வயிற்றுக்குள்ளும் ஜீரணம் முறையாக நடக்காது.

ஹீலர் பாஸ்கர் சொல்வதை உறுதிப்படுத்தும் வகையில், டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் இப்படிச் சொல்கிறார் -

நாம் உணவு உட்கொள்ளும் முறைகளில் உள்ள கோளாறுகளின் காரணமாக, அல்லது மன உளைச்சல்களின் காரணமாக, அல்லது போதுமான இளைப்பாறுதலின்மையின் காரணமாக, அல்லது சமையலில் சேர்க்கப்படும் பொருள்களின் காரணமாக அஜீரணம் ஏற்படுகிறது (BP, டயாபட்டிஸ் நோயாளிகளே, உங்கள் நலனுக்காக, பக்கம் 95).

சரி, இதனால் என்னாகும்?

இட்லி, தோசை, இடியாப்பம், உப்புமா, சப்பாத்தி, பரோட்டா, பிரெட், பர்கர், பீட்ஸா, ஆம்பூர் பிரியாணி, தயிர் சாதம், நெய் சோறு, நாகூர் அஞ்சு கறி சோறு, புனே மட்டன் ராரா, பேர்ணாம்பட்டு பீஃப் பிரியாணி, சிக்கன், கே.எஃப்.சி. உணவு வகைகள், சுத்த சைவ உணவு – இப்படி நீங்கள் சாப்பிடும் உணவு எப்படிப்பட்டதாக இருந்தாலும், உண்டபின் அது செரித்து, அதன் உயிர்ச்சத்துகளெல்லாம் உடலால் உறிஞ்சப்பட்டு, கடைசியில் எல்லாம் க்ளுக்கோஸ் என்னும் சர்க்கரைப் பொருளாக மாற்றப்படும். இந்த க்ளுக்கோஸ்தான் நம் உடலில் இருக்கும் கோடிக்கணக்கான ‘செல்’களால் பயன்படுத்தப்படுகிறது.

இந்த க்ளுக்கோஸ் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். நாம் பேசிக்கொண்டும், மனத்தை வேறு எதிலாவது வைத்துக்கொண்டும், நமக்குப் பிடித்த நடிகையின் ‘வளைவு’களைப் பார்த்துக்கொண்டும், கிரிக்கெட் தோல்விக்காக உச்சுக்கொட்டிக்கொண்டும், கட்சியின் தோல்விக்காக மனம் வருந்திக்கொண்டும், கடன்காரன் வந்து கேட்பானே என்று கவலைப்பட்டுக்கொண்டும் – இப்படி ஏகப்பட்ட ‘டும், டும்’களை மனத்தில் போட்டுக்கொண்டு சாப்பிடுவோமானால், அவசர அவசரமாக சாப்பிடுவோமானால், கவலையுடன் சாப்பிடுவோமானால், டென்ஷனுடன் சாப்பிடுவோமானால், மனத்தில் ஒரு துக்கத்தை வைத்துக்கொண்டு சாப்பிடுவோமானால்… சுருக்கமாகச் சொன்னால், சாப்பிடும்போது சாப்பாட்டைத் தவிர வேறு எதிலாவது நம் சிந்தனை இருக்குமானால், அந்த உணவு சரியாகச் செரிக்கப்படாமல்தான் போகும். சரியாகச் செரிக்கப்படாமல் போன உணவின் மூலம் கிடைக்கும் க்ளுக்கோஸ் தரம் குறைந்த க்ளுக்கோஸாகத்தான் இருக்கும்.

சரி, அதனால் என்ன? இந்த க்ளுக்கோஸ்தான் ரத்தத்தில் கலந்து பின்னர் ரத்தத்தில் இருந்து உயிரணுக்களுக்குள் செல்ல வேண்டும். ஆனால், உயிரணுக்களுக்குள் க்ளுக்கோஸ் செல்ல வேண்டுமெனில், அந்த க்ளுக்கோஸுக்கு இன்சுலின் வேண்டும் என்று ஏற்கெனவே கொஞ்சம் பார்த்தோம். இன்சுலின் இல்லாத க்ளுக்கோஸை உடல் நிராகரித்துவிடும். இதுபற்றி டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் இப்படிக் குறிப்பிடுகிறார் -

