ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் வரக்கூடிய ஆபத்துகளைவிட, அளவைக் குறைத்தால் அதிக ஆபத்துகள் ஏற்படும் என்கிறார் டாக்டர் ரவன்ஸ்கோவ்! ஆனால், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தால் என்னாகும் என்று மிகத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், புகைப் பிடித்தலை நிறுத்துதல், அதிக எடையைக் குறைத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல், வேலையை மாற்றிக்கொள்ளுதல் அல்லது வேலையை விட்டுவிடுதல், காதலித்தல், விவாகரத்து செய்தல் (திருமணத்துக்குப் பிறகுதான்), ரொம்ப சூடா இருக்குன்னு ஏழைகளின் ஊட்டிகளை நோக்கி இடம்பெயர்தல் போன்ற எந்தக் காரியமும் செய்யாமல், பழைய வாழ்க்கை முறையையே கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்ததால் குறிப்பிட்ட விளைவு ஏற்பட்டதா அல்லது கொடைக்கானல் குளிரை காதலியை வைத்துச் சமாளிக்க முயன்று முடியாமல் கோபித்துக்கொண்டதால் அப்படியொரு விளைவு ஏற்பட்டதா என்று துல்லியமாகச் சொல்ல முடியும் என்றும் அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்!