‘‘நாம் உணவு உட்கொண்டபின், நமக்குத் தேவையான க்ளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கிறது. இந்த க்ளுக்கோஸின் தரம் திருப்திகரமாக இருப்பின், பான்க்ரியாஸ் (கணையம்) இயற்கையாகவே நன்கு பரிசீலனை செய்த பிறகு, அந்த க்ளுக்கோஸ் உடலுக்குப் பொருத்தமானதாக அமைந்திருக்கும்பட்சத்தில், தன்னுடைய சுரப்பு நீரான இன்சுலினைச் சுரக்கிறது. இவ்வாறு சுரக்கப்பட்ட இன்சுலின், உடலில் எந்த எந்த உறுப்புகளில், பகுதிகளில், திசுக்களில், செல் அணுக்களில் க்ளுக்கோஸ் தேவைப்படுகிறதோ, அந்த அனைத்து இடங்களையும் முன்னதாக அடைந்து, அவற்றினுள் க்ளுக்கோஸ் செல்ல வழிவகுக்கிறது. பின்னர், க்ளுக்கோஸானது செல் அணுக்களில் எரிக்கப்பட்டு, இயக்க சக்தியானது வெளிப்படுத்தப்படுகிறது. இதுவே உடலின் ஆரோக்கியமான நிலை” என்கிறார் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் (மருந்துகளால் வரும் நோய்கள், பக்கம் 52).

Story image

ஃபசுலுர் ரஹ்மான்

க்ளுக்கோஸ் தரம் குறைந்ததாக இருக்குமானால், கணையம் அதைப் பரிசீலித்து நிராகரித்துவிடுகிறது. இன்சுலினையும் சுரப்பதில்லை. இன்சுலின் கிடைக்காமல், உயிரணுக்களுக்குள் செல்ல முடியாமல் அநாதைகளாகிவிட்ட க்ளுக்கோஸ்கள், ரத்தத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கும். இவை, உடலுக்குத் தேவையற்ற கழிவுகள். இவற்றை ‘கெட்ட சர்க்கரை’ என்றும், இன்சுலின் கொடுக்கப்பட்ட க்ளுக்கோஸை ‘நல்ல சர்க்கரை’ என்றும் எளிமையாக வகைப்படுத்துகிறார் ஹீலர் பாஸ்கர்.

எல்லா கெட்டவர்களும் கழிவுகள். நம் உடலுக்குத் தேவையற்றவர்கள். நம் உடலுக்குத் தீங்கு இழைப்பவர்கள். எனவே, அவர்களை நம் சிறுநீரகம் ரத்தத்திலிருந்து பிரித்தெடுத்து, கழிவாக சிறுநீர் வழியாக வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. நமது சிறுநீரகங்கள் (Kidneys) செய்யும் அந்த மகத்தான சேவைக்குத்தான் டயாபட்டிஸ் என்று பேர் வைத்திருக்கிறது ஆங்கில மருத்துவம்! டயாபட்டிஸ் எப்படி உருவாகிறது என்று இப்போது புரிகிறதா? இயற்கை நமக்கு செய்திருக்கும் நோய்த் தடுப்புச் சேவைக்கு நோய் என்று பெயர் வைத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து மீண்டும் அக்கழிவுகளை உடலுக்குள் திணிக்கும் வேலையைத்தான் ஆங்கில மருத்துவம் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதாக அடித்துக் கூறுகிறார் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான்.

நொறுங்கத் தின்பதா, நொறுக்கித் தின்பதா?

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுவதில், இன்னும் கொஞ்சம் தெளிவு நமக்குத் தேவைப்படுகிறது. மென்று உண்ண வேண்டும் என்றால், உணவை வாய்க்குள் போட்டு வாயை மூடிக்கொண்டு எத்தனை முறை மெல்ல வேண்டும் என்று ஒரு நண்பர் கேட்டார்.

அப்படியெல்லாம் கணக்கு ஒன்றும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், மெல்லுவது நம் வேலையல்ல. அது பற்களின் வேலை. அந்த வேலையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். குஷ்பு இட்லி மல்லிகைப் பூவாட்டம் இருந்தால், இரண்டு மூன்று முறை மென்றுவிட்டு வாய் அதை விழுங்கிக்கொள்ளும். ஆனால், எடுத்து அடித்தால் மண்டையை உடைத்துவிடலாம் என்ற அளவுக்கு இட்லி உறுதியாக இருக்குமானால் எத்தனை முறை மெல்ல வேண்டும் என்பதையும் பற்களே கணக்கு போட்டுக்கொள்ளும்! நாம் செய்ய வேண்டிய வேலையெல்லாம், சாப்பிடும்போது நம் கவனத்தை உணவின் மீது, சாப்பிடும் காரியத்தின் மீது வைக்க வேண்டியதுதான். சுருக்கமாகச் சொன்னால், சாப்பிடுவதை கவனமாக, ஒரு தியானம்போலச் செய்ய வேண்டும்.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது முதுமொழி. நொறுக்கித் தின்றால் நூறு வயது என்று முதுமொழி இல்லை. நொறுக்கித் தின்பது வேறு, நொறுங்கத் தின்பது வேறு! நொறுக்குவது நம் வேலை. நொறுங்குவது அதன் வேலை. அதன் வேலையை நாம் செய்யவேண்டியதில்லை. வாய்க்குள் போடுவது மட்டும்தான் நம் வேலை. மற்றதை வாய் பார்த்துக்கொள்ளும். நாம் அப்போது யார் வாயையும் பார்த்துக்கொண்டிருக்காமல், கவனத்தை உண்ணும் காரியத்தில் வைத்தால் போதும் என்கிறார் ஹீலர் உமர்!

உமர் சொல்வது மிகவும் முக்கியமானது. எதிலும் ஒரு தெளிவு வேண்டும். சரியாகச் சாப்பிடுகிறேன் என்று நினைத்துக்கொண்டு பற்களைச் சித்திரவதை செய்து பல்வலி, வாய்வலிகளை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. சுருக்கமாகச் சொன்னால், உடல் செய்ய வேண்டிய காரியத்தையெல்லாம் உடலிடமே விட்டுவிட வேண்டும். நாம் அதில் தலையிடக்கூடாது. கவனம் வைப்பதென்பது உடல் செய்யும் காரியமல்ல. அது நாமாகச் செய்ய வேண்டும். அதை மட்டும் நாம் செய்தால் போதுமானது. ஆனால், இங்கேதான் நம்மில் பெரும்பாலோர் கோட்டைவிட்டுவிடுகிறோம். உணவு வகைகள் உங்கள் உடலுக்கு ஏற்றதாகவும் சரியானதாகவும் இருந்தாலும், அதைக் கவனமில்லாமல் சாப்பிட்டீர்கள் என்றாலும் பிரச்னை வருவது நிச்சயம்.  

டயாபட்டிஸ் பற்றி எல்லாவற்றையும் இன்னும் சொல்லிவிடவில்லை. இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறது. க்ளுக்கோஸின் வேலை, தரம், தரக்குறைவு, அதன் விளைவு பற்றியெல்லாம் கொஞ்சம் பார்த்தோம். செறிவூட்டப்பட்ட க்ளுக்கோஸான க்ளைக்கோஜன் பற்றியும், அதை வெளியேற்ற அட்ரீனலின் என்ற ஹார்மோன் செய்யும் சேவை பற்றியும் அறிந்துகொள்ள இருக்கிறோம். அதற்குள் டயாபட்டிஸ் பற்றி டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் கூறும் சில முக்கியமான கருத்துகளை இங்கே பார்த்துவிடலாம்:

டயாபட்டிஸ், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை அபாயகரமான நோய்களாகும்… என்றெல்லாம் அநியாயமான பொய்களைக் கூறிவருகிறது ஆங்கில மருத்துவம்.

இந்த மருத்துவத்துக்கு, இவ்விரண்டு நோய்களுக்கும் காரணமும் தெரியாது, குணப்படுத்தவும் தெரியாது.

டயாபட்டிஸ் என்ற நீரிழிவு நோய், ஆங்கில மருத்துவம் கண்டுபிடித்த ஒரு நோயாகும். (நாகூர் ரூமி: அதாவது, கற்பனையாக உருவாக்கிய நோய் என்ற அர்த்தத்தில்).

நீரிழிவு நோய்க்காகக் கொடுக்கப்படும் (அலோபதி) மருந்து மாத்திரைகள் அனைத்தும் கணையத்தை அடித்து வேலை வாங்குவதற்குச் சமமாகும்.

ஆங்கில மருத்துவம் கொடுக்கும் எந்த ஒரு மருந்தினாலும், மாத்திரைகளாலும் எந்த ஒரு நீரிழிவு நோயாளியும் ஒருபோதும் குணமடைந்ததில்லை (நாகூர் ரூமி: எவ்வளவு உண்மை)!

ஆங்கில மருத்துவம் கொடுக்கும் இன்சுலின் வெறும் ஜடப்பொருளாகும். அந்த இன்சுலினுக்கு நல்ல சர்க்கரை, தீய சர்க்கரையைப் பிரித்தறியத் தெரியாது. ஆகவே, இவ்விரண்டு சர்க்கரையின் மீதும் தான்தோன்றித்தனமாகச் செயலாற்றுகிறது. பெரும்பாலும், கெட்ட சர்க்கரையை உடலுக்குள் செலுத்திவிடுகிறது.

இன்னும் சர்க்கரை கொஞ்சம் இருக்கிறது, பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.